சஷ்டி விரதம் பற்றி கிருபானந்தவாரியார் கூறும் விளக்கம்!

சூரபத்மன் என்ற ஒர் அசுரன் சிவனாரை நோக்கி சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான்.
சஷ்டி விரதம் பற்றி கிருபானந்தவாரியார் கூறும் விளக்கம்!

சூரபத்மன் என்ற ஒர் அசுரன் சிவனாரை நோக்கி சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சி அவன் முன் தோன்றிய சிவனார் "உலகில் யாருக்கும் சாகா வரம் என்பதைத் தர இயலாது, அதனால் உன் விருப்பத்திற்கு ஏற்ப சாகும் வரத்தினை நீ பெறலாம்' என்று அவனிடம் கூறினார். அவனும் இதன் உள்நோக்கம் உணராமல், பொதுவிதியாக பெண்ணானவள் கருவுற்று ஒரு குழந்தையைப் பெறுகிறாள், அப்படியில்லாமல் கருவில் உருவாகாத ஒருவனின் கரத்தால் மட்டுமே எனக்கு மரணம் வேண்டுமென ஒரு வில்லங்கமான வரத்தைக் கேட்டான். மஹாதேவன் இவனைப்போல் எத்தனை நபர்களைப் பார்த்தவர்; அப்படியே ஆகட்டுமென்ற வரத்தை தந்தார்.

அசுரத் தலைவனாகப் பொறுப்பேற்ற சூரபத்மன் கொஞ்ச நாள்கள் கமுக்கமாக இருந்துவிட்டு, பின் தன் கர்வ மிகுதியால்; சில நாள்கள் சென்றதும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். வெகுண்டெழுந்த தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.

சிவனாரும் மற்ற இருவரின் ஆலோசனையின் பேரில்; இதற்கு தீர்வாக உலக நன்மை வேண்டியும், அசுரர்களை வதம் செய்ய சக்தி பெறவும்; அனைத்து முனிவர்களும் அமாவாசையில் தொடங்கி 6 நாள்கள் ஒரு யாகம் நடத்த அருளினார்.

யாகத்தில், முதல் நாளிலிருந்து ஆறு வித்துக்கள் ருத்ரனிடமிருந்து வரவர கும்பத்தில் சேகரிக்கப்பட்டு, ஆறாம் நாள் (சஷ்டி) ஒன்றாக்கிய போது கிடைத்த பொக்கிஷம் தான் ஷண்முகர் எனப் பெயர் கொண்ட அழகன் முருகனாவான். கார்த்திகை பெண்கள் அவர்களை வளர்த்ததால் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான்.

ஐப்பசி மாதத்து அமாவாசையிலிருந்து, அதாவது தீபாவளிக்கு மறுநாள் வரும் பிரதமையில் ஆரம்பித்து ஆறு நாள்கள் முடிந்து வரும் சஷ்டியில் சூரபத்மனை வதம் செய்தான் முருகன். அப்படி சூரனை வதம் செய்தபின் அவனைத் தன் வாகனமாக மயிலாகவும், சேவலாகவும் ஏற்றுக்கொண்டான். இந்த நிகழ்வுகள் கந்தபுராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சி முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் விமரிசையாகக் கொண்டாடினாலும்; திருச்செந்தூரில் இதனை மிக முக்கிய உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள்.

காம, குரோத, லோப, மத, மாச்சர்யம் அனைத்தையும் அழிக்கும் நோக்கத்துடன், துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பிள்ளை; அவனை குழந்தை என்று கொஞ்சுவோருக்கு - குழந்தையாகவும், ஆசானாகவும், தாயாகவும்; கேடு செய்ய நினைத்தாலோ உக்ரமான காலனாகவும் இருக்கின்றான். இதை வெளிக்காட்டும் முகம் தான் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி.

உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அந்த 6 நாள்களிலும் இங்கு வந்து தங்கி கடுமையான விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அவர்கள் வருடம் தோறும் மறக்காமல் தன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்து வந்து, இந்த அளவிற்கு உயர்ந்த நிலைக்கு எங்களைக் கொண்டு வந்ததற்கு நன்றி கூறும் முகமாக அவன் கொடுத்த செல்வம், அவனுக்கு போக மீதி தான் தனக்கு என்று தன் வம்சாவளிகளும் இது பற்றி தெரிந்து கொள்ளப் பழக்குகிறார்கள்.

பொதுவாக, விரதம் என்பது உடல் மற்றும் உள்ளத்தூய்மைக்கு ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஒரு மனக்கட்டுப்பாடு ஏற்படுகிறது. கடும் விரதம் என்று ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 6 நாள்கள் விருதம் இருக்கிறார்கள்.

ஆனால் எதற்கும் ஒரு விலக்கு உண்டு; ஏனெனில் உடல் உபாதை ஏற்படாமல் இருக்கவேண்டும். அதற்கு ஒரு வேளை பால், பழம் சாப்பிடலாம் எனக்கூறுகிறார்கள். இதனால் நம் உடல்நிலை சீர்கேடையாமல் இருக்க ஒரு மருந்தும் சொல்கிறார்கள்; தினமும் 6 மிளகும், 6 கையளவு தண்ணீரும் கட்டாயம் அருந்தவேண்டும் என்கிறார்கள். மிளகிற்கு வெறும் வயிற்றில் ஏற்படும் அமிலத்தை (அசிடிடி) கரைக்கும் வல்லமை உள்ளது.

அருள்வள்ளல் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் விளக்கம் கூறும் போது "சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்" என்ற சொல்லுக்கு மிக அற்புதமாக, சஷ்டியில் விருதமிருந்தால், அகப்பையில் (கருப்பையில்) குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்று மிகப்பொருத்தமாக, அழகாகச் சொல்லுவார்.

வறுமையில் வாடும் புலவரிடம், வறுமையை வென்ற புலவர் தான் எப்படி இந்த செல்வத்தை, எந்த தனவந்தரிடம் சென்று பெற்றேன், என்ற செய்தியை பாடலாகக் கூறி ஆசுவாசப் (ஆற்றுப்) படுத்துவர். இவ்வகையில் அமைந்த நூல்களை; சங்க காலத்தில் "ஆற்றுப்படை" என்பர். இதனை மையமாகக் கொண்டு நக்கீரன், ஆறுபடை வீடுகளில் உறைந்த முருகனை சரணடைந்தால்; இன்ப மயமான ஆனந்த நிலையை அடையலாம் என்ற பொருள்பட "திரு முருகாற்றுப்படை" என்ற ஒரு பாடல் நூல் இயற்றினார்.

போர் புரியச் செல்லும் தளபதி, தன் படைகளுடன் தங்கி இருக்கும் இடத்திற்குப் "படைவீடு' எனப் பெயர் சொல்வர். சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான் தங்கி இருந்த படைவீடு தான் இந்த திருச்செந்தூர். ஆதலால் முருகனின் மற்ற ஐந்து திருத்தலங்களையும் இத்துடன் சேர்த்து "ஆறு படை வீடு" என அழைக்கிறோம். இப்படி இருந்த ஆற்றுப்படைவீடு அறுபடைவீடாக மருவியுள்ளது.

ஆதி சங்கரரின் ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம், கந்த புராணம், மற்றும் அருணகிரி நாதர் தன் திருப்புகழிலும், செந்திலாண்டவனைப் பாடியுள்ளார்கள். இது தவிர சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற தொன்மையான நூல்களில் திருச்செந்தூரைப்பற்றி குறிப்புள்ளது.

சுனாமியால் தமிழகமே பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனால் நம் திருச்செந்தூர் கோயிலைச் சுற்றியுள்ள 10 கி.மீ. எல்லைக்குள், அது சமயம் எப்போதும் போல் மிகவும் அமைதியாக இருந்ததாம். ஒரு சின்ன பாதிப்புக் கூட இங்கு இல்லை.

இந்த ஆண்டு நவம்பர் திங்கள் 8-ம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இந்த கந்த சஷ்டி உற்சவம் நவம்பர் 13-ம் தேதி சூரசம்ஹாரத்துடன் முடிவடைகிறது. இந்த நாள்களில் விரதமிருந்து ஆறுபடைவீடுகளில் அருளாட்சி செய்துவரும் அந்த முருகப் பெருமானின் உற்சவத்தில் கலந்து கொண்டு அவன் அருளைப் பெறுவோமாக.

 - எஸ்.எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com