சனிக்கிழமை 17 நவம்பர் 2018

சென்னை பூக்கடை பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது! 

Published: 11th September 2018 11:01 AM

 

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை பூக்கடை காவல் நிலையம் அருகில் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். 

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருட சேவைக்காகப் பாரம்பரியமாக திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்படும். 

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் இன்று காலை 10.31 மணிக்கு பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

இந்த ஊர்வலம் என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்கும்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12-ம் தேதி, ஐசிஎஃப், ஜிகேஎம் காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து அங்கு இரவு தங்கும். 

செப்டம்பர் 13-ம் தேதி பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்கும். 

செப்டம்பர் 14-ம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர், வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைந்து இரவு தங்கும். 

தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து செப்டம்பர் 16-ம் தேதி திருமலை செல்கிறது.

அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம், மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் பிற்பகல் 3 மணிக்கு திருக்குடை முறையாக சமர்ப்பணம் செய்யப்படும்.

Tags : திருப்பதி குடை

More from the section

சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்! 
மலேசியாவில் ஒரு சபரிமலை! 
பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன்!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணியத் திரண்ட ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்