பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன்!

பத்து கரங்களுடன் காட்சித்தரும் தசபுஜ ஐயப்பன் கோயில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில்..
பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன்!

பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தேவிப்பட்டணம் செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இது,  தமிழகத்தின் சபரிமலை எனவும் போற்றப்படுகிறது. 

சபரிமலையில் ஐயப்பன் கோயில் அமைப்பைப் போன்றே இங்கேயும் கட்டப்பட்டுள்ளது. இரண்டடுக்குகளாக அமைந்த இக்கோயிலின் மேல்பகுதியில் ஐயப்பன் பாலகனாக காட்சி தருகிறார். இங்குள்ள பஞ்சலோக மூர்த்தியான ஐயப்பன் சிலை கேரளத்தில் செய்யப்பட்டது. 

கோயிலின் சந்நிதி முன் 18 படிகளும், அருகில் இரண்டு புலி வாகனங்களும் அமைந்துள்ளன. காவல் தெய்வங்களாக கருப்பண்ணசாமி மற்றும் கருப்பாயி ஆகியோர் உள்ளனர். இங்கு மஞ்சள்மாதா சந்நிதியும் உள்ளன. சபரிமலை அமைப்பிலேயே துவார பாலகர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடை திறக்கும் நாட்களிலேயே இங்கும் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை முறைப்படியே இங்கும் பின்பற்றப்படுகிறது. 

ஐயப்பன் தவநிலையில் இருப்பவர் என்பதால் கோயில் நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்கின்றனர். மீண்டும் கோயில் நடை திறக்கும்போது விபூதி அலங்காரம் கலைத்து, அதையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். 

இக்கோயிலின் கீழ் தளத்தில் வானபிரஸ்த நிலையில் பாலகன் ஐயப்பன் (சபரிமலை), பூரணையுடன் இல்லறக் கோலம் (ஆரியங்காவு), இரண்டு கால்களையும் மடக்கி, கையில் அக்னி ஏந்தி யோகப்பட்டை அணிந்து பூரணா, புஷ்கலாவுடன் ஐயப்பன் (அச்சன் கோயில்) ஆகிய மூன்று நிலைகளில் ஐயப்பனைத் தரிசிக்கலாம். மேலும், இத்தலத்தில் பத்து கைகளுடன் அருளும் தசபுஜ ஐயப்பனுக்கும் சிலை வடித்துள்ளனர். ஐயப்பனை இத்தகைய நிலையில் காண்பது மிகவும் விசேஷமானதாகும். 

ஐயப்பனை மணக்க விரும்யி மஞ்சள் மாதாவுக்குத் தனி சந்நிதி உள்ளதால், திருமணத்தடை உள்ள பெண்கள் இங்கு வந்து மஞ்சள் பொடி தூவி வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். இதனால் திருமண தடை நீங்குவதாக நம்பிக்கை. மழலை பாக்கியம் வேண்டும் தம்பதியர் இங்குள்ள ஐயப்பனுக்கு கழுத்தில் மணி கட்டி வணங்குகின்றனர். 

கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தமிழக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com