சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 3) - சூலமங்கை

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை புறவழி சாலையில் இருந்து பிரியும்....
சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 3) - சூலமங்கை

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை புறவழி சாலையில் இருந்து பிரியும் பசுபதிகோயில் ரயில் நிலைய சாலையை தாண்டியதும் சூலமங்கலம் அமைந்துள்ளது.

சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உள்மண்டபத்தில் சூலதேவர் கை கட்டி இறைவனை வணங்கும் நிலையில் உள்ளார். சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றதாக கூறுவர். 

திருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி
அரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை
சூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி
நந்திமங்கை - ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
பசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி
தாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி
புள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி

இத்தலத்தை சூலமங்கை என்றும் அழைப்பர். தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். சப்த மாதர்களில் கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம்.

பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள்.

இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

ரத்தத்திற்குத் தலைவியான இவளை வணங்கினால் ரத்த சம்பந்தமான வெண்புள்ளி, இரத்தம் உறையாதல் போன்ற குறைபாடுகள் நீங்க பெறலாம். இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். எலுமிச்சம் பழ சாதம் நிவேதனம் செய்து நலம் பெறலாம். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர்களுக்கு வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி.

சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார நிலைமை பற்றி எடுத்து கூறுகிறது. 

கருவறை கோட்டத்தில் விநாயகர் அழகான உருவுடன் கந்தர்வர்கள் வெண்சாமரம் வீசும் காட்சியுடன் செதுக்கப்பட்டுள்ளது. தென்முகன், ஆலமரம் இன்றி காட்சியளிக்கிறார். அருகில் சூலமும் விநாயகரும் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளதை காணலாம். விநாயகர், முருகன், மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரகங்கள், பைரவர் உள்ளனர்.

இவ்வளவு தூரம் சிறப்பினை தெரிந்துகொண்ட நாம் சூலமங்கலத்தின் இன்னொரு சிறப்பான சூலமங்கலம் சகோதரிகள்பற்றி பார்ப்போம். இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் இவ்வூரில் பிறந்தவர்கள். பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற இச்சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கியவர்கள்.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com