எம்.ஜி.ஆரைப் பற்றி சத்தியபாமா மேலாண் இயக்குனரும், வேலூர் VIT கல்வி நிறுவன வேந்தரும் சொன்னதென்ன..?

ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
எம்.ஜி.ஆரைப் பற்றி சத்தியபாமா மேலாண் இயக்குனரும், வேலூர் VIT கல்வி நிறுவன வேந்தரும் சொன்னதென்ன..?

சத்தியபாமா மேலாண் இயக்குனர் திருமதி.மரியா..?

தான் செல்லும் வழியில் வயல் வெளிகளில் பெண்கள் புடவையின் ஒருமுனையை மரத்தில் கட்டிக் கொண்டு மறுமுனையை கையில் பிடித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

அதற்கு அவர்களுக்கு ஒரு புடைவை தான் இருக்கிறது என்ற பதிலைக் கேட்டு, இலவச புடவை வழங்கும் திட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தார்.

அவரின் தாக்கம் தான் சத்யபாமாவில் உள்ளே வந்த எவரும் பசியோடு வெளியே சென்றதில்லை.

வேலூர் VIT கல்வி நிறுவன வேந்தர் திரு. விஸ்வநாதன்...

நாள் தோறும் எம்.ஜி.ஆரை நினைப்பவன், ஏனெனில்  அவர் போட்ட பிச்சை தான். அவர் எது செய்தாலும் ஏழை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைத்தார்.

தான் செல்லும் வழியில் சாலையில் வெய்யிலில் மாணவர்கள்  காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்து செருப்பு வழங்கும் திட்டத்தைத் தந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர் போல் செய்தவர் எவருமில்லை. அங்கே சென்று வந்தவர்கள் சொன்னது... பிரபாகரன் தன் அறையில் ஒரே படம் தான் வைத்திருந்தார், அது எம்.ஜி.ஆர் படம்.

வருடத்திற்கு வெறும் 2000 பேர் படித்த பொறியியல் படிப்பை பல லட்சம் பேர் படிப்பதற்கு எம் ஜி.ஆரே முன்னோடி..

தமிழில் பெரியாரின் சீர்திருத்த எழுத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர் தான்.

தான் வறுமையில் உணவில்லாமல்  இருந்ததைப் போல், எந்த தமிழரும், குழந்தைகளும் இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

எம்ஜிஆரைப் பற்றி நடிகர் சிவகுமார் பகிர்ந்தது...

உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.

அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.

“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..?”
- அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.

எம்ஜிஆரைப் பற்றி ஜெயலலிதா, நடிகை சிமி கிரேவலுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்தது...

எம்ஜிஆர் மிக அன்பானதொரு நல்ல மனிதர், என் மொத்த வாழ்க்கையிலும் இருவர் ஆதிக்கம் செலுத்தினார்கள். என் வாழ்வின் முதல் பகுதியில் என் அம்மாவின் வழிகாட்டுதலின் படியும், விருப்பத்தின் படியும் நான் வாழ்ந்தேன் என்பது உண்மையென்றால், அம்மாவின் மறைவுக்குப் பின்னால் என் பிற்பகுதி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி என்னை வழிநடத்தியவர் எம்ஜிஆர் தான். அவர் மேல் எனக்குக் காதல் இருந்ததா என்றால்?! யார் தான் அந்தக் காலத்தில் அவர் மீது காதலாகாமல் இருந்திருக்க முடியும். அவர் ஒரு கரிஸ்மேடிக் (பிறரைத் துதிக்கச் செய்யும் அளவுக்கு ஈர்ப்பான) மனிதர். அவர் இருந்திருந்தால் நான் அவரைப் பின்பற்றுபவளாக மட்டுமே இருந்திருப்பேன். அவர் இல்லாத போது அவர் உருவாக்கிய கட்சியைக் காப்பாற்றுவதற்காகத் தான் நான் இங்கே இருக்க வேண்டியதானது. என் அம்மாவுக்குப் பிறகு ஒரு தாயின் இடத்தை என் வாழ்வில் பூர்த்தி செய்த நபர் எம்ஜிஆர். அவர் எனது குரு!

Courtesy: VIJAY TV. C.GOBINATH, GOOGLE.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com