தமிழ் மேல் தீராக்காதல் கொண்டு பழமொழி விளக்கம் சொன்ன வாசகர்கள் அனைவருக்கும் நன்றி! இதோ உங்கள் பதில்கள்!

ஆறே முக்கால் கோடி தமிழர்களில் வெறும் 4 பேர் மட்டுமே பதில் சொல்ல ஆர்வமாய் இருந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஒருபக்க வருத்தமாக இருந்தாலும் பதில் அனுப்பிய வாசகர்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வ
தமிழ் மேல் தீராக்காதல் கொண்டு பழமொழி விளக்கம் சொன்ன வாசகர்கள் அனைவருக்கும் நன்றி! இதோ உங்கள் பதில்கள்!

கடந்த வாரம் சுமார் 10 பழமொழிகளை அளித்து அவற்றுக்கான விளக்கங்களைத் தெளிந்து கூறுமாறு அன்பான தினமணி வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஆறே முக்கால் கோடி தமிழர்களில் வெறும் 4 பேர் மட்டுமே பதில் சொல்ல ஆர்வமாய் இருந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஒருபக்க வருத்தமாக இருந்தாலும் பதில் அனுப்பிய வாசகர்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். மேலும் இருவர் கருத்துரையிட்டிருந்தனர். அவர்களது பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியதே. 

கருத்துரையிட்ட C S ரங்கராஜன் எனும் வாசகர் பழமொழிக்கு பதிலாகத் தானுமொரு பழமொழியைச் சுட்டி தினமணியின் முன்னெடுப்பைப் பாராட்டியிருந்தார்.. இதோ அவரது கருத்துரை... 

‘ஆலிலை பழுப்பதேன், ராவழி நடப்பதேன்’ போன்ற பல பழமொழிகள் வழக்கொழிந்து போவதை தடுக்கும் முயற்சி போற்றத்தக்கதே. ஆலிலை பழுப்பதேன் ராவழி நடப்பதேன் என்பதற்கான விடை 'பறிப்பாரற்று'.

Peace Lover எனும் வாசகர், 

நாங்கள் போட்டிக்காக கேட்டிருந்ததில் பழமொழிகளைக் காட்டிலும் விடுகதைகள் அதிகமிருப்பதாகக் கூறி இருந்தார். போட்டிக்கான பழமொழிகள் அனைத்தும் ‘தமிழ்முதுமொழிகள்’ எனும் ஆய்வுக்கட்டுரைப் பக்கங்களில் இருந்து தேடிப் பெறப்பட்டவையே.

அத்துடன்

பழமொழி என்றால் என்ன? என்பதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.

தாம் நினைத்த கருத்தைப் பிறருக்கு எளிமையாகப் புரியும்படி, நுண்மையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், சுருக்கமாகச் சொல்வது முதுமொழி (பழமொழி) என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் 
மென்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப”
(தொல் பொருள்:478)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, தமிழ் மக்களிடம் பழமொழிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பது இதனால் புலனாகும். 

விடுகதை குறித்தும் தொல்காப்பியர் விளக்கம் அளித்திருக்கிறார்.

பழமொழியைப் போல, பாமரர்களிடம் வாய்மொழியாக வழங்கி வரும் இன்னொரு பண்பாட்டுக் கூறு விடுகதை. இது இன்றைய நொடி வினா (Quiz) முறைக்கு முன்னோடி எனலாம். இதுவும் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழி பேசுவோரின் மதி நுட்பத்தையும், புலமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இன்று வரையிலும் இதைக் காப்பாற்றி வருபவர்கள் பாமரர்களே.

விடுகதை என்பது 'அது என்ன?' 'அது யார்?' என்பது போன்ற கேள்விகளுடன் அமைந்திருக்கும். விடையைத் தானே ஊகித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளடக்கம் அமைந்திருக்கும். இதுவே விடுகதை. வினாவுக்கு உரிய விடை மூலம் விடுவிக்கப்பட வேண்டிய கற்பனைக் கதை என்பதினால் விடுகதை என அழைக்கப்பட்டது என்பர்.

இது குறுகிய வடிவ அமைப்பைக் கொண்டது. மிக எளிமையாக அமைந்திருக்கும். முதலில் பாட்டாக இருந்தது. பின்னர் உரைநடையிலும் அமைந்துள்ளது. 

ஆக, நாங்கள் கேட்டிருந்த 10 ம் பழமொழிகளாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று கருதலாம். வாசகருக்கு மாற்றுக் கருத்து இருப்பின், தாங்களே இவற்றில் எது பழமொழி? எது விடுகதை என்று தெளிவாக விளக்கிச் சொன்னால் தன்யவான்கள் ஆவோம்.

இனி வாசகர்களின் பழமொழி விளக்கப் பங்களிப்பைக் காணலாம்.

1. பெங்களூரிலிருந்து வாசகி சசிகலாவின் பழமொழி விளக்க பதில்கள்...

1.  பட்டும் பாழ், நட்டும் சாவி .

இது விவசாய்களின் மத்தியில் கிராமங்களில் புழங்கும் பழமொழி... விவசாயத்தில் இழப்பு ஏற்படும் போது கூறப்படுவது. பட்டும் பாழ்- பாடு பட்டது (உழைத்தது ) எல்லாம் வீண்
நட்டும் சாவி - நட்ட பயிர்கள் எல்லாம் விளையாமல்  பதர்கள் ஆகுவது. (சாவி என்பது முற்றாத நெற் கதிர்களை குறிக்கும்.) கடுமையாக உழைத்தும் நம்மால் சில நேரங்களில் வெற்றி பெற முடியாமல் போவதைக் குறிக்கும் பழ மொழி ..

2. கொடுக்கிறது உழக்குப்பால் , உதைக்கிறது பல்லு போக.

இதுவும் கிராமத்து பழ மொழி தான்...வீடுகளில் வளருக்கும் பசு / எருமை மாடுகளில் பால் கறப்பது பெரிய விஷியமாக இருக்கும். காரணம் பால் கறக்கும் போது மாடுகள் உதைக்கும்...உதைத்தாலும் நாம் விட்டு விடுவோமா....குறைந்த பாலாக இருந்தாலும் உதை பட்டாவது ...கறந்து விட மாட்டோமா ... அதற்குத் தான் இந்த  பழமொழி சில நேரங்களில் நம் வாழ்க்கையில் இப்படித்  தான்... சிறிய  பலனிற்காக நிறைய துன்பங்களை அனுபவிப்பது....

3. கை காய்த்தால் கமுகு (பாக்கு ) காய்க்கும்.

இதுவும் கிராமத்து பழ மொழி தான்....பாக்கு (மரம்) பயிரிட்டால் அதை நன்கு பராமரிக்க வேண்டும்...கைக்கு தான் அதிக வேலை...கை காய்த்துவிடும் என்பார்கள்.. வேலை.. செய்து செய்து கைகள் கருப்பாக (வேலை செய்ததின் அடையாளம் )இருக்கும். ஆனால் பாக்கு நன்கு காய்த்து பலன் கொடுக்கும்... கடின உழைப்புக்கு என்றும் நல்ல பலன் தான் கிடைக்கும் ...


4. மேய்த்தால் கழுதை  மேய்ப்பேன் , இல்லாது  போனால் பரதேசம் போவேன் .

மேய்ப்பது என்றால் .. ஆடு ..மாடு ..இவற்றைத் தான் குறிக்கும்..மிஞ்சி போனால் வாத்து..கோழி ..இவற்றைஎல்லாம் கூட சொல்லிக்கொள்ளலாம்...கழுதையை பற்றி கேள்வி பற்றிருக்கிறோமா....அந்த வேலை கிடைக்காவிட்டால்..வேறு ஊருக்கு சென்று விடுவேன் (சுற்றி திரிவேன்) என்று கூறுவது அபத்தம் அல்லவா... இப்படித்தான்..சிலர் நம்மில் இருக்கிறார்கள் ..எத்தனையோ முக்கியமான ,
தேவையான  விஷியங்கள் ..இருந்தாலும் தேவையில்லாத செயல்களை செய்வார்கள்... இதற்குத்தான் இந்த பழ மொழி...


5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம்  பார்க்கிறதா?

மனிதனின் உருவ அழகை நிர்ணயிப்பதில் முடியின் பங்கும் முக்கியம். முடியுள்ள தலைக்கும், முடியில்லா தலைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது...தலையில் பார்த்துயிருப்பீர்கள் ....சுழி ஒன்றோ அல்லது இரண்டோ ..இருக்கும். முடி இருந்தால் போதும்.. எனும் போது  தலையில் உள்ள சுழி, முடி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு அல்லவா.. மனிதர்கள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.உதவி பெரும் நிலையில் உள்ளவர்கள் ..உதவியை பெற்றவுடன் , இப்படி உதவிருக்கலாம்.. அப்படி உதவிருக்கலாம் என்று
நினைப்பது ..

6. பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

ஒரு  பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி செயல் படுவது... வெள்ளிக்கிழமை என்றால் ஒரு சிலர் பணம், பொருள் எதையும் தரமாட்டார்கள். செலவும் செய்ய மாட்டார்கள். இது அவரவர் நம்பிக்கை விஷயம். எண்ணிப் பார்த்து சொல் என்று ஒருவர் கொடுத்த பணத்தை .."இன்று வெள்ளிக்கிழமை... தரமாட்டேன்.." என்று சொல்வது அபத்தம் அல்லவா.. சில  மனிதர்களின் நம்பகத்தன்மையும் இப்படித்தான்....

7. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் , அதுவும் ஒரு வரிசை என்பான்.

கரடி என்ற சொல்லின் திரிபு தான் கெரடி . கரடி என்றால் சிலம்பம் என்று பொருள். வரிசை என்றால்  முறை,ஒழுங்கு, வகை என்று பொருள். சிலம்பம் கற்றவன் ஆடும்
போது இடறி விழுந்தாலும் , அதைத்  தவறாக ஒப்புக்கொள்ளாமல் அதையும் ஒரு வகை என்று கூறுவது தான் இதன் பொருள் .மனிதர்கள் எத்தனையோ பேர் ...இப்படித்தான் இருக்கிறார்கள்.தவறி செய்யும் தப்பை  ஒப்புக்கொள்வதில்லை..

8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையில் விட்டால் தண்ணீர்.

ஏற்றத் தாழ்வு, நிறைவு குறைவு இதை உணர்த்துவது தான் இந்த பழ மொழி ...

நீர் ஒன்று தான்..இது  சங்கிலே இருக்கும் போது தீர்த்தம்...மண்ணாலான மொந்தையில் இருக்கும் போது வெறும் நீர் தான். சமூகத்தில் உயர்வான மற்றும் சாதாரண இடத்தில் இருப்பவர்கள்  சொல்லும்,
செயலும் ஒரே மாதிரி உணரப்படுவதில்லை..


9. வாழைப் பழம் கொண்டு  போனவள் வாசலில் இருந்தாள் , வாயைக் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள் .

'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் '.  மேல சொல்லப்பட்ட பழ மொழியின் சுருக்கம் இது தான். பிற இல்லங்களுக்கு செல்லும் போது பழங்கள் வாங்கிச் செல்வது ஒரு மரபு.மரபை கடைபிடிப்பவர்கள் பலராக இருந்தாலும், ஒரு சிலர் இவர்களை பின்னுக்குத்   தள்ளி, வாய் ஜாலத்தினால், மிகுந்த முக்கியமானவர்கள் போல வீட்டின் உள்ளே அமர்ந்திருப்பார்கள். சிலர் பேர் பேசியே வசியம் செய்து விடுவார்கள்.. இன்றைய சமுதாயத்தில் இவர்கள் ஏராளம்...

10. நேற்று வெட்டின கிணற்றிலே, முந்தாநாள் வந்த முதலை போல.

நேற்று வெட்டின கிணற்றிலே,முந்தா நாளே முதலை வருவதற்கு சாத்தியம் இருக்கிறதா? சாத்தியம் இல்லாத ஒன்றை ...சாத்தியம் என்று சொல்லும் மனிதர்கள் இன்றுஏராளம்...ஏமாந்து போகும் மனிதர்களும் அதிகம்... பிரித்து அறியவே இம்மொழி
....


2. தேனியிலிருந்து வாசகர் முத்துக்கனகராஜின் பழமொழி விளக்கங்கள்...


1) "பட்டும் பாழ் ;  நட்டும் சாவி"

இயற்கை சோதிக்க நினைத்தால் விவசாயியைத்தான் முதலில் சோதனைக்குத் தேர்ந்தெடுக்கும். பாடுபட்டு உழன்றும், நட்ட நெல் சாவியாகிப் போனது. (பதர் (சண்டு)ஆனது.. சண்டாளப் பிறந்தவனோ பாவப்பட்ட விவசாயி? சாபம்...ஹூ..ம்..)

2) "கொடுக்கிறது உழக்குப் பால், 
உதைக்கிறது பல்லுப் போக"

இப்போதெல்லாம் அப்படித்தான். வாரி வாரிக் கொடுப்பவர், வாரிக் கொடுத்த கையோடு வழியே போய்விடுவார். எச்சில் கையால் மிச்சம் மீதியை வழித்துப் போடுகின்றவர்தான் எகத்தாளப் பேச்சும், பீற்றலும்.! (ஆழாக்கு பால் கறக்கும் பசு தண்டமானம் போடுகிறது)

3)  கை காய்த்தால், கமுகு காய்க்கும்"
   
ஈக் கொட்டாமல் தேனெடுக்க விரும்பும் சோம்பேறிகளுக்குச் சொல்லப்படும் அறிவுரை இது.பாக்கு மரம் பனை போல; தென்னை போல! அடிக்கடி மரம் ஏறி, காய்ந்து பட்ட மட்டை நீக்கி, பழுது பார்த்து, பக்குவம் செய்தால்தான் நல்ல பலன் தரும். கணுக்கள் நிறைந்த அம்மரம் காய்த்துப் பலன்தர வேண்டின், கைகள் புண்ணாகி, காய் காய்க்கஅடிக்கடி மரம் ஏறுவது அவசியம். மரக்கன்றை ஊன்றினால் போதாது. கைகள் கெட்டிப்பட, மரம் ஏறி, உழைக்க வேண்டும்.
    
4) "மேய்த்தால் கழுதை மேய்ப்பேன்; இல்லாது போனால் பரதேசம் போவேன்"
    
இது சுயநல சுகபோகிகளின் கோட்பாடு. "எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு   தொழில். அதை விட்டு, வேறு தொழில் செய்ய வற்புறுத்தாதீர்கள்" என்ற வீம்பு பிடித்த மனோபாவம். புதிதாய் கற்றுக் கொள்ள விரும்பாத சுபாவம். "அடைந்தால் மகா தேவி; இல்லையேல் மரண தேவி" என்ற பிடிவாத வசனமும் கூடப் பொருந்தும்.
     
5) "முடி வைத்த தலைக்கு, சுழிக் குற்றம் பார்க்கிறதா?"
    
'பொய் முடி வைத்த தலைக்கு' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'மூடி வைத்த தலைக்கு' என்றும் கொள்ளலாம். இரண்டிலும் 'இது சொத்தை, அது சொள்ளை' என்று சொல்ல, அதற்குள் அடங்கிய சுழிக்கு அதிகாரமில்லை. சொல்வதில் அர்த்தமும் இல்லை. ஒண்ட வந்த இடத்தில் அனாவசியமாக அதிகாரம் பண்ணுகிறவர்களைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்.
     
6) "எண்ணிப் பார்க்கக் கொடுத்த பணத்திற்கு நாளும், கிழமையும் எதற்கு?"
 
இப்படியும் பொருள் படலாம். சாட்சிகள் பார்த்திருக்க, கைமாறாகப் பெற்ற பணம் இது. கடன் பட்டது உறுதியாயிற்று. இதைத் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன்காரன்தானே? கொடுத்துக் கடன் அடைக்க, நாளும் கோளும் என்ற செண்ட்டிமெண்ட் எதற்கு? எவ்வளவு விரைவில் கடன் அடையும், அவ்வளவுக்கு நல்லது.

7) "கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்"
       
'கெரடி' என்பது சிலம்பக் கலை. இந்தக் கலையில் வல்லவனாக இருப்பவன், என்ன செய்தாலும் அது அவனது கலையில் ஓர் அங்க அசைவு என்றே பார்ப்போர் நம்புவர். தடம் மாறினாலும், தடுமாறினாலும், தவறி விழுந்தாலும், அதை கலையின் ஓர் அங்கம் என்றே உலகம் கருதும். ஆடத் தெரிந்தவர் தப்பாட்டம் போட்டு விட்டு, 'தெரு கோணல்' என்றாலும், துதிபாடும் கூட்டம் ஏற்கும். திறமையாளன் தவறை,சரியென்று நிலைநாட்டுவான். மெத்தப் படித்தவன் வைத்ததே வரிசை.! வல்லான் வகுத்ததே வாய்க்கால்.!

8) "சங்கிலே விட்டால் தீர்த்தம்; மொந்தையிலே விட்டால் தண்ணீர்."

சேருமிடத்தைப் பொறுத்து, சிறப்புச் சேர்கின்றது. சிப்பிக்குள் நுழைந்த மழைத்துளி முத்தாகின்றது. கூரையில் விழும் நீர் குட்டை சேர்கின்றது. மனிதச் சேர்க்கையும் அப்படியே!. சேரிடம் அறிந்து சேர வேண்டும்.! சங்கில் நுழைந்த தண்ணீரின் அளவு சிறிதெனினும் கீர்த்தி பெரிது.! மொந்தைத் தண்ணீரானது, தாகம் தணிக்கும். சங்குத் தண்ணீரோ, பாவம் போக்கும்! இருக்கும் இடத்தில் இருந்தால் முதல் மரியாதை!

9) "வாழைப்பழம் கொண்டு போனவள் வாசலில் இருந்தாள்; வாயைக் கொண்டு போனவள் நடுவீட்டில் இருந்தாள்"

வாயுள்ள பிள்ளை பிழைக்கும். இனிமையாக, மற்றவர் ஏற்கும்படி சமர்த்தாகப் பேசும் மருமகள் நடு வீட்டில் அமர்ந்து நாயகம் பண்ணுவாள். வாயில்லாப் பூச்சியானவள், சாமர்த்தியம் இல்லாமையால், எத்தனை செல்வம் கொணர்ந்தாலும், வெளிவேலைதான் செய்வாள். அவளை, செல்வச் செருக்கோடு வந்தவள் என்று வைத்துக் கொண்டால், வீட்டிலுள்ளவர்களின் மனம் குளிரப் பேசத் தெரியாதவள், மனிதர்களோடு ஒட்டாதவள், தன்னோடு யார்தான் பேசுவார்கள் என்று ஏக்கத்துடன் வாசலில் நிற்பாள்.

10) "நேற்று வெட்டின கிணற்றினிலே முந்தாநாள் வந்த முதலை போல."
கொடுமையிலிருந்து தப்ப, கோவிலுக்குள் போனால், நமக்கு முன்னாடியே கொடுமை வந்து காத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. துயரம் தொடர்கின்றது எனப்பொருள்.. எடுத்த முயற்சிகளில் எல்லாம் துரதிர்ஷ்டம் துரத்துவதைச் சுட்டும் பழமொழி இது.  

3. வாசகர் கு. முருகேசனின் பழமொழி விளக்கங்கள்...

1. பட்டும் பாழ், நாட்டும் சாவி.
பொருள்: இது ஒரு விவசாயியின் புலம்பல். நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்றே, நான் நட்ட நெல் பயிர்கள் எல்லாம் நெல்மணிகள் திரளாமல் சாவியாகிப் (பதறாகிப்) போனதே என்று ஒரு விவசாயி புலம்புவது.

2. கொடுக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுபோக.
பொருள்: ஒரு உழக்குப் (கால் படி) பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு.
ஒரு உழக்கு என்பது கால் படி பால். கொஞ்சமே கூலி கொடுத்துவிட்டு அளவில்லாமல் வேலைவாங்கும் ஒரு கஞ்சத்தனம் உள்ள முதலாளியைப் பற்றி அவன் வேலையாள் சொன்னது.

3. கை காய்த்தால் கமுகு(பாக்கு) காய்க்கும்.
பொருள்: கைகள் காப்புகாய்க்கும் வரை தண்ணீர் விட்டால்தான் பக்கு மரம் காய்க்கும் அல்லது விளைச்சல் தரும். 
விடா முயற்சிதான் வெற்றி தரும் என்பது மட்டுமல்ல. அந்த விடா முயற்சிக்கு மிகுந்த உடல் வலிமையையும் மன வலிமையையும் வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். 

4.மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாது போனால் பரதேசம் போவேன்.
பொருள்: எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்த்தால் கழுதைதான் மேய்ப்பேன் இல்லையென்றால் விட்டுவிடு நான் தீர்த்த யாத்திரை போகிறேன் என்று கூறும் ஒரு சோம்பேறியின் கூற்று.
வேறு நல்ல வேலை காத்திருக்க நீச அல்லது அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனை குறிக்கும் பழமொழி இது. 

5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
பொருள்: தலையில் முடி சூட்டிய (பதவி ஏற்ற)பிறகு அந்த தலையில் சுழியை ஆராயமுடியுமா? 
ஒருவரை பதவியில் அமர்த்திய பிறகு நொந்து கொள்வதில் பயனில்லை.

6. பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
பொருள்: இந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை, அதனால் பணத்தைத் திருப்பித்தர  இயலாது என்றானாம்.
பொதுவான நம்பிக்கையைக்/மூடா நம்பிக்கையைக்  காரணம் காட்டி நொண்டி சாக்கு சொல்வது.

7. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
பொருள்: சிலம்பம் (கெரடி) கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி கீழே விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக் கலையின் ஒரு வகை என்பான். அதாவது வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்து சொன்னது. 

8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
பொருள்: ஒரு பொருள் இருக்கும் இடத்தைப்பொருத்து மதிக்கப்படும். இரண்டுமே தண்ணீர்தான் என்ற போதிலும் சங்கில் இருந்து கொடுத்தால் அதை தீர்த்தம் என்றும் மொந்தையில் இருந்து கொடுத்தால் அதை தண்ணீர் என்றும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும். 
கோயிலுக்குள் சென்று வரும் சாதம் பிரசாதம் ஆவது போல இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு பொருளின் மதிப்பு போற்றப்படுகிறது. 

9. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தால்.
பொருள்: வாழைப்பழத்தை மரியாதை நிமித்தமாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலிலேயே காத்திருக்க, தன் வாய் ஜாலத்தால் பேச்சு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டால். 
முகஸ்துதிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பதை சொல்வது.

10. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலைபோல. 
பொருள்: நேற்றுதான் கிணறே வெட்டியது. அப்படி இருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்ப்பது எங்கனம்?
சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் முன்னரே தெரிந்தது போல பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது. 

4. சென்னை, முகப்பேரில் இருந்து வாசகி கீதாஞ்சலியின் பழமொழி விளக்கங்கள்...

தமிழ் மொழி மீதும் தமிழ் இலக்கியம் மீதும் ஈடுபாட்டை உண்டாகும் வகையில் செயல்படும் தினமணிக்குப் பாராட்டுகள். இவ்வாறு எளிய போட்டிகள் மூலம் தமிழ் மொழியின் மீது சாதாரண பொதுமக்களும் ஆர்வம் கொள்ளும் வண்ணம் செயல்படும் நாளிதழ் தினமணி  மட்டுமே.  தினமணியின் பணி  தொடர  வாழ்த்துகள்.
பழந்தமிழ்  பழமொழி  இன்பம்

1. பட்டும் பாழ், நட்டும் சாவி
விளக்கம் : பாடுபட்டு விளைவித்த பயிர்,  தானியமாகக் கிடைக்காமல் பதராகிப் பலனின்றி வீணாவது போல கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் நம்  உழைப்பு வீணாவதைக் குறிக்கும்.
கருத்து : கடின உழைப்பு கண்டிப்பாகப் பலன் தரும் தான். அதற்காக நிழலைக் கையால் பிடிக்கலாம் என முயற்சி செய்தால் அது பாழாகும். ஆகவே உழைப்பு சரியான முறையில் இருக்க வேண்டும்.  

2. கொடுக்கறது  உழக்கு  பால்,  உதைக்கறது  பல்லு  போக.
விளக்கம்: ஒருவர் தன்னிடம் வேலை செய்பவரிடம்  வேலையை அதிகமாக வாங்கிக்கொண்டு அதற்கான ஊதியத்தைக்  குறைவாகக் கொடுப்பதைக் குறிக்கும்.
கருத்து : உழைப்புக்கேற்ற  ஊதியம்  கொடுக்க  வேண்டும்.

3. கை  காய்த்தால்  கமுகு  காய்க்கும்.
விளக்கம் : கை காய்த்தால் என்பது கடின உழைப்பைக் குறிக்கும். கமுகு காய்க்கும் என்பது உழைப்பால் கிடைக்கும் பலனைக் குறிக்கும். கடினமாக உழைத்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது  இதன்  பொருள்.
கருத்து : கடின  உழைப்பே  உயர்வுக்கு  வழி

4. மேய்த்தால்  கழுதை  மேய்ப்பேன்,  இல்லாதே  போனால்  பரதேசம்  போவேன்.
விளக்கம் : எந்த வேலை கிடைத்தாலும் விருப்பத்தோடு செய்து முன்னேறவேண்டும் என்ற எண்ணமில்லாமல் மனதிற்குப் பிடித்த வேலை கிடைத்தால் மட்டுமே வேலை செய்து, பிடித்த வேலை கிடைக்காவிட்டால்  சோம்பேறியாக சுற்றித்  திரிபவர்களைக்   குறிப்பது.
கருத்து : கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும்.

5. முடி  வைத்த தலைக்குச்  சுழிக்  குற்றம்  பார்க்கிறதா?
விளக்கம்: ஒருவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்த பிறகு அவர் செயலில் குறை காண்பது சரியல்ல.
கருத்து : எண்ணித்  துணிக  கருமம் துணிந்தபின் 
       எண்ணுவம்  என்பது  இழுக்கு.

6. பார்க்கக்  கொடுத்த  பணத்துக்கு  வெள்ளிக்கிழமையா?
விளக்கம் : நம்மிடம் பொருளை இரவல் வாங்கிச் சென்றவர்கள் அதைத் திருப்பித் தராமல் ஏதாவது சாக்கு  போக்கு சொல்லி  காலம்  தாழ்த்துவதைக்  குறிக்கும்.
கருத்து : சாக்குபோக்குக்  கூறுதலைத்  தவிர்த்தல்.

7. கெரடி  கற்றவன்  தடுக்கி  விழுந்தால்  அதுவும்  ஒரு  வரிசை  என்பான்.
விளக்கம்: திறமையுள்ள ஒருவன் அபத்தமாக ஏதாவது செய்து மாட்டிக் கொண்டாலும் அதை ஒத்துக் கொள்ளாமல் ஏதாவது சொல்லி சமாளித்து தன் தவறை மறைப்பதைக்  குறிக்கும். (கெரடி கற்றவன் – சிலம்பம் கற்றவன்)
கருத்து : தவறும்  சரியென்று  கூற  முயற்சித்தல்.

8. சங்கிலே  விட்டால்  தீர்த்தம்,  மொந்தையிலே  விட்டால்  தண்ணீர்.
விளக்கம் : ஒரு பொருள் பணக்காரரிடம் இருந்தால் மேன்மையானது என்றும் அதுவே ஏழையிடம் இருந்தால் சாதரணமானது என்றும் இந்த உலகம் சொல்லும். ஒரு பொருள் இருக்கும் இடத்தை வைத்து மதிக்கப்படுதல் போல ஒரு மனிதன் யாருடன் நட்பாக இருக்கிறான் என்பதைப் பொருத்தே அவனுக்கு மரியாதை கிடைக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். 
கருத்து : சிப்பியில் விழுந்த மழைத்துளி முத்தாகும். கடலில் விழுந்த மழைத்துளி உப்பாகும். ஆகவே யாருடன் நட்பு கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். சேரிடம்  அறிந்து  சேர்  என்பது  இதற்கு  இணையான  பழமொழியாகும்.

9. வாழைப்பழம் கொண்டு போனவள் வாசலில் இருந்தாள்,  வாயைக் கொண்டு போனவள்  நடு  வீட்டில்  இருந்தாள்.
விளக்கம் : அனைவருக்கும் உதவி செய்து அன்போடு இருப்பவருக்குக் கிடைக்காத நற்பெயரும் மரியாதையும் எந்த உதவியும் செய்யாமல் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன்  என்று  பேசியே  சாதிப்பவருக்குக்  கிடைத்துவிடுகிறது.
கருத்து : செயல்  திறனோடு  பேச்சுத்  திறனும்  வேண்டும்.

10. நேற்று  வெட்டிய  கிணற்றிலே  முந்தாநாள்  வந்த  முதலை  போல.
விளக்கம் : தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் ஒருவன், அண்மையில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் தனக்கு அது குறித்து வெகு நாட்களுக்கு முன்பே தெரியும்  என்று  கூறுவதைக்  குறிக்கும்.
கருத்து : தன்னை  முதன்மைப்  படுத்திக்  கொள்ளுதல்.

பழமொழிகளின் மேல் ஆர்வம் கொண்டு பதில் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் தினமணியின் நன்றிகள் உரித்தாகட்டும்.

மீண்டுமொரு அருமையான போட்டியில் சந்திப்போம்.

நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com