ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரிதானா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரிதானா

சரியல்ல!
ரிசர்வ் வங்கி, சிபிஐ ஆகியவை மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தவில்லை. நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்காக சில மாற்றங்களை மத்திய அரசு செய்ய நினைக்கும்போது அதனால் ஏற்படும் தடங்கல்கள், தவறு, தாக்குதல் போன்று சித்திரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கான நேர்மையைக் கையாளும் போது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வரத்தான் செய்யும்!
எஸ்வி. ராஜசேகர், சென்னை.

சரிதான்!
இப்படிப்பட்ட குற்றங்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவது சரிதான். இது எப்படி என்றால், மாமியார் மருமகளாக இருந்த காலத்தில் பெற்ற துன்பங்களை தன் மருமகள் மீது குற்றஞ்சாட்டுவது போலத்தான். இந்த மருமகள் மாமியாரானால் இதே குற்றம் சாட்டப்படும். மொத்தத்தில் மருமகள் மீது எப்படி குற்றம் சாட்டப்படுகிறதோ, அப்படி ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சி அதன் மீது குற்றம் என்ற கல்லை வீசத்தான் செய்யும். எனவே, இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவது சரிதான். இதனால், நல்ல பலன்தான் கிடைக்கும்.
உஷா முத்துராமன், மதுரை.

இடையூறு இல்லாமல் இருந்தால்...
ரிசர்வ் வங்கி, சிபிஐ அமைப்புகள் தனி சுய அதிகாரம் படைத்த அமைப்புகள். தேர்தல் ஆணையம் எப்படியோ, அப்படிப்பட்ட இந்த இரு அமைப்புகளும் அதனதன் உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. நாட்டின் பொருளாதாரத்தை கவனித்து, நிலைமையை முன்னுக்குக் கொண்டு வர
வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தி தன் அதிகாரத்தின் கீழ் செயல்பட வைத்துள்ளது. சரியாகச் செயல்பட விடாதவர்களை சிபிஐயும் அரசுத் துறையும் கண்டுபிடித்து அவர்களது குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் படைத்தது. இவற்றுக்கு எந்தவித இடையூறும் அரசால் இருக்காதவரை நல்ல நிலையில் இவை செயல்படும்.
டி.வி. கிருஷ்ணசாமி, 

நங்கநல்லூர்.
நாட்டுக்கு நல்லதல்ல
உண்மைதான். மத்திய அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் அவர்களோடு ஒத்துழைக்க மறுத்து ராஜிநாமா செய்திருக்கிறார்கள். அதே போன்று சிபிஐயின் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுக்குக் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பியதில் இருந்து அரசின் தலையீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படி மத்திய அரசு தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகளில் தலையிடுவது நாட்டிற்கு நல்லதல்ல. 
ப. சுவாமிநாதன், சென்னை.

குற்றஞ்சாட்டுவது சரியே!
ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்ற அமைப்புகள் தன்னிச்சையாகச் செயல்பட்டாலும் இவற்றின் செயல்கள் யாவும் நம் நாட்டின் பொருளாதாரம், காவல் பாதுகாப்பை மேம்படுத்திடவே முயல்கின்றன.
இவற்றில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்கள், அதிகாரிகள், இயக்குநர்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று பின் அந்த முயற்சியைக் கைவிட்டது. ரிசர்வ் வங்கி கவர்னர்களின் பதவிக் காலம் முடிந்து மீண்டும் அழைத்தபோது வாராததும் (ரகுராம் ராஜன்), பதவிக் காலம் முடிவதற்குள் மற்றொருவர் ராஜிநாமா (உர்ஜித் படேல்) செய்ததும் நாடறிந்த செய்தி. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் சரியாகவே உள்ளது.
வி. சரவணன், சிவகங்கை.

செய்வது சரியில்லை
ரிசர்வ் வங்கியில் உள்ள பணம், பொது மக்கள் பணம். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது அரசின் உரிமை. இதில் கருத்து வேறுபாடு இருப்பின் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது சரியில்லை.சிபிஐயும் அரசாங்க அமைப்புதான். இதில் அதிகாரிகள் சண்டை போட்டுக் கொள்ளும் போது அரசு வேடிக்கை பார்க்கலாமா?
எம். ரகோத்தமன், திருவண்ணாமலை.

ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல
நாட்டின் பொருளாதார வழி நடத்தலை தீர்மானிக்கும் ரிசர்வ் வங்கியும் பொருளாதார குற்றங்களைக் களைந்து சீர்திருத்தம் செய்ய வேண்டிய அமைப்பான சிபிஐயும் சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. ஏற்கெனவே சிபிஐயை தங்கக் கூண்டில் இருக்கும் கிளிக்கு உச்ச நீதிமன்றம் ஒப்பிட்டு மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆகவே, மத்திய அரசை இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் கண்டித்திருப்பது ஒன்றும் புதிதல்லை. மத்திய அரசின் தலையீடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
கே.எஸ். சுந்தரம், கோயம்புத்தூர்.

நீதி, நேர்மைக்கு பாதிப்பு
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியே! ரிசர்வ் வங்கியின் கூர்ந்த கொள்கைகளை தளர்த்த மத்திய அரசு விரும்புகிறது. வங்கி சாராத நிதிநிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்க விரும்புகிறது. இதை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதனால்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி விலகும்அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், யார் யாரையோ காப்பாற்ற சிபிஐ அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால்தான் சிபிஐ உயர் அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். இத்தகைய தாக்குதல் நாட்டின் நீதி, நேர்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சாமி. செல்லதுரை, பருத்திக்கோட்டை.

தவறான முன்னுதாரணம்
ஒரு கட்சி மாறி, மற்றும் ஒரு கட்சி ஆட்சிக்கு வரலாம். ஆனால், அரசு என்றுமே நிலையானது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரை பதவி விலகிப் போரில் மாற்றம் வரும். ஆனால், அரசு நிரந்தரமாகச் செயல்பட்டு வரும். அவ்வாறு நிரந்தரமாகச் செயல்படும் அமைப்புகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஒரு துறையில் தவறு ஏற்பட ஆரம்பித்து விட்டால் மற்ற துறைக்கும் பரவிவிடும். அது நிர்வாகச் சீர்கேட்டை ஏற்படுத்தும். எனவே சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்றவற்றின் சுய அதிகாரத்தில் ஒருபோதும் யாரும் தலையிடக் கூடாது.
டி. சேகரன், மதுரை.

நிர்ப்பந்தம் 
ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் என ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் ராஜிநாமா செய்துள்ளது இதுவரையில்லாத நிர்ப்பந்தம் காரணமான செயலேயாகும். சிபிஐயின் சரியான குற்ற நடவடிக்கைகளை முடக்கும் விதமாக தடையாணை வெளியிட்ட மத்திய அரசின் செயலும் சட்டத்தையும், மரபையும் மீறியதும், சாதகமான நடவடிக்கை. குற்றாளிகளுக்கு வேண்டியதுமான மோசடி மற்றும் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உதவும் செயலாகவே தெரிகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியானதேயாகும்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

உண்மை
ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரிதான். மக்களிடம், இந்த அரசின் திட்டங்களை விமர்சிப்பவர்களை சிபிஐ மூலம் கைது என மிரட்டுகின்றனர். இழந்து விட்ட பொருளாதாரத் தன்மையைச் சரி செய்யாமல், ரிசர்வ் வங்கியை தன் கைப்பாவையாக செயல்படுத்தத் திட்டமிடுகின்றனர் என்பது உண்மையே.
பி. சுரேந்தர், திருவள்ளூர்.

மறைமுகத் தாக்குதல்
முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜனும், உர்ஜித் படேலும் முறையே பதவி நீட்டிப்புத் தரப்படாமலும் அதிருப்தியுடன் 9 மாத காலம் முன்னதாகவே ராஜிநாமா செய்ததும் மறைமுகத் தாக்குதலின் விளைவே. மத்திய அரசின் தாக்குதல்களால்தான் சிபிஐ இயக்குநர் களிடையே நடைபெற்ற மிகப் பெரிய அண்மைக்கால கருத்து மோதல்களும் செயல்பாடுகளும் என்பது வெளிப்படை.
ச. சுப்புரெத்தினம், 

மயிலாடுதுறை.
சிந்திக்கத்தக்கது!
இந்தியா ஒரு மாபெரும் மக்களாட்சி நடைபெறும் மாண்புக்குரிய நாடு. எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்று தக்க நடவடிக்கை எடுத்து அறவழியில் ஆட்சி புரிவது சிறந்தது. மேற்கண்ட அமைப்புகளை தனித்துச் செயல்பட விட வேண்டும். தலையீடு கூடாது. எனவே, இந்தக் கருத்து சிந்திக்கத்தக்கதாகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com