சர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்...

Euthanasia என்ற சொல்லின் பொருள் மென்மையான அல்லது எளிதான மரணம் என்பதாகும். இதை வெளிநாடுகளில் அங்கீகரித்து அதற்கான சட்டவழிமுறைகளை நிரல்படுத்தியுள்ளனர்.
சர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்...

ஒருவர், எந்த ஒரு மருத்துவ நடவடிக்கைகள் (சிகிச்சைகள்) வாயிலாகவும் சரிசெய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரை மருந்து மூலம் உயிரிழக்குமாறு "கொலை" செய்யும் ஒரு நடைமுறைக்கே ‘கருணைக் கொலை’ என்று பெயர். இதற்கு  ஆதரவும் உண்டு; எதிர்ப்பும் உண்டு. விலங்குகளை இவ்வாறு கொலை செய்வது பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
      
Euthanasia என்ற சொல்லின் பொருள் மென்மையான அல்லது எளிதான மரணம் என்பதாகும். இதை வெளிநாடுகளில் அங்கீகரித்து அதற்கான சட்டவழிமுறைகளை நிரல்படுத்தியுள்ளனர். ஆனால் அதைப் போன்ற நிரல்படுத்தப்பட்ட சட்டம் இந்தியாவில் இல்லை. கொலை என்பது கருசேர்க்கை முதல் கடைசி மூச்சை மனிதன் இயற்கையாக நிறுத்தும் வரை எந்த வடிவத்தில் செயப்படுவதாக இருந்தாலும் அது இந்தியாவில் ஏற்புடையதில்லை. இருந்த போதிலும் அத்தகைய மரணத்தையும் நியாயப்படுத்தும் சூழ்நிலைகள் இங்கேயும் இருக்கத்தான் செய்கின்றன.

நம் உச்ச நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர், அருணா இராமச்சந்திரா செண்பக் Vs இந்திய யூனியன் 2011-2-L.W (Crl) 129 மற்றும் பலர் என்ற வழக்கில் மிக விரிவாக கருணை கொலை சம்மந்தப்பட்ட மற்றும் இறப்பு என்பதன் பொருள், எப்பொழுது மனிதன் இறப்பவன் ஆகிறான் மென்மரணம் என்பதன் வகைகள், சட்டப்படி அதனை அனுமதிக்கலாமா? இதைப்பற்றி வெளிநாட்டு சட்டங்கள் என்ன சொல்கின்றன? என்பது பற்றிய ஆழமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

KEM என்பது மும்மையிலுள்ள கிங்க் எட்வர்ட் மெமோரியில் மருத்துவமனை ஆகும். அங்கு பணி புரிந்த செவிலியர் ஒருவர் அருணா இராமச்சந்திரா செண்பக். அவரை கடந்த 28.11.1973 அன்று மருத்துவமனையில் பணிபுரிந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் நாய்களை கட்டிப்போடும் சங்கிலியால் கழுத்தை சுற்றி கற்பழிக்கும் முயற்சியில் பின்புறமாக வேகமாக இழுத்துள்ளான். அவர் மாதவிலக்கு காலத்தில் இருந்ததால் இயற்கைக்கு புறம்பாக அவருடன் உடலுறவு கொண்டான். அப்போது அவர் அசையாமல் இருப்பதற்காக அவருடைய கழுத்தில் சங்கிலியை போட்டு சுற்றி இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறான். நாய் சங்கிலியால் கழுத்து இழுக்கப்பட்டதால் மூளைக்கு பிராண வாயு செல்லாமல் மூளை பாதிப்படைந்துள்ளது. மூளைத் தண்டிலும் கழுத்துப் பகுதியிலும் Cervical Card காயம் ஏற்பட்டு சுய நினைவின்றி கீழே கிடந்தவரை அறையை சுத்தம் செய்பவர் கண்டறிந்து காப்பாற்றியுள்ளார். அவர் அம்மருத்துவமனை ஊழியர்களால் 36 ஆண்டுகளாக கோமா நிலையில் பராமரிக்கப்பட்டு தமது இறப்பு வரையிலும் அங்கேயே இருந்தார். எலும்பை பெயின்டால் பூசியது போன்று காணப்பட்ட அவரை நிம்மதியாக சாக அனுமதிக்க வேண்டும் என பிங்கி விராணி எனும் சமூக ஆரவலர் தாக்கல் செய்த பேராணை மனு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக முன் வைக்கப்பட்டது.

எப்போது ஒரு நபர் இறந்ததாக சொல்லப்படுகிறார்? மனித உறுப்புகள் மற்றும் அறுவை மருத்துவ சட்டம் 1994-ன் பிரிவு 2(d)படி இறந்த நபர் என்று ஒருவர் எப்போது அழைக்கப்படுவாராயின் வாழ்ந்து கொண்டிருக்கும் நபரது மூளைத் தண்டுவடம் மரணித்தாலோ அல்லது நுரையீரல், இதயத்தின் பணி நின்று விடுவதாலோ அவர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் மறைந்து போனதை மரணம் என்ற சொல்லால் குறிக்கின்றது மருத்துவ உலகம்.

மனிதனின் மிகவும் முக்கியமான உறுப்பு மூளை. அந்த உறுப்பை மாற்றமுடியாது. உடலின் உறுப்புகளான கை, கால், சிறுநீரகம் ஆகியவற்றை இழந்தால் மாற்றலாம். மூளையை மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் பிறிதொரு மனிதர் மூளை மாற்றப்பட்ட உடலில் வாழ்வதாக ஆகிறது. எனவே, ஒரு மனிதனின் மூளையின் இறப்பு அந்த மனிதனின் இறப்பாக ஆகி விடுகிறது.

அமெரிக்காவில் இறப்பு என்பதற்கு சீரான விளக்கச் சட்டம் 1980-ல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பாதவாறு மூளை தண்டுவட மரணம் உட்பட்ட ஒட்டு மொத்தமாக மூளையின் பணி நின்று விடும் நிலை ஏற்படுவதை மரணம் என சொல்கிறது.

மென் மரணத்தின் வகைகள் : 

  • நேரடி செயல்களின் மூலமாக மென் மரணத்தை விளைவித்தல் Active Euthanasia 
  • மறைமுக செயல்களின் மூலமாக மரணம் என மென் மரணம் Passive Euthanasia என இரு வகைப்படும்.
  • ஒருவரின் மென் மரணத்தை நேரடி செயல்களின் மூலமாக உதாரணமாக விஷ ஊசி போடுவது போன்றவற்றை பயன்படுத்தி மரணத்தை விளைவித்தல் (Active Euthanasia) எனவும்;
  • ஒருவர் உயிர்வாழ்வதற்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உபகரணங்களை அகற்றி விட்டால் அவர் உயிர் வாழ முடியாது எனும் நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள சிகிச்சை உபகரணங்களை அகற்றிவிடுவது மறைமுக மென்மரணம் (Passive Euthanasia) எனப்படும். 

கோமாவில் உள்ள நோயாளிக்கு இதய நுரையீரல் சுவாசமளிக்கும் இயந்திரங்களை அகற்றிவிடல். 

மருத்துவர் அறிவுரையின் பேரில் தற்கொலை புரிதலுக்கும் மென்மரணத்திற்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் முன்னதில் மருத்துவர் அறிவுரை மட்டும் கூறுவார் பின்னதில் தானோ, தன் ஆட்களை வைத்தோ மரணத்தை நிகழ்த்துவார்.

வெளிநாட்டு சட்டங்கள் ...

Termination of life an request and Assisted Suicide Act,2002 வேண்டுவதின் பேரில் வாழ்வை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் தற்கொலை புரிய உறுதுணை புரிதல் (சிராய்வு முறைகள்) சட்டம் 2002 நெதர்லாந்திலும்.
Death and Dignity Act ரேகான் மாநிலத்தில் மட்டும்) ஒரேகான் கௌரவத்துடன் மரணமடைதல் சட்டம் 1997 அமெரிக்காவிலும் உள்ள தொகுக்கப்பட்ட சட்டங்கள் ஆகும்.

பெல்ஜியம் போன்ற நாடுகள் இதை அனுமதிக்கின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதை அனுமதிக்கவில்லை.

நெதர்லாந்தின் வேண்டுதலின் பேரில் வாழ்வை முடிவுக்கு கொண்டு வருதல் தற்கொலை புரிய உறுதுணை புரிதல் சட்டத்தின்படி...

1.கருணைக் கொலை மற்றும் மருத்துவரின் உதவியுடன் தற்கொலை புரிதல் என்பது சிகிச்சையளிக்கும் மருத்துவர் தக்க கவனம் எடுத்துக் கொண்ட பின் செய்வது தவறல்ல. அதற்கான காரணிகள்;

1. நோயாளியின் வேண்டுதல்
2.நோயாளியின் தாங்க முடியாத துயரம் மற்றும் நம்பிக்கையின்மை
3.ஏற்புக்குரிய மாற்று வழிகள் பற்றி நோயாளிக்கு தகவல் அளிப்பது
4. மற்ற மருத்துவரின் ஆலோசனை பெறுதல்
5.நோயாளியின் வயது 12 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 16 வயதிற்கு குறைவானவர்கள் எனில் பெற்றோரின் சம்மதம் வேண்டும்
6. அந்த இறப்பு மருத்துவத்துறையில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

- ஆகியன ஆகும். நோயாளிகள் ஒத்துப் போவதை பற்றி சீராய்வு குழுவிடம் மருத்துவர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

 நெதர்லாந்தில் 1973ல் நடந்த Postama Case என்ற வழக்கில் தன்னுடைய தாயாரின் வேண்டுதலின் பேரில் மரணத்தை நிகழ்த்திய மருத்துவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. அத்தீர்ப்பில் எப்போதெல்லாம் ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக உயிர் வாழ வைக்க வேண்டியதில்லை என்பதற்காக பல நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது.

இறப்பிற்கான காரணத்தை அம்மருத்துவர் முனிசிபல் இறப்பு ஆய்வாளரிடம் புதைத்தல் அல்லது எரியூட்டுதல் சட்டத்தின் தெரிவிக்க வேண்டும். வட்டார சீராய்வு கமிட்டி அம்மரணம் சட்டப்படி நிகழ்த்தப்பட்டது தானா என்பது குறித்து திருப்திப்பட்டால் வழக்கு முடிக்கப்படும். இல்லாவிடில் அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு போகும். சட்டம் இறுதியாக நோயாளியின் விருப்பம் குறித்து தெளிவான எழுதப்பட்ட உறுதிமொழியை கோரும். நோயாளி கோமாவில் இருக்கும் போதோ அல்லது சம்மதம் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் பயன்படுத்தப்படும்.

சுவிட்சர்லாந்து...

1942ல் இயற்றப்பட்ட சுவிட்சர்லாந்து சட்டமானது, தற்கொலைக்கு உதவுவதன் நோக்கம் அவ்வாறு உதவுபவர்களின் சுய நலத்துக்காக மட்டுமே எனில் அது குற்றம் என பிரிவு 115-ல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் விச ஊசி போடப்படுவது போன்ற நேரடி செயல் கருணைக் கொலையில் குற்றம் என்றும் தெரிவிக்கிறது. ஆனால் அவ்வாறு மென்மரணத்திற்கு உள்ளாக்கப்படுபவர்கள் 
1.ஸ்விட்சர்லாந்து பிரஜையாக இருக்கக் கூடாது. 
2. மருத்துவர்கள் யாரும் சம்பந்தப்படக்கூடாது. 
அங்கே மருத்துவரல்லாத நபர்கள் மூலம் வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொள்ள உதவுவது சட்டப்படி குற்றமல்ல.

பெல்ஜியம்...

ஐரோப்பாவில் நெதர்லாந்திற்கு அடுத்தப்படியாக கருணைக் கொலையை ஏற்றுக் கொண்ட நாடு பெல்ஜியம் ஆகும். அந்நாட்டு சட்டப்படி...

1. தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கும் நோயாளிகள் சுய நினைவுடன் இருக்கும் போது கருணைக் கொலை செய்யப்படுவதற்கு வேண்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
2. அவர்கள் தாங்க முடியாத உடல் அல்லது மன ரீதியாக வலியில் அவதிப்படுபவராக இருக்க வேண்டும்.
3. நிரந்தர வலியில் அவதிப்படுபவர்கள், வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்ள அனுமதியளிக்கப்படுவார்கள் தனிமைப்படுத்தப்பட்டவர் அல்லது ஏழைகளுக்கு அதற்கான பண உதவியை அரசே செய்யும்.
4. நெதர்லாந்தைப் போல் இளம் நபர்கள் தாங்களாக கருணைக் கொலை செய்ய கோர முடியாது
5. ஒவ்வொரு விண்ணப்பமும் இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு கமிஷனால் விசாரித்தபின் அதற்கென பொறுப்பிலுள்ள மருத்துவர்கள் ஒழுங்குமுறைகளை பின்பற்றி முடிவெடுப்பார்கள்.

அமெரிக்கா... 

நேரடி கருணைக் கொலை அமெரிக்காவில் சட்ட விரோதமானது. அதே சமயத்தில் ஒரேகான் வாஷிங்டன், மோன்டானா ஆகிய மாநிலங்களில் மருத்துவர்கள் மரணத்திற்கு உதவுதல் சட்டப்படியானது தான். கருணைக் கொலையில் பிறர் மருந்தை செலுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்கொலை செய்து கொள்வதில் நோயாளி தனக்குத் தானே மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தை உபயோகிப்படுத்திக் கொள்வார். அமெரிக்காவில் மேலே சொல்லப்பட்ட மாகாணங்களில் முன்னது மட்டும் சட்ட விரோதமானதாகும்.

ஒரேகான்... 

அமெரிக்காவில் ஒரேகான் மாவட்டம் தான் முதன் முதலில் மருத்துவர் உதவியுடன் இறப்பதை அனுமதித்த மாநிலமாகும். 1997ல் கௌரவத்துடன் மரணமடைதல் சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டது. அச்சட்டப்படி மருத்துவரிடம் சாக உதவி கேட்கும் நபர்:

i. 18 வயது நிரம்பியராகவும் ஒரேகான் மாநிலத்தில் குடியிருப்பவராகவும் முடிவெடுக்கும் திறன்படைத்தவராகவும் இருக்க வேண்டும்.
    
ii. மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நபராகவும் அதிகபட்சம் 6 மாதம் வரை மட்டுமே உயிர் வாழ இயலுபவராக இருக்க வேண்டும்.
iii. ஒரு எழுதிய விண்ணப்பம் மூலமும் இருமுறை வாய்மொழி மூலமும் கோர வேண்டும். இதற்கென சட்டப்படி குறிக்கப்பட்டுள்ள படிவத்தில் அச்சட்டப்படி தகுதி வாய்ந்த சாட்சிகள் இருவர் கையொப்பமிட்டுத் தர வேண்டும். அந்த சாட்சிகள் அந்நபர் யாராலும் மிரட்டப்படவில்லை தன்னிச்சையாக அதற்கான திறனுடன் இருந்து கையொப்பமிடுவதாக சான்றளிக்க வேண்டும்.
iv. அந்நபர் அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது மருந்தை உட்கொள்வதில் கண்டறிதல் நோயின் கட்டங்களைப் பற்றி முன்கணிப்பு அபாயங்கள் நிகழ்தகவுகள் போன்றவைகளையும் இதற்கென இருக்கிற மாற்று முறைகள் மருத்துவ வசதிகள் வலியை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி தகவல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மற்றொரு மருத்துவர் நோயாளியின் முடிவெடுக்கும் திறன் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதா என கண்டறிய வேண்டும்.
v. நோயாளிக்கு தாழ்வு மனப்பான்மை மனநோய் கோளாறு இருந்தால் அவரது முடிவை மாற்றத்தக்க வகையில் அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
vi. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் நெருங்கிய உறவினர்களுக்கும் இது சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும். நோயாளி எந்நேரத்திலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளலாம்.
vii.மன நோய் கோளாறு உள்ள நபர்களை பொறுத்தவரை அவரை கவனிக்கும் மருத்துவர் அந்நபர் எடுத்த முடிவு மனநோய்க் கோளாறின் பாதிப்பால் எடுக்கப்பட்டதல்ல என்ற சான்றளிக்க வேண்டும்.
viii.இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த நபர்களுக்கு அவரது இறப்பை ஏற்படுத்தவல்ல அமைதிப்படுத்தும் மருந்து குறித்து தரப்படும். அதை அவரே தான் போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு போட்டு விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கியமான வழக்கு கோன்சாலஸ் ஏளு ஒரிகான் 2006ம் வருடம் முடிவு செய்யப்பட்டது.
    
வாஷிங்டன், மோன்டானா ஆகிய மாநிலங்களும் இதே சட்டத்தை அனுமதித்துள்ளன. மற்ற மாநிலங்கள் அனுமதிக்கவில்லை.

1999-ல் டெக்சாஸ் மாநிலத்தில் டெக்சாஸ் இயற்றப்பட்டது. அதன்படி சில சூழ்நிலைகளில் இயந்திர உதவியுடன் வீணான மருத்துவம் ஒரு நபருக்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் அந்நபர் இறப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அவருக்கு சிகிச்சை பலனளிக்காது என்னும் சூழ்நிலையில் அவருக்கு உயிர் வாழ்வதை நீட்டிக்க உதவும் மருத்துவ உபகரணங்களை அகற்றி விடலாம்.

1977-ல் கலிபோர்னியாவில் ஒருவர் சுய நினைவுடன் இருக்கும் போதே தான் சுய நினைவை இழந்து விட்டால் தனக்கு பதிலாக ஒரு நபரை நியமித்து என்ன முடிவு எடுக்கலாம் வாழ்நாளை நீட்டிக்கத்தக்க உபகரணங்களை எப்போது அகற்றலாம் என்பது குறித்து முடிவு செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கனடா...
    
கனடாவில் கனடா கிரிமினல் தண்டனை சட்டத்தின் பிரிவு 241(b)-ன்படி மருத்துவர் தற்கொலை செய்து கொள்வது சட்ட விரோதமாகும். கனடா உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சுயூ ரொட்ரிகியூஸ் எதிர் பிரிட்டிஷ் கொலம்பியா அட்டார்னி ஜெனரல். 1993 3SCR 159 என்ற வழக்கு முக்கியத்துவமான வழக்காகும்.

ரொட்ரிகியூஸ் என்ற 43 வயது கனடாவின் பிரஜையான பெண்மணிக்கு Amytrpic Lateral Scelorosis என்ற நரம்பு சம்பந்தமான இயங்கு தசைகளை பாதிக்கும் நோய் பாதித்தது. அவர் தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு எவரையேனும் உதவக் கோரி மனு செய்திருந்தார். அவருடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தது. மருத்துவர்கள் கூடிய விரைவில் அப்பெண்மணி பேசவோ, நடக்கவோ பிறர் உதவி இன்றி உடலை அசைக்கவோ இயலாது எனவும் சுவாசிக்கும் உபகரணம் இன்றி சுவாசிக்க இயலாது எனவும் அதன் விளைவாக படுத்தப் படுக்கையாகி விடுவார் எனவும் தெரிவித்தார்கள். அவருடைய வாழ்வு 2 மாதங்களிலிருந்து 16 மாதங்களுக்குள்ளாக தான் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அப்பெண்மணியின் கோரிக்கை  பெரும்பான்மை நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மறைமுக செயல்கள் மூலம் கருணைக் கொலை...

நோயாளியின் மரணத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு வேண்டுமென்றே நோயாளிக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதை நிறுத்திவிடுதல் இவ்வாறு விளக்கப்படுகிறது. உதாரணம். டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிக்கு இயந்திரம் இருந்த போதும் டயாலிசிஸ் சிகிச்சையளிக்காமல் இருந்து விடுதல். 

லண்டனில் நடைபெற்ற Airedale VHS trust Vs Bland ALL E.R.82 (H.C) என்ற வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

15.04.1989ல் லிவர்பூல் கால்பந்து கிளப்புக்கு (Foot Ball Club) அந்தோனி ப்ளான்ட் என்ற 17 வயது சிறுவன் வேடிக்கை பார்க்க சென்ற போது நடந்த பேரழிவில் சிக்கி அவன் நுரையீரல்கள் முடக்கப்பட்டு அவனுடைய மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது பாதிக்கப்பட்டது. அவனுடைய மூளையின் மேலடுக்கு Cerebral Cortex தொடர்ந்து ஆக்ஸிஜன் இல்லாததால் பாதிக்கப்பட்டு பார்க்கவோ, கேட்கவோ உணர்ச்சியறிய முடியாத நிலையில் தொடர்ந்து அசைவின்றி நீடித்து கோமா நிலைக்கு சென்றுவிட்டான்.
    
உணவு உட்கொள்ளுதல் கழிவுகளை வெளியேற்றுதல் யாவும் உபகரணங்களின் உதவியுடன் தான் அச்சிறுவனுக்கு செய்யப்பட்டது. இவ்வழக்கின் நீதிபதிகள் அச்சிறுவன் இறந்த போவதை அனுமதிக்க செய்தனர். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மெடிக்கஸ் ஆசோசியேசனின் மருத்துவ நன்னெறி கமிட்டி கீழ்கண்ட பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தியது.

1. காயம் அடைந்து 6 மாதம் வரை புனர் வாழ்வு தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அசைவின்றி நீடித்தல் குறைந்தபட்சம் 1 ஆண்டுக்கு கண்காணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையை வாபஸ் பெறாமல் தொடர்ந்திருக்க வேண்டும்.
2. இரு தனிப்பட்ட மருத்துவர்கள் கண்டறியும் சோதனை செய்து அறிக்கை தர வேண்டும்.
3. அந்த நோயாளியின் குடும்பத்தினரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பவையாகும்.

பேரன்ட்ஸ் பேட்ரியே கோட்பாடு இங்கிலாந்தில் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. ஒரு நாட்டின் குடிமகனுக்கு தான் பெற்றோராக இருந்து செயல்பட ஒருவர் அவசியப்படும்போது, அந்த இடத்தை அரசாங்கம் பூர்த்தி செய்யலாம் என்பதே இதன் பொருளாகும். உயர்நீதிமன்றத்தின் முன்னால் அப்படிப்பட்ட விண்ணப்பம் வரும் போது உயர்நீதிமன்றம் என்ன விதமான முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட விண்ணப்பம் ஒன்று உயர்நீதிமன்றத்தின் முன்னர் வருமானால் தலைமை நீதிபதி இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ஆயத்தை அமைக்க வேண்டும். அந்த ஆயம் கருணைக்கொலைக்கு ஒப்புதல் அளிக்கலாமா கூடாதா என்று தீர்மானிக்கும் முன்பு 3 புகழ்பெற்ற மருத்துவர்கள் அடங்கிய கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும். அவர்களின் ஒருவர் நரம்பியல் மருத்துவராகவும் மனநல மருத்துவர் ஒருவரும் பொது மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்கள் அடங்கிய குழுவை உயர்நீதிமன்றம் அரசுடன் கலந்து தயாரிக்க வேண்டும். அந்த மருத்துவர்களின் குழு நோயாளியையும் அவரது நோய் பற்றிய மருத்துவப் பதிவேடுகளையும் மருத்துவமனையில் பணிபுரிவோரையும் விசாரித்து உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கையளிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் அரசுக்கும் பெற்றோர், மனைவி, சகோதரன், சகோதரி ஆகியோருக்கு தாக்கல் அனுப்பி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும். இதற்கான சட்டம் இயற்றப்படும் வரை இம்முறையே கையாளப்பட வேண்டும்.

கியான் கவுர் எதிர் பஞ்சாப் மாநில அரசு 1996 (2) SCC 648 என்ற வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகைமுறை 21ல் கூறப்பட்ட வாழ்வதற்கான உரிமை Right to Life, என்பதை இறப்பதற்கான உரிமை எனப் பொருள்கொள்ள முடியாது எனத் தெரிவித்தது.

இன்றைய நிலை...

‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில் குறிப்பிடுகையில், ‘‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், கோமா நிலையில் இருப்பவர்களை விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரி இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 4 நீதிபதிகளும் நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்தாலும், அனைவரும் கருணைக்கொலை என்ற விஷயத்துக்கு அனுமதி அளித்தனர்.

தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியத்துடன் உயிர் துறக்க அனுமதிக்கலாம் என்ற விஷத்தில் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

‘‘இந்த உலகில் ஒருமனிதன் கண்ணியமாக வாழும் இருக்கும் உரிமை, அவர் உயிர்துறப்பதிலும் இருக்கிறது. தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் சிகிச்சையால் குணமடையாத நிலையில் இருப்பவர்கள், செயற்கை சுவாசத்தால், தீவிர உயிர்காக்கும் கருவியால் உயிர்வாழ்பவர்கள், கோமா நிலையில் இருபவர்கள், உடல் இயக்கம் இல்லாமல் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உயிர் துறக்க அனுமதிக்கலாம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com