ராமனைத் தவிர வேறு யாரையும் நினைக்காத பக்தனுக்கு வந்த சோதனை!  

ஸ்ரீராமன் ஏகபத்தினி விரதன் என்றால், ஸ்வாமி துளஸிதாஸ் ஏகஸ்வாமி..
ராமனைத் தவிர வேறு யாரையும் நினைக்காத பக்தனுக்கு வந்த சோதனை!  

ஸ்ரீராமன் ஏகபத்தினி விரதன் என்றால், ஸ்வாமி துளஸிதாஸ் ஏகஸ்வாமி விரதர். ராமனைத் தவிர வேறு தெய்வங்களை நினைக்காத கற்புநிலை உடையவர்.

ஒருமுறை துளஸிதாஸ் பிருந்தாவனம் சென்றார். அங்கு வம்ஸிவடம் என்ற ஒரு பெரிய மரம் இன்றும் இருக்கிறது. அதன் கீழ் அமர்ந்து கொண்டுதான் கிருஷ்ணன் குழலூதி, கோபியரின் அன்றாட வீட்டு வேலைகளில் மண்ணை அள்ளிப் போடுவான். 

ஸ்வாமிகள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு 'ராமாயண' பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார். திடீரென்று தெய்வீகமான, ஸுகந்தம் வீசியது. கூடவே மதுர, மதுரமான குழலோசை அவர் காதில் விழுந்தது. பாராயணத்தில் மனம் செல்லவில்லை. மனஸை இழுத்துப் பிடித்து, மேலே படித்தார். 

ம்ஹும் ! முடியவில்லை.!

மிருகங்களே மயங்கிய முரளியில், ஒரு பக்தர் எப்படி மயங்காமல் இருப்பார்? மெல்லக் கண்களை நிமிர்த்திப் பார்த்தார்.. தன் பாராயணத்தை குழலூதிக் "கெடுத்தவனை"! 

முதலில், மெத்தென்ற அடிப்பாகம் தாமரை இதழ் போல சற்றே சிவந்து, மேலே செல்லச்செல்ல நிறம் கறுத்து, தங்கத்தில் முத்துகள் கோர்த்த சலங்கைகளுடன் கூடிய பாதங்கள் இரண்டு தெரிந்ததும், சடக்கென்று கண்களை தாழ்த்திக் கொண்டுவிட்டார்.  

"ராமா!..... இத்தனை பேரழகா!.. பார்க்காதே!! பார்க்காதே! பார்தாயோ.... நீ தொலைந்தாய்! பித்தாகிப் போன கோப கூட்டத்தில் நீயும் சேர்ந்து அந்த மாடு மேய்க்கும் மோஹனனின் பைத்தியமாகி விடுவாய்! ஹே! மனமே!....ஜாக்கிரதை ..!" 

அவனா விடுவான்? 

விடாமல் குழலிசைத்துக் கொண்டே இருக்கிறான். 

ஆனால், அந்தக் கொள்ளை அழகான பாதங்களை ஒரு முறை பார்த்துவிட்டார் இல்லையா? அவ்வளவுதான்! "கெடுத்தேவிட்டான்" துளஸிதாஸரின் ஏகஸ்வாமி வ்ரதத்தை!

"கொஞ்சம்... நிமிர்ந்துதான் பாரேன்" என்று மனம், ராமாயணத்துக்கு ஓடும் கண்களை இழுக்கிறது. 

"இந்த்ரியங்களில் நான் மனம் " என்று கூறியவனைக் காண, அந்த மனசே துடித்தது. 

மறுமுறை பட்டும்படாமலும் முழு ரூபத்தையும் அரைக்ஷணம் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து கொண்டார். 

பாதங்களே அந்தப் பாடு படுத்தினால், மொழுமொழு முழங்காலுக்கு மேல் கட்டிய பீதாம்பரமும், வைஜயந்தி, வனமாலையும், தோள்களில் நழுவியோடும் மேல் வஸ்த்ரமும், கொண்டையில் மயிற்பீலியும், படைப்பில் உள்ள அத்தனை விஷமமும், காருண்யமும் ஒன்றாகச் சேர்ந்த காதுவரை நீண்ட கமல நயனங்களும், குழலூதியதால் குவிந்த அழகான அதரங்களும் அவரை சொக்கவைத்து விட்டது. 

"ராமா!......." 

ஏதோ பெரிய தவறு செய்தவர் போல், கண்களை ராமாயணத்தில் ஓடவிட்டார்.

பிறகு கண்களை நிமிர்த்தாமலேயே எதிரில் நின்று கொண்டு குழலூதுபவனிடம் ஸமாதானமாகப் பேச ஆரம்பித்தார்..

"க்ருஷ்ணா! போய்விடு!

"ஏன்? நான் ஏன் போகவேண்டும்?"

"என் ராமனைத் தவிர வேறு யாரையும் நினைக்ககூட மாட்டேன்"

"ரொம்ப... நல்லது" 

குழலிசை தொடர்ந்தது.

"நீ இங்கே நின்றால் என்னால் ராமாயணம் படிக்க முடியாது"

"இது என்ன வேடிக்கை? நான் என்ன உன் ராமனுடைய அயோத்தியிலா இருக்கிறேன்? இது ப்ருந்தாவனம்! என் இடம்! இந்த மரம் நான் நித்யம் குழல் ஊதும் மரம்...."

"எல்லாம் சரிதான். தயவு செய்து இன்று போய்விடு! நான் உன்னுடைய கோப-கோபி இல்லை! என் ஶ்ரீராமசந்த்ரப்ரபுவின் தாஸானு தாஸன்"

"இருந்து கொள்ளேன்! எனக்கென்ன? ஆனால், என்னுடைய இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, பாகவதம் படிக்காமல், ராமாயணம் படித்துக் கொண்டு, என்னைப் போகச் சொல்கிறாயே?.."

விடாக்கண்டன் அவ்வளவு லேசில் விட்டுவிடுவானா?

ஸாம, தான, பேத தண்டத்தில், கடைசியில் வரும் 'தண்ட''த்தை தவிர, எதற்குமே அவன் மசிய மாட்டான். 

தண்டம் என்பது  பகவானிடம் சரணாகதி என்று விழுந்து அவன் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வதுதான்!

"கிருஷ்ணா....எப்படி ஒரு பத்னியானவள், தன் புருஷனைத் தவிர, பரபுருஷனை மனசால் கூட எண்ண மாட்டாளோ, அது போல், ஒரே தெய்வத்திடம் மட்டுமே பக்தி செய்ய வேண்டும் என்ற என் கற்புநெறியை காப்பாற்றிக் கொடு. என் ப்ரபு ஸ்ரீராமனாக எனக்கு காட்சி கொடுக்க வேண்டும்".

மஹாபக்தர் கெஞ்சியதும், குழலே வில்லாக மாறி, தன் பக்தனுக்காக தானே மாறி, ஸ்ரீராமனாக காட்சி கொடுத்தான். 

என்ன அற்புதமான பக்தன்! என்ன அழகான பகவான்!

யாசிப்போம் அந்தத் திருடனிடம், நம்முடைய மனசையும் அடியோடு திருடிக்கொள்ள!

திருடன் சுலபமாக வர, நம் மனவாசலை மலர்த்தி, திறந்தே வைப்போம். பொய்மை, கோபம், பொறாமை, ஆசை என்ற பூட்டுக்கள் இல்லாமல், வெண்ணெய் போல் வெண்மையாகவும், மதுரமாகவும், சத்தாகவும் நம் மனசை, அந்த அழகான, அன்பான திருடனுக்காக மட்டுமே! என்று வைப்போம். 

நிச்சயம் அவன் ஒருநாள் நம் மன வாயிலை அலங்கரிப்பான்.

ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி மந்திரம்

ஓம் தேவகி நந்தனாய வித்மஹி
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணா ப்ரசோதயாத்

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com