எம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள் - 1

‘பாழாய்ப்போன அரசியல் நம்மைப் பிரித்து விட்டதே!என்று சிவாஜி சொன்னார். அண்ணன் தம்பி உறவைப் பிரிக்க முடியாது... எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக? என்று எனக்குத் தெரியாது.
எம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள் - 1

29.014.1979 சென்னை மருத்துவக்கல்லூரி பொங்கல் விழாவில்...

தாய்மொழி தமிழ் என்று தெரிந்து கொள்ளாதவர்களுக்குத் தாய்மொழி தான் மருந்து. இதற்கு வேறு மருந்து தர முடியாது. 

சென்னை மருத்துவக் கல்லூரி வாசலில், தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கு  உட்பட்ட பகுதிகளில், முக்கியமான இடங்களில் எல்லாம் நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் திருக்குறள்களை பலகைகளில் எழுதி வைக்க வேண்டும்.

தமிழ் மொழியை எந்த வகையிலும் இரண்டாந்தர மொழியாக ஆக்கத் தமிழகம் ஒப்பாது.

தமிழக அரசு எந்த தியாகத்தையும் செய்து தமிழை காப்பாற்றும்.

இரங்கூனில் அறிஞர் அண்ணாவின் 52-வது பிறந்தநாள் விழாவில்...

‘நானறிந்தவரை திராவிட மக்களுக்கு குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள அறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போல் எழுத்தாலும், பேச்சாலும், சொல்லாலும், செயலாலும், அன்பாலும் நல்லறத்தின் வழி நிற்கும் பண்பாலும், ‘அமைதி ஆனால் ஆர்த்தெழுந்தால் புயல் தான்’ என்ற உணர்வாலும், ‘அரசியல் அறிவு என்பது மக்களின் வாழ்க்கைக்கு பயன்படாத வரட்டுத் தத்துவம் அல்ல... இருளில் கிடக்கும் மக்களுக்கு வாழ்வின் ஒளியைக் காட்டும் அரும் பணிதான் அரசியல்’ என்பதை விளக்கும் திறனாலும், தொட்டது துலங்கும், பட்டது துளிர்க்கும் என்பதுபோல் போராட்டம் என்றாலே வெற்றி தான் என்ற புதியதோர் இலக்கணத்தை ஏற்படுத்திய பேராற்றலாலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராய், உலகிலேயே எந்தத் தலைவரும் பெறாத பெரும் பேறான ஒரு நாட்டின் மக்களுக்கு அன்பு அண்ணாவாய், விளங்குகின்ற தலைவர் இல்லை என்றே கூறுவேன்.’

1984 அன்னை தெரசா பல்கலைக் கழக திறப்பு விழாவில்...

அன்னை தெரசா அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த போதும், எழுந்து நடந்த போதும் அவர் நடமாடும் போதும் என் அன்னையைப் போல் இருந்தார்.

என் தாய் உயிருடன் இருந்திருந்தால் இவரைப் போலத்தான் இருந்திருப்பார். இவருடைய உயரம் தான் என் தாய்.

அவர் பேசும் போதும் என் தாய் அறிவுரை கூறுவது போல் இருந்தது. அவர் என்னுடைய தாயைப் போல நல்ல கருத்துகளை கூறிவந்தார்.

1965-ஆண்டு காமராஜரின் பிறந்தநாள் விழாவில்...

காமராஜர்  ‘தனக்கென வாழாத நல்லவர், முதல்-அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்ய முடியும் என்று கருதி, தன் பதவியைத் துறந்தார்.

சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். காமராஜர் ஏழை! அவர் பண வசதி உள்ளவர் என்று யாருமே இதுவரையில் மேடையில் கூறியதில்லை, கூறவும் துணிவு கிடையாது, அந்த அளவுக்கு காமராஜர் ஏழையாக இருக்கிறார். தம்மையே நாட்டுக்குத் தியாகம் செய்யும் வகையில் அவரது சேவை இருக்கிறது. அவருடைய லட்சியம் தான் எங்களுடைய லட்சியம்! எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. வழி வேறாக இருக்கலாம். லட்சியம் ஒன்று தான். 

தலைவர் காமராஜரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் எனக்குண்டு. என் தாய் அடிக்கடி கூறுவாரகள் ‘உன்னைப் பற்றி யார் குறை கூறுகிறானோ, அவனையே நீ நண்பனாகக் கொள்ள வேண்டும். புகழ்ந்து பேசும் நண்பர்களைக் கைவிட வேண்டும்’ என்று. அது போல காமராஜர் யாரிடம் பழகினாலும் ஒவ்வொருவருடைய குறைகளையும் எடுத்துச் சொல்லித் திருத்துவார்.

21.11.1983 சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு, டைரக்டர் பாரதிராஜா தலைமையில் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த பாராட்டு விழாவில்...

‘ஒரே தாயின் கையால் உண்டு வளர்ந்தோம்’ என்று சிவாஜி கூறினார். என் தாய் எங்கள் இருவருக்கும், அதேபோல் சிவாஜியின் தாய் எங்கள் இருவருக்கும் உணவைப் பரிமறி இருக்கிறார்கள்.

‘என் மறைந்த மனைவியின் மரணத்தின்போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். அப்போது என் வீட்டிற்கு வந்த சிவாஜியைப் பார்த்துத்தான் கதறி அழுதேன். மனிதனுக்கு துன்பம் நேரும்போது நண்பன் சகோதரனாகிறான். சிவாஜியைப் பார்த்ததும் பொங்கி வந்த துக்கத்தை அடக்க முடியாமல் பீறிட்டு அழுதுவிட்டேன்.’

‘பாழாய்ப்போன அரசியல் நம்மைப் பிரித்து விட்டதே: என்று சிவாஜி சொன்னார். அண்ணன் தம்பி உறவைப் பிரிக்க முடியாது... எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக? என்று எனக்குத் தெரியாது.

மக்களுக்கு ஒழுங்கு, ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுங்கள். நகைச்சுவையோடு பொழுது போக்காகப் படம் எடுங்கள்.

நடிக்கும்போது பொதுவாக ஒரு கலைஞன் கொள்கையோடு நடிக்க வேண்டும்.

படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு ரசிகர்கள் செல்லும் போது புதிய பாடம் கற்க வேண்டும். என்று, அன்று சொன்னவர் அண்ணா..

15, செப்டம்பர், 1983 வீர - தீரச் செயல்களுக்காக தமிழக முதல்வர் விருது வழங்கும் விழாவில்...

இளைஞர் சமுதாயம் வளர வேண்டும், வாழ வேண்டும். அவர்கள் கற்று, தாங்களும் வளர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டும்.

ஏதோ வழி தெரியாமல், வேறு பாதைக்குச் சென்று விடாமல் உண்மை தெரிந்து திருந்தி வாழ வேண்டும். இந்த வகையில் தான் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கை நண்பர்கள் மூலம் என்னுடைய வேண்டுகோளை வெளியிட்டேன். நான் விடுத்த அந்த வேண்டுகோள் பலன் பெற்றிருக்கிறது. அப்படி முன் வந்தவர்கள் ஒருவராக இருக்கலாம், 10 பேராக இருக்கலாம். இவர்கள் லட்சக் கணக்கானவர்களுக்கு வழிகாட்ட முடியும். இப்படி, பதக்கம் வழங்குவது மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகத்தை உருவாக்குவதற்காகத் தான்.

நல்ல மாணவர்களை உருவாக்குவது, நல்ல ஆசிரியர்களின் பொறுப்பு. அதுபோல நாட்டில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இருப்பதற்குச் சமுதாயத்தில் உரைகல்லாகக் காவலர் இருக்க வேண்டும். காவல்துறையினர் நியாயமாக, நேர்மையாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அன்பு, பாசம், பரிவுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்.

15.01.1979 தமிழ் பேரறிஞர்களுக்கு விருது, அரசு கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்...

கட்சியை ஒதுக்கிவிட்டு, ஜாதியை ஒதுக்கிவிட்டு, மதத்தை ஒதுக்கிவிட்டு தமிழைப் போற்றி பாதுகாத்து வளர்ப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் குறிப்பிட்டனர். உயிர் எழுத்தில் மாற்றம் தேவையில்லை, மாற்ற முடியாது. இப்போது பிரச்சினை வராது என நினைக்கிறேன். அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

சங்க இலக்கியங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டி உள்ளது. தமிழைக் காப்பாற்றியாக வேண்டும். இதை அனைவரும் ஒரு சேர, ஒரே குரலாக ஒலித்தாக வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் தமிழ் முன்னால், அரசியல் பின்னால் என்று கொள்ள வேண்டும்.

தமிழையே ஆட்சி மொழியாகவும், நீதி மன்றங்களின் வழக்கு மொழியாகவும் ஏற்போம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இப்படி ஒன்றுபடுவோமானால், போராட்டம் வேண்டியதில்லை. ஊர்வலம் தேவை இருக்காது. மொழிப் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒரே குரலாக ஒலிப்போம்... எல்லோரும் வாழ உழைப்போம், அனைவரும் ஓரினம், ஒரே தேவன்! என்று முழங்கிச் செயல்படுவோம்.

14.04.1978 தமிழ்த் திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவில்...

நான் நினைத்திருந்தால் கோடிக் கணக்கில் பணம் சேர்த்திருக்கலாம். பணத்தை சேர்க்கவில்லை. ஆனால், கோடிக்கணக்கான இதயங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். யாராக இருந்தாலும் தங்களுக்காக அனுதாபப்பட ஒருவர் வேண்டும் என்பார்கள். அந்த வகையில் நான் என் நலனில் அக்கறை உள்ளோர் பலரைப் பெற்றுள்ளேன்.

கடந்த கால எங்களது அனுபவங்கள் தான் எங்களது சேவைக்கு வழியமைக்கின்றன.

கலையுலகின் பாதுகாப்பு மக்கள் கையில் உள்ளது. அனைவரின் கரங்களிலும் உள்ளது. என்னிடம் மட்டும் இல்லை என்பதை உணர வேண்டும்.

எப்போதுமே ஒருவர் அழிவில் மற்றவர் வாழ்வு இருக்கிறது என்ற எண்ணம் ஒழிய வேண்டும்.

கலையையும், நாட்டையும் வாழ்விக்க வேற்றுமைகளை மறந்து விட்டு அனைவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும்.

1968- சிறுசேமிப்புத் திட்டப் பேச்சுப் போட்டி பரிசு விழாவில்...

மணவர்கள் பள்ளி சென்று படிக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள்? பொருளாதாரம், சமூகம், விஞ்ஞானம், வரலாறு முதலிய பாடங்களைப் படிக்கிறார்கள். அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் வீரம் எப்படி இருந்தது? நாட்டைக் காக்க எத்தகைய தியாகங்களைச் செய்தார்கள் என்றெல்லாம் படிக்கிறார்கள்.

அதே சமயம் தன் குடும்ப நிலையை அவர்கள் கவனிப்பதில்லை. மற்றவர்களைப் போல் ஆடம்பரமாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.. நாமும் ஏன் அவர்களைப் போல் இருக்கக் கூடாது? என்று எண்ணுகிறார்கள்.

தாய் தந்தை எப்படி கஷ்டப்பட்டு படிக்க பணம் அனுப்புகிறார்கள்? எப்படி நம்மை நம்பி இருக்கிறார்கள்? படித்து எதிர்காலத்தில் அவர்களை வாழ வைப்போம் என்று நம்பி இருக்கிறார்கள்! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆனால் இந்த நிலை இல்லாமல் தாய் தந்தை எதிர்பார்க்கும் நிலையை அடைய நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நாம் கவனமாகப் பழக வேண்டும். வசதிகளைக் குறைத்துக் கொள்ளப் பழக வேண்டும். எவ்வளவு குறைந்த அளவு செலவு செய்ய முடியுமோ, அந்த அளவுதான் செய்ய வேண்டும். அப்போது தான் தவறுகளில் இருந்து தப்ப முடியும்.

தொடரும்...
 

Image courtesy: தமிழ் பேப்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com