தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 885

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்

 

வினைக்கு இனமாகும்: வினைகளை (அதிகரிப்பதற்குத்) தொடர்புள்ள; தனத்தினர்: மார்பை உடையவர்கள்; வேள் அம்பினுக்கு: மன்மதன் கணைக்கு; எதிராகும்: இணையாகும்;

மிக பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி

 

மானம்தனில்: அவமானகரமான செயல்களில்; புகுதா: நுழைந்து, அகப்பட்டு; சமத்திடை: (கலவிப்) போரிடை

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழி தோறும் கவிழாதே

 

விசாரம்: கவலை;

கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்

 

கலை தாராய்: கல்வியை (ஞானத்தைத்) தாராய்;

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே

 

வாகம்புய: வாகு அம் புய—அழகிய தோள்களை உடையவனே;

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கெழ வானும் புகை மூள

 

பொருப்பு: மலை—கிரெளஞ்சம்; பொருக்கெழ: வற்றிப் போக;

சினத்தோடு சூரன் கனத்த தி(ண்)ணிய மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா

 

 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.

 

 

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்... துன்பங்கள் பெருகுவதற்குக் காரணமான மார்பையும் மன்மதனுடைய கணைக்கு இணையான கண்களையும் கொண்ட பெண்களின் (மீது வைத்த ஆசையால்;

மிகப் பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி... பல அவமானகரமான செயல்களில் ஈடுபட்டு; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பத்தில் மூழ்கி;

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும் கவிழாதே... பொறுக்க முடியாத கவலைப்பட்டு; பிறப்புக்கு வழி வகுக்கின்ற கருக்குழிக்குள் நான் தலைகுப்புறக் கவிழாதபடி,

கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்... நூல்களிலே தேர்ச்சியுள்ள புலவர்கள் இசைகூட்டி ஓதுகின்ற உனது திருவடிகளுடைய புகழை ஓதித் துதிக்கின்ற ஞானத்தைத் தரவேண்டும்.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப் புணர் வாகம் புய வேளே... தினைப்புனத்தில் புகுந்து, கொடிய வில்லை ஏந்திய குறக்குலத்தில் தோன்றி கொடியைப் போன்ற வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே!

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ வானும் புகை மூள... கிரெளஞ்ச பர்வதம் இரண்டு கூறாகும்படியும் கடல் வற்றும்படியும் வானத்தைப் புகை சூழும்படியும்,

சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா... கோபம் கொண்டு, சூரனுடைய பருத்த, வலிமையான மார்பு பிளக்கும்படியாகப் போரிட்ட வேலனே! 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.... திருப்புகழை ஓதும்* ஆர்வமுள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* அருணகிரிநாதருடைய வாக்கை மெய்ப்பிக்கும் வகையிலே அடியார்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியன்று திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகிறார்கள்.)

சுருக்க உரை

வள்ளி மலையிலுள்ள தினைப்புனத்துக்குச் சென்று, குறக்குலப் பெண்ணான வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே! கிரெளஞ்ச மலை இரண்டு துண்டாகும்படியும்; கடல் வற்றிப் போகும்படியும்; சூரனுடைய வலிய மார்பு பிளக்கும்படியும் போரிட்ட வேலாயுதனே!  திருப்புகழை ஓதும் ஆர்வத்தோடு அன்பர்கள் கூடியுள்ள திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

துன்பங்களுக்குக் காரணமான கொங்கைகளையும்; மன்மதனுடைய கணைக்கு நிகரான விழிகளையும் கொண்ட பெண்களின் மீது பூண்ட ஆசையால் பலவிதமான அவமானகரமான செயல்களைச் செய்து; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பங்களில் மூழ்கி; கவலை அடைந்து; பிறப்புக்குக் காரணமாக இருக்கின்ற கருக்குழிக்குள் நான் மீண்டும் மீண்டும் தலைகுப்புறக் கவிழாதபடி,

புலவர்கள் பண்ணோடு பாடியிருக்கின்ற உன்னுடைய திருவடிகளின் புகழைப் பாடுவதற்கான ஞானத்தைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT