காணும் பொங்கல் : திருத்தணி முருகப் பெருமான் திருவீதியுலா

திருத்தணியில் காணும் பொங்கலை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வியாழக்கிழமை திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
காணும் பொங்கல் திருவிழாவையொட்டி, திருத்தணி ம.பொ.சி. சாலையில் வீதியுலா வந்த உற்சவர்.
காணும் பொங்கல் திருவிழாவையொட்டி, திருத்தணி ம.பொ.சி. சாலையில் வீதியுலா வந்த உற்சவர்.


திருத்தணியில் காணும் பொங்கலை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வியாழக்கிழமை திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
திருத்தணியில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை (உழவர் திருநாள்) முன்னிட்டு நகரில் உள்ள 21 வார்டுகளிலும் முக்கிய வீதிகள் வழியாக முருகப் பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 
அதேபோல் இந்த ஆண்டும் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மலைக்கோயிலில் உற்சவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, ஒருமுறை மலைக்கோயிலை வலம் வந்து மலைப்படிகளில் சரவணப் பொய்கை வழியாக சுந்தர விநாயகர் திருக்கோயிலை சுவாமி வந்தடைந்தது. பின்னர் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, சித்தூர் சாலை, ஜோதி
சுவாமி கோயில் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, காந்தி சாலை, பழைய பஜார் தெரு, பெரிய தெரு, ஆறுமுக சுவாமி கோயில் தெரு, சந்து தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார்.
திருவீதி உலாவையொட்டி, தெருக்களில் பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டும், தேங்காய் உடைத்தும் பூஜை செய்தும் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு ரெட்டிக்குளம் தெருவில் உள்ள 8 கால் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளினார். அங்கு பன்னீர், தேன், பழம், திருநீறு, சந்தனம், தயிர், பால், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் திருவீதி உலா சென்றவாறு மலைக்கோயிலை அடைந்தார். காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com