ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்ற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்ற கருத்து சரியா 

சரிதான்!
மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது, தொகுதிகளின் பிரச்னைகளை மனதில் வைத்து வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். மக்களவைத் தேர்தலின்போது அகில இந்திய அளவிலான கொள்கைகளையும், பிரச்னைகளையும் முன்னிறுத்தி வாக்களிப்பார்கள். பல முறை இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது என்ற கருத்து சரியே!
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

கணிக்க முடியும்!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியும். சாதாரண ஏழை மக்களைப் புறக்கணித்து செல்வாக்குள்ள பணக்காரர்களின் பக்கம் பா.ஜ.க. உள்ளதாகக் குறை கூறி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் குறையை பா.ஜ.க. நீக்கினால், அது வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும், நடந்து முடிந்த தேர்தல்களை வட இந்திய தேர்தலாகக் கொள்ளலாமே தவிர, தென்னாட்டையும் சேர்த்து கணிக்க முடியாது. 
எஸ்.பி. தசரதன், வேலூர்.

பிரச்னைகளின் அடிப்படையில்...
சரியான கருத்துதான். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்குட்பட்ட தற்போதைய பிரச்னைகளின் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும், தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு தனிக் கட்சியும் இரு மாநிலங்களில் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களில் பிராந்தியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இது இரு தேசிய கட்சிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மு. செந்தமிழ்செல்வி, 
சென்னை.

கணிப்பது சிரமம்!
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தற்போது சரியானதல்ல. ஏனெனில் பல மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கொண்டது இந்தியா.தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர்கள் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் உள்ளன. பிரச்னைகளிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் உள்ளன. அதனால், மாநிலங்களின் தேர்வு முடிவுகளைப் போன்றே மத்தியிலும் வரும் என எதிர்பார்க்க முடியாது. மாநிலத்தில் வோட்டளிக்கும்போது ஒரு முறையிலும் மத்தியில் வோட்டளிக்கும்போது ஒரு முறையிலும் மக்கள் முடிவெடுக்கக் கூடும். எனவே, மக்கள் முடிவு என்ன என்பதைக் கணிப்பது மிகவும் சிரமம்.
டி. சேகரன், மதுரை.

தவறானது!
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது என்ற கருத்து சரியல்ல. ஏற்கெனவே பல வகையில் மதச்சார்பற்ற நிலையில் மத்திய அரசின் போக்கு வெறுப்பை ஊட்டியுள்ளது. வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என எதிர்பாக்கலாம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

முடிவுகள் மாறலாம்!
ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி, தேர்தல் வாக்குறுதிகள் தட்டிக் கழிப்பு,எதிர்ப்புகள் இல்லாத நிலையிலும் நிறைவேற்ற முயலாத மெத்தனம்,ஆளுங்கட்சியினருக்கு இடையே உட்கட்சிப் பூசல்-இன்ன பிற காரணங்களால் மக்களுக்கு அதிருப்தி வருவதுண்டு. மக்களைத் திசை மாற்றுவதில் எதிர்கட்சியினரின் வியூகத்தால் தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் நிகழலாம். தோற்ற, வென்ற கட்சிகளின் செயல்பாடுகளால் குறுகிய காலத்திலும் பொதுத் தேர்தலுக்குள் முடிவுகள் மாறலாம். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியமைத்த கட்சிகள், ஆட்சியின் போது தயங்குவதாலும் தோல்வி அடையலாம். இடைத் தேர்தலின் போது இக்காரணங்கள்தாம் வெúôற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்றன. எனவே, பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து பொதுத் தேர்தலின் முடிவைக் கணிப்பது பிழையாகவே முடியும்.
ச. கந்தசாமி, தூத்துக்குடி.

சாத்தியக்கூறுகள் இல்லை
ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது என்பது ஏற்க கூடியதல்ல. ஐந்து மாநிலங்களிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான இடங்களில் வென்றுள்ளது. ஆனால், வரவிருக்கும் தேர்தலில் இதற்கான வாய்ப்பு குறையும். தென் மாநிலங்களில் பத்துக்கும் குறைவான இடங்களை வெல்லவே பா.ஜ.க.-வுக்கு வாய்ப்பு இருக்கிறது. மக்களின் எண்ண ஓட்டம் பா.ஜ. கட்சிக்கு எதிராக இருக்கும் சூழ்நிலையில், கடந்த தேர்தலைப் போன்று பெருவாரியான இடங்களை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. 
தணிகை மணியன், கொளத்தூர்.

எச்சரிக்கை!
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள், மக்களவை தேர்தலிலிருந்து மாறுபட்டது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்குகின்ற தேர்தல் அறிக்கைகள் மாறுபடும். மாநிலத் தேர்தல்கள் மாநில நலனை முன்னிலைப்படுத்துபவை. மக்களவைத் தேர்தல் இந்திய நலனையும் இந்திய மக்கள் முழுவதும் பயன்படும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படும். இரண்டும் ஒன்றல்ல. மக்களின் மனநிலை மாறுபடும். ஆனால், ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும். எனவே, மாநிலப் பேரவைத் தேர்தலை வைத்து மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

சான்றுகள் உண்டு
மாநில பேரவைத் தேர்தலில் வென்ற கட்சி மக்களவைத் தேர்தலில் தோற்றது, மக்களவைத் தேர்தலில் வென்ற கட்சி மாநில பேரவைத் தேர்தலில் தோற்ற சரித்திரம் என இந்திய ஜனநாயகத்தில் சான்றுகள் உள்ளன. மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில் மக்களிடம் மத்திய அரசு மீதுள்ள அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணி, அரசியல் தேர்தல் வியூகங்கள், உத்திகள், அரசியல் சூழ்நிலைகள்தான் மக்களவைத் தேர்தலின் வெற்றி-தோல்வி முடிவைக் கணிக்க முடியும்.
இ. ராஜூ நரசிம்மன், சென்னை.

மனநிலை வெளிப்பாடு!
நாடாளுமன்றத்துக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த நான்கரை ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடே மக்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. எனவே, இந்த தேர்தல் முடிவுகளை வைத்து கணிக்க முடியாது என்கிற கருத்து சரியல்ல. ஐந்து மாநில முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவை அறிய வாய்ப்புள்ளது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

முற்றிலும் சரி!
முற்றிலும் சரியே. இதற்கு ஏற்கெனவே பல முன்னுதாரணங்கள் உண்டு. மாநிலத் தேர்தல்கள் நடத்தப்படும் போது அந்தந்த மாநில ஆட்சிகளின் நிறை, குறைகளைக் கருத்தில் கொண்டே முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. 1980-இல் மக்களவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க தோல்வியுற்றது. அதன் பின் நியாயமின்றி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இதற்குச் சான்றாகும்.
எஸ். ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

எதிரொலிக்கும்!
கருத்து சரியல்ல. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையே ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.வரும் மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என சந்தேகமின்றி கருத முடிகிறது.
பொன்நடேசன், திருவண்ணாமலை.

தேர்தல் பாடம்!
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் முடிவுகள் எதிர்பார்த்ததே. மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியதும் மற்றும் மக்களாட்சியை உறுதிப்படுத்துவமாகவும் அமைந்துள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என இனி உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இத் தேர்தல் மாநிலங்களின் தற்போதைய ஆட்சியின் மீது மக்களுடன் எதிர்பார்ப்புகள் அதிகரித்து மாற்றத்துக்கு வழிகோலியிருக்கலாம். மத்திய ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களவைத் தேர்தலில் இருக்காது என்று உறுதியாகக் கூற முடியாது என்பதையே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. மத்திய ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாய் அமைந்துள்ளது தேர்தல் முடிவுகள்.
கே. சீனிவாசன், திருவையாறு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com