அற்புதங்கள் நிறைந்த தைப்பூசம்!

தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.
அற்புதங்கள் நிறைந்த தைப்பூசம்!

தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரங்களைவிட தை மாதத்தில் வரும் பூச நட்சத்திற்கு சிறப்பான "நட்சத்திர அந்தஸ்து' உண்டு. காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்த நன்னாளில் நிகழ்ந்திருக்கின்றன.

பண்டைக்கால தமிழகத்தில் தைப்பூசத்தன்று புனித நீராடுதல் மிகுந்த பக்தி உணர்வோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது "'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடுகிறார்.

மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும் அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் ஞானசம்பந்தர் தேவாரத்தில், 

"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்''

என்று குறிப்பிடுகின்றார். தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல் முக்கியமானது என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.

தைந்நீராடுதல் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொண்டாடப்படுகிறது. நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் பிரஹஸ்பதி என்னும் தேவ குருவை பூஜிப்பதாகக் கொள்வர். பிரஹஸ்பதி அறிவின் தெய்வமாகக் கருதப்படுபவர். எனவே தைப்பூசத்தன்று புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட கல்வி - கேள்வி - ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.

தைப்பூசத் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது என்பது பல கல்வெட்டுகளால் நமக்குப் புலனாகிறது. திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூசம் சிறப்பாக நடந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

தஞ்சை மாவட்டம், திருவேடிக்குடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில், திருவடி பஞ்சநதிசுவரன் கோயில் ஆகியவற்றிலும் தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றதையும், அதற்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டசெய்தியையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. தைப்பூச நாளன்று நீராடி இறைவனை வழிபட செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதுபற்றி வழங்கப்படும் புராணக் கதை திருவிடைமருதூர் அருகில் பிரபலம்.

சோழநாட்டை அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் ராஜ்ய பாரக் கடமைகளால் அது நிறைவேறவில்லை. எனவே தனக்கு பதிலாய் வேதம் அறிந்த ஓர் அந்தணருக்கு பெரும் பொருள் உதவி செய்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தான். அவர் திரும்பி வரும் வரை அவரது குடும்பத்துக்குத் தேவையான பொருளுதவியையும் அளித்து வந்தான்.

பல நாள்கள் கழிந்தன. மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய மன்னன் அப்படியே அந்த அந்தணரது குடும்பம் எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தான். வீட்டில் யாரோ ஒருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசன், கோபாவேசமாக வீட்டிற்குள் புகுந்து அந்த நபரைக் குத்திக் கொன்றான். அதன்பிறகே தனக்காக தீர்த்த யாத்திரை சென்ற அந்தணர்தான் என்பதை அறிந்து திடுக்கிட்டான். அந்தப் பாவம் தன்னை பீடிக்குமே என்று அஞ்சினான். அதற்கு ஏற்றாற்போல் கொலையுண்ட அந்தணரின் ஆவி அரசனை இரவிலும் பகலிலும் துன்புறுத்தியது. அந்தப் பாவத்தைப் போக்க தீர்த்த யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றான். இறுதியாக திருவிடைமருதூர் வந்தான். கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்..! அந்தணர் ஆவி அவனை விட்டு நீங்கியது. அவ்வாறு அந்த ஆவி நீங்கிய நாள் தைப்பூசத் திருநாள். இதையறிந்த மன்னன் அக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற பெரும் நிதியுதவி செய்தான்.இதேபோல் இன்னொரு கதையும் பிரபலம்.

மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் குதிரையில் வேகமாக வந்துகொண்டிருந்தான். அப்போது வயதான பிராணமர் ஒருவர் அந்த நேரம் தெருவைக் கடக்க முயல, குதிரையில் அடிபட்டு உயிரிழந்தார். அந்தப் பாவத்திலிருந்தும் ஆவியின் பிடியிலிருந்தும் விடுபட நினைத்த மன்னன் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் விடிமோட்சம் பிறக்கும் என்று கூறினர். ஆனால் பாண்டியனுக்கு சோழநாட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட மனம் வரவில்லை. எனவே சுந்தரேஸ்வரரை வேண்டினான். "இன்னும் கொஞ்ச நாளில் சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான்; உன்னிடம் மோதுவான்; ஆனால் தோற்றுவிடுவான். திரும்பி ஓடுவான். நீ அவனைத் துரத்திக்கொண்டு சோழ நாட்டிற்குச் செல். அப்போது திருவிடைமருதூர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்'' என்றார் சுந்தரேஸ்வரர். இறைவன் சொன்னபடியே எல்லாம் நடந்தன. சோழனைத் துரத்திய பாண்டியன் திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதும் அவனை பிடித்திருந்த ஆவி விலகியது. இந்த  அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.

ஒரு தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பினார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு அன்னை பார்வதி சக்திவேல் கொடுத்து ஆசிர்வதித்ததும் ஒரு தைப்பூச நாளில்தான். தைப்பூச நாளன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. காரணம், தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர்  அருள்பாலித்த நாள் ஒரு தைப்பூச நாளே.

எல்லாவற்றும் மேலாக 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் எவரையும் பிரமிக்க வைக்கும். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு நோக்கி, "அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய  ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். அன்றும் தைப்பூசத் திருநாளே.

பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.

தொழில் காரணமாகவும், வணிகத்தின் பொருட்டும் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்து சென்ற தமிழர்கள் முருக வழிபாட்டு நெறியையும் உடன்கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம்.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, செய்கோன், மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com