பகுதி - 817

கருப்பற்று ஊறிபிறவாதே
பகுதி - 817

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பற்று ஊறிபிறவாதே

 

கருப்பற்று: கருவிலே பிறக்கும் ஆசை;

கனக்க பாடு உற்றுஉழலாதே

 

கனக்க: மிகவும்; பாடுற்று: துன்பப்பட்டு;

திரு பொன் பாதத்துஅனுபூதி

 

 

சிறக்க பாலித்துஅருள்வாயே

 

 

பரப்பு அற்றாருக்குஉரியோனே

 

பரப்பு அற்றாருக்கு: ஆசைப் பெருக்கம் இல்லாதவருக்கு;

பரத்த அப்பாலுக்குஅணியோனே

 

பரத்த: மேலான; அப்பாலுக்கு: (எல்லாம்) கடந்த இடத்துக்கு; அணியோனே: அருகில் உள்ளவனே;

திரு கை சேவல்கொடியோனே

 

 

செகத்தில் சோதிபெருமாளே.

 

 

கருப்பற்று ஊறிப் பிறவாதே...கர்ப்பத்திலே தோன்றவேண்டும் என்ற பற்று ஏற்பட்டு மீண்டும் பிறவாமலும்;

கனக்கப் பாடுற்று உழலாதே... அளவற்ற துன்பங்களை அடியேன் அடைந்து திரியாமலும்;

திருப்பொற் பாதத்து அநுபூதி... உன்னுடைய அழகிய திருவடிகளாகிய அநுபூதி நிலையை,

சிறக்கப் பாலித்து அருள்வாயே... அடியேன் சிறப்படையுமாறு தந்தருள வேண்டும்.

பரப்பற்றாருக்கு உரியோனே... ஆசைப் பெருக்கம் இல்லாதவர்களுக்கு உரியவனே!

பரத்து அப்பாலுக்கு அணியோனே... மேலானதாகவும்; அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள நிலைக்கு அருகில் இருப்பவனே!

திருக்கைச் சேவற் கொடியோனே... திருக்கரத்தில் சேவற்கொடியை உடையவனே!

செகத்திற் சோதிப் பெருமாளே.... உலகிலே ஜோதி ஸ்வரூபமாக விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

ஆசைப் பெருக்கற்றவர்களுக்கு உரியவனே!  மேலானதும், அனைத்தையும் கடந்ததுமான நிலையில் இருப்பவனே!  திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே!  உலகிலே ஜோதி மயமாக விளங்குகின்ற பெருமாளே!

கர்ப்பத்தில் மீண்டும் பிறக்காமலும்; மிகுந்த துன்பங்களை அடைந்து உழலாமலும் உன்னுடைய திருப்பாதங்களை அனுபவிக்கின்ற அநுபூதி நிலையை அடியேனுக்கு அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com