தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை & சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008!

தமிழ்நாடு மருத்துவ நலம் பேணுவோர் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் மீது வன்முறை, இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை & சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008!

தமிழ்நாடு மருத்துவ நலம் பேணுவோர் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் மீது வன்முறை, இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008.

மருத்துவ நலம் பேணுவோர் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் ஆகியவற்றினை மேல் வன்முறை உபயோகப்படுத்துதல் சொத்துக்களுக்கு சேதம் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்கவும் அது தொடர்பான உடன் நிகழ்வாக எழுகின்ற நிகழ்வுகளுக்கு வகை செய்கின்ற சட்டம்.

மருத்துவ நலம் பேணுவோர் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய செயல்களால் மாநிலத்தில் அப்பணி புரிவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு அப்பணிகள் பின்னடைவு ஏற்படுகிறது ஆகையாலும்,

அப்படி வன்முறை தொடுப்போரின் குற்றங்கள்... புலன் கொள்ள மற்றும் பிணையில் விடத்தகாத குற்றங்களாக ஆக்குவதற்கும் அப்படிப்பட்ட செயல்களுக்கு இழப்பீடு, சேதம், நஷ்டம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தீர்மானிக்கவும் இந்தியா குடியரசான 59 ஆம் ஆண்டில் தமிழக சட்டசபையில் இச்சட்டம் கீழகண்டவாறு இயற்றப்படுகிறது.

பிரிவு 1) : குறுந்தலைப்பு மற்றும் துவக்கம்

  1. இந்த சட்டம் தமிழ்நாடு மருத்துவ நலம் பேணுவோர் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் (வன்முறை, இழப்பு சொத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துதல் தடை) சட்டம் 2008 என அழைக்கப்படும்.
  2. இச்சட்டம் 2008 ஆம் வருடம் ஜுலை மாதம் 18 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப் பட்டது.

பிரிவு 2) : சொற்பொருள் விளக்கங்கள் :

சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மற்ற விதத்தில் பொருள் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அல்லாது பொதுவாக.

1.            மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் என்பதன் பொருள் மத்திய அரசால் மாநில அரசால் அல்லது உள்ளாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படும் மக்களின் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் மற்றும் நோயுற்றோருக்கு சிகிச்சை தரவல்ல அவர்களை தங்க வைத்து மருத்துவ சிகிச்சையளித்து உபசரிக்கும் தனியார் மருத்துவமனை, தனியார் தாய்மைப்பேறு தொடர்பாக குழந்தை பிறப்பதற்கும் முன்பும் பின்பும் பெண்களை தங்க வைத்து சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், உடல், மனம் தொடர்பான ஊறுகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், நோய்கள் மருத்துவம் பார்த்த பின்பு அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்பு தங்கியிருக்கும் இல்லங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

2.மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் தொடர்பாக மருத்துவ நலம் பேணுவோர் என்பது.

  • தற்காலிகமாக பதிவுபெற்றோர் உள்ளிட்ட பதிவு பெற்ற மருத்துவர்களையும்
  • பதிவு பெற்ற செவிலியர்களையும்
  •  மருத்துவக்கல்வி பெறும் மாணவர்களையும்
  • செவிலியர் கல்வி பெறும் மாணவர்களையும்
  • அம்மருத்துவமனையில் துணைபுரிகின்ற சார்நிலை மருத்துவ பணியாளர்களையும்.

3.   சொத்து என்பது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் உள்ளிட்ட எல்லா விதமான சொத்துக்களையும் மருத்துவ சாதனங்கள் மருத்துவ இயந்திரங்கள் மருத்துவ நலம் பேணும் நபர்கள் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்களின் வசத்தில் இருக்கும் மருத்துவ சாதனங்கள் மருத்துவ இயந்திரங்களை குறிக்கும்.

4. வன்முறை என்பது மருத்துவ நலம் பேணும் நிறுவனத்தில் மருத்துவ நலம் பேணும் பணியினை புரிகிற நபர்களுக்கு எதிராக செய்யப்படும் ஊறு, தீங்கு, உயிருக்கு ஆபத்து விளைவித்தால் அத்தகைய அச்சுறுத்தல்கள் செய்தல் அல்லது சொத்துக்களுக்கு நஷ்டம் மற்றும் இழப்பை ஏற்படுத்துதல் ஆகிய செயல்களை குறிக்கும்.

3. வன்முறை புரிவோர்க்கு தண்டனை :

ஒரு நபர் தனியாகவோ ஒரு அமைப்பின் தலைவராக உறுப்பினராக இருந்து இச்சட்டத்தின்படி வன்முறை செயல்களை செய்தல் தூண்டிவிடல், ஊக்குவித்தல் போன்ற செயல்களை புரிந்தால் 3 ஆண்டுகளுக்கு குறையாத 10 ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறை தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கலாம்.

4. குற்றங்களை புலன் கொள்ளுதல்

பிரிவு 3-ன் படியான குற்றங்கள் புலன் கொள்ளத்தக்க மற்றும் பிணையில் விடக்கூடாத குற்றங்களாகும்.

5. சொத்துக்களுக்கு இழப்பு மற்றும் நஷ்டங்கள் விளைவித்தால் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு :

  1. பிரிவு 3-ல் சொல்லப்பட்ட அக்குற்றம் புரிந்த நபர்கள் நீதிமன்றம் தீர்மானிக்கும் சொத்துக்கு தீங்கு மற்றும் இழப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடு தரும் பொறுப்புடையவராவார்.
  2. அவ்வாறு குற்றம் புரிந்த நபர்கள் இழப்பீடு வழங்காத பட்சத்தில் அத்தொகை தமிழ்நாடு வருவாய் வசூலிக்கும் சட்டம் 1864-ல் இதற்கென வகைமுறைப்படுத்தப்பட்டபடி வசூலிக்கப்படும்.

6. சில நடவடிக்கைகளுக்கு தடை :

மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் அல்லது அத்தகைய நபர்களின் சொத்துக்களுக்கு செய்யப்படும் தீங்கு மற்றும் இழப்பீட்டிற்காக தமிழ்நாடு சொத்து (சேதம், தீங்கு, இழப்பு) ஏற்படுத்துதல் சட்டம் 1992-ன்படி எந்த அதிகார அமைப்பினரும் இழப்பீடு கோர முடியாது.

7. மற்ற சட்டங்களின் செயலாக்கம் பாதிக்காது

சட்டத்தில் செயலில் வேறு சட்டங்களின் மீதான நடவடிக்கையோடு கூடுதலாக இச்சட்டத்தின் வகைமுறைகள் அவ்வாறு செயல்படாது என வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலையை தவிர மற்ற சூழ்நிலைகளில் செயலாக்கப்படும்.

8. நீக்கலும் காத்தலும் :

தமிழ்நாடு மருத்துவ நலம் பேணுவோர் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் (வன்முறை சொத்துக்கு சேதம் விளைவித்தல்) தடுப்பு அவசர சட்டம் 2008 இதன்படி நீக்கப்படுகிறது.

அவ்வாறு நீக்கப்பட்டதற்கு மாறுபடாத வகையில் அச்சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல்கள் யாவும் இச்சட்டத்தின் படியும் செய்யப்பட்டதாக கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com