பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!

பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!

வரும் 13/1/2019 அன்று ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் இணைந்து வருவதை..

வரும் 13/1/2019 அன்று ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் இணைந்து வருவதை முன்னிட்டு சூரிய பகவானுக்கு பானு ஸப்தமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும். தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஸ்திரமான தலைமை இல்லாமல் பல அரசியல் கட்சிகள் விடியலுக்காக ஏங்கித் தவித்து வரும் நிலையிலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணி புரிய பல அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெறும் நிலையிலும் இந்தப் பானு ஸப்தமி வந்திருப்பது ஒரு அரிய வரப்பிரசாதமாகும்.  

பானு ஸப்தமி

நாம் பல பண்டிகைகளையும் விஷேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ரதஸப்தமி பற்றி நாம் அறிவோம். பானு ஸப்தமி பற்றி தெரியுமா உங்களுக்கு? பானு ஸப்தமி எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஞாயிற்றுக்கிழமையுடன் சஷ்டி திதி சேர்ந்து வந்தால் அந்த நாளை 'பானு சஷ்டி' என்றும், ஸப்தமி திதி சேர்ந்து வந்தால் 'பானு ஸ்ப்தமி' என்றும் கூறுவர். பானு ஸ்ப்தமியை- 'பானு யோகம் என்று குறிப்பிடுவர். இது, ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சமமாகப் புராணங்களில் போற்றப்படுகிறது. அதாவது பானு ஸப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

சூரிய நமஸ்காரம்

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை தானம் செய்தால் பார்வை சரியாகும்), சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாகச் சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.

தந்தைக்கு பாதபூஜை

சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி. துரியோதனின் பத்னியாகிய பானுமதி, பானு சப்தமி விரதத்தைக் கடைப்பிடித்து, தனரேகையை அபூர்வமாகக் கையில் கொண்டிருந்த துரியோதனனுக்கு, லக்ஷ்மி கடாட்ச சக்திகளை மேம்படுத்தித் தந்தாள். இந்த முறை பானு சப்தமி சூரிய பகவான் தனூர் ராசியில் உத்திராடம் நக்ஷத்திரத்தில் சுய சாரத்திலும் சந்திரன் சனைச்சர பகவானின் ஆதிக்கம் பெற்ற நக்ஷத்திரமான உத்திரட்டாதியில் பயணம் செய்யும்போதும் வருவது கூடுதல் சிறப்பாகும்.

ராமர் செய்த சூரிய வழிபாடு

சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்குப் பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவக்கிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.

பார்வையருளும் பானு ஸப்தமி

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும்.

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைக்கண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வரப் பார்வை கோளாறுகள் நீங்கும்.

களத்திர தோஷம் போக்கும் சூரிய பகவான்

பொதுவாக ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை எனில் களத்திர காரகன் சுக்கிரனையும் ஏழாம் பாவத்தையும்தான் கருத்தில்கொண்டு அனேகர் பார்க்கின்றனர். ஜாதகத்தில் சூரியனின் நிலையும் திருமணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.  

ஒருவர் சிம்ம லக்னம், ராசி மற்றும் இரண்டும் சேர்ந்தோ ஜாதகத்தில் அமையப் பெற்றால் அவர்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி சனியாக அமைவதால் எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அவ்வாறு நடைபெற்றாலும் சந்தோஷமாக அமைந்துவிடுவதில்லை. மேலும் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் மூன்று பாகை இடைவெளியில் நின்றுவிட்டால் இருதார யோகம், ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்பட்டுவிடுகின்றன. அதே நேரத்தில் சூரியனும் சுக்கிரனும் 42 பாகை இடைவெளிக்கு மேல் நின்றுவிட்டால் திருமணம் என்பது 95 % நடைபெறுவதில்லை. விதி விலக்காக நடைபெற்றுவிட்டாலும் பிரிய நேர்ந்துவிடுகிறது. இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் தங்கள் களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவது கைமேல் பலனளிக்கும் என்பது மிகையாகாது.

தொழுநோய் போக்கும் சூரிய ஸப்தமி

கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்குக் காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். பானு ஸப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அரசு வேலைக் கிடைக்க சூரியன் வழிபாடு

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சனைச்சர பகவான் தன் தந்தைக்கு பாத பூஜை செய்யும் பானு ஸப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் பிரகாசிக்க சூரியன் வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சமந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றைக் குறிக்கும் சூரியன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றைத் தரும் செவ்வாய் பகை வீடான கன்னியில் பலமிழந்து நிற்கின்றது. இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.

பித்ரு தோஷம் போக்கும் பானு சப்தமி

பித்ருக்கள்  எனப்படும் நம் முன்னோர்  வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள். பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாகக் கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்குப் பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். பானு சப்தமி தினம் கிரகண புண்ணிய காலத்திற்கு நிகரானதாக கருதப்படுவதால் அன்றைய தினம் தர்ப்பணங்கள் செய்வது பித்ரு தோஷங்கள் நீங்க வழிவகுக்கும்.

ஆதித்ய ஹ்ருதயம்

சூரிய பகவானை ஜோதிடத்தில் ஆத்ம காரகன் எனச் சிறப்பாக போற்றப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் ஆத்ம காரகனின் நிலை சிறப்பாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு வாழ்வில் நினைப்பதெல்லாம் எளிதில் கைகூடும். சூரியன் ஒருவர் ஜாதகத்தில் நீச நிலையிலோ 6/8/12 தொடர்பிலோ அல்லது ராகு/கேது சேர்க்கை பெற்றோ நின்றுவிட்டால் ஜாதகர் எப்போதும் மனச்சோர்வுடனே காணப்படுவர். 

அத்தகைய நிலையில் மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதே சித்த அற்புத ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியைப் பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். ஆபத்துக் காலங்களிலும் எந்தக் கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்குக் கண் நோய்கள், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம் சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். சூரியன் வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும்.

விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள். பானு சப்தமியில் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரரை வணங்கிவர அரசியலில் வெற்றி, அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com