தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 921

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை  அஞ்சுபூதம்

 

அவகுண: குணக்கேடான; விரகன்: வல்லவன்; மசடன்: குணம்கெட்ட; அகதி: கதியற்றவன்; மறவன்: மலை வேடன்; ஆதாளி வாயன்: வீம்பு பேசுபவன்;

அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத

 

அஞ்சுபூதம் அடைசிய: ஐந்து பூதங்களால் நிரப்பப்பட்ட; சவடனை: பயனற்றவனை; மோடாதி மோடன்: மூடருக்குள் மூடன்; அழிகரு: அழிந்துபோன கருவின்; அவிசலை: அவிந்து போனவனை; ஆறான: ஆறு வகையான (சுவைகளைக் கொண்ட); ஊணனை: உணவை அருந்துபவனை;

கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும்

 

கவடனை: கபடனை, வஞ்சகனை; விகடனை: உன்மத்தம் கொண்டவனை; நானா: பலவிதமான; கலியனை: கலியால் பீடிக்கப்பட்டவனை; அலியனை: ஆண்மையற்றவனை; ஆதேச வாழ்வனை: நிலையற்ற வாழ்வை உடையவனை; 

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய கதி இலி தனை நாயேனை ஆளுவது எந்தநாளோ

 

களியன்: குடிகாரன்; கசனி: பதர்; அசனியை: இடிபோன்ற பேச்சை உடையவனை; கதியிலி: கதியற்றவன்;

மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும் மநு நெறி உடன் வளர் சோழ நாடர் கோனுடன் உம்பர் சேரும்

 

மவுலியில்: மகுடத்தில்; பாதாள லோகனும்: ஆதிசேடனும்; மரகத முழுகிய: உடலெங்கும் பச்சை நிறமுள்ள; காகோத ராஜன்: சர்ப்ப ராஜனாகிய பதஞ்சலி (காகோதரன்: பாம்பு);

மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான்  நாடர் கோ என மலை மகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும்

 

மகபதி: இந்திரன்; புலியூர்: சிதம்பரம்; மடமயில்: சிவகாம சுந்தரி; மன்றுள்: அம்பலத்துள்;

சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோந ம திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும்

 

 

திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே.

 

திரு தரு: வள்ளி தருகின்ற; சுர அதிபர்: தேவர் தலைவர்;

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை...துர்க்குணமும் தந்திரமும் நிறைந்தவனும்; வேதாளமே வடிவெடுத்ததைப் போன்ற உருவத்தைக்கொண்டவனும்; மூடனும்; குணக்கேடனும்; ஆசாரக் குறைவுள்ளவனும்; கதியற்றவனும்; வீம்பு பேசுபவனும்;

அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத... ஐம்பூதங்களால் அடைக்கப்பட்ட உடலைக்கொண்ட பயனற்றவனும்; மூடர்களுக்கெல்லாம் மூடனானவனும்; அழிந்து போகின்ற கருவிலிருந்து தோன்றிய வீணனும்; அழுகியும் அவிந்தும் போன பண்டமானவனும்; அறுசுவை உணவை விரும்பி அருந்துபவனும்; அன்பே அற்றவனும்;

கவடனை  விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங் களியனை... வஞ்சகனும்; உன்மத்தம் கொண்டவனும்; பலவகையான விகாரங்களைக் கொண்டவனும்; கோபம் கொண்டவனும்; தரித்திரத்தால் சூழப்பட்டவனும் கலியால் பீடிக்கப்பட்டவனும்; ஆண்மையற்றவனும்; நிலையற்ற வாழ்வை உடையவனும்; வீணாய் விழுகின்ற குடிகாரனும்;

அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மாபாதனாகிய கதியிலி தனை அடி நாயேனைஆளுவது எந்தநாளோ...நல்ல அறிவுரைகளைப் போற்றாத மானிடப் பதரானவனும்; இடியைப் போல பேசுபவனும்; பெரும் பாதகனும்; கதியற்றவனுமான நாயேனை நீ என்று ஆண்டுகொள்ளப் போகிறாய்? (உடனே ஆண்டருள வேண்டும்.)

மவுலியில் அழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன்...அழகிய மணிமுடிகளைக் கொண்டவனும் பாதளலோகத்தவனுமாகிய ஆதிசேடனும்; உடலெங்கும் பச்சை நிறத்தைக் கொண்ட பாம்பரசனான பதஞ்சலியும்; மனுநீதி தவறாத சோழநாட்டரசன் (அநபாயனும்);

உம்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர மன்றுளாடும்...... தேவர்கள் புடைசூழ்ந்திருக்கும் இந்திரனும் புகழ்வதான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கின்ற தலைவரான நடராஜரும் அவரருகிலுள்ள இளமயிலான சிவகாமசுந்தரியும் மகிழுமாறு தேவர்களுடைய தலைவனாக விளங்குபவனே! மலைமகள் ஈன்றெடுத்த செல்வமே! மனத்துக்கு இனியவனே! பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற,

சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினும் இசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேரும்... சிவசிவ ஹரஹர தேவா* நமோநம! நேரெதிரில் காட்சிதருகின்ற மேலான கதியாக விளங்குபவனே நமோநம! எல்லாத் திசைகளுக்கும் இசைக்கும் செல்வமாக விளங்குபவனே நமோ நம!  இனிய சொற்களை உடைய,

(* சிவனே முருகன், முருகனே சிவன் என்பது கருத்து.)

திருதரு கலவி மணாளா நமோநம திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபா தம்பிரானே.... வள்ளியம்மையின் மணாளனே நமோநம!  திரிபுரங்களை எரித்தவனே* நமோநம!  ஜெயஜெய ஹரஹர தேவா! தேவர் தலைவனுடைய தம்பிரானே!

(* சிவனே முருகன், முருகனே சிவன் என்பது கருத்து.)

சுருக்க உரை

அழகிய மணிமுடிகளை உடைய ஆதிசேடனும் உடலெல்லாம் பச்சை நிறமாக விளங்கும் சர்ப்பராஜனான பதஞ்சலியும்; தேவேந்திரனும்; சோழநாட்டரசனும்; நடராசப் பெருமாளும் சிவகாமசுந்தரியும் மகிழும் வண்ணமாக தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே!  மலைமகள் ஈன்ற செல்வமே! அம்பலத்திலே ஆடுகின்ற சிவசிவ ஹரஹர தேவா போற்றி போற்றி! கண்ணெதிரில் காட்சிதரும் நற்கதியே போற்றி போற்றி! திசைகளுக்கும் இசைக்கும் செல்வமாக விளங்குபவனே போற்றி போற்றி! இனிய சொற்களை உடைய வள்ளி மணாளனே போற்றி போற்றி! திரிபுரங்களை எரித்தவனே போற்றி போற்றி! ஜெயஜெய ஹரஹர தேவா!  தேவர் தலைவனுடைய தம்பிரானே!

அடியேன் துர்க்குணம் கொண்டவன்; தந்திரசாலி; வேதாளம் ஒரு உருவத்தை எடுத்ததைப் போன்ற வடிவத்தை உடையவன்; முழு மூடன்; குணக்கேடன்; ஆசாரமற்றவன்; கதியற்றவன்; மலைவேடனை ஒத்தவன்; வீம்பு பேசுபவன்; பஞ்சபூதச் சேர்க்கையால் உருவான பயனற்றவன்; மூடருள் மூடன்; அழிவடையும் கருவிலிருந்து தோன்றிய வீணருள் வீணன்; அழுகியும் அவிந்தும் போன பண்டத்தை ஒத்தவன்; அறுசுவை உண்டியை விரும்புபவன்; வஞ்சகன்; உன்மத்தன்; பலவிதமான விகாரங்களைக் கொண்டவன்; கோபம் கொண்டவன்; தரித்திரன்; ஆண்மையற்றவன்; நிலைமாறுபட்ட வாழ்வை உடையவன்; குடியன்; அறிவுரைகளைப் போற்றாத மாநுடப் பதர்; இடிபோன்ற குரலை உடையவன்; பாதகன்; கதிகெட்டவன். இப்படிப்பட்ட கடையனும் நாயனுமாகிய என்னை நீ என்று ஆண்டுகொள்ளப் போகிறாய்? (உடனே ஆண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT