செய்திகள்

நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?

தினமணி


மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளை மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும் திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருகளுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. இப்படி பல சிறப்புகள் பெற்றது மகம் நட்சத்திரம். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும் நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும் பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் மாசி மகம் நாளை(19.01.2019) வருகிறது. 

மாசி மக நட்சத்திரத்தில் எந்த தெய்வத்தை வழிபடலாம்?

மாசி மக திருநாளில் அனைத்து திருக்கோயில்களிலும், தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது. சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. 

பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகும். 

தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது. 

அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக மாசி மகம் அமைகிறது. இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. 

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். மாசி மகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT