பகுதி - 919

நீரிழிவு குட்டம் ஈளை..
பகுதி - 919

பதச் சேதம்

சொற் பொருள்

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்

 

நீரிழிவு: சர்க்கரை நோய்; குட்டம்: குஷ்டம்; ஈளை: சளி; வாதம்: வாயு; வெதுப்பு: சுரம்;

நேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு  நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ

 

நான்முகன் எடுத்த வீடு: பிரமன் படைத்த உடல்;

பாரிய நவ துவார நாறும் மு(ம்)மலத்தில் ஆறு  பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்

 

பாரிய: பருத்த; முமலத்தில்: மும்மலத்தில்—(ஆணவம், கன்மம் மாயை); ஆறு: வழியாக; பாய்பிணி: பாய்கின்ற நோய்கள்; பாவை: பொம்மை;

பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ

 

பாறொடு: பாறு—பேய்களோடு; கழுக்கள்: கழுகுகள்; கூகை: ஆந்தை;

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத  நாயகரிடத்து காமி மகமாயி

 

நாரணி: நாராயணி; நாரி: மங்கை, தேவி; ஆறு சமயத்தி: சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய ஆறு சமயங்களுக்கும் உரியவள்; நாயகரிடத்து காமி: (நாயகர் இடத்து காமி): நாயகரின் இடது பாகத்தை விரும்புபவள்;

நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத  நாயகி உமைச்சி நீலி திரிசூலி

 

 

வார் அணி   முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே

 

கலைச்சி: கலைகளுக்குத் தலைவி; நாக: மலையின் வாணுதல்: ஒளிகொண்ட நெற்றியை உடையவள் (மலைமகள்);

மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.

 

வாகுள: அழகுள்ள;

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்... நீரிழிவு, குஷ்டம், கோழை, வாயு, பித்தம், குளிர்சுரம், ஜுரம் முதலாக மற்ற நோய்கள்,

நேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ... நேர்ந்திருப்பதுவாய்; புழுக்கள் சேருவதற்கு இடமானதாய்; பிரமனால் படைக்கப்பட்ட இந்த உடலாகிய வீட்டில் எல்லா இடத்திலும் பரவியுள்ள ரத்தம், மூளை, தோல், சீழ் எல்லாமும் சேர்ந்ததுவாய்;

பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை...பருத்ததும் ஒன்பது துவாரங்களை உடையதும் நாற்றமெடுப்பதும்; ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மலங்களின் காரணமாக ஏற்படுகின்ற பிணிகளால் நிறைந்ததுமான பொம்மை;

நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ... நரியும் நாயும் பேய்களும் கழுகுகளும் ஆந்தைகளும் தின்பதற்கான பாழும் உடலை எடுத்து நான் வீணாகத் திரிந்துகொண்டிருப்பேனோ? (வீணே திரியாதபடி தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி மகமாயி... நாராயணியும்; தர்மங்களைப் பெருக்குகின்ற தேவியும்; ஆறு சமயங்களுக்கும் உரியவளும்; பூதகணங்களின் தலைவரான சிவபிரானுடைய இடதுபாகத்தை விரும்பி வீற்றிருப்பவளும்; மகமாயியும்;

நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி நீலி திரிசூலி... உலகமாகிய திருவிளையாடலை நடத்துபவளும்; நீல வண்ணத்தை உடையவளும்; வேதநாயகியும்; உமையும் திரிசூலியும்;

வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே... கச்சணிந்த மார்பகத்தை உடையவளும்; பூரணமான ஞானத்தைத் தருபவளும்; கலைகளின் தலைவியும்; மலைமகளுமான தேவியார் ஈன்ற வீரா! மயில் வாகனனே!

மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.... மாடங்களும் மதில்களும் முத்தால் ஆன மேடைகளும் கோபுரங்களும்; நறுமணம் கமழும் சோலைகளும் உள்ள அழகான (புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள) குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

நாராயணியும்; அறங்களை வளர்க்கும் நாயகியும்; ஆறு சமயங்களுக்கும் உரியவளும்; பூதகணங்களின் தலைவரான சிவபெருமானின் இடதுபாகத்தை விரும்புபவளும்; மகமாயியும்; உலகமாகிய திருவிளையாடலை நடத்துபவளும்; நீல நிறத்தவளும்; திரிசூலத்தை ஏந்தியவளும்; கச்சணிந்த மார்பகங்களை உடையவளும்; பூரண ஞானத்தைத் தருபவளும்; கலைகளுக்குத் தலைவியும்; ஒளிவிடும் நெற்றியை உடையவளுமான உமையம்மை பெற்ற வீர மயில் வாகனனே!  மாடங்களும் மதில்களும் முத்து பதித்த மேடைகளும் கோபுரங்களும் நறுமணம் கமழ்கின்ற சோலைகளும் நிறைந்திருக்கின்றதும் அழகு நிறைந்ததும் (புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளதுமான) குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே!

நீரிழிவு, குஷ்டம், கோழை, வாயு, பித்தம், மூலம், குளிர்சுரம், சுரம் முதலான பல நோய்களால் பீடிக்கப்பட்டதும்; புழுக்களுக்கு இருப்பிடமானதும்; பிரமனால் படைக்கப்பட்டதுமான இந்த உடலெங்கும் பரவியிருக்கின்ற ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் என்றும்; பருத்துள்ள ஒன்பது துவாரங்களைக் கொண்டு நாற்றம் எடுப்பதும்; மும்மலங்களால் ஏற்படுகின்ற பிணிகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ள பொம்மையான இந்த உடலைச் சுமந்து வீணே திரிவேனோ! (அவ்வாறு வீணே கழியாமல் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com