கடவுளிடம் ஒப்பந்தம் போடுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!! 

அரிய பெரும் உயரிய பிறப்பு, நம் மானுடப் பிறப்பு. மகிழ்ச்சியோடு இருந்தாலும்..
கடவுளிடம் ஒப்பந்தம் போடுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!! 


அரிய பெரும் உயரிய பிறப்பு, நம் மானுடப் பிறப்பு. மகிழ்ச்சியோடு இருந்தாலும் சரி, சோதனையோடு இருந்தாலும் சரி, நாம் அன்றாடம் இறைவனைத் தொழும் வழக்கம் நம்மில் ஒரு பகுதியானோருக்கும் இருப்பதில்லை.
 
நாயன்மார்களை நாம் போற்றுகின்றோம். வணங்குகின்றோம், புகழ்பாடுகின்றோம். ஆனால், அவர்கள் வழிபாடுகளைக் கொண்ட போக்கையும், தொண்டுகளையும் நாம் கடைப்பிடிப்பதில்லை. மூவர் முதலிகள் போல நமக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டாம்!, ஆனால், இறை வழிபாடு, அடியார் தொண்டு இதையாவது செய்து வரலாம் இல்லையா?
 
நாம் அவனைத் தொழுவது, அவனைக் காணுவதாக இருக்க வேண்டும். நம்மை வணங்கியதற்காக, அவன்தான் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும். உன்னை வணங்கிவிட்டேன், எனக்கு பலனைக் கொடு என்று கேட்பதில், பக்தி இருக்காது. அது கைமாற்றாக பணம் பெறுவது போலானவை. இப்படி வணங்கியதாயிருப்பின் அதில் பலனொன்றும் விளையா?
 
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலறி, என் பையனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்!, என் பொண்ணுக்கு பெரிய இடத்துப் பையன் வர வேண்டும்!, என் வியாபாரம் பெருக வேண்டும்", நிறைய லாபம் வர வேண்டும்!", கார் வேண்டும்!", பங்களா வேண்டும்.. இன்னும்.. இன்னும் எத்தனையெத்தனையோ அத்தனைகளையும் வேண்டிக் கேட்போம்!
கேட்டுப் பெறுதல் கூடாது. அவனே கொடுக்க வேண்டும். அவன் கொடுப்பதற்குத் தகுந்த பக்தித்தகுதியை பக்தியுடன் தொண்டும் கூடப்பிணைந்து உருகியொழுகியிருக்க வேண்டும். அவன் சோதனையில் நாமே ஜெயிக்கும் எல்லையில் நிற்க வேண்டும். அவன் நமக்குச் சோதனை தருகின்றான் என்றால், அந்தச் சோதனையில் இறைவனை, பக்தியால் வீழ்த்த வேண்டும்.
 
அவன் பக்தியைத்தான் பார்ப்பான். பக்தியினுள் நாமிருந்தால், பக்தியை மெச்சும் இறைவன், நம்மை காப்பான். ஏன்? ஆன்மிக பெரியோர்கள், மகான்கள், முனிவர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், அண்டத்திலுள்ள இன்னும் எத்தனையோ பேர்களுக்குத்தான் எத்தனையெத்தனை பெரிய சோதனைகள் இருக்கப் பெற்றது. அத்தனை பெரிய சோதனைகளிலும் நாயன்மார்கள் இறைவனிடம் தோற்றுப் போகவில்லை.
 
ஏனெனில், ஒரு நாளும் தன் தேவையையென்னி இறைவனிடம், அவர்கள் தன் வேண்டுதல்களை வைத்ததில்லை. அடியார்களுக்குத் தொண்டு செய்வதும், இறை வணக்கமும்தான் அவர்களிடம் நிரம்பி வழிந்திருந்தது. ஒரு நாளேனும், ஒரு பொழுதேனும், ஒரு வேளையேயாயினும் கூட, தனக்கென ஒரு எளியக் கோரிக்கையை இறைவனிடம் நாயன்மார்கள் வைத்ததில்லை. சோதனைகளையெல்லாம் தாங்கியொழுகிய நாயன்மார்கள், முடிவில் கடவுளின் தரிசனத்தைக் காணப் பெற்றிருக்கிறார்கள்.

இப்படித்தான்.. சிவகங்கை அருகாமையில் ஒரு கிராமம். அக்கிராமத்திற்கு இளையான்குடி எனப் பெயர். பச்சை பசுமையான வயல்களாய் சூழப்பட்டுள்ள செழிப்புமிக்க ஊர். இவ்வூரில் மாறனார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். இளையான்குடியில் வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் இவர், “இளையான்குடி மாறனார்” எனப்பட்டார். மிகவும் அளவுகடந்த செல்வம் வைத்திருந்த பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
இறைச் சிந்தனை மேலோங்கியவர். சிறந்த தீவிர சிவபக்தர்.
 
இவரது மனைவியும், அடியவர்களுக்கு சிவத் தொண்டு புரியவும், கணவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தும் வந்தார். வீடு நாடி வரும் அடியவர்களுக்கு வேண்டுவன கேட்டோருக்கு இல்லையென்று இல்லாது கூறி, முதற்கண் உணவளித்து உபசரிப்பது, இவரின் தொண்டான குணங்களில் வழக்கமான ஒன்றாகும்.
 
அண்ணமளித்ததையோ, செய்த உதவியையோ, ஒரு நாளும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார். இளையான்குடி மாறனாரின் செல்வத்தால் அவர், ஏழை எளியோருக்கு எப்படி உதவிட்டு வந்தார் என்பதையும், அவரின் பக்தியின் ஒழுக்கத்தையும் பெருமையையும் உலகிற்கு தெளிவுபடுத்த சித்தம் கொண்டார் சிவபெருமான். இளையான்குடி மாறனாரின் செல்வந்தத்தால், பசிப்பிணிப் போக்கிய தொண்டைச் செய்யும் அவரின் பக்தியை உலகத்தாருக்கு அறியச் செய்யும் வகையில் ஈசன் சித்தம் கொண்டார்.

அதற்காக முதலில் மாறனாரின் செல்வங்களை வற்றச் செய்தார். சிவபெருமானின் சோதனை தெரியாத மாறனார், செல்வங்கள் குறைந்தொழிந்த போதிலும், தாம் கொண்ட அடியார்கள் பசிப்பிணித் தொண்டை, இறைத் தொண்டுகளுக்கு ஊறு வராதவாறு தொடர்ந்த வண்ணமிருந்தார். நாளும் அவரின் செல்வ வளங்கள் குறைந்து போகவே, எதற்கும் கலங்காமல் அடியார் தொண்டு செய்து வந்தார்.  கையிருப்பு செல்வம் முற்றும் முறிந்து போக மிஞ்சியது சில நில புலங்கள் மட்டுமே இருந்தன.
 
வீடு நாடி வந்த அடியார்களின் பசி அமுதுவுக்கு, பணத்தேவை மிகவே, நிலங்களையும் விற்று பசி அமுது படைப்பதைத் தொடர்ந்தார். இத்தொண்டிற்காக விளை நிலங்களை விற்ற பணத்தில் ஒரு சிறு பகுதி பணத்தை பிரித்து, மாற்றார் ஒருவரிடம் விளைநிலமொன்றை வருடத்திய குத்தகைக்கு பேசி முடித்து அதில் நெல் பயிரிட்டு வளர்த்து அதிலிருந்தும் தர்மத்துக்கே செலவழித்து வந்தார். 
 
கடைசியாக அச்செல்வந்த இளையான்குடி மாறனாருக்கு மீதமிருந்த என்னமோ, குத்தகை கைமாற்று வருடத்திய நில உரிமையும், அந்நிலத்தில் அன்று காலை விளை நிலத்தில் விதைத்திருந்த விதைநெல் மணிகளும் மட்டுமே அவருக்குச் சொந்தமாக இருந்தது. நிலத்தில் விதை விதைத்த பணிகளை பார்வையிட்டு விட்டு, மாலையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார்.
 
வழியில் நல்ல மழை பெய்தது. மழையில் நனைந்தவாறு வீடு வந்தடைந்தார். அன்றைய இரவுப் பொழுதில் வரையும் மழை விட்டபாடில்லை. தூக்கம் வராது கூரை நோக்கிப் பார்த்து படுத்திருந்த மாறனாரின் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் வந்தது. மழை பிடித்துப் பெய்யும் இவ்விரவு நேரத்தில் யாரோ கதவை தட்டுகிறார்களே என எண்ணி திறந்து பார்க்க எழுந்தார். அடை மழையைப் பெய்ய வைத்த ஈசன், கரிய அவ்விரவு வேளையில் சிவனடியார் வேடம் தரித்து மாறனாரின் வீட்டை ஈசன்தான் தட்டி அழைத்தார். 

இதென்ன சோதனை? இனிதானே இருக்கிறது வேதனை, மாறனாருக்கு, கதவைத் திறந்து வந்திருந்த அடியாரை வரவேற்றுத் துணி கொடுத்து தலையீரத்தை போக்கிடக் கூறி பலகை மீது அமரச் செய்தார்.

மாறனாரை நோக்கிய ஈசன், இவ்வூரில் பசிக்கு அண்ணமளிக்கும் வீடென உம் வீட்டைக் காட்டிக் கூறினார்கள். எனக்கோ மிகவும் பசியாக உள்ளது அவசரமாக அண்ணமளிக்க முடியுமா? எனக் கேட்டார்!

மனைவியை எழுப்பி உணவு உலை வைக்கும் பகுதிக்கு வந்து பார்த்த போதுதான் அவருக்கு ஞாபகமே வந்தது. அன்றைய இரவு உணவுக்கு வழியில்லாது பட்டினியோடு தூங்கிப் போனது..
 
மனைவியை நோக்கினார் மாறனார். மனைவியும் மாறனாரை எதிர் நோக்கினர். இருவரின் கண்களும் உணவுக்குண்டான பொருளை தேடுவதிலேயே இருந்தது. உணவு சமைக்க வீட்டில் ஒரு பொருளும் இல்லை. அடுத்தாரிடம் கேட்டு வாங்கலாமென்றால், மழையோ விடாது பெய்கிறது. இப்போதைக்கு அடியார்க்கு உணவு செய்ய ஒரு உபாயம் மட்டுமே உள்ளது. அதை நீங்கள் செய்து தந்தீர்களானால் அடியாருக்கு உணவு தயாராகிவிடும் என்றாள் மாறனாரின் மனைவி.
 
'சொல் அம்மையீ!... என்ன உபாயமது?" மாறனாரின் குரலில் அவசரப்படபடப்பு தெரிந்தது. இன்று காலை விளைநிலத்தில் விதைத்த விதைநெல் மணிகளை பொறுக்கியெடுத்து வாருங்கள். அதை வறுத்து அரிசி பிரித்து சமைத்துத் தருகிறேன் என்றாள். அவ்வளவுதான், கதவைத் திறந்து மழையில் நனைந்தோடிப் போனார் விதைத்த நிலத்திற்கு...! 
 
கனத்த மழை பெய்கிறதே! எப்படி செல்வது என நினைக்கவில்லை!, விதைத்த நெல்லை கிளறி பொறுக்கியெடுத்து வர முடியுமா என நினைக்கவில்லை?, அதுவும் மழை வெள்ளத்தில், காலையில் மன்னுக்குள்ளிட்ட நெல்மணிகளை, மழை வெள்ள நீர் முழ்கியிருக்க, மனைவி கூறிய நெல்மணிகளை அரித்தெடுப்பது எப்படி?, இவையாவன எல்லாத்தையும் செய்ய முடியுமா?.. முடியாதா?, என ஒரு கனமும் அவர் சிந்திக்கவில்லை.
 
வழியொன்று கிடைத்து விட்டது. அதை நாடி செய்து முடித்து விடு. இல்லையென்றயொன்று ஒழிந்தொழியும். இது..இது..தான் மாறனாரின் மனதில் குடிகொண்ட பக்தியின் பாங்கு. முடியுமா? முடியாதா? என்று எண்ணுதலே இல்லை அவரிடம். செய்து முடிக்க வேண்டும்! என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனுள்ளிருந்துதான் ஈசன் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
 
அவன் நம்மை சோதித்து பரீட்சிக்கிறான் என்ற எண்ணமும் நமக்கு வந்திரக்கூடாது! அப்படியாயின் நம் பக்கம் அவன் பார்வை திரும்பா. 
 
ஏன்? குடுமித்தேவர் கண்ணப்ப நாயனார் என்ன செய்தார்? இது அசைவ உணவு, ஈசன் சைவனாச்சே!, அவனுக்கு இதை உண்ணப் படைக்கலாமா? என நினைக்கவில்லை! காளஹத்தி மலையிலுள்ள விக்கிரத்தை, உயிரான உருவனொருவனாவன் இவனானவன் என்று தான் எண்ணினான்.
 
காளஹத்தி மலையுச்சி காட்டிலிருந்த அவ்விக்கிரகத்தில் உயிரோட்டவுயிர் இல்லையென கண்ணப்பனார் நினைத்திருப்பாரானால், குருதியொழுகக் காட்டிய ஈசனுக்கு தன் கண்ணை பிடுங்கியெடுத்து அப்பியிருப்பாரா? மீண்டும் மேலும் மற்றொரு கண்ணில் குருதியொழுகிக் காட்ட, சடுதியில் தன் மற்றொரு கண்ணைக் கொடுக்க வந்தததை விட,
 
மற்றொரு கண்ணை விக்கிரகத்தில் அப்ப அவர் எடுத்த நடவடிக்கையைப் பாருங்கள்.. தன் இரண்டாவது கண்ணை பிடுங்கினால், தான் எந்த பார்வையுடன் விக்கிரகத்தில் கண்ணை அப்புவது?. என எண்ணித்தான், தான் செருப்பணிந்த காலை கண்ணை அப்புமிடத்தில் மிதித்தழுத்திக்கொண்டு அடையாளத் தடத்தைப் பதித்துக் கொண்டார். இவ்வளவிலான இந்தப் பதிவை பதியவும், வாசிக்கவும் எவ்வளவு நேரமாகிப்போனது.
 
ஆனால் மாறனாருக்கோ, கண்ணப்பருக்கோ இவ்வளவு நேரத்தை விரயமாக்கியதில்லை. சடுதியில் செய்தார்கள். அங்கே தான் அவர்களின் பக்தியின் மேன்மை பாங்கு அமைந்துள்ளது. வீட்டிற்கு வெளியே கணத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. வயலுக்குச் செல்லுங்கள் என மனைவி சொன்னபடி, விதை நெல்மணிகளைச் சேகரிக்க விதைத்த இடம் நாடி ஓடோடிப் போனார் மாறனார். வயல் சென்று, விதைத்ததை கிளறி பொறுக்கி, அதுவும் இந்த அடாத மழையில், திரும்ப அவர் மனைவியார் உமி பிரித்து அரிசியாக்கி உணவு செய்ய.. அப்பப்பா? இதுவெல்லாம் செய்ய முடியுமா? இதைக் கேட்கும் நமக்கே முடியாதெனத் தெரிகிறதே! ஆனால், மாறானாரோ, அவர் மனைவியோ இயலாதென நினைக்கவில்லை. அடியார்க்கு உதவிடும் முனைப்பு மட்டும் இருந்ததனால் ஒவ்வொன்றையும் செய்தனர். 

வயலுக்கு வந்து சேர்ந்த மாறனாருக்கு அதிர்ச்சி!
 
வயல் முழுமையும் விதைத்தமண் மூழ்கிப்போய் மழைவெள்ளம் வரப்பு உயரம் வரை தேங்கி நின்றது. கடுமையான கும்மிருட்டு வேறு! குனிந்து நீரினுள் கைகளை அமிழ்த்த.. டமால்..டுமில்...டுடுமுமு..வென இடி, மின்னல்.
 
மின்னல் ஒளியில், மண்ணுள் மூழ்கியிருந்த விதை நெல்மணிகள் மழைநீரில் மிதந்தன. மின்னலின் ஒளியில் நெல்மணி விதைகள் இங்கும் அங்குமாய் நீரின்மேல் மிதப்பதைக் கண்ட மாறனார்க்கு சொல்லொன்னா ஆனந்தம் கொண்டார். தில்லைக்கு வழிகேட்ட வண்டிக்காரனை நினைத்து, சந்தோஷமடைந்து "தையா தக்கா, தையா தக்கா" எனத் துள்ளிப்பாடி ஆடி சந்தோஷமானாரே திருநாளைபோவார், அதுபோல.

நெல்மணிகள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஆனந்தமானார். கண்ணீர் பெருக்கெடுத்து வர, மழை நீர் அவரின் கண்ணீரைக் கழுவ, கண்ணீரின் உப்பு உணர்வை நீக்கி, மழைநீர் இனிக்கச் செய்தது. ஒவ்வொரு முறையும் மின்னலொளி வந்து மறைந்தபோது, முறம் கொண்டு வாரி நெல்மணிகளைச் சேகரித்தார். வீடு வந்தார். நெல்மணி விதைகளை மனைவியிடம் கொடுக்கவும், விறகுச்சுள்ளி வேண்டுமே என்றாள் பதி.
 
நிமிர்ந்து பார்த்தார் மாறனார், யோசிக்கவே நேரமில்லை! "என்னை உருவி எடு" என சொன்னது போலிருந்திருந்தது கூரையில் பரவிருந்த அடிநுனிக்கழிகள். இவ்வளவுதான் சில நொடிகளில் கூரையை விட்டுப் பிரிந்த கழிகள் சிவந்தீயாகிப் போனது. ஒருவழியாகப் போராடி சாதம் தயாராக்கி விட்டார்கள். வெறும் வெள்ளண்ணத்தை மட்டுமே வைத்து அடியாருக்கு அமுது படைக்க முடியுமா? என்றாள் மாறனாரை பார்த்து பதியானவள்.
 
நெல்மணிகள் கொண்டு வர உபாயம் சொன்னதுபோல், சாத துணை கறிக்கும் நீயே ஒரு வழியைக் கூறிடு தாயே என்றார். வீட்டுக்கொல்ல பக்கம் கீரைத் தளிர்கள் தளிர்த்திருக்கும். அதில் நுனிமுனை இலைகளாய் பறித்துபிய்த்து வாருங்கள் என்றாள். வீட்டின் பின்புற கொல்லைப் பக்கம் வந்த மாறனாரின் கண்களுக்கு கீரைத் தளிர்த்து நிமிர்ந்திருந்ததைக் கண்டார். 
 
ஒவ்வொரு தேவை வரும் போதும், ஒவ்வொரு தெளிவும் பிறந்து விடுகிறது. இது எப்படி? அங்கேதான் இறைவன் அருள்கின்றான். விதைப்பதும் அவன்தான், விளைச்சளாவுவதும் அவன்தான். 
சாதத்துணைக்குக் கீரையும் தயாராகிவிட அடியாரை அமுதுண்ண அழைக்க அறையைத் திறந்து வந்தார்கள் மாறனார், மனைவியார். அங்கே அறையில் அடியாரைக் காணவில்லை. வீட்டுக்கு வெளிவந்து தேடினர் அங்கேயும் அடியாரைக் காணவில்லை. அப்போதும் மழை கணத்துக் கொண்டுதானிருந்தது.
 
இறைவா!, பெருமானே! என்ன சோதனை இது! பசித்தாகம் தணிக்க வந்த அடியார் எங்கே?, பசிப்பிணி தீர்க்க தாமதமாயியது என் குறையே!, நாடிவந்த அடியார் அமுதுண்ண வந்தருள வைப்பாயாக!, என விண்ணைப் பார்த்து மனமுருக வேண்டினார்.
 
வானில் வானவில் போன்ற பெரிய வட்டமான ஒளி ஒளிர்ந்தன. அதில் பிரகாசமான ஒளி வெள்ளம். ஒளி ஜுவாலைகளுக்கு வெளியே மழை பொழிய, மழை இல்லா உள்ளொளி வட்டத்துக்குள் அம்மையுடன் பெருமானார் இடபவாகனமர்ந்து காட்சியருளினர். தர்மத்தையே தலையாகக் கொண்டு, வீடு பொருள் இழந்திடினும், உன்னுறதியான பக்திக்குச் சோதனையிட்டோம் யாம்!.
 
உன் அறம் சிறிதேனும் குறையில. இழந்த செல்வம் உன்னிடமாகுக! என அருளி மறைந்தார். நாமும் ஏதாவதொன்று ஒரு கொள்கையை, தொண்டை, தர்மத்தை, உழவாரத்தை, செய்து வர முனைப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

-கோவை கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com