புதன்கிழமை 14 நவம்பர் 2018

சிவனடியார்களுக்கு புண்ணியம் நல்கும் ஒரு பொன்னான வாய்ப்பு!

Published: 25th August 2018 01:33 PM

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் உள்ளது உளுந்தை கிராமம். சுகநதி என்னும் ஆற்றின் கரையில் இவ்வூர் இயற்கை வளம் சூழ அமைந்துள்ளது. ஊரின் வடகிழக்கு மூலையில் சிவன் கோயிலும், ஊரின் மேற்கில் பெருமாள் கோயிலும் பெரிய அகன்ற தெருவின் இருபுறமும் அழகுற அமைந்துள்ளன. பெருமாள் கோயில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கும் நடந்துவிட்டது. ஆனால் சிவனாலயம் வழிபாடு இல்லாமல் சுமார் 60 வருடங்களுக்கு மேல் எந்தவித திருப்பணியும் மேற்கொள்ள இயலாமல் சற்று பாழடைந்து விட்டது. இதன் சிறப்பை அறிந்தால் மட்டுமே இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் தொய்வு இல்லாமல் நடைபெற வேண்டியதன் அவசியம் தெரிய வரும்.

கிழக்கு நோக்கிய திருக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கோஷ்ட தெய்வங்களுடன் கூடிய ஓர் அழகிய சிவனாலயமாகும் இது. கருவறையில் அகத்தீசுவரர் என்ற திருநாமம் தாங்கி சற்று பெரிய லிங்க வடிவத்துடன் ஈசன் காட்சி தரும் கோலத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தான் குடிகொண்டுள்ள வீடு பழுதடைந்தாலும் தன்னை வழிபட வரும் அடியவர்களுக்கு வீடுபேறு வழங்கி உன்னத வாழ்வை அருளுவதே தன் குறிக்கோள் என்று சொல்லாமற் சொல்லும் திருவுருவம். 

மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி பக்தர்க்கு அருளுவதில் தான் ஒன்றும் இறைவனுக்கு சளைத்தவள் அல்ல என்ற விதத்தில் நின்ற கோலத்தில் சிற்பியின் கை வண்ணத்தில் அம்பிகை மிளிர்கிறாள். அகில லோகத்திற்கும் அன்னை ஆதலால் அகிலாண்டேசுவரி என்று திருநாமம் கொண்டுள்ளாள் போலும். அழகிய சுதை வடிவ சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க நந்நி மண்டபம், கொடிக்கம்பம், பலிபீடம் என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக உள்ளன. சிவலிங்கத்திற்கு வெகுநாள்களாக அபிஷேகம் செய்யாததால் பொலிவிழந்து காணப்படுகிறது. ஆலயதீர்த்தக்கிணறு அனுதினமும் ஆதவன் வழிபாடு நிகழ்த்தும் சாளர அமைப்பைக்கொண்ட ஆலயம்.

கல்வெட்டுக்கள் கூறும் தகவலின்படி, சோழமன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178  - 1218) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதை அறியமுடிகிறது. உளுந்தை கோயிலை நிர்வகித்து வந்த "அரசுபட்டன்' என்ற சிவபிராமணர் பற்றிய செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கு நிலங்கள் தானம் அளித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வூருக்கு அருகே கீழ்கொடுங்கலூர், மருதாடு போன்ற ஊர்களில் உள்ள ஆலயங்களில் காணப்படும் சோழர் கால கல்வெட்டுகளிலும் இவ்வூரைப்பற்றியும், குறிப்புகள் காணப்படுவது சிறப்பு.

புனிதர் பாதம் பட்ட இந்த ஊரில் உள்ள ஆலயம் மேலும் பாழாகும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க, திருப்பணி வேலைகள் மேற்கொள்ள வேண்டி ஒரு வருடம் முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. இருப்பினும் போதிய நிதி உதவி இல்லாததால் வேலைகள் சற்று தாமதமாகும் நிலையில் உள்ளது. எனவே சிவனடியார்கள் தங்களுக்கு கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி, அளவற்ற புண்ணியம் நல்கும் இவ்வாலய திருப்பணி வேலைகளில் உடனடியாக பங்கேற்று இறையருள் பெறலாம்.

தெடர்புக்கு: 94432 27217 / 99410 08076.

More from the section

முருகனுக்கு மந்திர உபதேசம் செய்த குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை ஆலயத்தில் சூரசம்ஹார விழா
சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு விழா
அரோகரா கோஷம் விண்ணதிர, கோயில்களில் சூரசம்ஹாரம்
திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி