காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பது சரியா? 

உத்தரவு சரியே
காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சரியே. பணி நேரத்தில் பெரும்பாலான காவலர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் அதிக நேரம் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்கி டாக்கியில் பேசுவது மட்டுமே பணி சார்ந்ததாக உள்ளது. இந்த உத்தரவினால் போக்குவரத்து மற்றும் காவல் பாதுகாப்புப் பணிகள் மேம்படும். தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்ற நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

விபத்துக்கு வித்து
இன்றைக்கு செல்லிடப்பேசியே விபத்துக்கு வித்து. காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது தங்கள் முழுக் கவனத்தையும் பணியிலேயே ஒருமுகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு செல்லிடப்பேசியில் வரும் செய்திகள், கவலையையும் அதிர்ச்சியையும் சில நேரத்தில் பயத்தையும்கூடத் தரலாம். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பேச்சு தெளிவாகக் கேட்பதுமில்லை. என்ன செய்தி என்றே புரியாமல் குழப்பம் ஏற்படும். எனவே, காவலர்கள் பணியின்போது செல்லிடப்பேசியில் பேசுவது சரியல்ல.
கி. பாஷ்யம், சலுப்பை.

ஏற்க முடியாது
காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது, தங்கள் உயரதிகாரிகளிடம் கட்டளைகளைப் பெற வேண்டுமென்றால் கட்டாயம் செல்லிடப்பேசியில் பேசத்தான் வேண்டும். காவலர்களும் அரசு ஊழியர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் உள்ளனர். அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம் என்றால், காவலர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது. சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஒட்டுமொத்தமாக பயன்படுத்தவே கூடாது என்பது நடைமுறைக்கு ஒவ்வாது.
அரிமதி இளம்பரிதி, 
புதுச்சேரி.

கவனச் சிதறல்
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்லிடப்பேசியை பயன்படுத்தினால் கண்டிப்பாக அவர்களின் கவனம் சிதறும். அதனால் பணியில் பாதிப்பு ஏற்படும். செல்லிடப்பேசி வழியாக வரக்கூடிய செய்திகள் அவர்களின் மனநிலையை மாற்றக் கூடியவையாக இருப்பின் பாதுகாப்பு பணியை அவரால் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும்? எனவே, செல்லிடப் பேசியை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு சரியானதே!
பொன். கருணாநிதி, கோட்டூர்.

உறுதுணை
காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பது மிகவும் சரிதான். பாதுகாப்புப் பணி என்பது மிகவும் கவனமும் கட்டுப்பாடும் உடையது என்பது வெளிப்படை. இமைப் பொழுதும் சோர்வு இல்லாமல் இரவு, பகல் எந்நேரமும் காவலர்கள் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அதுதான் கட்டுப்பாட்டுடன் கடமையாற்ற உறுதுணையாகும். காவலரின் பாதுகாப்புப் பணி மிகவும் முக்கியமானது. எனவே பணியின்போது செல்லிடப்பேசி பயன்பாடு வேண்டாம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

நிபந்தனை
காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடு
படும்போது செல்லிடப்பேசி பயன்படுத்த முற்றிலுமாகத் தடை விதிப்பது சரியல்ல. அவசியம் ஏற்படும் நேரம் தவிர, பிற நேரங்களில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் தகவல் தொடர்புக்கு முக்கிய பங்கு வகிப்பது செல்லிடப்பேசி. எனவே, சில கட்டுப்பாடுகளுடன் செல்போன் பயன்
படுத்தலாம்.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

வரவேற்கத்தக்கது
காவலர்கள் பாதுகாப்புப் பணி என்பது எந்த நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய பணியாகும். எனவே, அவர்கள் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் கவனம் சிதறும் என்பதே உண்மை. வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லிடப்பேசியில் பேசுதல், அரட்டையடித்தல் முதலிய வேலைகளில் மக்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். மக்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் முக்கியப் பொறுப்பில் உள்ள காவலர்களுக்காவது கட்டுப்பாடு வந்தது வரவேற்கத்தக்கதே.
மா. தங்கமாரியப்பன்,
கோவில்பட்டி.

மக்கள் பணி
இந்த உத்தரவு சரியே. செல்லிடப்பேசியின் மீது கவனம் சென்றால் பாதுகாப்பின் மீது எப்படி கவனம் வரும்? ஒரே நேரத்தில் இரு செயல்கள் மீது கவனம் செலுத்த முடியாது. இவர்கள் காவலர்கள். மக்களுக்கு பணி செய்ய அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது செல்லிடப்பேசியில் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் சமூக விரோதிகளுக்கு அது ஒரு வசதி ஆகி விடும். பாதுகாப்புப் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்றால் காவலர்கள் செல்லிடப் பேசியில் பேசக் கூடாது.
உஷா முத்துராமன், மதுரை.

நியாயமல்ல
இப்படி உத்தரவிட்டிருப்பது தவறு. காவலர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்பவர்கள்தாம். மிகவும் குறைவான விழுக்காட்டினரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்து கடமை தவறுகிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரையும் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது நியாயமல்ல. அவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசரச் செய்திகளை எப்படித்தான் தெரிவிப்பார்கள்?
சோம. பொன்னுசாமி, சென்னை.

விபரீத விளைவு
சரியான உத்தரவுதான். ஏனெனில், மக்கள் அதிகமாகக் கூடும் கோயில் திருவிழாவாகட்டும், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமாகட்டும் அங்கெல்லாம் காவலர்களால் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். அந்நேரங்களில் காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தும் பொழுது 
கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனச் சிதறலால் விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். ஆகையால், காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
ப. சுவாமிநாதன், சென்னை.

பாதுகாப்பு
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், செல்லிடப் பேசியில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய காவலர்கள், கடமை தவறுவதற்கு செல்லிடப்பேசியில் பேசுவது பல நேரங்களில் காரணமாகிறது. எனவே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளின்போது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தத் தடைவிதித்துள்ளது சரியே.
செ. எழில்வளவன், அரியலூர்.

அளவான பயன்பாடு
காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது சட்டம், ஒழுங்கு குறித்து அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியது இருக்கும். அப்போது எப்படி செல்லிடப்பேசியை பயன்படுத்தாமல் இருக்க முடியும்? மேலும், இன்றைய குடும்ப அமைப்பில், பணிக்குச் செல்வோர் வீட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நேரத்தை வீணாடிக்காமலும், கடமையில் தவறு ஏற்படாமலும் அளவான செல்லிடப்பேசி பயன்பாடு தேவையே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

எச்சரிக்கை பணி
காவலர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தினால் வேலையில் கவனம் இருக்காது. பணியில் அலட்சியம் ஏற்படும். சிலர் சொந்த விஷயங்களுக்காக செல்லிடப்பேசியைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். தங்களைத் தேடி வரும் மக்களை கவனிப்பதில்லை. மேலும், காவல் பணி என்பது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய பணி. காவலர்கள் செல்லிடப்பேசியில் பேசினால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடும். எனவே, காவலர்கள் பணியின்போது செல்லிடப்பேசி பயன்படுத்தத் கூடாது என்ற உத்தரவு சரியே.
டி. ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com