தொழில்நுட்பம்

எலக்ட்ரானிக் கைப்பை போல வேலையை எளிதாக்கித் தரும் மைக்ரோசிப் இம்ப்ளாண்ட்!

ஹரிணி வாசுதேவ்

பார்ப்பதற்கு சிறிய நெல்மணியளவே இருக்கிறது அந்த மைக்ரோசிப். அதை நமது கைகளுக்குள் இஞ்ஜெக்ட் செய்தால் போதும். பிறகு நமக்கு கிரெடிட் கார்டுகள் தேவை இல்லை, கார் சாவி தேவையில்லை, பஸ் மற்றும் டிரெயின் டிக்கெட்டுகள் தேவையில்லை. இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரை பகற்கனவுகளாக இருக்கலாம். ஆனால், ஸ்வீடனில் இதை சாத்தியப் படுத்தி இருக்கிறார்கள். தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில்   தனிமனிதர்களின் தகவல்களைத் திருடுதல் என்பது ஆட்சேபணைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்குரிய குற்றம் என்ற ரீதியில் உலக நாடுகள் தகவல் திருட்டுக்கு எதிராக போராடி வருகையில் ஸ்வீடனில் இப்படி ஒரு புது முயற்சி தனி மனிதர்களின் தகவல் திருட்டு சமாச்சாரங்களுக்கு உறுதுணையாக அமைவதைப் போல கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பது பிற நாடுகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. 

ஸ்வீடிஷ் மக்களைக் கேட்டால் அவர்கள் இதற்கு வேறு பெயர் சொல்கிறார்கள். இதன் பெயர் தகவல் திருட்டு அல்ல. அவர்கள் இதற்கு வெளிப்படைத்தன்மை எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நாட்டின் அனைத்து மக்களும் தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் பொதியப்பட்ட மைக்ரோ சிப்களை கைகளில் பொருத்திக் கொள்வதின் பொருட்டு தங்கள் அன்றாட வேலைகளை எளிதாக்கிக் கொள்வதோடு தங்களது அரசுடன் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறவர்களாகவும் ஆகிறார்கள். 

2015 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் முதல்முறையாக இத்தகைய மைக்ரோ சிப்கள் பயன்பாட்டுக்கு வந்த போது பல நாட்டு மக்களும் அதைக் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது வேலையை எளிதாக்குவதோடு தங்களை பற்றிய தகவல் திருட்டுக்கும் அல்லவா துணை போகும் எனப் பலர் இந்த தொழில்நுட்பத்தை வெறுத்தனர். ஆனால் ஸ்வீடனில் இதுவரை சுமார் 3000 பேர் இந்த மைக்ரோ சிப்களை தங்களது கைகளில் பொருத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான 28 வயதான உல்ரிகா செல்சிங் இதைப் பற்றிப் பேசும் போது, இப்போதெல்லாம் நான் எனது அலுவலகத்துக்குச் செல்லும் போது கதவின் முன் நின்று கொண்டு மைக்ரோ சிப் இம்பிளாண்ட் பொருத்தப்பட்ட கைகளை அசைத்தால் போதும் கதவு தானாகவே திறந்து விடுகிறது. மைக்ரோ சிப் எனது வேலைகளை எளிதாக்கி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விளையும் புதுமைகளை நாம் நமது எதிர்கால நலன் கருதி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் நமக்கு நன்மை விளையும் போது எதற்காக அதை புறக்கணிக்க வேண்டும் என்கிறார்.

கடந்த வருடத்திலிருந்து இந்த மைக்ரோ சிப் இம்பிளாண்ட் தனக்கொரு எலக்ட்ரானிக் கைப்பை போல உதவி வருவதாக உல்ரிகா கூறுகிறார். தனது ஜிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், முடிந்தால் டிரெயின் டிக்கெட்டுகளைப் புக் செய்து பதிந்து வைக்கும் மினி கம்ப்யூட்டர்கள் போலக்கூட அவை செயல்பட்டு வருகின்றனவாம். ஸ்வீடனின் எஸ் ஜே நேஷனல் ரயில்வே கம்பெனி இதுவரை சுமார் 130 பயணிகளுக்கு மைக்ரோ சிப் ரிசர்வேஷன் சர்வீஸ் செய்து கொடுத்துள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்கு பதிலாக பயணிகளின் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட கைகளை ஸ்கேன்செய்து கொள்வார்களாம். 

இப்படி தனிப்பட்ட தகவல்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரால் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் ஸ்வீடன் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது. இதை வளர்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அந்நாட்டு மக்களில் இதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்வீடனின் மேக்ஸ் 4  ஆய்வகத்தில் பணிபுரியும் நுண்ணுயிரியியலாளர் பென் லிப்பெர்டன் கூறுகையில், மைக்ரோ சிப்களை இம்ப்ளாண்ட் முறையில் கைகளில் பொருத்திக் கொள்வது நாளடைவில் தொற்று நோய்களை உருவாக்கி மனித உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே  பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார். புதிய தொழில்நுட்பங்களுக்கு வழக்கமாக எழக்கூடிய எதிர்ப்புகள் தான் இவை. ஆனாலும் வேலைகளை எளிதாக்கித் தருவதால் கூடிய விரைவில் இந்தியர்களும் இதை விரும்பக் கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

SCROLL FOR NEXT