நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதி!

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அந்தத் தொகுதியில் சீரமைப்பின்போது நீக்கப்பட்ட
நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதி!


தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அந்தத் தொகுதியில் சீரமைப்பின்போது நீக்கப்பட்ட சாத்தான்குளம் பேரவைத் தொகுதியும், திருச்செந்தூர் பேரவைத் தொகுதியும் இடம்பெற்றிருந்தன. மேலும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இருந்த தூத்துக்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகள் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், எஸ்.ஆர். ஜெயதுரையும், அதிமுக சார்பில் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனும் போட்டியிட்டனர். இதில், எஸ்.ஆர். ஜெயதுரை 87 ஆயிரத்து 652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவரானார்.

தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திமுக வேட்பாளர் ஜெகனை விட ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 2 வாக்குகள் அதிகம் பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக மற்றும் அதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் 3-ஆவது உறுப்பினர் யார் என்பதற்கானத் தேர்தல், வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதான கட்சிகளின் சார்பில் இதுவரை போட்டியிட்டவர்களில், மறைந்த சிந்தியா பாண்டியன் மட்டுமே அண்டை மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 

ஆனால், இந்த முறை முக்கிய கட்சிகள் சார்பில் உள்ளூர் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பணியைத் தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, தற்போது முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தையான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு நன்கு அறிமுகமானவர்.

1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் குமரி அனந்தன். மேலும், 5 முறை பேரவை உறுப்பினராக இருந்த குமரி அனந்தன், கடந்த 1989 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இதுதவிர, அண்மையில் தமிழ் பேரரசு கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கிய திரைப்பட இயக்குநர் கெளதமனும் தூத்துக்குடியில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் உள்ளூர் தொழிலதிபரான பொன் குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, சுயேச்சையாக பலரும் களம் இறங்கத் தயாராகி வருகின்றனர்.

நட்சத்திர அந்தஸ்த்து: இருப்பினும், திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டதும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. தற்போது, பாஜக வேட்பாளராக தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கப்பட்டதால், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் கனிமொழி நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவார் என்று திமுக கூட்டணியினரும், பாஜக மீண்டும் ஆட்சியில் அமைத்தால் தமிழிசை மத்திய அமைச்சர் ஆவார் என்று பாஜக மற்றும்  அதன் கூட்டணிக் கட்சியினரும் தங்களது பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கி உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகள் திமுக வசமும் உள்ளன.

விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகளை கொண்ட புதிய தமிழகம் கட்சி, பாரதிய ஜனதா இடம்பெற்ற கூட்டணியில் உள்ளதால் பாஜகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறது.

பிரபலமான இரண்டு பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத நிலை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com