செய்திகள்

நரி முகம் மாற்றிய நங்கைவரம் ஈசன்!

தினமணி

சோழ நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னனான ஒருவனுக்கு, நீண்ட நெடுநாளாக குழந்தைப்பேறு வாய்க்காது நிம்மதியற்று இருந்தான். குழந்தைப்பேறு வாய்க்காததை எண்ணி மனம் வருத்தம் கொண்ட மன்னனும், ராணியும் தலம் தலமாகச் சென்று இறைவழிபாடு செய்து குழந்தைப் பேறுக்கு வேண்டினார்கள்.
 
இவர்களின் வேண்டுதலுக்கு ஈசன் கருணை காட்ட முடிவெடுத்தான் போலும்....... அரசருக்குப் பெண் மகவு பிறந்தது. குழந்தையைப் பாசத்தோடு கொஞ்சத் தூக்கியவனுக்கு அதிர்ச்சியுண்டானான். அதிர்ச்சிக்குக் காரணம்....குழந்தையின் முகம் நரி முகத்துடனும் உடலமைப்பு மனிதவுருவத்துடனும் பிறந்திருந்தது.
 
மன்னன் வேதனை, பிள்ளைப்பேறு வாய்க்காத நேரத்திலிருந்ததை விடச் சற்று அதிகமாக வேதனையடைந்தது. இந்தக் குழந்தைப் பேறு வாய்க்காமலே போயிருக்கலாமே? என மனம் நொந்தான்.
ராணியும் கண்களிலிருந்தும் வழியும் கண்ணீர் நின்றபாடில்லை. என்ன செய்வது?....விதியின் பயனை யாராயிருந்தாகிலும் அதனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்". 

நரி முகத்துடன் கூடிய குழந்தையை வளர்த்து வந்தனர். அது வளர வளரப் பெரியவளாக ஆக ஆக, மன்னனின் வேதனையும் விளைந்தன. 

அரசனுக்குரிய முக்கியஸ்தர்கள் மன்னனை அணுகி........
இறைவனுக்குப் பரிகார பூஜைகள் செய்து சரியாகுதா பார்க்கலாமே! எனச் சொன்னதோடு, உடனடியாக ஒவ்வொரு ஆலயமாகவும் சென்று அதற்குண்டான பரிகாரத்தையும் செய்து வந்தார்கள்.
காலங்கள் கழிந்தோடிக் கொண்டிருந்தது........வழிபாடும், பரிகாரமும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தன.
 
முன் போலவே ஈசன் மனதை மன்னனின் வழிபாடு கரைத்திருக்க வேண்டுமென்றுதான் தோணுகிறது...... ஏனென்றால், ஒரு நாள் மன்னனின் கனவில் தோன்றி,....அசரீரியாக குரலையும் ஒலிக்கச் செய்தார்.
 
'மன்னனே!"..நீ...மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பஞ்சவடி எனும் சிற்றூருக்குச் செல்!" அங்கே நான் குறிப்பிட்ட இடத்தில் அந்த முனிவர் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபாடு செய்து வருகிறார். அவர் வழிபாடு செய்யும் லிங்கத்தை இங்குக் கொண்டு வா"..அந்த லிங்கத்தை இந்த ஊரில் வைத்து ஆலயமொன்றை அமை. அவ்வாலயத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வா!" உன்னுடைய மகளின் நரி முகம் மாறும் என்றது.
 
திடுக்கிட்டு எழுந்தார் மன்னர். குரல் கரைந்து போயிருந்தது! அசரீரியை எண்ணி வியப்பு கொண்டார்.
 
மகளின் முகவாட்டம் நீங்க வழி கிடைத்ததை எண்ணி மன்னனது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. உடனடியாக தன் படைகளை பஞ்சவடிக்கு அனுப்பி வைத்தான். மன்னனின் சேவகர்கள் பஞ்சவடி வந்திருந்த சமயத்தில் அந்த முனிவர் சிவலிங்கத்தின் முன்பு தியானத்திலிருந்தார்.
 
மன்னனின் படைவீரர்கள் சப்தம் ஏதும் எழுப்பாமல் முனிவர் அறியா வண்ணம் சிவலிங்கத்தை தூக்கி எடுத்து வந்து விட்டனர். ஈசனின் அசரீரி ஆணைப்படி, மன்னன் "அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்" என்ற ஊரில் ஆலயத்தைக் கட்டி முடித்தான். கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை அவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்தான். அனுதினமும் அச்சிவலிங்கத்தைப் பூசித்து வரலானான் மன்னன்.
 
மன்னனின் தொழுகைக்கு ஈசன் மனம் இறங்கினார் போல........ ஆம்! மன்னன் மகளின் நரி முகம் மாறிவிட்டுப் போயிருந்தன. நரி முகம் நீங்கப் பெற்றதும் அவள் முன்னை விடப் பேரழகு பொருந்தியவளாகக் காட்சியளித்தாள். இறைவன் நங்கையின் முகம் மாற வரம் கொடுத்ததால், ஏற்கனவே அதுவரை "அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்" என அழைக்கப்பட்டு வந்த அவ்வூர், இதன் பிறகு இவ்வூர் "நங்கைவரம்" என பெயர் மாற்றம் கொண்டு அழைக்கப்பட்டது.
 
பின்னர் இந்த பெயர் மருவி, தற்போது "நங்கவரம்" என அழைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அருள்பாலிக்கும் ஜேஷ்டாதேவி மிகச் சிறப்பு வாய்ந்த தெய்வம். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் ஜேஷ்டாதேவியின் காலடியின் கீழ் தங்களது வாள்களை வைத்து வணங்கி விட்டு போருக்கு எடுத்துச் செல்வார்களாம்!
 
அதே போல எந்தச் செயலை செய்வதாய் இருந்தாலும், முதலில் அம்பாள் ஜேஷ்டாதேவியை வணங்கிய பின்னர்தான் எதையும் செய்வார்களாம். அதனால் எல்லாமே நன்மையாகவே விளைகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

இறைவன் - சுந்தரேஸ்வரர்

இறைவி - கோமளாம்பிகை

தலவிருட்சம் - மகிழமரம், இவர் தீண்டாத் திருமேனியாவார். 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சவடி என்ற இடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடமிருந்து சிவலிங்கத்தை "அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்" என்ற ஊருக்கு மன்னனின் படைவீர்களால் எடுத்து வரப்பட்டன. லிங்கத்தை எடுத்துச் சென்ற சமயம் முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். முனிவர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்த போது, தான் வழிபட்டு வந்த சிவலிங்கத்தைக் காணாது மிகுந்த கவலை கொண்டார்.
 
பின், முனிவரின் கனவில் தோன்றிய ஈசன், "வழிபாடு செய்து கொண்டிருந்த லிங்கம் தற்போது "அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்தில்" இருப்பதையும் கூறினார் ஈசன். இதைத் தெரிந்து கொண்ட முனிவர் நடைப்பயணமாகவே நடந்து வந்தார் அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்துக்கு. பல மாதங்கள் பயணத்திற்குப் பிறகு...சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை அடைந்தார்.
 
முனிவர் ஆலயத்தை வந்து அடைந்த நேரம் இரவு நடுநிசி, அந்நேரம் ஆலயக் கதவுகள் எல்லாம் சாத்தித்தானே இருக்கும் என்ன செய்வது?.......எனப் புரியாமல் யோசித்தார் முனிவர். படீரென கோவில் மதில் சுவர் ஏறிக் குதித்தார் முனிவர்.
 
முனிவர் குதித்த இடம், சேறும் சகதியுமான அகழி இருந்த இடமாததால்......முனிவரின் இரு கால்களும் சேற்று அகழியில் மூழ்கிப் புதைந்து போக...., முழங்கால்கள் மூழ்கி மூதியான உடல் வெளித்தெரிந்த கோலத்துடன் சிலையாகிப் போனார். அவ்வாலயத்தில் அவருக்குத் தனிக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் அம்முனிவர் அக்கோலத்துடனே அருள்பாலிக்கிறார். அந்த முனிவர் "அகண்டேஸ்வரர்" என்ற பெயருடனும், "தீண்டாத் திருமேனி" என்றும் அழைக்கப்படுகிறார்.
 
இவ்வாலயத்தில் சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடைபெறுமோ, அதே அனைத்துப் பூசைகளும் அகண்டேஸ்வரருக்கும் செய்விக்கப் படுகின்றது. அகண்டேஸ்வரரை தொடாமல்தான் அனைத்துப் பூஜைகளும் நடைபெறுகின்றன. நெற்றியில் சந்தனப் பொட்டை வைக்க, அர்ச்சகர் சற்றுத் தொலைவிலிருந்தபடியே சந்தனத்தை, முனிவரின் சிலை நெற்றியை நோக்கி வீசி பொட்டை பதிய வைக்கிறார்.
 
இங்கு அருள்பாலிக்கும் அகண்டேஸ்வர முனிவர், பலநூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறார். சமயபுரம், மாகாளிகுடி, தொட்டியம், காடுவெட்டி, காட்டுப்புதூர் போன்ற ஊர்களில் இருந்து மக்கள் பலரும், இங்கு வந்து பொங்கல் வைத்து முனிவருக்குப் படைத்து அபிஷேக, ஆராதனைகள் செய்து மகிழ்கின்றனர்.
 
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் நங்கவரம் தலம் இருக்கின்றன. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் சென்று "பெருகமணி" என்ற ஊரில் இறங்கிக் கொள்ள வேண்டும். பின் இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது நங்கவரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் மினி பேருந்து வசதி இருக்கின்றன.
 
- கோவை கருப்பசாமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT