இந்தியாவில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை பெற வேண்டுமா?

கடந்த ஆண்டு காவேரி மஹா புஷ்கரம் மயிலாடுதுறையில் மகோன்னதமாக நிகழ்ந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடுவதை போல நீராடினர்.
இந்தியாவில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை பெற வேண்டுமா?

கடந்த ஆண்டு காவேரி மஹா புஷ்கரம் மயிலாடுதுறையில் மகோன்னதமாக நிகழ்ந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடுவதை போல நீராடினர்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது, குறிப்பிட்ட ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் விழா நடைபெறுவது வழக்கம். 12 ராசிகளுக்கு உரிய 12 நதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. குருபகவான் 12 முறை ஒரு ராசியை கடக்கும்போது அதாவது 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம், மகா புஷ்கரம் விழாவாகக் கருதப்படும். 

காவேரி மகாத்மீயம் என்னும் நூலில், மஹான்களின் பெருமை, துறவிகளின் பெருமை, சாலகிராமத்தின் ஆராதனை மஹிமை, காவேரியின் சிறப்புகள் இவற்றை உபதேசிக்க, கேட்டவர்கள் மஹா பாக்கியசாலிகள், ஜன்மாந்திரங்களின் புண்ணியம் செய்தவர்களுக்கே காவேரி உள்பட புண்ணிய நதிகள் பன்னிரண்டையும் காணும் பாக்கியமும், அதில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்கிறது. 

கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர்கள் வந்து பார்க்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் யார் என்று வினவும் போது, தான் கங்கை என்றும், மற்றவர்கள் யமுனை, சரஸ்வதி என்னும் புண்ணிய நதிகள் என்றும், மனிதர்கள் செய்யும் பாவத்தை தங்களிடம் கொட்டி தீர்த்ததனால், தாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டதாகவும் எங்களுக்கு பாவத்தை போக்க வழிவகை செய்திட வேண்டும் என்றும் கேட்டனர். உடனே, கடும் தவத்தில் ஆழ்ந்த கன்ம மகரிஷி, பின்னர் மூன்று நதிகளும் மாயூரம் நகரில் உள்ள துலா காவேரியில் துலா மாதத்தில் நீராடி, மயூர நாதரையும் , பரிமள ரங்கநாதரையும் தரிசித்து பாவங்களை போக்கிக் கொள்ளும்படிகூறுகிறார். அதன்பின் மூவரும் துலா மாதம் "மாயூரம்' என்று அழைக்கப்பட்ட மயிலாடுதுறையில் புனித நீராடி பாவங்களை தொலைத்து புதிய பொலிவுடன் வடபாரதம் செல்வதாக ஐதீகம். 

மேற்படி, காவேரி மஹா புஷ்கரம் 2017-ஆம் ஆண்டு நிகழ்வுகளை மயிலாடுதுறையில் உள்ள துலா கட்டத்தின் அருகிலேயே தங்கி காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், முன்னின்று நடத்தினார்கள். மேலும் சைவ திருமடங்களான தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர்கள், மகான்கள், யோகிகள், துறவிகள் பங்கேற்றார்கள். 

நவகிரகங்களில் ஒருவரான குருபகவான், பிரம்மனை நோக்கி ஒரு வேண்டுதலோடு கடுமையான தவம் மேற்கொள்கிறார். குருவின் கடும் தவ வலிமையை எண்ணி வியந்த பிரம்மன், குருவின் முன்பு தோன்றி, "குருவே உனது கோரிக்கை தான் என்ன?'' என்று வினவினார். "தங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்கு தாருங்கள்'' என்றார். "அப்படியா, அப்படியே ஆகட்டும்'' என்றதும், குருபகவான் ஏக மகிழ்ச்சியுற்றார். ஆனால் புஷ்கரம் (புஷ்கரம்- அமிர்தகலசம். உலகம் அனைத்திலும் உள்ள தீர்த்தங்களுக்கு அதிபதி. இவர் பிரம்ம தேவனின் கரங்களில் இருப்பவர்) "பிரம்மா என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள்'' என்று கெஞ்சியது. அதனால் தர்ம சங்கடமடைந்த பிரம்மன், தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க முடியாது தவித்தார். இறுதியாக , குருவுக்கும் புஷ்கரத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார் பிரம்மன். அதனையேற்று செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டனர். அதாவது புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரை உள்ள 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, புஷ்கரம், மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவேரி, விருச்சிகம்-தாமிரபரணி, தனுசு- சிந்து, மகரம்-துங்கபத்திரா, கும்பம்-பிரம்மபுத்திரா, மீனம்-பரணீதா ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலகட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள் செய்வார்கள். மேற்படி நாள்களில் மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால் அனைத்துவகை துன்பங்களும் நீங்கி வளமையும் செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பதே புஷ்கரத்தின் மகிமையாகும். 

அதன்படி, தான் வட இந்திய நதிகளில் நடைபெற்று வந்த புஷ்கரவிழாவின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு காவிரியிலும் இந்த ஆண்டு 2018 செப்டம்பர் மாதம் குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடம் பெயர்கிறார். தாமிரபரணி புஷ்கரம் என்னும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாநிகழ்வாக கொண்டாப்படுகிறது. 

சிறப்பு வாய்ந்த தாமிரபரணி ஆற்றில் இந்த ஆண்டு புஷ்கர திருவிழாவும் நடைபெறுகிறது. 12 ஆண்டுக்கு ஒரு முறை தாமிரபரணியில் கொண்டாடப்படவுள்ள புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு பிறகு வருவதால் தாமிரபரணி மகா புஷ்கரமாக போற்றப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 11 -ஆம் தேதி முதல் 22 - ஆம் தேதி வரை உள்ள நாள்களில் தாமிரபரணியில் புனித நீராடினால் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய புண்ணியம் கிட்டுகிறது.


மேற்படி, நதிகளில் குருபகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாள்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்கு வரும்பொழுது நாம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம், சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோர் தங்கியிருப்பதாக ஐதீகம்! அவ்வேளையில் நாமும் குளித்து மகிழ்வோம். 

பெரும்பாலும் வறட்சியான நாள்களில் கூட வற்றாத, ஜீவ நதியாம் தாமிரபரணி நதியில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இப்புனித மஹா புஷ்கர விழாவில் நாமும் குடும்பம் குடும்பமாக பங்கேற்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com