பிறரின் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஸ்ரீஜயேந்திரர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

இரக்கத்துடன், உறக்கமின்றி பிறரின் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஸ்ரீஜயேந்திரர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை
முதலாம் ஆண்டு சிரத்தாஞ்சலி விழாவில் ஸ்ரீஜயேந்திரரின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்ட விஜயேந்திரர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர்.
முதலாம் ஆண்டு சிரத்தாஞ்சலி விழாவில் ஸ்ரீஜயேந்திரரின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்ட விஜயேந்திரர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர்.


இரக்கத்துடன், உறக்கமின்றி பிறரின் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஸ்ரீஜயேந்திரர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை புகழாரம் சூட்டினார்.
காஞ்சி காமகோடி பீடம் சார்பில் 69ஆவது பீடாதிபதி ஸ்ரீஜயேந்திரருக்கு முதலாம் ஆண்டு ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை சங்கர மடத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலையில் காமாட்சியம்மன் மண்டபத்தில் ஸ்ரீ ஜயேந்திரர் சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு பீடாதிபதி ஸ்ரீவிஜேயேந்திரர் தலைமை வகித்தார். சங்கரா பள்ளிகளின் தாளாளர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த வேதாந்தம், கோவிந்த் கிரிஜி மகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். 
தொடர்ந்து, ஸ்ரீஜயேந்திரரின் நினைவலைகள் என்ற நூலை பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் வெளியிட, தமிழக ஆளுநர் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அஞ்சல்துறை சார்பில் ஸ்ரீஜயேந்திரரின் முதலாம் ஆண்டு சிறப்பு ஆராதனை மகோற்சவ அஞ்சல் உறையை சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஆனந்த் வெளியிட, பீடாதிபதி விஜயேந்திரர், தமிழக ஆளுநர், கோவிந்த் கிரிஜி மகராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
இதைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:  
புனிதமான காஞ்சி நகருக்கு வந்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன். அவ்வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கடைசியாக ஸ்ரீஜயேந்திரரரைப் பார்த்த அனுபவத்தை அவரது முதலாம் ஆண்டு சிரத்தாஞ்சலி நினைவுபடுத்துகிறது. இருள்நீக்கி பகுதியில் பிறந்ததால் அவர் இருளை விடுவிப்பதற்குத் தகுதி வாய்ந்த குருவாக திகழ்ந்தார். மகா பெரியவரின் தேச யாத்திரையில் ஸ்ரீஜயேந்திரரும் சென்று அனுபவத்தைப் பெற்று, அவ்வழியிலேயே பயணித்தார். அதன்மூலம், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், அன்னதானக் கூடங்கள், புனிதயாத்திரை மேற்கொள்வோருக்கான யாத்ரி நிவாஸ் இல்லங்கள், வேத பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை சென்னை, அஸ்ஸாம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் உருவாக்கியுள்ளார். இதன்மூலம், மாணவர்கள் தார்மிக மதிப்பீடுகளை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். 
ஸ்ரீஜயேந்திரர் பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். மேலும், பல்வேறு தாழ்த்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று உதவிகளை புரிந்துள்ளார். அவர் சென்று வந்த இடங்களில் தற்போது, இலவசக் கல்வி, உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
நேபாளத்திலும், பல வட இந்திய நகரங்களிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களிலும் சங்கர மடத்தின் நிறுவனங்கள் திறம்பட செயல்புரிகின்றன. இரக்கத்துடன், உறக்கமின்றி பிறரின் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஸ்ரீஜயேந்திரர். இழிவான, வெறுக்கத்தக்க தன்மை குறித்து கவலையுற்று, அதைக் களைய தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடங்களுக்கு சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். 
தனது சுற்றுப்பயணத்தின்போது அவர் காலனி மக்களை அடிக்கடி சந்தித்தார். ஜன கல்யாண் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடையே ஹிந்து சமயக் கொள்கைகள் பற்றிய அறிவையும், அறிவுரைகளையும் வழங்கி ஹிந்துக்களை ஒருங்கிணைத்தார். 
அதே வழியில் தற்போது, ஸ்ரீவிஜயேந்திரர் சிறப்பாகச் செயல்படுகிறார். எனவே, ஸ்ரீஜயேந்திரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அனைவரும் அவரது  தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுக்க ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். அதன்படி, நாடு, நாட்டின் மக்கள், கலாசாரம் ஆகியவற்றில் சனாதனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அதுவே தர்மமாகும் என்றார் ஆளுநர். 
 ஸ்ரீவிஜயேந்திரர் ஆசியுரை: விழாவில்  ஸ்ரீவிஜயேந்திரர் ஆசியுரை வழங்கினார். அவர் பேசியது:
மனிதநேயம் மூலம் ஒற்றுமை உணர்வை, வழிகாட்டுதல்களை, குரு பக்தியை வெளிப்படுத்தும் விதமாக பக்தர்கள் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். உதவி பெறுவது மனிதர்களுக்குத் தேவையான, இயற்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு மாறாக எதிர்பாராது உதவி செய்பவர்களைக் காண்பது அரிது. அவ்வகையான செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தவர் பெரியவர் ஸ்ரீஜயேந்திரர். அதன்படி, அவர் ஏழை, எளியவருக்கு உதவுவது, கோயில் புனரமைப்பு, கும்பாபிஷேகம், தீபவழிபாடு நடத்துவது, பாடசாலைகளை நிறுவுவது, கோசாலை அமைப்பது ஆகியவற்றில் ஈடுபட்டார். சமூகத்துக்கும் சமயத்துக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தியாக உணர்வோடு அவர் ஈடுபட்டார். பல்வேறு நிறுவனங்களை மக்களுக்காக உருவாக்கிய சிந்தனை கொண்டவர். இதன்மூலம், தேச ஒற்றுமையை ஊக்கப்படுத்தியுள்ளார். பல கல்விக் கூடங்கள், கண் மருத்துமனைகள் உள்ளிட்டவற்றை நிறுவி சேவை செய்தவர். தேவை, உதவி, பதவி அனைத்தும் பிறர்க்காகத்தான் என வாழ்ந்து காட்டியவர் என்றார் ஸ்ரீவிஜயேந்திரர்.
முதலாம் ஆண்டு ஆராதனை மகோற்சவம்
முக்தி அடைந்த பீடாதிபதி ஸ்ரீஜயேந்திரரின் அதிஷ்டானத்தில் முதலாம் ஆண்டு ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது பீடாதிபதியான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 28இல் விதேஹ முக்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, சங்கர மடத்தில் 12 மாதங்களும் ஆராதனை மகோற்சவம்,  வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அவர் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைந்தததையொட்டி அவரது அஷ்ஸ்டானத்தில் பிருந்தாவன பிரதிஷ்டை எனும் கருங்கல்லால் கட்டப்பட்ட துளசி மாடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  
இந்நிலையில், பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நூதன பிருந்தாவனம் கடந்த 9ஆம் தேதி மாலை பல்வேறு வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு, மீண்டும் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு, புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10ஆம் தேதி சங்கர மடத்தில் உள்ள சந்திர மௌலீஸ்வரர் விக்ரகத்துக்கு பூஜை செய்யப்பட்டது. வேதபாராயணம், ஹோமங்களின் பூர்ணாஹுதி ஆகியவையும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ரிஷப லக்னத்தில் நூதன பிருந்தாவன பிரதிஷ்டை விமரிசையாக நடத்தப்பட்டது.  
இதைத்தொடர்ந்து, முதலாவது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. அதன் 3ஆவது நாளான 19ஆம் தேதி காலையில் தற்போதைய பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யப்பட்டது. 
பின்னர் வேதபாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து, நண்பகல் 2 மணியளவில் தீர்த்த நாராயண பூஜை நடத்தப்பட்டது. 
இந்த நிகழ்வில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், கர்நாடக மாநிலம் வலக்கப்பட்டு, புஷ்பகிரி மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சேதுராமன், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஸ்ரீஜயேந்திரரின் அதிஷ்டானத்தில் பூஜை செய்த ஸ்ரீவிஜயேந்திரர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com