உலக தொழுநோய் தினம்: தொழுநோய் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதியன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது.
உலக தொழுநோய் தினம்: தொழுநோய் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதியன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்தத் தினம் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழுநோய் பற்றியும் அதற்கான ஜோதிட காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தொழு நோய் அல்லது குஷ்ட ரோகம்

ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த்தன்மை. தசை இழப்பு ஏற்பட்டு இறுதியாக ஹேன்சென் நோய் எனும் உறுப்புகளின் உருக்குலைவு உண்டாகும். 

இத்தொற்று மைக்கோபேக்டீரியம் லெப்ரோ மற்றும் மைக்கோபேக்டீரியம் லெப்ரோமெட்டோசிஸ் எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. நுனி நரம்புகள் அல்லது மேல் மூச்சுமண்டல சளிச்சவ்வுகளில் உண்டாகும் திசுக்கட்டி நோயாகும். தோல் புண்களே இதன் வெளிப்படையான அறிகுறி. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், தொழு நோய் வளர்ச்சி அடைந்து, தோல், நரம்புகள், அவயவங்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர சேதத்தை உண்டாக்கும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சி தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துறக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயைக் குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

மங்கிய/நிறமாறிய தோல் புண்கள்தோலில் வளர்ச்சிகட்டியான, விறைப்பான அல்லது உலர்ந்த தோல்கடுமையான வலிபாதிக்கப்பட்ட தோல், உணர்ச்சியிழத்தல் தசை பலவீனம் அல்லது பக்கவாதம் (குறிப்பாக கால்/கையில்), பார்வையிழப்புக்கு இட்டுச்செல்லும் கண் பிரச்னைகள், பெரிதான நரம்புகள்(குறிப்பாக முழங்கை/காலில்) மூக்கடைப்புபாதங்களில் புண் ஆகியவை தொழுநோயின் அறிகுறிகளாகும்.

தொழுநோய்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்

தொழுநோய் மட்டுமல்லாது அனைத்து தோல் சார்ந்த நோய்களுக்கும் காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையைக் கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையைச் சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாகக் கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்துக் கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர்.

தொழுநோய்க்கான காரக கிரகங்கள்

சூரியன்

கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்குக் காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் Dக்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன்

நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநோய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்

காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநோய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

புதன்

அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்குத் தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

குரு

குருவினால் நேரடியாகப் பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையைக் கொண்டு கர்ம வினையை அறிந்துகொள்ள முடியும். மேலும் லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய் பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சுக்கிரன்

தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிறார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்துத் தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிரங்கு, கொப்புளங்கள் எனப் பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேறச் சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்குச் சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

சனி

உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும்.

ராகு/கேது

சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோயுக்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்கச் செய்வதால் தொழுநோய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்தில் தெரிவித்து அதை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே!

தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்

1. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

3. லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5. சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது.

7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமே அல்லது சந்திரனும் செவ்வாயுமே எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வெண்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10, லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரண்டாம் வீட்டில் நிற்பது.

11. குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12. சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13. ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.

14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15. சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது. 

16. பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்தக் கிரக சேர்க்கைகளில் அதிகப்படியான சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தொழுநோய் தீர ஜோதிட பரிகாரங்கள்

வைத்தீஸ்வரர் கோயில்

செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும்  அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களைப் போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனைப் போக்க சிவபெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச  பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. 

சீர்காழி

சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாகப் பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவதலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.

பானு ஸப்தமி விரதம்

ஞாயிற்றுக்கிழமையில் ஸப்தமி திதி சேர்ந்து வந்தால் 'பானு ஸப்தமி' என்று கூறுவர். பானு ஸப்தமியை - 'பானு யோகம் என்று குறிப்பிடுவர். இது, ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சமமாகப் புராணங்களில் போற்றப்படுகிறது. அதாவது பானு ஸப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்திய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை தானம் செய்தால் பார்வை சரியாகும்), சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய தொழு நோய் நீங்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

யோகினி ஏகாதசி விரதம்

ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது. யோகினி ஏகாதசி விரதத்தை நாம் மற்ற ஏகாதசி விரதம் அனுசரிப்பதைப் போலவே அனுசரிக்க வேண்டும். முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். அரிசி, கோதுமையால் செய்த உணவை உண்ணக் கூடாது.

ஜேஷ்டாபிஷேகம்

ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கு அபிஷேகம் மற்றம் தைலக்காப்பு வைபவம் நடைபெறுகிறது. இதுவே ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்றே அழைக்கின்றனர். சாதாரண சரும நோய் முதல் தொழு நோய் வரையிலுள்ள அனைத்து தோல் நோய்களுக்கும் கிரகம் புதன் என்பதை மேலே பார்த்தோம். புதனின் அதிதேவதையான ஸ்ரீ மஹா விஷ்ணுவை ஜேஷ்டாபிஷேக நாளில் தரிசித்துவர தொழுநோய் மற்றும் அனைத்து தோல் நோய்களும் நீங்கும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com