அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? 

புனிதப் பணி
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருக்கலாம். வேலைநிறுத்தம் செய்யும் முன் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்கள் உணர வேண்டும். இதனால் அரசுக்கு ஏதும் பாதிப்பு இருக்கப் போவதில்லை. ஆயிரக் கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட நேரிடும். உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிர் காக்கும் புனிதமான பணியை ஏற்றுள்ள மருத்துவர்கள் பணிகளை புறக்கணிப்பது குற்றம். எனவே, அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியே.
ச. கிருஷ்ணசாமி, மதுரை

தவிர்க்க வேண்டும்
கோரிக்கை என்பது எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் என்பது சரியானதல்ல. எதற்காக போராட்டத்தில் இறங்கலாம் என்ற சிந்தனை இன்று அனைவரிடமும் மேலோங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் போராடாதவர்களே இல்லை என்ற நிலை. அரசுக்கும் இதில் பொறுப்பு உண்டு. போராட்டத்திற்கான நிலை எழுவதை அரசும் தவிர்த்திடல் வேண்டும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்

நல்லமுடிவு
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்து சரியானதல்ல! உரிமைகளையும் சலுகைகளையும் பெற அதனைத் தான் ஆயுதமாக -தவிர்க்க இயலாத கட்டத்தில்- பயன்படுத்துகிறார்கள். வேலை நிறுத்தம் என்ற எல்லை வரை அவர்களை போகவிட்டது யார் குற்றம்? எந்த ஒரு பிரச்னையும் தோன்றும் முன்னர் அரசு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் உடனே முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு இணங்க வேண்டும். அறிவுபூர்வமான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு நிச்சயம் கிட்டும்.
எம்.எஸ். இப்ராகிம், மடிப்பாக்கம்.

தவறு
அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பிரிவினராக இருப்பினும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தவறு ஆகும். மருத்துவமனையில் சிகிச்சைக்கு இருக்கும் மக்கள், மருத்துவரின் சேவையை எவ்வாறு பெற இயலும்? வியாதிகள், நோய்கள் மருத்துவரின் வருகை வரை காத்திருக்குமா? அறுவை சிகிச்சைகள் என்ன ஆகும்? அவசர சிகிச்சையை யார் செய்வார்கள்? அரசு மருத்துவமனையை நம்பி இருக்கும் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடியுமா? சிகிச்சை கிடைக்கப் பெறாமல் பிரிந்த உயிரை திரும்பப் பெற முடியுமா?
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

கவனம் தேவை
அடையாள வேலைநிறுத்தம் செய்வது தவறல்ல. அரசையும் மக்களையும் ஸ்தம்பிக்க வைக்கும் வேலை நிறுத்தங்கள் சரியல்ல. அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கூறும் முறையான கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுச் சரி செய்வதுதான் நல்ல அரசு நிர்வாகமாகும். வேலைநிறுத்தங்களுக்கான வாய்ப்பின்மையையே அரசும், ஊழியர்களும் சிந்திக்க வேண்டும். மனித உயிர்களோடு உறவாகும் மருத்துவர்கள் மீது அரசின் கவனம் அதிகம் தேவை.
ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

அரசுதான் காரணம்
பலமுறை தம் கோரிக்கைகளை கேட்டுப் பார்த்துவிட்டு இறுதியாகத்தான் வேலைநிறுத்தத்தில் இறங்குகிறார்கள். இத்தகைய பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் சூழலை அரசேதான் ஏற்படுத்திவிடுகிறது. நியாயமான கோரிக்கைகள் குறித்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்து போராட்டத்திற்கு இடமில்லாமல் செய்து விடலாம். புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட இந்நிலையில் பணியை விட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தவறுதான். அரசு அவர்கள் மீது பழி போடாமல் முன்னேற்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 
அ. கருப்பையா, பொன்னமராவதி.

முரண்பாடு
சட்டத்தின்முன் அனைவரும் சமமே. பணி நியமனம் பணி உயர்வு, ஊதிய முரண்பாடு, விலைவாசிக்கேற்ற ஊதிய உயர்வு போன்ற உரிமைகளுக்காக அரசு ஊழியர், ஆசிரியர், போக்குவரத்துத் தொழிலாளர் உள்ளிட்ட ஏனையவர்களுக்குத் தரப்படும் வேலை
நிறுத்த உரிமையை அரசு மருத்துவர்களுக்குத் தர மறுப்பது நடுநிலைமைக்கு முரண்பாடாகும். மக்களின் உயிர் காக்கும் ஒப்பற்ற தொண்டில் முழுவதுமாக மனம் செலுத்திக் கடமையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் மருத்துவர்களுக்கு உரிய தேவைகளை நிறைவு செய்து ஊக்குவிப்பது அவசியம்.
அ. சிவராமசேது, திருமுதுகுன்றம்.

யார் உதவுவார்?
சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமென்பதால் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உடனே சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இந்த நிலையில்லை. இதுபோன்ற சூழலில் இவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் மக்களுக்கு யார் உதவிடுவார்கள்? போராடுவதில் தவறில்லை. ஆனால், அது மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தும் வேலைநிறுத்தமாக இருக்கவே கூடாது. அந்த வகையில் கருத்து சரி!
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

மக்கள் நலன்
சரியே... கிராமப்புற மக்களால் நோய் தீர்க்கும் இறைவனாக அரசு மருத்துவர்கள் கருத்தப்படுகிறார்கள். மற்ற துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்ச் சேதம் ஏற்படாது. ஆனால், மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் விலை மதிக்க முடியாத உயிர் இழப்பு ஏற்படுகின்ற வாய்ப்பு மிக அதிகம். மக்கள் நலனுடன் சம்பந்தப்பட்டது. மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தடைவிதிப்பது சரியே.
என். சண்முகம், திருவண்ணாமலை.

சேவை மனப்பான்மை
நொடிக்கணக்கில் சிகிச்சை தாமதமானால் கூட பலர் இறக்கின்றனர். வைரஸ் - டெங்கு மற்றும் சில உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். கடமை என்பதை விடச் சேவை மனப்பான்மையோடு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். இதனால் பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள் பயனடைவர்.
கி. பாஷ்யம், சலுப்பை.

தன்னலமற்ற உழைப்பு
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தடைவிதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியே. மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அவர்கள் மக்களுக்கே சிகிச்சையளிக்க மறுப்பது ஏற்கத் தக்கதல்ல. சம்பள உயர்வுக்கான போராட்டத்தைவிட, நோய்த் துன்பப் போராட்டம் பெரியது. அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கத்துக்குத் துணைபோய்விடும். பிற பணிகள் பின்னாளில் ஈடு செய்யத்தக்கன. மருத்துவப் பணியோ அப்படிப்பட்டதல்ல. மருத்துவர்களின் மீதுள்ள மதிப்புக்குக் காரணமே அவர்களது தன்னலமற்ற உழைப்புதான்!
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

அறப்போர்
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியல்ல. முற்றிலும் தவறானதாகும். மருத்துவர்கள் தங்களின் உரிமைக்காக அறப்போர் என்ற அடிப்படையில் வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். தடைவிதித்தால் மேலும் போராட்டம் வலுவடையும். நோயாளிகள் மிகவும் துன்பப்படுவார்கள். உடனடியாகப் பேச்சு நடத்தி மருத்துவர்களின் பணி தொடர அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். மருத்துவர்கள் நாட்டுக்கு உழைப்பவர்கள். அவர்களைப் போற்ற வேண்டும். 
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

உன்னதப் பணி
இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். உயிர் காக்கும் உன்னதப் பணியைச் செய்பவர்கள். இத்தகைய மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்படுவது, அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்களே! எனவே, அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிப்பது சரியே. 
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தர்மமல்ல
உயிர் காக்கும் உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற அரசு மருத்துவர்கள், நோயாளிகளால் கண் கண்ட தெய்வங்களாகப் போற்றப்படுபவர்கள். அவர்கள் மற்ற சராசரி பணியாளர்களைப் போன்று வேலைநிறுத்தம் செய்ய நினைப்பது தொழில் தர்மல்ல. அந்த நேரத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்ற முடியும் என எண்ணுவதே உயர்வு.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com