பகுதி - 823

சமய பத்தி விருதா..
பகுதி - 823

பதச் சேதம்

சொற் பொருள்

சமய பத்தி விருதா தனை நினையாதே

 

விருதாதனை: வீணான(து என்று); நினையாதே: கருதாமல்;

சரண பத்ம சிவ அர்ச்சனை தனை நாடி

 

 

அமைய சற்குரு சாத்திர மொழி நூலால்

 

அமைய: மனம் பொருந்த;

அருள் எனக்கு இனி மேல் துணை தருவாயே

 

 

உமை முலை தரு பால் கொடு அருள் கூறி

 

அருள்கூறி: திருவருளைப் (தேவாரமாகப்) பாடி;

உரிய மெய் தவமாக்கி நல் உபதேச

 

 

தமிழ் தனை கரை காட்டிய திறலோனே

 

 

சமணரை கழு ஏற்றிய பெருமாளே.

 

 

சமய பத்தி விருதாத்தனை நினையாதே... மதங்களின் (முறைப்படி) பக்திசெய்வது பயனற்றது என்று கருதாமல்,

சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய... உன் திருவடியாகிய தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்புகின்ற நான், மனம்பொருந்தி நிலைத்திருக்க,

சற்குரு சாத்திர மொழிநூலால்... சத்குருவின் மூலமாகவும், சாஸ்திரங்களைச் சொல்கின்ற நூல்களின் மூலமாகவும்,

அருளெனக்கினிமேல் துணைதருவாயே... இனிமேல் உன் அருளை எனக்குத் துணையாகத் தரவேண்டும்.

உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி... உமையம்மையின் முலைப்பாலைப் பருகிய காரணத்தால், சிவபெருமானுடைய அருளை(த் தேவாரம் மூலமாகப்) பாடுவதையே,

உரிய மெய்த்தவ மாக்கி... தன்னுடைய* மெய்த்தவம் என்று கொண்டு,

(‘தன்னுடைய’ என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கிறது.  அருணகிரி நாதர், திருஞான சம்பந்தராக வந்தது முருகனே என்ற கொள்கையை உடையவர்.)

நல் உபதேசத் தமிழ்தனை  கரை காட்டிய திறலோனே... நல்ல உபதேசங்களைக் கொண்ட (தேவாரமாகிய) தமிழுக்குக் கரைகண்ட வல்லவனே!

சமணரைக்கழுவேற்றிய பெருமாளே.... (வாதில் வென்ற) சமணர்களைக் கழுவேற்றிய பெருமாளே!

சுருக்க உரை

உமையம்மையின் திருமுலைப் பாலைப் பருகி, அதன் காரணத்தால் சிவபெருமானுடைய திருவருளைத் தன் தேவாரப் பாடல்களால் பாடுவதையே தன்னுடைய மெய்த்தவமாகக் கொண்டு, நல்ல உபதேச மொழிகளைக் கொண்ட தேவாரத்தில் கரைகண்டவராக விளங்கிய ஞானசம்பந்தராக வந்தவனே! சமணர்களை வாதில் வென்று கழுவேற்றிய பெருமாளே!

சமயக் கொள்கைகளை வீணானவை என்று கருதாமல், உனது திருவடித் தாமரைகளில் சிவார்ச்சனை செய்ய விரும்புகின்ற என் மனம் எப்போதும் (இந்நிலையிலேயே) பொருந்தியிருக்குமாறு, சத்குருவின் மூலமாகவும் சாத்திரங்களை எடுத்தோதுகின்ற நூல்களின் மூலமாகவும் நினது திருவருளையே எனக்குத் துணையாகத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com