பகுதி - 915

ஆடல் மதன் அம்பின்....
பகுதி - 915

 

பதச் சேதம்

சொற் பொருள்

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி

 

ஆடல்: போருக்கு எழும்; ஆல விழி: விஷம்போன்ற விழி; பிறங்கு: விளங்கும்; ஆரம்: முத்து மாலை; அலம்பு: அசைசின்ற;

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே

 

ஆதி குரு: ஆதியானவரான சிவபெருமானுடைய குருவான முருகன்;

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு என்

 

 

வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே

 

வேடை: வேட்கை, ஆசை; துன்றிய: நெருங்கிய, பொருந்திய;

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண்

 

உரம்: வலிமை; ஒளிர்: பெருமைவாய்ந்த; மாமுனி: விசுவாமித்திரர்; மகம்: வேள்வி; திண்சிலை: வலிமையான வில்; முறியா: முறித்து;

ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே

 

மகுடம் கடந்து: பட்டாபிஷேகத்தைத் துறந்து; ஒரு தாயர்: ஒப்பற்ற தா(யான கைகேயி);

சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும்

 

வாடை: வாடைக் காற்று;

சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே.

 

மயில!: மயில் வாகனனே!; மஞ்சு துஞ்சிய: மேகம் தங்கிய;

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி...போருக்கு எழுகின்ற மன்மதன் எய்யும் அம்பைப் போன்றதும்; விஷம் நிறைந்ததுமான (பெண்களுடைய) கண்ணில் தோன்றும் பொய் அன்பின்மேலேயும்; விளங்கிப் பிரகாசிப்பதும் முத்துமாலை அசைவதுமான மார்பின் மீதும் ஏற்பட்ட மையலால்;

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே.... முதல்வனான சிவனுக்கும் குருவான உன்னுடைய திருவடிகளை அன்போடு வணங்காது, அதனாலே மனம் நைந்து, உடல் நொந்து அழிந்து போகாதபடி,

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு....வேடர்களைப்போல நிற்கின்ற ஐம்புலன்களின் செயல்களும்; (புத்தி, மனம், சித்தம், அகங்காரம் என்ற) நான்கு அந்தக்கரணங்களுடைய செயல்களும் என்னோடு மாறுபாடு கொண்டு என்னைத் தாக்காதபடி (நான் உன்னை) உணர்ந்து உன் அருளைப் பெறும்படியாகவும்;

என்வேடை கெட வந்து சிந்தனைமாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே...என்னுடைய ஆசைகள் அழியும்படியாகவும்; நீ என் எண்ணத்தில் கலப்பதனால் எனக்குள்ள மன மாயைகள் அறும்படியாகவும் வெற்றிகொண்டு; நெருங்கிய வேதங்களின் முடிவாக விளங்குகின்ற பரம்பொருளை (அடியேனுக்கு) உபதேசித்தருள வேண்டும்.

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா... தாடகையின் வலிமையை அழித்தும்; பெருமைபெற்ற முனிவரான விசுவாமித்திரருடைய வேள்வியை முடித்துக்கொடுத்தும்; தாழ்வின்றி வலிய சிவ தனுசை முறித்தும்;

ஒண் ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே... ஒளிபடைத்த ஜானகியை மணந்து ஒன்று கலந்ததற்குப் பிறகு; தன் மகுடத்தைத் துறந்து ஒப்பற்ற கைகேயியின் சொல்லைப் போற்றிச் சிறந்த ராமனுடைய மருகனே!

சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் சீர் மயில...ஆதிசேடனுடைய முடிகள் கலங்கும்படியும்; கடுமையான காற்று எங்கும் அடர்ந்து வீசும்படியும்; தேவர்கள் மகிழ்ந்து பொங்கிடும்படியும் நடனம் புரிகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே!

மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே.... மேகங்கள் படிந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ளதும் சேல்வம் நிறைந்ததுமான ஸ்ரீபுருட மங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தாடகையின் வலிமையை அழித்து; விஸ்வாமித்திரருடைய வேள்வியை முடித்துக் கொடுத்து; ஜனகருடைய வில்லை முறித்து; சானகியை மணந்து; கைகேயியின் சொற்படித் தன் மகுடத்தைத் துறந்தவரான இராமருடைய மருகனே!  ஆதிசேடனுடைய முடிகள் கலங்கும்படியும்; காற்று எங்கும் வீசும்படியும்; தேவர்கள் மகிழும்படியும் நடனம் செய்கின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே! மேகங்கள் படிந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்திருக்கும் ஸ்ரீபுருஷ மங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கின்ற பெருமாளே!

மன்மதனுடைய மலர்கணைகளையும் விஷத்தையும் போன்ற கண்களின் மீதும்; முத்துமாலை புரள்கின்ற மார்பின் மீதும் மையலுற்று; ஆதியாகிய சிவனுக்குக் குருவாக விளங்குகின்ற உன்னைத் துதிக்காமல் மனச்சோர்வடைந்து வருந்தி; வேடர்களைப் போலிருக்கின்ற ஐம்புலன்கள், நான்கு அந்தக் கரணங்கள் ஆகியனவற்றின் செயல்களால் நான் தாக்கப்படாமல் உன்னுடைய திருவருளைப் பெறவேண்டும்.  என் ஆசைகள் எல்லாம் அழிந்து, மாயாசக்திகள் அடங்கி, என் மயக்கம் கெட்டு, வஞ்சனை, பொய் எல்லாவற்றையும் வென்று, வேதங்கள் முடிவாகக் காட்டுகின்ற பரம்பொருளை அடைய உதவவேண்டும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com