விதவிதமாக விநாயகரைக் காண.. மகா கணபதியின் மெகா கண்காட்சி! 

குரோம்பேட்டையில் இயங்கிவரும் ஸ்ரீ விநாயகா குழுமம் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விநாயகர் வடிவங்களுடன் கூடிய  இனிய கண்காட்சியை இலவச அனுமதியுடன் இப்பகுதியில் நடத்தி வருகின்றது.
விதவிதமாக விநாயகரைக் காண.. மகா கணபதியின் மெகா கண்காட்சி! 

குரோம்பேட்டையில் இயங்கிவரும் ஸ்ரீ விநாயகா குழுமம் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விநாயகர் வடிவங்களுடன் கூடிய இனிய கண்காட்சியை இலவச அனுமதியுடன் இப்பகுதியில் நடத்தி வருகின்றது.

அவ்வகையில் தொடர்ந்து 12-வது ஆண்டாக இந்த கண்காட்சி இவ்வருடம், சென்னை - 64, சிட்லபாக்கம் ஏரியாவில் அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அருகில் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ லஷ்மிராம் கணேஷ் மகாலில் "பிள்ளையார் அனுக்ரஹம்" என்ற சிறப்பு பெயரில் செப்டம்பர் 13 அன்று தொடங்கப்பட்டது. 

இந்த மகாலில் மூன்று தளங்கள் முழுவதும் நிறைந்துள்ள இந்த கண்காட்சியின் சிறப்பைப் பற்றி மேலும் அறிவோம்.

இந்த கண்காட்சியில், அரை செ.மீ. உயரத்திலிருந்து முன்னூறு செ.மீ. உயரம் வரை முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானின் பல்வேறு ரூபங்களை சுமார் 10000க்கும் மேற்பட்ட வடிவங்களில் தரிசித்து இன்புறலாம். 

இந்த வடிவங்கள் களிமண், உலோகம், கலப்பு உலோகம், கண்ணாடி, மரம், ரப்பர், கருங்கல், நார் (Fiber)  நவரத்ன கற்கள் போன்ற பலவகையான பொருட்களால் ஆனவை. 

அவரது வடிவங்கள் ஆயகலைகள் 64ஐயும், திருவிளையாடல் மற்றும் விநாயகர் புராணங்களில் கூறப்பட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிடும்படியும் அமைந்தது பாராட்டத்தக்கது. 

இந்த வடிவங்களில் தசாவதாரப் பிள்ளையார், ஐம்பொன் காளிங்க நர்த்தன விநாயகர், காமதேனுவிடம் பால் அருந்தும் பால விநாயகர், சதாசிவ லட்சுமி கணபதி (சந்தனத்தால் செய்யப்பட்டு 25 முகம் 52 கைகள் கொண்டது). மயில் வாகனப் பிள்ளையார், தாய் தந்தையரை வணங்கி ஞானப்பழம் பெறும் பிள்ளையார், கண்ணாடி அறையில் வீற்றிருக்கும் பிள்ளையார், யோகாசன முத்திரையுடன் பிள்ளையார், படகு சவாரி செய்யும் பிள்ளையார் போன்றவைகள் காண்பவர்களின் கண்களை சுண்டி இழுப்பது நிச்சயம். 

ஆண்டு தோறும் இந்த கண்காட்சியில் இடம் பெறும் பிள்ளையார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழுமத்தின் தலைவர் ஸ்ரீ நிவாஸன் பெருமையுடன் கூறுகின்றார். 

இந்த கண்காட்சி தொடங்கப்பெற்றதிலிருந்து இதுவரை ஒரு லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தெய்வீகச் சூழலுடன் திகழ்ந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து இந்த அரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் செவிக்கு விருந்தாக இன்னிசை, பஜனை நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு நல்லாசி வழங்கும் அருளாளர்களின் ஆன்மீக உரைகளும், வயிற்றுக்கு விருந்தாக சுவைமிகுந்த பிரசாதங்களும் அளிக்கப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்ற வரையற்ற காலவரையில் பாமரர் முதல் மகாஞானியர் வரை அனைவரது உள்ளத்திலும் தெய்வமாகத் துலங்கும் மகா கணபதியின் இந்த மெகா கண்காட்சி செப்டம்பர் 23 அன்று நிறைவு பெறுகின்றது. மேலும் விபரங்களுக்கு: 9381041018 / 7667001144

தகவல்: எஸ்.வெங்கட்ராமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com