காசிக்கு இணையாக கருதப்படும் காசிவிஸ்வநாதர் ஆலயம் திருவிடைமருதூர்! 

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்
காசிக்கு இணையாக கருதப்படும் காசிவிஸ்வநாதர் ஆலயம் திருவிடைமருதூர்! 

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 30-வது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். காசிக்கு இணையாகக் கருதப்படுகின்ற தலங்களில் திருவிடைமருதூர் ஆலயமும் ஒன்றாகும். 

மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் திருவிடைமருதூர். மத்தியார்ஜுனம் என்று வழங்குகிறது.
 

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். 

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர் தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.

இந்தத் திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்கிழக்கு மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதரை சென்று பார்ப்போம். கிழக்கு வீதியின் தென் மூலையில் ஒரு சிறிய தெரு கிழக்கு நோக்கி செல்கிறது. அதில் மேற்கு நோக்கிய சிவாலயமாக காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கோயில் ஆகும்.

இப்போது, கோயில் தன் பூஜைகள் இழந்து ஒரு வேளை பூஜைக்கு வந்துவிட்டது. சில வருடங்களின் முன்னம் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு அப்பணிகளும் தொய்வடைந்துள்ளன. இருபது சென்ட் நிலப்பரப்பில் கோயில் உள்ளது, 

மேற்கு நோக்கி இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் கருவறைக்கு முன்னர் நீண்ட மண்டபம் உள்ளது. வெளியில் நந்தி உள்ளார். தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் உள்ளது. இறைவன் கருவறை வாயிலில் சில சிலைகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் துர்க்கையும், தென்முகனும் உள்ளனர், சண்டேசர் நன்கு பெரிய திருமேனியாக உள்ளார். 

ஆங்காங்கே கருங்கற்கள் பெயர்த்துக் குவிக்கப்பட்டுள்ளன. தென்புறம் பெரிய வில்வமரம் படர்ந்துள்ளது. கோயில் நுழைவாயில் சுவரில் ஓர் கல்வெட்டு ஒன்று தலைகீழாக உள்ளது. கொடைகொடுத்த விபரம் அதில் காணப்படுகிறது.

விரைவில் திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு காணவும், இந்துக்களிடையே ஒற்றுமையும், இறை நம்பிக்கை வளரவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. 

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com