அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியா?

பாதிப்பு
அரசு பள்ளிகளில் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியே. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றாலும் அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ எழதவோ முடிவதில்லை. மருத்துவம், பொறியியல் முதலிய பாடங்கள் ஆங்கிலத்தில் தான் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் அரசு பள்ளிகளில் ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருப்பது வரவேற்கக்கூடியதே.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

ஆங்கில மோகம்
நம் நாட்டில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழியாக இருக்கிறது. எனவே, ஆங்கிலம் நல்ல முறையில் பேசுவதற்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆங்கிலத் தேவை என்பது தற்காலத்தில் ஆங்கில மோகமாக மாறிவிட்டது. தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். தங்களின் பொருளாதாரத் தகுதிக்கு அதிகமாகவே செலவிடுகிறார்கள். தாய்மொழியான தமிழ் மொழி புறக்கப்படாமல் நல்ல முறையில் ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

பின்னடைவு
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து முற்றிலும் தவறானது. அப்படியானால், ஆங்கில எழுத்துத் திறனை வளர்க்க மற்றும் ஒரு பயிற்சி வகுப்பும் வேண்டுமே! இந்த முடிவு தாய்மொழியாம் தமிழுக்கும், பிற பாடங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். தாய் மொழி, வட்டாரப் பொது மொழி, தேசிய மொழி என்று பலவகைப் பட்ட மொழிகள் உள்ளன. அந்நிய மொழியாம் ஆங்கில மொழியை ஏன் தனி பயிற்சியளித்து வளர்க்க வேண்டும்? தேவையில்லை.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

ஐயமில்லை
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனும் மொழிப் பயிற்சியும் இன்றைய நிலையில் போதுமானதாக இல்லை. சில பள்ளிகளில் ஆங்கில வகுப்புகூட தமிழில் விளக்கம் கூறி நடத்தப்படுகிற போக்கு காணப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனின் தரம் பெரிதும் குறைந்து விடுகிறது. பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுமானால் அது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் பெரிதும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை.
பா. லதா ரங்கன், சென்னை.

எண்ணிக்கை உயரும்
இக்கருத்து சரியே. தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி கற்பதற்காக வசதி படைத்தவர்கள் பெரும் தொகை செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள். வசதியற்ற பெற்றோர் அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கினால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரும். மேலும், அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நிலை அரசுக்கு ஏற்படாது.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

கட்டணக் கொள்ளை
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்திற்கு காரணமே அங்கு நடத்தப்படும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள்தான். எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளை இந்த கல்வியாண்டிலேயே தொடங்கப்பட வேண்டும். இதனால், நடுத்தர குடும்பங்களின் கல்விச் செலவு பெருமளவு குறையும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

புறக்கணிப்பு கூடாது
பள்ளி மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத் திறனை வளர்ப்பதன் மூலம் மட்டுமே மாணவர்களின் அறிவை வளர்த்து விட முடியும் என்று எண்ணுவது தவறு. ஜப்பான் போன்ற சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஷியா போன்ற வல்லரசு நாடுகளுடன் போட்டி போடக் கூடிய அளவிற்கு முன்னேற்றமடைய அந்தந்த நாடுகளின் தாய் மொழிவழிக் கல்வியே காரணமென்ற கருத்து முற்றிலும் சரியானது. பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதன் மூலம் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிப்படக் கூடாது.
எம். ஜோசப் லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர் பாளையம்.

வாய்ப்பு இல்லை
அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்று, பின்னர் ஆங்கில வழியில் முதுகலைப் பட்டம் பெற்றவன் நான். கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்க்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆங்கில மொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்ள சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் வகுப்புகள் மிக அவசியம்.
பீ. சத்தியநாராயணன், சென்னை.

அச்சம்
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட அச்சப்படுகின்றனர் என்பதே உண்மை. பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட தாங்கள் பணியாற்றும் அலுவலகங்களில் ஆங்கிலத்தில் உரையாட சிரமப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் பணிபுரிய செல்லும் பலர், போதிய ஆங்கிலப் புலமையின்மை காரணமாக பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளை துவக்குவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

தேவையில்லை
ஆங்கிலப் பேச்சுத் திறனுக்கென தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டியதில்லை. அன்றாடம் பள்ளியில் ஆங்கிலப் பாட வேளைகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் குழந்தைகளுடன் உரையாடுகின்ற பழக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். மற்ற பாட ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட வேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்களின் வேலை வாய்ப்பை தேடிக் கொள்வதற்கு இத்தகைய ஆங்கிலப் பயிற்சி தேவைதான். ஆனால், இதற்கென தனியாக பயிற்சி நடத்தித்தான் பேசப்பழக வேண்டும் என்பதில்லை. வகுப்பறையிலேயே அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
கே. பழனி, பென்னாகரம்.

தமிழும் தேவை
உளவியல் அறிஞர்களின் கருத்துப்படி 10 வயது வரை தாய்மொழியே மாணவர்களின் பயிற்று மொழியாயிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில், குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி இருக்கலாம். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சித் தொடங்கலாம். அதே போல பேச்சுத் திறன் வகுப்புகளில் தமிழையும் உட்படுத்தினால்தான் மாணவர்களின் நினைவாற்றல் திறனும் மேன்மையுறும். இவற்றை மனத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தம் செய்வது நல்லது.
சோம. பொன்னுசாமி, சென்னை.

ஏற்க இயலாது
அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் தேவையில்லாதது. பேச்சு திறன் என்பது எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது. தற்பொழுது அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலோருக்கு தமிழ் மொழியிலேயே படிக்கும் திறன் குறைவாக உள்ளது. ஆங்கில மொழிப் பயிற்சி வேண்டுமென்றால் பள்ளிகளின் வெளியிலே பெறலாம். மேலும், ஆங்கில பயிற்சி என்பது தாய் மொழியின் பயிற்சியை மழுங்கடிக்கும். தமிழ்மொழியின் பயன்பாடு குறையும் நிலை நம் மொழியின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆங்கில மொழி மட்டுமே உயர்ந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள இயலாது.
டி. ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

உயர்ந்த நோக்கம்
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திற்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட வேண்டும். நாள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும், தாய் மொழியில் பேசினால் தண்டனை போன்ற மெட்ரிக் பள்ளி நடைமுறைகள் மெல்ல மெல்ல அரசுப் பள்ளிகளிலும் தலைநீட்டி விடக் கூடாது. தாய் மொழி கல்வியைப் பாதிக்கும் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் பிறமொழித் தேர்ச்சியும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நடத்தப் பட்டால் அது வரவேற்புக்குரியதே!
அ. கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com