2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு

அத்திவரதர் பெருவிழாவின் 15-ஆவது நாளான திங்கள்கிழமை அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 2.30 மணி நேரமானது.  
15-ஆவது நாளான திங்கள்கிழமை பச்சை, நீல வண்ணப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.
15-ஆவது நாளான திங்கள்கிழமை பச்சை, நீல வண்ணப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.


அத்திவரதர் பெருவிழாவின் 15-ஆவது நாளான திங்கள்கிழமை அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 2.30 மணி நேரமானது.  

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 

திடீரென பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாள்களாக அதிகரித்ததால் கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.  அதன்படி, கிழக்கு கோபுரம் அருகே பந்தல், மருத்துவ முகாம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.  

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து வரும் திரளான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து, கோயில் வளாகம், மாடவீதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி, துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் படுத்தினர். 
திங்கள்கிழமை அதிகாலை தரிசனத்துக்காக காத்திருந்தோர் கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு மேல் வருகை புரிந்த பக்தர்கள் தெற்கு, வடக்கு மாடவீதிகளின் வழியாக கிழக்கு கோபுரத்தை அடைந்தனர். சரியாக 4.45 மணிக்கு மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள்  அனுமதிக்கப்பட்டனர். 
பச்சை மற்றும் நீல வண்ணப் பட்டாடையில் அத்திவரதர்: திங்கள்கிழமை பச்சை மற்றும் நீல வண்ணப் பட்டாடை அணிவித்து, மரிக்கொழுந்து, செண்பகப்பூ, துளசி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களால் அத்திவரதர் அலங்காரம் செய்யப்பட்டார். பின்பு, நைவேத்தியத்தோடு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரைக் காண பக்தர்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டது. அதன்படி,  ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள் பொதுதரிசன வழியாக அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஆங்காங்கே காவலர்கள் கூட்டத்தை நிறுத்தி வைத்து, அனுப்புவதால் சிரமமின்றி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

பக்தர்கள் வருகை: பக்தர்களின் வருகை கடந்த 4 நாள்களாக சுமார் 1.50 லட்சத்துக்கும் மேலாக இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டமின்றி தரிசன வரிசை காலியாக இருந்தது. இதனால், பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்தனர். அதுபோல், திங்கள்கிழமை காலை முதலே அதிக நெரிசல் இன்றி மிதமான பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து இருந்தது.  இதனால், அத்திவரதரை காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் வருகை புரிந்த பக்தர்கள் எவ்வித நிறுத்தமுமின்றி நேரடியாக கிழக்கு கோபுரம், ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக வஸந்த மண்டபத்துக்கு சென்றனர். 

அதிகபட்சமாக  2.30 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 25 நிமிடத்திலும் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். எப்போதெல்லாம் கூட்டம் குறைவாக இருக்கிறதோ அப்போது உள்ளூர் வாசிகள் பொதுதரிசன பாதையில் சென்று அத்திவரதரை தரிசிக்கின்றனர். 

ஆனால், அத்திவரதரை அருகில் இருந்து பார்த்துவிடலாம் எனும் நோக்கில் முக்கியஸ்தர்கள் அல்லோதோரும் முக்கியஸ்தர்கள் வரிசையில் செல்லவேண்டும் என்பதற்காக பரிந்துரையை நாடுகின்றனர். இதனால், அனுமதி அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு, ஆன்லைன் அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர் அவ்வப்போது தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இதனால், அதிருப்தி அடைவதோடு வாக்குவாதமும் ஏற்படுகிறது. சிலர் பரிந்துரையைப் பயன்படுத்தி தரிசனத்துக்கு வருவோரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, இதனை ஒழுங்குபடுத்தவேண்டும் என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

15-ஆவது நாளான திங்கள்கிழமை 1.25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.


சந்திர கிரகணம்: தரிசன நேரம் மாற்றமில்லை

சந்திர கிரகணம் ஜூலை 17- ஆம் தேதி அதிகாலை சரியாக 1.32 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3: 01 மணிக்கு உச்சம் அடைந்து, காலை 4.30 மணிக்கு முடிகிறது. சந்திர கிரகண காலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்கெனவே அனுமதிக்கப்படாத சூழல் உள்ளது. இருப்பினும், சந்திர கிரகணத்தையொட்டி தரிசன நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது, வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என மாவட்ட, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர், இளையராஜா, டிஜிபி தரிசனம்: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா,  நடிகை கீதா, மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்ளிட்டோர் அத்திவரதரை திங்கள்கிழமை தரிசனம் செய்தனர். 

20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலுக்குள் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளும் அரிய நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 

தற்பொழுது வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் இந்நிகழ்வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனம் செய்ய வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஏற்பாடுகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. சிறப்பு மருத்துவ முகாம்கள்,  இலவச மருத்துவ உதவி மையம், அவசர கால ஊர்திகள்,  24 மணிநேரமும் இயங்கும்  ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தவிர 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் கோயிலைச் சுற்றி இயங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com