செய்திகள்

பார்வேட்டைக்குச் சென்ற வரதராஜப் பெருமாள்

தினமணி


பெருமாள்களுடன் கிராமங்களுக்கு சென்று வரதராஜப் பெருமாள் பார்வேட்டை நடத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது வரதராஜப் பெருமாள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பார்வேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த விழாவில் வரதராஜப் பெருமாள், திருமுக்கூடல் அப்பன் வெங்டேசப் பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பழையசீவரம் லட்சுமி நாராயணப் பெருமாள், காவந்தண்டலம் வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒன்றாகச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் செவ்வாய்க்கிழமை இரவு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டார். அப்போது, வரதராஜரை தோள்பல்லக்கு ஏந்தி சேவகர்கள் எடுத்துச் சென்றனர். சின்ன காஞ்சிபுரம், அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மையன் பேட்டை, வாலாஜாபாத், புளியம்பாக்கம் வழியாக புதன்கிழமை காலை பழையசீவரம் வந்தடைந்தார். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
பழையசீவரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மப் பெருமாள் மலை மீதிருந்து எதிர்வந்து வரதரை அழைத்துக்கொண்டு நான்கு கால் மண்டபம் வழியாக மங்களகிரி மலைக்குச் சென்றார். அதற்கு முன்பாக, லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார். 
பின்பு, மங்களகிரி மலையில் உள்ள சுவாமி மண்டபத்தில் வழக்கம் போல் தங்கினார். அதன்பிறகு, மாலை 5 மணிக்கு வரதர் மங்களகிரி மலையில் இருந்து கீழிறங்கினார். அப்போது, லட்சமி நரசிம்ம உற்சவர் எதிர்வந்து அழைத்தார். தொடர்ந்து வரதர், லட்சுமி நரசிம்மர் ஆகிய இருவருக்கும் ஆராதனை, அபிஷேகம் நடத்தப்பட்டது. 
பின்பு, சுவாமிகள் இருவரும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். மாலை 6.30 மணியளவில் திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், சாலவாக்கம் பெருமாள், காவந்தண்டலம் பெருமாள் ஆகியோர் எதிர்வந்து வரதரையும், லட்சுமி நரசிம்மரையும் அழைத்தனர். தொடர்ந்து, திருமுக்கூடல் பெருமாள் கோயில் மாட வீதிகளில் 5 பெருமாள் சுவாமிகளும் மாடவீதிகளில் புறப்பாடு சேவை புரிந்தனர். அப்போது, அவர்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் காவாந்தண்டலம், பேரணக்காவூர், தண்டரை, சித்தனக்காவூர், அன்னாத்தூர் ஆகிய கிராமங்களில் மண்டகப்படி கண்டருளி காணும் பொங்கலன்று காலையில் சாலவாக்கம் கோயிலை வந்தடைந்தனர். பின்பு, வியாழக்கிழமை இரவு வரதராஜப் பெருமாள் காஞ்சிபுரம் வந்தடைவார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT