கோயில்களில் பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திரத்தையொட்டி, அதிமா பகவானுக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கோயில்களில் பங்குனி உத்திர விழா


பங்குனி உத்திரத்தையொட்டி, அதிமா பகவானுக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி புதன்கிழமை மாலை சங்கு சக்கரம் தாங்கி, சிவந்த திருமேனியுடன் தேரில் வீற்றிருக்கும் உத்திர நட்சத்திர அதிதேவதையான, அதிமா பகவானுக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, நட்சத்திர விருட்ச விநாயகர், இதர அதிதேவதைகளுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம்
 மல்லிகேஸ்வரர் கோயிலில்...
மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 
  மூலவர் மல்லிகேஸ்வரர்,  மல்லிகேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர் சந்தனம்,  மஞ்சள்,  பலவகை பழங்களால் உருவாக்கப்பட்ட  பஞ்சாமிர்தம்,  இளநீர்,  பன்னீர்,  தேன் உள்ளிட்ட  பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மகாதீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.  இதனையடுத்து உற்சவ மூர்த்திகளான சிவபெருமான்,  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்,  திருமஞ்சனம் நடைபெற்றது. 
 சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.  இதனையடுத்து சிறப்புப் பூஜைகள்,  மந்திரங்கள், மங்கள மேளதாளங்கள்  ஒலிக்க  சிவனுக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்வசத்தில்  கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். ப இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண  விருந்து வழங்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் ...
  பங்குனி உத்திர விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு 108 பால் குட அபிஷேகம் நடத்தப்பட்டது.
 தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடி மற்றும் அலகுகள் குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  விழாவை முன்னிட்டு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெய்சங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com