விவாதமேடை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவிடப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியானதல்ல
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு சரியானதல்ல. ஏனெனில், கடவுள், மற்றும் மத நம்பிக்கைகளில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. மூடநம்பிக்கை எனக் கருதப்படுபவை விழிப்புணர்வூட்டிக் களையப்பட வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் அல்ல. பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் வழிபாட்டுத் தலங்களில் ஆண்கள் உரிமை கேட்பதும், ஆண்கள் அரையுடையில் மட்டுமே வரவேண்டும் என்ற விதியுள்ள சில ஆலயங்களில் பெண்களும் அப்படியே வர வேண்டும் எனக் கோருவதும் சரியாகுமா? 
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

இறை நம்பிக்கை
சபரிமலை செல்லும் கரடு முரடான பாதை தற்போது ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. அதில் பயணிப்பது எளிதான காரியம் அல்ல. மேலும், சபரிமலை ஐயப்பனின் பிரம்மச்சரியம் பெண்களின் வழிபாட்டுத் தடைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை. அதனை சட்டத்தின் மூலம் தகர்ப்பது சரியல்ல. மத நம்பிக்கை சட்டத்திற்கு அப்பாற்பட்டது. இதில் ஆண் - பெண் சமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆண்டாண்டு கால நம்பிக்கையை சட்டத்தின் மூலம் நீக்குவது சரியல்ல.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

மாற்றம் தேவை
எந்தக் கடவுளும் பெண்ணினத்திற்கு அருள் வழங்க மாட்டேன் என்று கூறுவதில்லை. ஐயப்பன் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை தம்முன் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என்பதெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று. உடல் தூய்மை குறைவான பெண்கள் தாமாகவே ஒரு மனக்கட்டுப்பாட்டுடன் எந்தக் கோயிலுக்கும், பிற வழிபாட்டிடங்களுக்கும், ஏன், சிலர் தம் வீட்டிற்குள்ளும்கூட செல்வதில்லை. வழிபாடு, தரிசனம் என்பதெல்லாம் மனம் சார்ந்த உணர்வு. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் பெண்களின் வழிபாட்டு முறையில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. எனவே இந்த உத்தரவு முற்றிலும் சரியே!
அ. கருப்பையா, 
பொன்னமராவதி.

மறு பரிசீலனை 
ஆண்டுதோறும் இலட்சக் கணக்கில் பக்தர்கள் தூய்மையுடன் நாடி வரும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதம் கெடாதவாறு போற்றப்பட வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில்தான் பத்து வயதுள்ள பெண் குழந்தைகளும் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தப் பாரம்பரியம் தகர்க்கப்படும் வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவிட்டிருப்பது கொஞ்சமும் சரியல்ல. இத்தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

ஆச்சரியமே
எந்தக் குடும்பப் பெண்களாவது எங்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார் கூறினார்களா? கோயிலுக்கும், பக்திக்கும் தொடர்பே இல்லாதவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும், அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதும் ஆச்சரியமே. இந்து மதத்தில் அனைத்துக் கோயில்களிலுமா பெண்களை அனுமதிப்பதில்லை?
சபரிமலை போன்ற ஒரு சில கோயில்களில்தானே இந்த நியதி உள்ளது. இவ்விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய தேவை என்ன?
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

யார் பொறுப்பு?
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்கிற அடிப்படை உண்மையைக் கூட நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை. சபரிமலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீதிமன்றம் காவல் துறையை பொறுப்பாக்கப் போகிறதா? அரசை பொறுப்பாக்கப் போகிறதா? மேலும், இந்து மதத்தைப் பொருத்தவரை பல்வேறு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையைப் பொருத்ததாக இருக்க வேண்டும். அதில் அரசோ, நீதிமன்றமோ தலையிட்டு புதிய விதிகளை வகுப்பது நல்லதல்ல. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவிட்டிருப்பது சரியல்ல.
என்.கே. திவாகரன், சரவணம்பட்டி.

உரிமை உண்டு
எல்லா கோயிலுக்கும் இருபாலரும் சென்று வழிபாடு செய்ய உரிமையுண்டு. பழைய சம்பிரதாயங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு பெண்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிப்பது சரியல்ல. கால மாற்றத்திற்கேற்ப சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதே சரியானதாகும். ஆண்டவனே, தான் பாதி உமை பாதியாக, அதாவது அர்த்த
நாரீஸ்வரராகக் காட்சி தரும் போது கோயிலுக்குப் பெண்களை அனுமதிக்க மறுப்பது தவறு.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

அறிவுடைமையல்ல
இறைவன் மீது பக்தன் வைக்கும் நம்பிக்கையை நீதிமன்ற உத்தரவு மூலம் செயல்படுத்துவது அறிவுடைமை ஆகாது. வழிபாட்டு விதிமுறைகளை சட்டத்தின் மூலம் மாற்ற முயற்சிப்பது தவறு. சமத்துவம் என்ற பேரில், பாரம்பரியமான ஐயப்பன் ஆலயத்தினுள் அனைத்து வயது பெண்களும் செல்ல உத்தரவிட்டிருப்பதில் சட்டதின் அதிகாரம்தான் தெரிகிறது. சட்டம் என்கிற அதிகாரத்தால் இறை நம்பிக்கையும், சமத்துவமும் நிச்சயம் வராது. 
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

வேறுபாடு கூடாது
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவிட்டிருப்பது மிகவும் சரிதான். இறைவனை வழிபடுவதில் ஆண்-பெண் வேறுபாடு கூடாது. ஆண் தெய்வம் வேறு, பெண் தெய்வம் வேறு என்ற பாரபட்சம் இல்லை. ஆண் உடல் என்றால் பெண் உயிர். ஆதலால் இந்த உத்தரவு ஏற்கத்தக்கதே. மரபு மீறாமல் விரதம் ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

அவமரியாதை
கடவுள் எங்கும் நிறைந்துள்ளார். அவர் வழிபாட்டில் ஆண்-பெண் என்ற பாரபட்சம் கூடாது. ஆண், பெண் சமத்துவம் பேசும் நாம், அவர்களுக்குரிய மரியாதை அளிக்க தயங்கக் கூடாது. பெண்களின் உடல் ரீதியான காரணத்தைக் கூறி அவர்கள் உரிமையை மறுக்கக் கூடாது. பெண்களை கடவுளாக வழிபடுபவர்கள் நாம். அவர்களை பலவீனர்களாகக் கருதி நாம் அவமரியாதை செய்வது சரியா?
கோ. மோகனமணி, குளித்தலை.

வழிபாட்டு உரிமை
மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் மூக்கை நுழைக்க கூடாது. சபரிமலை கோயிலில் பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பது நூற்றாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது, மக்களின் கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமையைத் தகர்ப்பதாக உள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சரியல்ல.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

பாதுகாப்பு முக்கியம்
சபரிமலையில் பெண்கள் வழிபட முற்றிலும் மறுக்கப்படவில்லை. பத்து வயதிற்குக் கீழும் ஐம்பது வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் காலம் காலமாக வழிபட்டே வருகின்றனர். பிற இடங்களிலுள்ள ஐயப்பன் கோயில்களில் பெண்கள் வழிபட இன்றும் தடையில்லை. இளம் வயதுப் பெண்கள் அடர்ந்த காட்டில் பயணிப்பது எளிதானல்ல. ஆணோ பெண்ணோ பாதுகாப்பு முக்கியம். கோடிக்
கணக்கான பக்தர்கள் பயணிக்கும் காட்டுவழி பாதுகாப்பற்றது என்பதாலும் பெண் சீண்டல் போன்ற குற்றங்கள் பெருக வழி இருப்பதாலும் சபரிமலையில் இளம் பெண்களை அனு
மதிக்காமல் இருப்பது சரியே.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
நன்றன்று
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான விதிகள் தனித்துவமானவை. பொதுவாகவே ஆகம விதிகள், மரபுகளை மீறுவது வேதனைக்குரியது. சமீப காலமாக நீதிமன்றம் அவசியமற்ற பிரச்னைகளில் கருத்துகளையும் தீர்ப்புகளையும் வெளியிடுவது மதிப்பு மிகுந்த நீதித் துறைக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. சமத்துவம் என்கிற போர்வையில் நமது பாரம்பரியம், பண்பாடு, காலசாரம் போன்றவற்றைக் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் ஆக்குவது நன்றன்று.
சு. முருகேசன், 
இராசாக்கமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT