செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புரட்டாசி மகாபிஷேகம்

தினமணி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மகாருத்ர யாகமும் நடைபெற்றது.
 உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் மகாபிஷேகம் செய்யப்படுவது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.
 இதன்படி, புரட்டாசி மாத மகாபிஷேகம் கோயிலில் சித் சபை முன் உள்ள கனக சபையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அப்போது, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர்.
 மகா ருத்ரயாகம்: முன்னதாக, காலையில் மகாருத்ர ஜப பாராயணம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. புரட்டாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும் இந்த பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சித் சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு 8 மணிக்குள் உச்சி கால பூஜை நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனக சபையில் எழுந்தருளினார்.
 தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் முன் அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் யாக பூஜை தொடங்கியது. பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை லட்சார்ச்சனையும், 300 பேர் பங்கேற்ற மகாருத்ர யாகமும் நடைபெற்றது.
 தொடர்ந்து, யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனக சபைக்குச் சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT