பகுதி - 881

இருவர் மயலோ அமளி..
பகுதி - 881

பதச் சேதம்

சொற் பொருள்

இருவர் மயலோ அமளி விதமோ எனேன செயலோ அணுகாத

 

 

இருவர் மயலோ: வள்ளி, தேவானை ஆகிய இருவர் மீது கொண்ட காதலாலா; அமளி விதமோ: (உன் ஆலயத்தில் எழுகிற) ஆரவாரங்களாலா; எனென செயலோ: அல்லது வேறு என்னென்ன செயல்களாலலா (அறியேன்); அணுகாத: உன்னை அணுக முடியாத;

இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது

 

 

இருடி: ரிஷி, முனிவர்கள்; அயன்: பிரமன்; மால்: திருமால்; அமரர்: தேவர்கள்; அடியார்: உன்னுடைய அடியார்கள்; இடையும் ஒலி: முறையிடும் ஓசை;

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ

 

 

பரிவாய்: அன்போடு; மொழிவாரோ: உன்னிடத்திலே தெரிவிப்பார்களோ;

உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ

 

பத தூள்: திருவடியிலுள்ள தூசு; புவன கிரி: உலகிலுள்ள மலைகள்; கிருபாகரம்: திருவருளின் தன்மை;

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத

 

பவன(ம்) முதல் ஆகிய: காற்று முதலான (பவனன்: வாயு);

படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா

 

படையும் உடையாய்: சேனைகளாக உடையவனே;

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே

 

அரி: திருமால்; அயனோடு: பிரமனோடு; அயிலை: வேலை; இருள் மேல்: இருளின் வடிவமெடுத்த சூரனின் மேல்;

அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருண கிரி வாழ் பெருமாளே.

 

கொடு நோய்: (என்னைப் பீடித்த) பொல்லாத நோய்;

இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ .... நீ வள்ளி தேவானையாகிய தேவியர் மீது கொண்டிருக்கும் மையலாலா; அல்லது உன்னுடைய திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் ஆரவாரத்தாலா; அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளாலா (என்பதை அறியேன்);

அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் இசையும் ஒலிதான் இவைகேளாது... உன்னை அணுக முடியாத முனிவர்கள், பிரமன், திருமால், தேவர்கள், அடியார்கள் ஆகிய அனைவரும் முறையிடுகின்ற ஓசை உனது திருச்செவிகளில் விழாதபோது;

ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ... இங்கே தன்னந்தனியாக நின்றபடி அடியேன் அலறிக்கொண்டிருப்பதை யாரேனும் அன்போடு உன்னிடத்தில் வந்து தெரிவிப்பார்களா?

உனது பததூள் புவன கிரிதான் உனது கிருபாகரம் ஏதோ... (உன்னுடைய விஸ்வரூபத்தில்) உன்னுடைய திருப்பாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தூசு, பூமியிலுள்ள மலைகளுக்குச் சமமாக இருக்குமென்றால், உன்னுடைய திருவருளின் தன்மை எவ்வளவு பெரிதாக இருக்குமோ (அடியேன் அறியேன்);

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதலாகிய பூதப் படையும் உடையாய்... பரம குருவாக இருப்பவனே; அணுக்களிலே இயங்கும் இயக்கமாகவும் இருப்பவனே; காற்று முதலான ஐம்பூதங்களையும் சேனைகளாகக் கொண்டுள்ளவனே;

சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா... எல்லா வடிவங்களுமாக உள்ளவனே; தொன்மையான வடிவமாகவும் விளங்குகின்ற வேலா!

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை யிருள்மேல் விடுவோனே...திருமாலும் பிரமனும் உன்னிடத்தில் அடைக்கலம் புக, இருளின் வடிவத்தை எடுத்த சூரனின்மேல் உன்னுடைய வேலை வீசியவனே!

அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் பெருமாளே.... அடியேனுடைய பொல்லாத நோயை நீக்கியவனே!* திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* இது அருணகிரிநாதரைப் பீடித்திருந்த தொழுநோயைக் குறிக்கிறது; குருநாதர் தன் அனுபவம் கூறுகிறார் என்பார் உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள்.)

சுருக்க உரை

மேலான குருமூர்த்தியே! அணுக்களுக்குள்ளே அசைவை ஏற்படுத்துபவனே!  எல்லா வடிவங்களுமாய் இருப்பனே! பழைமை முதல் புதுமை வரையில் எல்லா வடிவங்களுமாக இருப்பவனே!  திருமாலும் பிரமனும் உன்னிடத்திலே அடைக்கலம் புகுந்தபோது, இருளின் வடிவத்தை எடுத்த சூரபத்மனின் மீது உன்னுடைய வேலை வீசியவனே!  அடியேனைப் பீடித்திருந்த கொடிய நோயைப் போக்கியவனே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

நீ உன்னுடைய தேவியர் இருவரின் மீதும் கொண்டுள்ள ஆசையாலோ அல்லது உன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் எழுகின் ஆரவாராத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ, உன்னை அணுக முடியாத முனிவர்களும் பிரமனும் திருமாலும் உன்னுடைய அடியார்களும் உன்னிடத்திலே முறையிட்டு அலறும் ஓசை உன்னுடைய திருச்செவிகளிலே விழாதபோது, இங்கே தனியொருவனாக அடியேன் முறையிட்டுக் கூவிக்கொண்டிருப்பதை என்மீது அன்புகொண்டு யார்தான் உன்னிடத்தில் வந்து தெரிவிக்கப்போகின்றார்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின்போது இந்த பூவுலகில் உள்ள மலைகளே உன் திருவடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசின் அளவாக இருக்கும் என்றால் உன்னுடைய திருவருளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அறியேன்.  (அடியேனால் அறியமுடியாத உன்னுடைய கிருபாசாகரத்தில் அடியேன் முழுகவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com