தோகூரில் அருள்புரியும் மாவிலங்கேஸ்வரர்! 

தோகூர் விரிந்த காவிரி ஆற்றின் நடுவில் உள்ள ஆற்றிடை தீவாகும். கல்லணைக்கு மேற்கில்
தோகூரில் அருள்புரியும் மாவிலங்கேஸ்வரர்! 

தோகூர் விரிந்த காவிரி ஆற்றின் நடுவில் உள்ள ஆற்றிடை தீவாகும். கல்லணைக்கு மேற்கில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தீவூர் என்பது மருவி தோகூர் ஆனது. 

சுமார் 403 ஆண்டுகளின் முன் நடந்த ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் இந்த தோகூர் தீவில் நடந்ததைச் சற்று பின்னோக்கிச் சென்று பார்க்கப்போகிறோம். இந்தப் போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும்.

தென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை முஸ்லிம் மன்னர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாசார சின்னங்கள் அழிக்கப்படாமல் காக்கப்பட்டதற்கு காரணம், விஜயநகர மன்னர்கள் பலமானவர்களாக இருந்ததே நமது தமிழகத்தை நாயக்கர்கள் 1734 வரை ஆண்டு வந்தனர். டெக்கான் பகுதியில் சுல்தான்கள் விஜய நகரத் தலைமை பகுதிகளை அழித்தனர். அதனால் விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .

இந்த விஜயநகர அரசனாக 1600-ம் ஆண்டு வேங்கடபதி தேவராயன் தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்கராய என்பவனை அரசன் ஆக்கினான். வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன், இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினான்.

அரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் சிலர், சிறையில் இருந்த ஸ்ரீரங்க சிக்க ராயரின் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர். விஷயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன், தன் மனைவி, தனது பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான். அப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன. தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்கள்.

தஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிகப் புகழ்வாய்ந்த இரகுநாத நாயக்கன். சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை விஜய நகர தளபதி யக்ஷமநாயக்கர் தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர். அதைப் போற்றும் விதமாகவே கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன் இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான்.

ஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான். இந்தச் செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான். இதனைத் தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து தஞ்சாவூரின் பெரும் பகுதியை வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

இரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியான இந்த தோகூரில் பெரும் சண்டையில் இடுபட்டன. ஒரு போர்சுகீசியர் இந்த சண்டையை பற்றிக் குறிப்பிடும் போது தென்இந்தியாவில் நடந்த போர்களில் மிக அதிகமான மக்கள் ஈடுபட்ட போர் இதுவாகும் எனக் கூறியுள்ளார்.

ஆம், சுமார் பத்து லட்சம் படையினர் இருபுறமும் போரிட்டனர். போர் தோகூரில் இருந்து ஸ்ரீரங்கம் வரை நடைபெற்றது, காவிரி ரத்த சிவப்பானது. இந்தப் போரில் ஜக்கராயன் படைகள் தோல்வியுற்றன. இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் திருச்சியின் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமமான தோகூரின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது.

தற்போது சிறிய அமைதியான ஆற்றோர கிராமமாக தோகூர் உள்ளது. காவிரி கரையை ஒட்டியபடி உள்ளது மீனாட்சி-சுந்தரேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவி பெயர் மீனாட்சி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சிவாலயத்தினை ஒட்டியவாறு உள்ளது ஐயனார் கோயில்.

சுதையுடன் கூடிய நுழைவாயில், சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததும் உள் பிரகாரத்தின் வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் பலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். சில படிகள் ஏறினால் நந்தி மண்டபம். நந்தியின் எதிரில் இறைவனின் கருவறை சிறிய லிங்க மூர்த்தியாக சுந்தரேஸ்வரர். இவருக்கு மற்றோர் பெயரும் உள்ளது அது மாவிலங்கேஸ்வரர் என்பதாகும். மாவிலங்கம் தல விருட்சமாக இருந்திருக்கலாம்.

வலதுபுறம் அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் உள்ள மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், கைலாசநாதர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர்.

இதையடுத்த தனி சிற்றாலயத்தில் பெருமாள் நான்கு கரங்களுடன் இங்குச் சேவை சாதிக்கிறார். அவரது வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல்கரத்தில் சங்கும், வலது கீழ் மற்றும் இடது கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் சன்னிதியின் எதிரே சிறிய சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும், இறைவியின் சன்னிதிக்கு அருகே சண்டிகேசுவரியின் தனிச் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு திசையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். அருகில் பைரவர் சன்னிதியும் உள்ளது. காலை மாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com