பகுதி - 819

கருப்பையில் சுக்கிலத்து..
பகுதி - 819

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பையில்சுக்கிலத்து உலைத்து
உற்பவித்து மறுகாதே

 

உற்பவித்து: பிறந்து; மறுகாதே: கலங்காமல்;

கபட்டு அசட்டர்க்குஇதத்த சித்ரதமிழ்க்கள்
உரையாதே

 

கபட்டு: கபடமான, வஞ்சகமான; தமிழ்க்கள்: தமிழ் பாடல்கள்;

விருப்பம் உற்றுதுதித்து எனை பற்றுஎன 
கருது நீயே

 

 

வெளிப்பட பற்றிடபடுத்த தருக்கிமகிழ்வோனே

 

 

பருப்பதத்தைதொளைத்த சத்திபடை சமர வேளே

 

பருப்பதத்தை: பர்வதத்தை, கிரெளஞ்ச மலையை; சமர வேளே: போர் நாயகனே!

பணி குலத்தை கவர்பதத்துக்கு அளித்த
மயிலோனே

 

பணிக் குலத்தை: பாம்புக் குலத்தை; கவர்ப் பதத்துக்கு: (விரல்களால்) பிரிவுபட்ட பாதத்துக்கு;

செரு புறத்துசினத்தை முற்றபரப்பும் இசையோனே

 

செருப்புறத்து: போர்க்களத்தில்; பரப்பும்: விரிக்கின்ற; இசையோனே: புகழை உடையவனே;

தினை புனத்துகுறத்தியை கைபிடித்த பெருமாளே.

 

 

கருப்பையிற் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே... கருப்பையில் இருக்கின்ற சுக்கிலத்தில் (பெண் முட்டையில்) அலைக்கப்பட்டு மறுபடியும் பிறந்து கலங்காமலும்;

கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ரத் தமிழ்க்கள் உரையாதே... வஞ்சனை நிறைந்த அசடர்களின் மனத்துக்கு இதமாக அழகிய தமிழ்ப்பாடல்களைப் புனையாமலும்;  

விருப்பமுற்றுத் துதித்து எனைப்பற்று எனக்கருதுநீயே... ‘விருப்பத்தோடு துதித்து என்னைப் பற்றிக்கொள்வாயாக’ என்று நீயே திருச்சித்தம் கொண்டருள வேண்டும்.

வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி மகிழ்வோனே... (அவ்வாறு பற்றிக் கொள்கையில் என் எதிரே) வெளிப்பட்டு என்னை ஆதரித்து ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைபவனே!

பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் சமரவேளே... கிரெளஞ்ச மலையைத் துளைத்த சக்தியாயுதத்தை ஏந்தியிருக்கின்ற போர்த் தலைவனே!

பணிக்குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த மயிலோனே... பாம்புக் கூட்டங்களைத் தன் விரலிடுககில் கவ்வுகின்ற மயிலை வாகனமாக உடையவனே!

செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் இசையோனே... போர்க்களத்திலே சினத்தை முற்றிலும் பரப்பிய புகழை உடையவனே!

தினைப்புனத்துக் குறத்தியைக்கைப் பிடித்த பெருமாளே.... தினைப்புனத்திலிருந்த குற வள்ளியைக் கைப்பிடித்து மணந்துகொண்ட பெருமாளே!

சுருக்க உரை

‘என்னை விருப்பமுற்றுத் துதி’ என்று திருச்சித்தத்தால் கருதி (உன் அருளாலே நான் உன்னைப்) பற்றிக்கொள்ளவும் என் முன்னே வெளிப்பட்டு என்னை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைபவனே! கிரெளஞ்ச மலையைத் துளைத்த வேலாயுதத்தை ஏந்தியிருப்பவனே! பாம்புக்கூட்டங்களைத் தன் விரலிடுக்கிலே கவ்வியிருக்கின்ற மயிலை வாகனமாக உடையவனே!  உன்னுடைய சினத்தைப் போர்க்களமெங்கும் பரப்பிய புகழை உடையவனே!  தினைப்புனத்திலிருந்த குறத்தியான வள்ளியைக் கரம்பற்றி மணந்த பெருமாளே!

கருப்பையிலே உள்ள பெண் முட்டையால் அலைப்புண்டு பிறந்து கலங்காமலும்; வஞ்சகர்களான மூடர்களின் மனம் மகிழுமாறு அவர்களின்மேல் அழகிய தமிழ்ப்பாடல்களைப் புனையாமலும் ‘விருப்பத்தோடு என்னைத் துதி’ என்று நீயே கருதி, என்னை ஆட்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com