பகுதி - 917

ஆனாத ஞான புத்தியை..
பகுதி - 917

பதச் சேதம்

சொற் பொருள்

ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும் ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே

 

ஆனாத: மாறாத, கெடாத; ஆதேச வாழ்வினில்: நிலைபெறாத வாழ்வு; ப்ரமித்து: பிரமித்து, மயங்கி;

ஆசா பயோதியை கடக்க விட்டதும் வாசா மகோசரத்து இருத்து வித்ததும் ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும்

 

ஆசா: ஆசையாகிய; பயோதி: பயோததி—பாற்கடல், கடல்; வாசாமகோசரத்து: வாக்குக்கு எட்டாத நிலையில்; ஆபாதனேன்: கீழ்ப்பட்டவனான நான்; ப்ரசித்தி பெற்று: கீர்த்தியைப் பெற்று;

யான் ஆக நாம(ம்) அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எத்திசை புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி

 

எத்திசைப் புறத்தினும்: எல்லாத் திசைகளிலும்: ஏடு ஏவு: சீட்டை அனுப்புகிற; ராஜதத்தினை: பெருமையை, பெருமிதத்தை; இடராழி: துன்பக் கடல்;

ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே

 

ஏறாத: கரையேற முடியாத; மாமலத்ரய: ஆணவம், கன்மம், மாயை எனப்படும மூன்று மலங்கள்; குணத்ரய: சத்வம், ராஜசம், தாமசம் எனப்படும் மூன்று குணங்கள்; ஏமமாய்: காவலாய், பாதுகாப்பாய்; புற்புதம்: நீர்க்குமிழி;

மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர்

 

மாநாகம்: பெரிய பாம்பு—வாசுகி; வலுப்புற: வலுவாக; துவக்கி: கட்டி; பூதர(ம்): மலை; தனு: வில்; மாலாய வாளி: திருமாலாகிய அம்பு;

மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே முதல் சிரித்த வித்தகர் வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும்

 

புரத்ரயத்தவர்: முப்புரத்து அசுரர்கள்; தூளாகவே: பொடியாகவே; முதல்: முன்பு; வலாரி: வலன் என்ற அரக்கனைக் கொன்றவன்—இந்திரன்; வலாரி பெற்றெடுத்த: தேவானை; கற்பக வனம்: கற்பகச் சோலை;

தே(ம்) நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி

 

தேநாயகா: தேவானை கேள்வனே; துணித்து: வெட்டி; அ-வரை: அந்த வரை (மலை, கிரெளஞ்சம்);

சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.

 

சோரி: குருதி; அளக்கர்: கடல்; நிசாசரக் குலத்தை: அரக்கர் குலத்தை; சீராவினால்: குறுவாளால்;

ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும் ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே... என்றும் கெடாததாகிய ஞானத்தைக் கொடுத்ததையும்; ஆராய்ந்து அறியத்தக்க நூல்களை (ஆராய்கின்ற) கருத்தைத் தந்ததையும்; ஒரு தன்மையில் நிலைத்திருக்காததும் மயக்கம் உள்ளதுமான இந்த வாழ்வினில் பிரமிப்பு அடைந்து தளர்ச்சியடைந்து உயிர் போகாமல்,

ஆசா பயோதியைக் கடக்க விட்டதும் வாசா மகோசரத்து இருத்து வித்ததும் ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும் யான் ஆக நாம(ம்)... ஆசையாகிய கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் கொடுத்ததையும்; வாக்குக்கு எட்டாத நிலையில் நான் நிற்கும்படி அருளியதையும்; கீழ்ப்பட்டவனான நான் பெரும் புகழைப் பெற்று, ஏழு உலகங்களில் உள்ளோர் எல்லோரும் நானே என்னும்படியான (அத்துவித நிலையைப் பெற்றுப் புகழ்கொண்டதையும்;

அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும்... மிகவும் அற்புதமான திருப்புகழ்ப் பாக்களைத் தேனொழுகப் பாடி; எந்தத் திக்கிலும் நான் அனுப்புகிற சீட்டு மரியாதையுடன் போற்றப்படுகின்ற மேன்மையை எனக்குத் தந்ததையும்;

இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே...துன்பக் கடலிலிருந்து கரையேற முடியாமல் செய்யும் (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும்; (சத்துவம், இராஜசம்; தாமசம் என்னும்) முக்குணங்களும்; பலவிதமான கலக்கங்களும்* நிறைந்ததும்; நீர்க்குமிழியைப் போல நிலையற்றதுமான பிறவித் துன்பம் நீங்கும்படிச் செய்து எனக்குக் காவலாய் நின்று அனுக்கிரகித்ததையும் என்றும் மறவேன்.

(* காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியம்; அகந்தை, அசூயை என்னும் எட்டையும் குறிக்கிறது.)

மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து...வாசுகியாகிய பாம்பை வலுவான நாணாகக் கட்டி; ஒப்பற்ற மேரு மலையை வில்லாகப் பிடித்து; திருமாலை பாணமாகத் தொடுத்து;

அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே முதல் சிரித்த வித்தகர் வாழ்வே... (திரிபுரங்களில் இருந்த) அரக்கர்களில் மூவர் மட்டும் பிழைக்கும்படியாகவும்*; பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்த மற்ற அரக்கர்கள் பொடிபட்டு வீழும்படியாகவும் முன்பு முறுவல் பூத்து எரித்த வித்தகரான சிவபெருமான் பெற்ற செல்வமே!

(* திரிபுரங்களை அழிக்கும்போது சிவனை வழிபட்டு வந்த மூன்று அரக்கர்கள் மட்டும் மாளாமல் பிழைத்தார்கள்; ஏனையோர் அழிந்தார்கள்.  பிழைத்த அரக்கர்களில் இருவர் துவாரபாலர்களாக ஆனார்கள்; ஒருவருக்கு முழவை முழக்கும் பேறு கிடைத்தது.)

வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் தே(ம்) நாயகா... இந்திரனுடைய மகளாக வளர்ந்தவளும்; கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத்தில் வாழ்பவளுமான தேவானையுன் கேள்வனே!

எனத் துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரமத் திருக் கழல் சேராத சூரனைத் துணித்து அடக்கி... என்றெல்லாம் துதித்த உத்தமமான தேவர்கள் வாழும்டிபயாக; வல்லமை நிறைந்த உனது திருவடிகளை நினையாத சூரபத்மனை வெட்டி வீழ்த்தி;

அ-வரை மோதி சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.... அந்தக் கிரெளஞ்ச பர்வதத்தைத் தாக்கி; சேற்றைப் போன்ற ரத்தம் பாய்கின்ற காரணத்தால் கடலும் மேடாகிப் போக; அரக்கர் குலத்தை இப்படியும் அப்படியுமாக ‘சீரா’ என்னும் குறுவாளால் அறுத்து அறுத்து வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

‘மகாமேருவை வில்லாக எடுத்து; பெரியதான வாசுகிப் பாம்பை நாணாக இழுத்துக்கட்டி; திருமாலாகிய பாணத்தைத் தொடுத்து; திரிபுரங்களில் இருந்த அரக்கர்களில் மூவர் பிழைக்க, மற்றோர் இறக்கும்படியாகப் புன்முறுவல் பூத்த வித்தகரான சிவபிரானுடைய செல்வனே!  இந்திரன் வளர்த்ததவளும்; கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத்தைச் சேர்ந்தவளுமான தேவானையின் நாயகனே!’ —என்றெல்லாம் போற்றிய தேவர்கள் வாழும்படியாக, உன்னுடைய திருவடியை நினைக்காத சூரபத்மனை வெட்டி வீழ்த்தி; கிரெளஞ்ச மலையைத் தூளடித்து; ரத்தம் சேறுபோலப் பெருகியதால் கடல் மேடிட்டுத் திடலாகச் செய்து; பகைத்து நின்ற அரக்கர்களை ‘சீரா’ எனப்படும் குறுவாளால் அறுத்துத் துண்டாடிய பெருமாளே!

அடியேனுக்கு நீ,

அறிவைக் கொடுக்கும் நூல்களை ஆராய்ந்து அறியும்படியான புத்தியைக் கொடுத்ததையும்; நீர்க்குமிழியைப் போன்ற நிலையற்ற இந்த வாழ்வில் தளர்ச்சியுறு அழிந்துபோகாதபடி, ஆசையாகிய கடலைக் கடப்பதற்கான ஆற்றலைத் தந்ததையும்; வாக்குக்கு எட்டாத நிலையில் என்னை இருக்கச் செய்ததையும்; கீழ்மையுள்ளவனான அடியேன் மிகவும் கீர்த்திபெற்று ஏழு உலகமும் நானே என்னும்படியான அத்துவித நிலையில் இருக்கச் செய்ததையும்; அற்புதமான திருப்புகழ்ப் பாக்களைத் தேனொழுகப் பாடி; நான் அனுப்புகின்ற சீட்டு எல்லாத் திசைகளிலும் அன்புடனும் மரியாதையுடனும் போற்றப்படும் பெருமிதத்தைப் பெறச் செய்ததையும்; துன்பக் கடலிலிருந்து கரையேறமுடியாமல் செய்கின்ற ஆணவ, கன்ம, மாயா மலங்களையும் முக்குணங்களையும் பலவிதமான விகாரங்களையும் கொண்டுள்ளதும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றதுமான பிறவியை ஒழித்து அடியேனுக்கு அனுக்கிரகித்ததையும் எப்போதும் மறக்க மாட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com