கடக (ஆடி) மாதத்தில் சிவன் சக்தியில் அடக்கம் - பகுதி 2

ஆடிமாதம் ஆண்டாளால் சிறப்புற்றது. ஆண்டாள் பூமிப் பிராட்டியின்..
கடக (ஆடி) மாதத்தில் சிவன் சக்தியில் அடக்கம் - பகுதி 2

ஆடி பௌர்ணமியில் வரும் விழாக்கள்

ஆண்டாள் அவதரித்த நாள்: ஆடிமாதம் ஆண்டாளால் சிறப்புற்றது. ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கலி பிறந்து 97 ஆண்டுகளுக்குப் பிறகு, நள வருடத்தில்,  சூரியன் கடக ராசியில் சஞ்சரித்தபோது, வளர்பிறை சதுர்த்தியில், ஆடி மாதம் 6ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், பெரியாழ்வாருக்கு,  துளசிச் செடியின் கீழே கிடைத்த ஒரு பொக்கிஷம் “கோதை நாய்ச்சியார்” ஆவர். ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று வீட்டிலிருந்து துளசியைப் பூஜிக்க குடும்ப நலன்  மேம்படும் என்பது ஒரு மிகப்பெரிய உண்மை.

வரலட்சுமி விரதம்: இந்த விரதம் ஆடி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி கூடிய வெள்ளிக்கிழமைகளில் வருவது பெண்கள் உபவாசமிருந்து நோன்பு நோற்றால், நீண்ட ஆயுள்,  புகழ், செல்வம், மங்கள வாழ்க்கை, உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தைகள், உடல் நலம் உள்ளிட்ட சகல பாக்கியங்களையும் அந்த குடும்பத்தில் கிட்டும். ஆடி பௌர்ணமிக்கு  முன்வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை  அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆன ஸ்திரீகள் அனைவரும் தங்கள் பதிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிகளாக வாழும் விதத்திலும் வரலட்சுமி  விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் மகாலட்சுமி என்கிற அஷ்டலட்சுமிகள் ஆசீர்வாதம் கிட்டும். இந்த நோன்பை எல்லா வருடங்களும் ஆடி மாதத்தில் பூஜிக்க  வேண்டும்.

ஆடித்தபசு: புராணங்களிலும் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாக ஆடி மாதம் சொல்லப்பட்டிருக்கிறது. இறைவனை நினைத்து அம்பிகை ஊசி  முனையில் தவமிருந்த ஆடித்தபசு பண்டிகை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹரியும் ஹரனும் ஒன்று எனபதற்கு உதாரணமான திருநெல்வேலியில்  சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா (தபசு - தவம்) விமரிசையாக 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கோமதி  அம்மன் கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் புரிந்த சங்கரலிங்கத்தையும் மணக்கும் நாள். ஆடித்தபசுக் காட்சியைக் கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து  மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

ஹய்க்ரீவ மூர்த்தி: குதிரை முகம் கொண்ட திருமால் ஒரு ஞானத்தின் மொத்த உருவம் கொண்ட ஹயக்ரீவர். இவர் கடலுக்கு அடியில் சென்று அசுரர்களிடமிருந்து  சண்டையிட்டு வேதங்களை மீட்டுவந்து படைக்கும் தொழில் கொண்ட பிரம்மனிடம் ஒப்படைத்த மாதம். இந்த நாளை கோவில்களில் சிறப்பாக வழிபடுவார்கள்.

குரு பௌர்ணமி:  ஆடி மாதத்தில் வரும் ழுழுநிலவு  நாள் அன்று, சீடர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய போற்றும் வகையில் குரு பூஜை செய்வார்கள். மகாபாரதம்  எழுதிய வியாச மகரிஷியைச் சிறப்பிக்கும் பூஜை என்பதால் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். மாணவர்கள் தங்களுக்குக் கல்வி மற்றும் ஞானத்தை கற்றுக்கொடுத்த  குருவினை வழிபடுவதுடன், நமக்கு இந்து சமய தத்துவத்தை விலகிய மாபெரும் ஆசிரியர்களான ஆதி சங்கரர், மத்வர், இராமானுசர், பெரியவா, சாய்பாபா, ராகவேந்திரா,  பௌத்தர்களும் குரு புத்தர், உங்களுக்குப் பிடித்த குருவை குரு பூர்ணிமா நன்னாளில் வழிபடலாம்.

ஆடி பூரம் ஜாதகப்படி: சூரியன்  வீட்டில் சந்திரன் மற்றும் சந்திரன் சூரியன் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்று மற்றும் சந்திரன் சுக்ரன் சாரத்திலிருந்து குடும்பத்திற்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் ஆடி மாதம், பூரம் நட்சத்திரம். அம்பிகைக்கும் மகேஸ்வரனுக்கும் பங்குனி உத்திரத்தில் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஆடி பூரத்தில் அம்பிகை கருவுற்றிருந்ததாகவும் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு செய்விக்கும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று அம்பாளை தரிசித்து வளையல்கள் மற்றும் பூஜைக்குத் தேவையானவற்றை நம்மால் முடிந்ததை வாங்கி கொடுக்கவேண்டும். ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளைத் தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க சிறப்பாக இருக்கும். பூரம் நட்சத்திரத்திற்கு உரிய சுக்கிர பகவான் என்பவர் குடும்பம், ஆசை, பொன் பொருளுக்குரியவர். ஆடிப்பூரம் நாளில் சுக்கிரன் ஆதிக்கம் பலம் பெற்று உள்ளதால் அன்று ஆண்டாள் மற்றும் அம்மன் பூஜை செய்தால், வீட்டில் குடும்ப ஒற்றுமை, சுப செலவுகள், திருமணம், ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிட்டும். ஆடிப்பூரம் அன்று குழந்தைப் பேருக்காக சில கோவில்களில் முளைப்பயறு கட்டுவது வழக்கம் உண்டு

ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் மங்களகரகன் செவ்வாய் மற்றும் சுக்கிர நாளான வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி, அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடி செவ்வாயில் நள்ளிரவில் பெண்களால் பூஜிக்கப்படும் - அவ்வை நோன்பு அல்லது அவ்வையார் நோன்பு சிறப்பு வாய்ந்தது.

ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆலயங்களில் சண்டி ஹோமம், நவசக்தி பூஜை, மற்றும் குத்துவிளக்கு பூஜைகளில் கலந்துகொள்வது, குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, வளையல், மஞ்சள், குங்குமம் வைத்துத் தருவது மிகவும் நல்லது. இந்த பூஜைகள் செய்யும்பொழுது சுக்கிர மற்றும் செவ்வாய் தோஷம் மற்றும் வீட்டு பிரச்னைகள் குறைய வாய்ப்புண்டு.

ஆடி கிருத்திகை: ஓம் சரவண பவ ஆடி மாதம் முழுக்க அம்பிகைக்கு என்றாலும், ஆடி கிருத்திகை என்பது ஆறுமுருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமானது. வேத ஜோதிடப்படி கிருத்திகை நட்சத்திரம் சூரியன்  சாரம் பெற்றுள்ளது கிருத்திகை 1ம் பாதம் மேஷத்தில் 2, 3, 4 பாதம் ரிஷபத்திலும், அங்கு சந்திரன் உச்சம் மற்றும் மூலதிரிகோண பெரும் வீட்டில் அமரும்.

சந்திரனானவர்  பிறந்தது கிருத்திகையில் என்று கூறப்படுகிறது. ஆடி கிருத்திகையில் சூரியன் சந்திரன் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பலம் பெற்று உள்ளது. இதற்கெல்லாம் மொத்த உருவம்  கொண்டவன் அழகான கார்த்திகேயன் ஆவான். சகல செல்வமும் பலமும் பெற ஆடிக் கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனைப் பூஜித்து கந்தனின் பேரருளைப்  பெற்றால் சில தோஷங்கள் விலகும்.

ஆடி கருட பஞ்சமி: ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி. கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம்   இருந்து பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி பூஜிக்கும் நாள். இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம். இந்த பூஜையை கணவர், சகோதர சகோதரிகளுக்காக, பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். 

கருட காயத்ரி

1. தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

2. ஓம் ககோத்தமாய வித்மஹே வைணதேயாய தீமஹி
தன்ன தார்ஷ்ய ப்ரசோதயாத்

ஆடிமாதம் என்ன செய்யலாம் 

பொதுவாக ஆடி, மார்கழி மாதங்கள் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்வதில்லை. ஆடி, மார்கழி மாதங்கள் பீடை மாதம் என கூறவது உண்டு. அது தவறான  அறிக்கை மக்கள் மனதில் இறைவனை பூஜிக்கும் மாதம் ஆகும். அதனால் அந்த மாதம் முழுவதும் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடி மாதம் முழுவதும் பெண்கள் குடும்பத்திற்கு ஒற்றுமை கொண்டுவரும் நாள்.

அன்று தான் தானதர்மம், பூஜை, நெய்விளக்கு ஏற்றுதல், பூக்குழி  இறங்குதல், எலுமிச்சை மாலை சாத்துதல், கூழ் ஊற்றுதல், கூழ் ஊற்ற முடியாதவர்கள் கோவில்களுக்கு கேழ்வரகு, மற்றும் அவற்றிற்கு தேவையான பொருள்களை வாங்கித்தருவது, அம்மனுக்கு வேண்டிய மலர்கள், வளையல்கள், பட்டாடைகள், நல்லெண்ணெய், காணிக்கை என்று நம்மால் முடிந்ததை கொடுக்க வேண்டும்.

அறிவியில் ரீதியாக பார்த்தோமானால் மழைக் காலத்தின் ஆரம்பம் அதனால் முதல் மழை நீர் தொற்று நோய்களை உண்டாக்கும் அதனால் அன்று பிரசாதமான ஆடிக்கூழ்  குடிப்பது மற்றும் வேம்பு, எலுமிச்சை பயன்படுத்துவதால் நம்மை சுற்றி கிருமி நாசினியாக செயல்படும்.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி

whats App:  8939115647
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com