கடந்த வாரத் தலைப்பு வனவாசம்! வாசகர் கவிதைகள்!

தனிமைவாசம் தேவையுமன்றோ?
கடந்த வாரத் தலைப்பு வனவாசம்! வாசகர் கவிதைகள்!

வனவாசம்

கூனியவள்  சூழ்ச்சியாலே  வனவா  சத்தைக்
குலமகளாம்   சீதையுடன்  இராமன்  ஏற்றான்
வானிலவாம்   பாஞ்சாலி   பாண்டவர்கள்
வனவாசம்   சென்றார்கள்  சகுனி  யாலே !
கானிடையே   நளனவனும் வாசம்  செய்தான்
கால்வழியே  நுழைந்திட்ட   சனியி  னாலே
மானிடர்கள்   ஒழுக்கநெறி   கடைபி  டிக்க
மாண்பாக   வாழ்ந் தவர்கள்   காட்டி  னார்கள் !

அறம்பொருளில்  இன்பத்தைத்   துய்த்த   வர்கள்
அடுத்திருக்கும்   வீடுபேற்றை   அடைவ  தற்கே
உறவைவிட்டு   வனவாசம்   மேற்கொண்   டார்கள்
உயர்ஞானம்   பெறுவதற்குத்   தவம்செய்   தார்கள்
மறம்காட்டி   நாடுகளை  வென்ற  மன்னர்
மனம்மாறி    அமைதியினைப்   பெறுவ   தற்குச்
சிறப்பான   அரசுரிமை   துறந்து  விட்டுச்
சிறுகுடிலில்   தவமியற்றக்   காடு   சென்றார் !

விலங்கெல்லாம்   வனவாசம்   செய்யும்   போதே
விரிந்திருக்கும்   காடெல்லாம்   செழித்தி   ருக்கும்
நலமாக   மழைபொழிந்து   பயிர்வி   ளையும்
நாடெல்லாம்  வளம்பெருகி   மகிழ்ச்சி  துள்ளும் !
சிலரிங்கே   காடுகளைப்   பொருளுக்   காகச்
சிதைப்பதினைத்   தடுத்ததனைக்   காக்கா  விட்டால்
நிலம்சரிந்து   மழைபொய்த்து   வறட்சி   ஓங்கி
நீள்வறுமை   தலைவிரித்தே    ஆடல்   காண்பீர் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

வாங்கிய சம்பள பணம்
முதல் தேதியிலேயே காலியானால்
மீதமுள்ள நாட்களெல்லாம்
வறுமையில் வனவாசம்

காதலி பச்சைக்கொடி காட்டும்வரை
காதல்கொண்ட இளைஞனுக்கு - தீராத
காதல்நோயினால் வனவாசம்

ஆசைகளையும் இலட்சியங்களையும்
அடையும்வரை - இனிய
கனவுகளோடு வனவாசம்

மணமுடித்த பின்னே
மனம் பொருந்தவில்லை என்றால்
அது கணவனுக்கும் மனைவிக்கும
காலமெல்லாம் வனவாசம்

பிள்ளைப்பேறு இல்லாமல் போய்விட்டால்
கேள்விக் கேட்கும் சமூகத்தில்
பதில் சொல்லி மாள்வதே
மிகப்பெரிய வனவாசம்

கொஞ்சம் கொஞ்சமாய்
இயற்கையை இழந்தபின்பு -
செயற்கை உலகத்தோடு
ஒட்டிவாழும் வனவாசம்

கொடுக்கிற மனமிருந்தும்
கொடுக்கமுடியாத இல்லாமை என்பது -
வேதனைமிகுந்த வனவாசம்

புரிந்தவரே - பிரிந்து சென்றால்
பிரிவை எண்ணி பரிதவிக்கும்
மனதிற்கு- ஒவ்வொரு நொடிப்பொழுதுமே
துன்பம்சூழ்ந்த வனவாசம்

வயதின் முதுமையால் - பிறருக்கு
பாரமாகும்போது - பிறவியைக்கடக்க
மரணம்தேடும் வனவாசம்

நம்பிக்கை ஔி வீசும்போது
வாழ்க்கையும் வசமாகும்
வனவாசமும் சுகவாசமாகும்.....

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி  

**
                                
பாண்டவர்க்கும் வனவாசம் பரதனின் அண்ணனுக்கும்
பதவியாசை காட்டிப் பறித்த பின்னால் முடிதனையே
பதினான்கு வருடங்கள் பசுமை வனந்தனையே
வீடாக்கி வாழ்கவென்று விளம்பிட்டார் பொறாமையினர்!

ஐவரும் கலங்கவில்லை!அன்புடை ராமனும் வீழவில்லை!
காட்டு வாழ்க்கையிலே களேபரங்கள் இருந்தாலும்
கண்ணியமாய் இருப்பதற்கும் கடமையைச் செய்வதற்கும்
கச்சிதமாய் உதவுவது கடும் வன வாசமே!

நாட்டையே காடாக்கும் நாட்களும் வருவதுண்டு!
பாட்டில் மட்டுமல்ல பார்க்கிறோமே நேரிலிங்கே!
கஜா  புயலிங்கு  காடாக்கிப்  போட்ட   ஊர்கள்
நிமிர்ந்து நடமாட நீண்ட நாட்கள் ஆகுமய்யோ!

பட்டணத்தில் வாழ்ந்தாலும் பணத்தில் புரண்டாலும்
மனத்தினுள்ளே வனவாசம் பலபேர் அனுபவிப்பர்!
அப்படித்தான் கண்ணதாசன் அளித்திட்டார் வனவாசம்!
அத்தனையையும் மக்களுக்கு ஒளிக்காமல் உரைத்திட்டார்!

-பெருமழை விஜய், கூடுவாஞ்சேரி
 
**
தர்மத்தை காக்க 
அன்று வனவாசம் சென்றனர் - இராம, இலக்குவர்
அதர்மத்தை தகர்த்தெறிய 
அன்று வனவாசம் சென்றனர் - பஞ்சப் பாண்டவர்
தவம் இயற்ற
அன்று வனவாசம் சென்றனர் - முனிவர்கள்
கல்விக்காக சிறுவயதிலேயே 
இன்று செல்கின்றனர் வனவாசம் (ஹாஸ்டல்) - மாணவர்கள்
வேலைக்காக இளவயதில்
இன்று செல்கின்றனர் வனவாசம் (மாநகரங்கள்) - இளைஞர்கள்
விலங்குகளை வேட்டையாட
இன்று வனவாசம் செல்கின்றனர் - வேட்டைக்காரர்கள்
வனங்களை அழித்து குடியிருப்புகளாக்க
இன்று வனவாசம் செல்கின்றனர் - மக்கள்
வனத்தை காப்போம், மழை பெறுவோம்.

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**

திரைகடல் ஒடியே
திரவியம் தேடுவேன் என
வீடு விட்டு நாடு விட்டு
வீராப்பாய் சொல்லிச்
சென்ற பிள்ளை
அவனுக்காக
அன்னையவள்
கண்கள் பூக்கக் 
காத்திருந்து காத்திருந்து
கண்ணீர் நதியும்
கரையுடைக்க ..
தண்ணீர் இன்றி
தவமிருக்க ..
வருசம் பல ஆனதே வாழ்வும்
வனவாசம் ஆகிப்போனதே !
கண்பார்வையில் திரை போட
கருஙகூந்த்தலில் நரை விழ
பொன்னும் பொருளும்
வேண்டாம் தான் 
கண் மூடுவதறகுள் தன்னைக்
காண மகன் வருவான் என
நாட்களை எண்ணும்
நாதியற்ற அன்னை !
பெற்றவன் சொல்படி
கொற்றவன் இராமன் அன்று
வனவாசம் போனான் என்றால்
பெற்ற மகனுக்காக இன்று
பெற்றவள் காத்திருப்பதும்
வனவாசம் தானே !

**

ஊர் அற்று உறவற்று வெளியூர் பயணம் 
புது புது சொந்தங்கள் சேர்ந்து 
அன்பை பகிர்ந்து வேற்றுமை அற்று 
ஒற்றுமையுடன் ஆதரவாய் வாழ்ந்தால் 
வனவாசம் இனிமையே

- மஞ்சுளா புஷ்பராஜ்

**

வனவாசம் சென்றான் ராமன் ஒரு சொல்லுக்கு 
கட்டுப்பட்டு அன்று ! வனவாசம் ராமனுக்கு 
ஆண்டு பதினான்கு !
இருக்கும் வனத்தை நாசம் செய்கிறான் மனிதன் 
தினமும் இன்று ...யார் சொல்லியும் கேட்காமல் !
வனம் எல்லாம் பாலைவனம் ஆகுது நம் 
கண்  முன்னே ! வசிக்கும் இடம்  எல்லாம் 
அடுக்குமாடி வனமாக மாறுது ஒரு நொடியில் !
வனத்தை அழித்து விட்டு வான் உயர 
கட்டிடங்கள் கட்டி விட்டு மனிதன் 
திட்டுகிறன் வானத்தைப் பார்த்து 
ஏன் பொய்த்தாய் வானமே என்று !
பண வாசம் ஒன்று மட்டும் நுகரும் 
மனிதனுக்கு  இந்த  மண்ணின் வாசமும் 
வனத்தின் நேசமும் புரிய  எத்தனை ஆண்டு 
தேவை அவனுக்கு  வனவாசம் ?

- K .நடராஜன்
**

அவன் அள்ளித்தந்த‌ பாயசத்தில்
சூரியகுலம் தழைத்தது.
அளவாய்ப் பருகிய‌ பாயசத்தில்
ஒன்றாய் ஒன்றாய் இரண்டும்
அதிகமாய்த் தந்த பாயசத்தில்
ஒன்றுடனொன்றி இரண்டும்
மூன்று கருவறைகளில் நான்குமாய்
சூரியகுலம் தழைத்தது.

அதிகம் பாயசம் குடித்தவள்
போரில் செய்த வித்தைகளால்
வரமும் இரண்டு பெற்றாள்.

கூனல் கொண்ட முதுகில்
வாசம் கொண்டது விதியும்.
விட்டெறிந்த மணல் கட்டியில்
விதி கூனலின் வாசம்விலகி
வனம் சேர்ந்தது.

மண்விலகிப் பொன்மேவி
உழுத கலப்பையில் 
பிறந்தாள் பூமகள்.
சூரியகுலத்தவனைச் சூடினாள்
நிலமகளின் தலைமகள்.

அரியணைக்கு நாள் குறித்தான்
அரசன் அவன் ஆண்டவன்.
சூரியகுலம் வாசம் செய்ய‌
வனமும் நாளைக் குறித்தது.
தந்தவரங்கள் தன்னைச் சாய்க்க‌
முன்னேஅனுப்பிப் பின்னே விழுந்தான்.

வன வாசம் பிறந்தது..

செருப்பைத் தலையில் சுமந்து
நால்வரிலும் உயர்ந்து போனான்.
செருப்பும் ஏறியது அரியாசனம்.
சூரியகுலம் தள்ளிநின்று ஆண்டது.

அவன்வலியைத் தான் சுமக்க‌
தானும் வனம் சென்று
விண்ணுயர உயர்ந்து நின்றான்.

வேடுவனும் தோள் சுமந்து
நால்வரொடு ஐவரானான்.

வானர் குலத் தலைவனுக்கு
நீதிசெய்ய மறைந்து நின்று
தன்மீதும் கறைகள் கொண்டான்.

பூமகளும் அவள் மன்னவனும்
பிறப்பறிந்து பின்மறந்து துயில‌
வனமே சிலிர்த்துத் துளிர்த்தது. 

எச்சில் கனியும் இனித்தது
கிழவி அவள் விண்சென்றாள்.
கல்மிதித்துக் கால் பட்டு
தேவதையும் உயிர் பெற்றாள்.

எழுதிவைத்த கோடு தாண்டி
விதியால் பிழையைத் தானும்செய்தாள்
நிலமகளின் தலைமகள்.

துடிதுடித்த‌ பறவைக்கும் நீர்வார்த்து
அகிலம்வாழும் வேதம் சொன்னான்.

வானரப் படையும் தோள்சுமக்க‌
வாயுமகனே நெஞ்சில் சுமக்க‌
கடல் கடந்தான்.

பத்துத்தலை புத்தியும் பக்தியும்
பெண்ணால் கொண்ட‌ பித்தினால்
அவனோடு அவன் மணிமுடியும்
மண்ணில் புரண்டு வீழ்ந்தது.

வன வாசம் முடிந்தது..

சூரியகுலம் அரியணை ஏறியது.
சூரியகுலம் இன்னும் துளிர்த்தது.
அல்லவை பொங்க அந்திமங்கி
பூமகளும் தீக்குளித்தாள்
சூரியனே கறை பட்டான்.
பூமகளும் வனம் புகுந்தாள்.
பூமகளே நிலம் புகுந்தாள்.
சூரியன் மறைந்து சந்திரன் தோன்றியது.
யுகம் மறைந்து யுகம் பிறந்தது.
இப்படிக்
காப்பியமும் கதையை முடிக்கிறது..

வனவாசம் செல்லும் கதை
யுகங்கள் தொடர்ந்தும் நடக்கிறது
காப்பியங்கள் கதை கதையாய்ச் சொல்கிறது..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

ஒன்றினை யிழந் தாலொழிய 
ஒன்றினை யடைய முடிந்திடாது
துதிப்போனை காக்கும் கடவுளே 
துதிக்கும் மதியை யிழப்போனையும் காக்க மறப்பதில்லை ஒருபோதும் 
சபிக்கப் பட்டவன் மரணிக்கலாமிதை 
சபிக்கப் படாதவன் ஜீரணிக்கலாகுமோ

பரதன் முடிசூடினதும் இறப்பான் 
ஜாதகம் குறிப்பறிந்து கைகேயி சூச்சமத்தை கையாண்டாள் தாம்
ஈன்றதோ இருவரம் அதிலொரு
வரம் பரதன் நாடாள வேண்டும் மறு வரம் இராமன் காடேக வேண்டுமென 

பை நெல்லை நம்பி கை நெல்லை
இழக்க விரும்பாத கைகேயிக்கோ 
சதிகாரி பழிப்பெயரை சூட்டினாரது 
வனவாச மன்று மனவாசம் கொண்டே 
இனவாசம் எட்டுத் திக்கும் வீசிடவே
இராமனைத் தேர்ந்திடும் திட்டமதுவே

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்

**

ராமனின்  வனவாசம்,
சீதையின்  அசோக  வனவாசத்திற்கு  ஆரம்பம் !
பாண்டவர்களின்  வனவாசம் ,
அஞ்ஞானவாசத்தற்கு ஆரம்பம்! 
கண்ணதாசனின்  வனவாசம்,  
மணவாசத்தின் ஆரம்பம்!
கருவறையில்  பத்து  மாத  வனவாசம்,
வாழ்வின் ஆரம்பம்! 
பிறப்பு, 
நம் வாழ்வின் தேடலின் ஆரம்பம்,  
அதுவே கடவுள்  நமக்கு   அளித்த  
வனவாசமே !!

- பிரியா ஸ்ரீதர்  

**
குற்றங்கள் செய்வதும் தண்டனை பெறுவதும் விதிவிலக்கல்ல!
செய்யாத் தவறை செய்தது ஆக்கி,
சூதுதனை விதியென ஆக்கி,
வஞ்சம் சுமந்து! வாழ்வினை இழந்து!
பதினாண்காண்டுகள் வனத்தைக் காத்து!
மண்வாசம் நீங்கி வனவாசம் நுகர்ந்து!
வாழும் கலைகளை வனத்தில் சொன்னவன்!
உண்மை புருசன் அவனே என்ராமன்!

வாழ்வு நெறி தெரிய,
வையத்தில் வாழ்ந்த,
நீங்கா சிறப்பும்,
நேர்கொண்ட பார்வையும் கொண்டவன்,
வில்,அம்பு  வித்தகன் அவனே என் ராமன்!
கொள்கைகள் கொண்டு,
நல் நினைத்ததை நடத்து!
ராமனின் நேர்வழி நமக்கு,
நிச்சயம் எதிரொலி!

வனவாசத்தில் சொன்னது நம்வாழ்க்கையைச் சொல்வது!
வாழ்வின் நிலைகளை வரையறைச் செய்தது,
இதிகாசம் என்னும் இராமாயணமே!

-செந்தில்குமார், ஓமன்

**
                       
பெண்ணின் சிறுமதியால்
தாரத்தின் வசதிதனை
மறந்த இராமனின்
வனவாசத்தால் யாருக்கு
என்ன பயன்?
சுயநலத் தாயின் குரல்
மறுக்க திராணியற்ற
கணவன் பதவிக்கு
என்ன பெயர்?
நட்பு என்னும் விளக்கெடுத்து
கடல் தாண்டி சென்றாலும்
ஆணாதிக்க வெறியிலே
வனவாசத்தின் கோரத்தில்
தாரத்தின் அன்பறியாது
இளவலைத் தீ மூட்ட 
ஆணையிட்ட கணவனின்
ஊர்ப் பெருமையினை
எள்ளி நகையாட சீதைக்கு
அங்கு ஏன் உரிமை இல்லை?
தீக்குளிக்க வைத்த மடமை
பெண்ணின் அடிமைத்தனமோ!
தாயாகி நிற்கையிலே
தனியளாய்ப் பிரிந்த
பூமாதேவி புதல்வியின்
நிலை காண்கையிலே
இன்னொருமுறை
சீதா பிறப்பை
பெண்ணினம் காணாதிருக்க
 ஆணாதிக்கம் தொலையும்
வருங்காலத்தை எண்ணி
காத்திருக்கும் கணினி இயந்திரா!

-அல்லி 

**
ஆயிரம் பிறை கண்ட
முன்னோர் ஆசியில்லா வாசம்,
அன்புறு அன்னை தந்தை
ஆசானின் நேசமில்லா வாசம்,
உயர் பண்பினை போதிக்கும்
நல் உள்ளங்களில்லா வாசம்,
உள்ளத்தில் நிறைந்திருக்கும் உயிரனையாள்
உடன் இல்லா வாசம்,
செங்குழை நிகர் மழலைச் 
சொல்லமுதை கேட்டிடா வாசம்,
வெற்றிக் கொண்டாட்டங்களில் நல்
நண்பர்கள் உடனில்லா வாசம்,
காதல்,வீரம்,மானம்,
இழந்துவாழ் மதியில்லா வாசம்,
நலிந்தோர்க்கு உதவிடும் நல்
உள்ளம் இல்லா வாசம்,
கனியமுதாய், கற்கண்டாய், கறிச்சுவையாய், 
தேன்பாகாய், தெவிட்டாத தெள்ளமுதாய்,
இனிக்கின்ற நம் மொழியாம்
செம்மொழியை பேசிடாத வாசம்,
அகிலத்தின் இன்பம் அனைத்தும்
அள்ளி அள்ளித் தந்திடினும்,
நானிலத்தில் இவை  அனைத்தும்
நஞ்சைவிட கொடிய வனவாசமே.....

- ராம் விஜய்,

**

 
தசரதன்  சொல் மதித்து 
கைகேயியின்  ஆசையினை  பூர்த்தி செய்ய 
"கோ" பதவியினை துறந்த 
"கோமான்" ராமன்  சென்றது 
"வனவாசம்"..........
கணவன் அனுபவிக்காத  சுகத்தினை 
மனையொப்ப   துறந்த சீதாதேவி 
தெடர்ந்து சென்ற தம்பி  லக்ஷ்மணன் 
அனுபவித்தது   "வன வாசம்".....
விட்டுக்  கொடுத்தோர் 
தட்டுத் தடுமாறாமல் வாழ்வில் 
முட்டு  கட்டையில்லாமல்  
சிட்டு போல வாழ்வதுடன் 
கட்டுக்  கோப்பான  வாழ்க்கைக்கு 
தேவை இவையெல்லாம்  என 
சேவை கருத்துடன்  "ராமாயணம்"
உணர்த்திய  அற்புத  தத்துவமே 
"வனவாசம்" .

- பிரகதா நவநீதன்.  மதுரை

**
வனவாசம் விரும்புகின்றது என்  மனம் 
வனத்தில் சுவாசம் எங்கும் நல்ல வாசம் !

நாட்டில் வாழும் மனித மிருங்கங்களை விட 
காட்டில் வாழும் மிருங்கங்கள் கொடியதன்று !

பசுத்தோல் போர்த்திய புலிகள் பெருகிவிட்டன 
பண்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டன !

வனத்தில் சாதிமதச் சண்டைகள் இல்லை 
வனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை !

உண்ணும் உணவிற்கு பஞ்சம் இல்லை 
ஒருவரும் பொல்லாங்கு பேசுவது இல்லை !

விலங்குகளுடன்  நட்பாக   வாழலாம் 
பறவைகளுடன் நன்கு  பழகி மகிழலாம் !

செயற்கை உணவுகள் அங்கு இல்லை 
சிதைக்கும் நோய்களும் வருவதில்லை 

கோடிகள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை 
கேடிகளின் அடாவடி அங்கு இல்லை !

தொல்லைதரும் தொலைக்காட்சி இல்லை 
துன்பங்கள் துயரங்கள் அங்கு இல்லை !

வரப்புச்சண்டைகள் அங்கு இல்லை 
வாய்க்கால் சண்டைகள் அங்கு இல்லை !

பெட்ரோல் அங்கு தேவையே இல்லை 
பெரும் தொல்லை இல்லவே இல்லை !

மாசுக்காற்று காட்டில் இல்லவே இல்லை 
மக்காத குப்பைகளும் அங்கு இல்லை !

வனவாசத்திற்கு யாரும் வருந்த வேண்டாம் 
வனவாசம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் !

- கவிஞர் இரா .இரவி

**

இராமனும் ஈரேழாய் 
பாண்டவர் ஈராறாய் 
ஆண்டுகள் கழித்தினரே 
வனவாசமும் முடித்தினரே 
கதையெல்லாம் படித்தும்கூட 
இந்தமானுடம் ஆசையினை 
வீழ்த்த வழியொன்றும் 
கண்டிலரே!

- கு. இராமகிருஷ்ணன்

**
"ஆண்டுகள் பல ஆண்டுவிட்ட களைப்பில்  
ஆண்டவனிடமே  ஆட்சியைத்தருவோம்" 
அயோத்தியின் அரசன் தசரதன் !! 

அகிலத்திற்கு அறம்பொருள் சொல்ல வந்த பரம்பொருள்.. 
ஒரு தாரம், ஒரே தாரம் 
அழுத்திச்சொன்ன அவதாரம் !!
சின்னத்தாயின் எண்ணக்களிப்பில்
முளைத்தன விஷச்செடிகள்.
இரண்டு வரன்கள் , சங்கிலிக்குள் 
இறைவன் கரங்கள் !!

இவன் மனவாசம் கொண்ட 
சீதை .. மணவாசம் மாறாத நிலையில் ஒரு வனவாசம் !! 

முற்றும் தெரிந்தவன் 
முழுதும் தெளிந்தவன் 
பழுதற்ற பண்பாளன் 
பதினான்கு வருடங்கள் அவனுக்கு !!  

ஆனால் அதர்மம்  அக்கிரமம் 
அடர்ந்த காட்டிற்குள் 
நமக்கென்னவோ நாளெல்லாம் வனவாசம்!! 

- Dr. எஸ். பார்த்தசாரதி MD DNB PhD

**

பணவாசம் வந்தது  
பலரின் பாசம்  வெந்தது  
வனவாசம் செல்லாமலே   
மனமே   வனவாசமானது   
உண்மைகள்  பொய்த்தது   
போலிகள் மொய்த்தது  
நேர்மைகள்   மாய்ந்ததால்   
மனமே வனவாசமானது   
பண்பாடு  விட்டுப்போனது   
பல மனம்   கெட்டுப்போனது  
மனிதமே  அற்றுப்போனது   
மனமே வனவாசமானது   
ஜனவாசம் கூடியது  
விளை நிலம்  வீடானது   
விவசாயம் வீணானது  
மனமே  வனவாசமானது  
தாய் தந்தை மீது பாசம் போனது 
தன்னலம்  முற்றிப்போனது   
தர்மங்கள்   வற்றிப்போனது   
மனமே வனவாசமானது  
அன்று, ராமரின்  வனவாசம்   
காவியமானது
[இன்று வனம் மிருகங்கள் ஒன்றாக நீர் அருந்தும் தளம்] மனிதன் மட்டும் நீருக்காக நிலத்திற்க்காக மோதுவது [அன்றய மிருகமாக  மாறுவது என்றே கூறுவதாகவே ஆகி  
விட்டது] இன்று; வனவாசம் நிஜத்தில்  இல்லை, மனதில் வனவாசம்  வந்து பலநாள்  ஆகிவிட்டது  இது மாறுமா   என்பது ????? 

- களக்காடு வ.மாரி சுப்பிரமணியன் 

**
அனல்கோட்டைத் தாண்டியவன் அரக்க னாக
……….ஆரணங்கு சீதையையே அபக ரித்தான்..! 
மனம்போன போக்கினிலே வாழ வேண்டி
……….மதிகெட்ட இராவணனிச் செயலைச் செய்தான்.!
புனர்சென்மம் உண்டென்று புரிய வைக்க
……….பிறவியதை விளக்கிச் சொன்னான் ராமன்..!
வனவாசம் சென்றடைந்து வாழ்க்கை என்ன
……….வரலாறாய் உணர்த்தியது இராம காதை..!
.
இனமான உணர்வுகளும் நமக்குள் உண்டு
……….என்பதைத்தான் உரைத்தனநம் இலக்கி யங்கள்.!
மனவலிமை பெற்றிடவே யோகம் செய்வீர்
……….மனமடக்கச் சொன்னதுதான் பகவத் கீதை..!

மனதார அனைவரையும் வாழ்த்தக் கூட
……….மனப்பாங்கு வேண்டுமென ஒளவை சொன்னாள்.!
தினமொரு முறையேனும் நினைத்துப் பார்த்து
……….திருக்குறளை மறக்காது நினைவில் கொள்வீர்..!
.
மனக்குருடு நீக்குதற்கு மனதைக் கட்டி
……….மாந்தருக்கு வழிகாட்ட கவியாய் வந்து..
தனதான வரலாற்றை எடுத்துச் சொன்னான்
……….தான்பட்ட துன்பத்தை எழுதிச் சென்றான்..!

புனர்வாழ்வு உண்டென்று புரிந்து கொண்டு
……….பொன்னான உதாரணமும் பலவும் சொல்லி
வனவாசம் எனும்நூலில் அறிய வைத்தான்
……….வாழ்ந்தனுப வித்த(க)கவி கண்ண தாசன்..!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
வார்த்தைகள் தேடி
வனவாசம் சென்று
வகிடெடுத்து கொடுத்த
ஒரு கவிஞனின் கனவுகளை
கவனமாய் கடக்க வேண்டும்!

எது கவிதை?
எதிர் கேள்வி கேட்டு
இளக்காரம் செய்தல் கூடாது!!

இலக்கணம் இல்லாமல்
இறந்தே இருந்தாலும்
இலக்கியம் மீறாத
இதயத்தை இதமாய்
வருடிக்கொடுக்கும் வார்த்தைகளுக்கு
வலிமை அதிகம்...!!!

- தஞ்சை. ரீகன்

**

கூனியின் வஞ்சத்தால்
ராமன் தஞ்மடைந்தான்
கானகம்; இலக்கியம் இயம்பும்
இன்பக்கதையன்றோ!!
காமியர்களின் காமக்கடப்பால்
சின்னஞ்சிறு சிறுமிகளும்
சென்றிடனும் வனவாசம்
என்றொரு  நிலையின்றோ??
வனத்திலும் மோகவலை
வனமகன் விரித்தால்
எவ்விடத்து. செல்வதென்று
தவிப்பது பெண்ணல்லவா??
இந்நிலையே நீடித்தால்
கலங்குவது மனமல்லவா??
சற்றேனும் சிந்தித்தால்
நல்வழி பிறக்குமல்லவா??
பெண்ணே கொஞ்சம்
கேளடி கண்ணே....
தற்காத்து கொள்ள
தனித்துநில்!! துணிந்துநில்!!
பெண்மை போற்றிட
உறுதிகொள்!!! ஊக்கம் கொள்!!
காமத்தை களைந்திடு!!!
காமிகளை களையெடு!!!!

- கவிஞர் க. இராமலெட்சுமி@கவி தேவிகா, தென்காசி

**

ஈரேழு வருடம்தான் இராமனின் வனவாசம்
எங்களுக்கோ இப்பிறவி முழுவதும் வனவாசமளித்து
எங்களை விட்டு வானுலக வனவாசத்திற்கு
சென்ற தந்தையே வாடுகிறோம் பிரிவாலே..
அந்த காமாட்சியும் கை விட்டாலே
அம்மன் அவள் அருளும் கிட்டவில்லையே
நீங்கள் வளர்த்த மரமும் செடியும்கூட
உங்கள் வாசமில்லாமல் வாடிக்கிடக்கிறது தோட்டத்தில்
இல்லம்கூட வனவாசமாய் காட்சியளிக்கிறது எங்களுக்கு-
நீங்கள் இல்லாமல் மனங்களும் தத்தளிக்கிறது!
வேதாச்சலம் எனும் பெயர் கொண்டீரே
வாழ்க்கையின் வேதங்களைக் கற்று தந்தீரே
எங்களுக்கு பழிச்சொல் வாராமல் - நோயிலிருந்து
மீண்டுவந்து எங்களோடு வாழ்வேன் என்றுரைத்தவரே-
சொன்ன சொல் தவறமாட்டீரே -காலம்
உங்களை தவறுதலாய் கொண்டு சென்றதோ..?
எங்களைச் சுமந்து விளையாடிய தோள்கள்
எங்களைத் தூக்கி விளையாடிய கைகள்
எங்களின் பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டதே
எங்களின் வனவாசம்தீர நான் வேண்டுகின்றேன்
உதிரம் தந்த தந்தையே - கண்ணீரையே
உதிரமாக்கி வரம் ஒன்று கேட்கிறேன்
எங்களுக்கு மகனாக பிறந்து - மீண்டும்
எங்களோடு வாழும் புண்ணியத்தை தருவீராக....!

- சத்தீஷ் செம்மஞ்சேரி

**

அடிமை விலங்கொடித்து
சுதந்திரக் காற்றோடு
விடுதலைப் பெறத் துடிக்கும்
சிந்தனைகள்
வனவாசம் செய்கின்றன
பாண்டவர் போல

பகிரங்க பிரசாரத்தில்
முகம் காட்டும் வீரியத்தை ஒடுக்கி
சுரண்டிக் கொள்ள
வேடமிட்டு அலைகின்றன
ஏகாதியபத்திய எடுபிடிகள்

யாதும் ஊரே யாவரும் கேளிரென
தோள் சேர்க்க
துடிக்கும் மனங்களின் 
எல்லைச் சுருக்கி
ஒவ்வொன்றுக்கும் கோடு போடுகின்றன
ஒவ்வாமைகள்

சாதிகளுக்கும் மதங்களுக்கும்
ஒப்பனைச் செய்து
சாஷ்டாங்கமாய் அடி வீழ வைத்து
பிரதானப் படுத்திக் கொள்கின்றன
தம்மை

கடவுளர்களை விற்றுவிட்டு
வெற்று சந்நதியில் இருக்கச் செய்து
ஓலமிடுகின்றனர்
பிழைத்துக் கொள்ளும் யுக்தியை
கண்டுப் பிடித்தவர்கள்

மனிதர்க்கு மனிதர் 
மண்டியிட்டு வாழ்தலே
சுதந்திரமென்று முழக்கி
விடுதலையின்
விலாக்களை நொறுக்குகின்றனர்
அதிகாரம் கொண்டவர்கள்

உண்மை வாய்மை மெய்மையுடன்
அன்பு கருணை பாசம்
யாவும்
வனவாசத்தில் அலைந்துழல
பரிபாலனம் செய்கின்றனர்
கொடுங்குணச் சித்தர்கள்

ஒரு நாளில்
வனவாசம் மீண்டு வந்து
மனவாசம் மகிழும் வண்ணம்
ஆளும் காலம் வர
அடங்கி போகும் அடாவடி செய்யும்
சர்வதிகாரம்;

அப்போது
பரிபாலனம் செய்யும் மக்களின்
அதிகாரம் 
ஜனநாயகமாய் ஒளிரும்
யாரும் மகிழ...

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

சீதாராமனுக்கு மகுடம் சூட்ட
தயரதன்
பார்த்து பார்த்து நாள் குறித்திட்டு
வேர்த்து வேர்த்து விரைந்து வந்தனன்! 
தேர்ந்த பணிக்கான பெற்ற  வரங்களை 
சேர்த்திட்ட  நஞ்சினை சிந்திடும்  சீற்றரவாய் - மன்னன் 
சோர்ந்த நிலையில் கேட்டாள் 
கைகேயி !
வசந்த வாழ்வில் வந்ததே வனவாசம் !
கசந்த அநுபவம் தந்ததே 
மனகிலேசம் .

- கவிஞர் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

**

அகிலமே போற்றும் படியாய் ஆக்கினாள் ராமன் தன்னை
அவனை அனுப்பினாள் ஆரண்யத்திற்கு அதனால்தான்
வனவாசம் வெறுக்கத்தக்கது வாழ நினைப்பவர் விரும்பார்
வனவாசமல்ல அது ஒரு வரப்பிரசாதம் ஆனது ராமனுக்கு
‘ஆழி சூழ் உலகமெல்லாம் பரதன் ஆளவேண்டும் ராமன்,நீ
ஈரேழு ஆண்டு கானகம்செல்க, இது அரசனின் ஆணை”என்றதும்
மனமகலங்க்காத ராமன் மாறாக மகிழ்ந்தான் தாமரைமுகத்தான்
அவன் புகழ் அகிலமறிய காரணம் ஆகினள் கைகேகி என்பேன்
வனவாசம் சிறந்தது தவம்செய் ஞாநிகலோடு ராமன் செல்வது
வையம் புகழ் ராமன் அதை அனுபவித்தது கொடியது என்பேன்
ஆரண்யத்தில் ராமனுக்கு அரியாசனம் அமைத்தாள் அதனால்தான்
ராமன் ராமபிரானானான் ! ஸ்ரீராமன் ஆனான்! காரணம் ஆகினள்
வால்மிகியின் கைகேகி கொடிய தீயவள் ஆனால் நமது
கம்பர்பெருமானின் பார்வையில் நாடகமயிலாள் நல்ல தீயாள்
ராமனை தெய்வாம்சமாக அறியார் மற்றவர் ஆனால் சுபத்திரை  
அறிந்தாள் சுபத்திரை அனுப்பினாள் இலக்குனை ராமனுடன்
வனவாசமல்ல அது வரப்பிரசாதம் மரஉரிகள் அளித்தாள் அத்தோடு
அறிவுரை இலக்குவனுக்கு அளித்தாள்,” ராமந்தான் தெய்வமுனக்கு
ராமனை,சீதையை தந்தையாய் தாயாய்க்கொள்க எனறாள்
ராமன் தான் தெய்வாம்சம் எனதெரிந்தபோதும்
வானத்தில் தசரதன் காட்சி தந்து வருந்தியபோது தெய்வம்சமான ராமன்
கைகேகி தீயளல்ல அவள் என் தாய், பரதன் என் தம்பி என்றான்
தீமைசெய்வதுபோல் தோன்றினாலும் வனவாசம் நன்மைதான் “
வனவாசமல்ல அது ராமனை ஸ்ரீராமனாய் அக்கியது!

- கவிஞர் அரங்க கோவிந்தராஜன் இராஜபாளையம்

**

அயோத்தி மண்ணை ஆண்டவரும்
அர்ஜுனன் உள்ளிட்ட பாண்டவரும்
அந்நாளில் கண்டனராம் வனவாசம்!

வனவாசம் இராமன் கண்டதால்
வனத்திலும் ஒரு கோவில் வேண்டி
வளங்களை அழித்தொழிக்க
வரலாம் இங்கு இன்னொரு கூட்டம்!

வனங்கள்தமை அழித்தோ
சிலர் மனங்களில் பழி விதைத்தோ
வரவேண்டாம் இனியும் புது ஆலயங்கள்!
வந்தவரை போதும் சில கலவரங்கள்!

வனவாசம் கண்ட இராமா
வணங்குகிறோம் உன்னை!
மத பேதம் மறையும்படி
மாற்றிடுவாய் இம்மண்ணை!

 - நிலவை.பார்த்திபன்

**

இரவு வழிந்தோடும் இடுக்குகளின் இடைவழியில் -
கனவுலக சஞ்சாரத்தில்
வனச்சரகத்தில் நித்தம் நிகழும் நட்சத்திர வேட்டை

இராமரும் பாண்டவரும் திரிந்த காடுகள் தோறும்
திரவுபதிகளாய் துகிலுரியப்படும் - ஆலை அரக்கர்களால்

முகிழ்ந்து மறையும் உண்மையின் வாசம்,

குக னொடு ஐவரானோம் என்று கூறிய ராமனது வாக்கு

அகலிகை கற்களில் எதிரொலிக்க - வனம் எல்லாம்
மறலிகையில் - இப்போது

காங்க்ரீட் காடுகளில் ஒதுக்குப் புறமான - ஒற்றை அடுக்கு வீடுகளில், ஜங்கிள் புக் மோக் லீயை பார்க்கின்றனர் - வனம் அழிக்கப்பட்ட வம்சாவளியினர், ஒரு காலத்தில் வனப் பிரஸ்தம் - வாழ்க்கை முறை என்று வரலாற்றில் படித்து - இளைப்பாறும் எதிர்காலம் மறந்து தான் போகும் வனவாசத்தையும்-இயற்கை வாழ்வையும்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
பருத்திச் செடியின்
தவத்தால்
விளைந்தவெண்பஞ்சு,
நூற்பாலையால்
நூலாகத் திரிந்து,பின் துணியாக மாறி
மானம் காபபது போல்,
பிள்ளைகள்
பிறந்த பெருமையை
தனித்த வாழ்வோடு
சிறந்து
குடும்ப உறவுக்குள்
திரிந்து
ஒழுக்கம் காத்து
குல உயர்வைப் போற்றும் நிலையே!
இறை தேடும்
பெற்றோருக்கு
இரை கூட்டும்
மகிழ்ந்த வனவாசம்...

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

அன்றைய தமிழகம்
மகனின் மணத்தின் பின்
மகிழ்வோடு இறை தேடி
வனவாசம் ஏற்றனர்;

இன்றைய தமிழகம்
துன்பத்தோடு கறை கூட்டி
சனவாசம் செய்கிறது,

பொய்யான வாழ்வும்,
வயதிற்கு மீறிய செயலும்,
குருவைக் கொல்லும் சீடனும்,
தெய்வத்தைத் தூற்றும்
துச்சர்களும்,
நுட்பம் தந்த திருப்பமும்
சத்திலா உணவும்
குடியிலா இளையோரும்
மருமகளாயிரா மகள்களும்,
மகளாயிரா மருமகள்களும்,
பொன்னான நிலம்
புண்ணாகி மனையானதும்,
மேடைப் பேச்சை வீட்டிலும்,
வீட்டுப் பேச்சை மேடையிலும்
முழங்கும் அரசியல் வியாதியாலும்,
புதுப்புது கிருமிகளைப் பரப்புவதும்,
தமிழன் நானென்று,
தமிழன் பண்பாட்டைக் கெடுப்பவனும்,
எல்லாம் விலை போடும்
கொள்கை கெட்ட குடிகளும்,
இருக்கும் இடத்தில்
வனவாசம் தேவையில்லை
வாழ்வதே..............

- முகில் வீர உமேஷ்,  திருச்சுழி

**
மழை பொய்த்து போனதால்
விவசாய பூமி
வற்றி போனது;
நீ 
என்னை பிரிந்து சென்றதால்
 வாழ்க்கை வனவாசமானது;

மரங்களின் கிளைகளை
வெட்டினாா்கள்;
கிளைகள் இனி
துளிா்விடும் வரை
மரங்களுக்கு
வனவாசம் தான்;

பெற்ற குழந்தைகளைப்
பிாிந்து பணத்தை
தேடிச்செல்லும்
பெற்றோர்களின் 
மணிதுளிகள் 
வனவாசம்;

பூமிக்கு கிரீடம்
சூடியது காடுகள்;
வனவாசம் சென்ற
இராமருக்கு 
பட்டாபிஷேகமே
கிரீடங்களாக;

வரலாற்றுப்பின்னனி
பழங்குடியினர்
பாரம்பரியத்தை மறந்த
மனிதர்கள்
வனவாசமாக சுற்றுலா
செல்கின்றனர்;

வனவாசம் சென்ற போது
தேன் கூடுகளைக் காண
நோிட்டது;
அப்போது உன் பிரிவால்
அதுவும் நத்தை கூடாய் 
காட்சி அளித்தது;

காடுகளின் ஆயுள்
முடிய முடிய;
ஊா்களுக்கு 
விலங்குகள்
வனவாசமாக வலம்
வந்தன;

கிராமங்களில் ஊா்களுக்குச் செல்ல
பே ாக்குவரத்திற்காக
காத்திருக்கும் 
பயணிகளின் 
நேரம் வனவாசம்
போன்றது;

திரேதாயுகத்தில் முடிந்து இராமரின்
வனவாசம்;
கலியுகத்தில் தொடங்கியது
என் கவிதை வாசம்; 
வார்த்தை இல்லை என்னிடத்தில்
வனவாசம் செல்வதாக
பொய்யுரைக்க;

- குரு சுரேஷ். ப, சீா்காழி

**

கட்டிலும் மேத்தையும் இன்றி
அரச உபசரிப்பும் இன்றி
அடர்ந்த மரங்களுக்கும்
படர்ந்த கொடிகளுக்கும் 
கொடிய விலங்குகளுக்கும் 
இடையில் இராமன் வாழ்ந்தது  
வனவாசம் என்றால்?

கைபேசியும் கரண்ட்டும் இன்றி
தண்ணீரும் உணவும் இன்றி
சாய்ந்த மரங்களுக்கும் 
வீழ்ந்த கொடிகளுக்கும் 
இடையில் வாழ்ந்த 
புயல் பதித்த நம் மக்கள் வாழ்ந்ததும் 
வனவாசம்தான்!

கைகேயியால் வனவாசம் 
நிகழ்ந்தது இராமனுக்கு 
கஜாவால் வனவாசம் 
 நிகழ்ந்தது நம் மக்களுக்கு!

வாழ்ந்த மரங்களுக்கு 
நடுவில் வனவாசம் 
செய்த இராமனுக்கு 
தேனும் திணைமாவும்
கொடுக்க குகராசன் வந்தான்!
வீழ்ந்த மரங்களுக்கு 
நடுவில் வாழ்ந்த 
நம் மக்களுக்கு உணவு கொடுக்க
எந்த மகராசன் வந்தான்!

காட்டில் மரங்கள் சாய்ந்தால்
வீட்டுக்கு விறகாகும்!
வீட்டில் மரங்கள் சாய்ந்தால் 
நாட்டுக்கே இழப்பாகும்!

இராமனே காட்டிற்குச் சென்றபின்
வீட்டுச் சிறையில் இருப்பதா என 
காட்டுக்குப் போன சீதையை 
சிறைபிடித்தான் இராவணன்!
பெண்ணுக்கு 
எங்கும் சிறைவாழ்க்கைதானா?

இராமன் வனவாசம் போக
காடாவது இருந்தது!
மனிதா!
நாம் வனவாசம் போகவாவது
காட்டை காப்போம்!

-கு.முருகேசன்

**

மானிடராய்ப் பிறத்தல் அரிதென்பது பொய்யானதோ
கூனிக் குறுகி மண்டியிட்ட அடிமைத்தன மனிதராலே
மேனி அச்சமின்றிக் கையூட்டுப் பெற்று தொடர்ச்சியாக
நாணி சிறைவாசம் செல்லும் வனவாச மனிதர்களாலே

சுயநலச் சேறு எங்கும் நிறைந்திருக்கும் நிலை இங்கே
முயற்சிக்கு வேட்டு வைத்து பொறாமைத் தீ உமிழும்
பயமற்ற மனிதர்களின் முன்னே நடமாடுவதை விட
நயமான தனிமை தரும் வனவாச வாழ்வு இனிக்குமே

பாலியல் படுபாவிகளால் சேதப்படும் பெண்கள் நிலை
ஆலிலை நீர்போல் கண்டும் காணாமலும் செல்கின்றனர்
தாலி வேலியென்று தரங்கெட்டு துன்புறுத்துகின்றனர்
நீலிக் கண்ணீர் வடிப்பதைவிட வனவாசம் செல்லலாமே

அழகு நகரை அலங்கோலமாக்கி குப்பை மோடாக்கிய
பழகு மனிதர்கள் பரவிக் கிடக்கும் பண்பாட்டிலே
சுழலில் சிக்கி சின்னாபின்னமாவதை விட தனிமை
நிழல்தேடி வனவாசம் சென்றால் வளம் பெறலாமோ

நாட்டு நடப்புகளில் நல்லவர் வாழ இடமில்லை இங்கே
ஆட்டு மந்தையாய் சிந்திக்காமல் சிறகடிப்பதாலே
கூட்டுக் கொள்ளையில் பங்கு பெறுவது விடுத்து
பூட்டு ஏதுமில்லா வனம் வாசம் செய்ய நல்லதாகுமோ

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

கண்டோரையெல்லாம் மயக்கிய வனதேவதைக்கு கண்ணேறு பட்டது/
அவளின் அழகில் மயங்கினர் துச்சாதனர்/ துகிலுரியப்பட்டவளுக்கு அபயமளிக்க
பரமாத்மாக்களுக்கு  நேரமில்லை /
ஆயிரம் வருடங்களில்
கான்க்ரீட்  கூடுகளுக்கு நடுவே அவளை கிடத்தியிருந்தனர்/
அவள் மூச்சுக்காற்றுக்கு போராடித் தவித்தாள்/
நூறாண்டுகள் நொடியில் கழிய/
அவளுக்கு கல்லறை கட்டி முடித்து/
வனவாசம் என்று பெயரிட்டு ஒப்பாரி வைத்தழுது வீழ்ந்தனர் வீணர்கள்.

- தேவி பிரபா

**

தந்தை சொல்லே வழியென்று 
துறவறம் ஏந்தி மறுப்புகளன்றி 
தரணி போற்ற வனவாசம் சென்ற 
தெய்வீக மகனே ராம அவதாரம் !

அவதார நாயகன் வீர மனிதன் 
அன்பில் திளைக்கும் புனிதன் 
மண்ணில் பிறந்த பெருமாள் 
மனிதகுல நீதிதேவன் இராமா !

இராமகுல வேந்தே வில் ஏந்தி 
இராவண அரசை வென்று 
அவதார நோக்கம் வெற்றியுடனே
அகிலம் போற்றும் ராமகிருஷ்ணா !

வேந்தன் மகன் மக்கள் பயனுற 
காரியங்கள் செய்த இராமனே 
காட்டில் வனவாசம் நம் பாரத  
மண்ணில் ராமன் மக்களுக்கே !

- கா. மகேந்திரபிரபு  - சிவகாசி

**

வனம் நமக்கு வரம் !
வனம் இன்றிப்போனால் மனித இனம் இன்றிப்போகும் !
வானத்து ஊற்றை
வற்றாமல் தரும் வனம்தான்
வாழ்வதற்கு காற்றை
வடிகட்டிதருகிறது .!
வாழ்வதற்கு பயன் பல தந்து
வாழ வழி காட்டுகிறது.!
வனம் பல்லுயிர் களின் வீடு !
வனம் புள்ளினங்களின் கூடு !
வனத்தில்பிறந்தான்
ஆதிமனிதன் !
வனத்தை அழிததான்
இன்றைய மனிதன் !
வன வாசத்தை மறுத்தான்.
வளத்தை எல்லாம் இழந்தான்
வனத்தைக்காக்க  மரம் வளர்ப்போம் !
வனத்தை நாம்
நேசிப்போம் !
வனவாசத்தை நாம்
சுவாசிப் போம் !

- கே.ருக்மணி, கோவை 

**
நேற்றுகளைக் கருப்பையில்
சுமந்தவண்ணம் 
நாளைகளின் பிரசவம்
நோக்கிய பயணம்

நடுராத்திரி
மழை புனிதம்

பூவில் கண்சாய்த்து
கனாக்காணும்
வண்ணத்துப்பூச்சி

நிலா இரவு
ஒற்றைக்கண்
தேவதை 

புற்றாய் மாறிய
தேகத்தில்
கம்பளிப்பூச்சிகள்

கலைத்துக் கலைத்து
ரம்மி விளையாடும்
கடவுள் வெளிறுகிறார்
சாத்தான் கையில்
பதின்மூன்று கார்டுகளும்
ஆறுவிரல்களும்

எவளோ ஒருத்தியின்
மூக்கிலிருந்து
வழிந்த ரத்தம்
நீலமாகி 
கடலாய் வழிமறிக்கிறது

தங்கநிற மானின்மீது
விதி சவாரி செய்கிறது

வானத்தைப் பிழிந்தெடுத்து
தோளில் போட்டுக்
கொள்கிறான்
ஒருவன் 

கொடியில் காயப்போட்ட
இரவுகளிலிருந்து
கண்ணீர் சொட்டும்
சப்தத்தில்
தூக்கம் கலைந்து
முனகுகிறது காலம்

வனவாசத்தில்
சத்தியத்தின் நெருப்பு
சிம்மாசனத்தில்
தற்காலிகச் செருப்பு

- கவிஞர் மஹாரதி

**
குணவாசம் அதிகரித்து
குற்றவாசம் குறைத்திடுவோம்
மனவாசம் சிறந்திடவே
அன்பாலே நிரப்பிடுவோம்.

தினவாசம் சிறந்திடத்தான்
தில்லை நாதனை வணங்கிடுவோம்
இனிமை வாசம் நுகர்ந்திடவே
இதயத்தில் உண்மை நிரப்பிடுவோம்.

பணவாசம் அதிகம் வந்திடினும்
பண்புகள் சிறக்க வலம் வருவோம்
சிறைவாசம் தேடா மனத்துடனே
சிறப்புடன் வாழப்பழகிடுவோம்.

இல்லறவாசம் இன்பம் பெற
இறையனார் திருவடி தொழுதிடுவோம்
வனவாசம் தேவையா எனவினவும்படி
வலிமையாய் குடும்பம் நடத்திடுவோம்.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**

தாயின் கண்ணீர் துளிகள்
கூற வார்த்தைகள்...!!
சமமற்ற சமத்துவ சமூகம்
வீசிய வார்த்தைகள்...!!
காலத்தை வென்ற வாகையுடையோர்
கூறய வார்த்தைகள்..!!
வாக்குறுதியில் மலடாய் சிரித்த
மாய வார்த்தைகள்...!
கனவுகள் காணச் சொன்ன
கலாமின் வார்த்தைகள்...!
காமுகன்கள் சிதைத்தெறிந்த
மழலையின் வார்த்தைகள்..!!
இவையாவும் சங்கமித்தே
ஒன்றை குறித்தே-என்னுள்ளே
தொலையாத வார்த்தையானதே...!!!

- நுண்மதியன், வானமாதேவி

**

புருவ முயர்த்தி மனதை மயக்கியே
   பூவை காதலை தந்தாளே
பிரிவு மட்டும் பரிசாய் கொடுத்தவள்
   பிரிந்து வேதனை தந்தாளே
இரவில் விழிக்க மறந்து போயின
   இன்பக் காதலின் கனவுகளும்
விரக தீயும் மனதில் புகுந்ததால்
   வெளிச்ச மிழந்தது வாழ்க்கையுமே!

ஆசைக் கனவில் முளைத்தக் காதலும்
   அழுகை மட்டுமே கொடுத்துவிட
பேசி கொஞ்சி இருந்த நினைவுகள்
   பிரிவின் விலியினை நினைவூட்ட
பாசம் வைத்த அழகு பெண்ணவள்
   பாதி வழியிலே விலகினாளே
வாச மில்லா பூவைப் போலவே
   வாழ்க்கை யானது வனவாசம்

- கோ.வேல்பாண்டியன், வேலூர்

**

வாசமுள்ள வனமிருந்தும்..நாம்
வாச மங்கு செய்வதில்லை.
'வன'வாசம் என்ற பேரிட்டு
வருத்தப்படும் வார்த்தையாச்சே.

நாட்குறித்த நாளன்று
நாட்ட ரசன் ஆகாமல்
நாடு விட்டு நகரும் அவலம்
நடந்ததொரு காலம் அன்று.

வருத்தப்பட ஏதுமில்லை..
வாழ்க்கைப் பாடம் கற்றங்கே
வன வாசம் சென்ற மகன்
வரும் சந்ததிக்கு உரைத்தானே.

வருடக் கணக்கிலிங்கே
வேண்டாமே வனவாசம்.
வார மொரு முறையேணும்
விலகணுமே ஊடகத்திலிருந்தே

அவசர உலகிது.
அறிவியல் ஆட்சியது
ஆன்ம பலம் பெற..
ஆரண்ய வாசம் அவசியமன்றோ

துரத்தும் தொழில்நுட்பம்
தொலைத்த உறவுகள்
திரும்பப் பெறவே..
தனிமைவாசம் தேவையுமன்றோ?

- அகிலா ராமசாமி. பெங்களூரு

**
                                   
வாழ்க்கையே இங்கு வன வாசந்தான்
வாழத்தெரியாத பல பேருக்கு!
மகிழ்வதற்கு இங்கு நிறைய உண்டு
மனந்தான் இல்லை மனிதர்களுக்கு!
வெயிலும் மழையும் இயற்கையின் கொடையென்று
விளம்பினாலும் சிரிப்புதான் இங்கே!
எதற்குத்தான் பூமியில் பிறந்தோமென்று
எப்பொழுதுமே சலிப்பார் இவர்கள்!
வானின் மீனும் வண்ண நிலவும்
தந்திடும் இன்பம் அறிய மாட்டார்!
காற்றும் மழையும் கலந் தடிக்கையிலே
குளிரும் நிலையினைக் கொண்டாட  மாட்டார்!
உலகம் எங்கோ போய்க் கொண்டிருந்தாலும்
ஊரைச் சுற்றியே இவரின் கவனம்!
இருப்பதை எண்ணி இன்பம் கொள்ளாமல்
இல்லாததற்கு வருந்தியே அழுவார்!
கடலும் மலையும் கவிந்த வானமும்
எவ்வளவு அழகென்று எப்பொழுதும் நினையார்!
கடலின் அலையைப் பார்த்த படியே 
கண்ணீர் சிந்தி அழவே செய்வார்!
பிறந்ததே உலகில் வாழ்ந்திட வென்றே
பிரசங்கமே செய்தாலும் உணர்ந்திட முயலார்!
ஆறும் வயலும் அற்புத ஏரியும்
காணும் போதே கண்களுக்கு விருந்து!
பாடும் பறவையும் ஆடும் மயிலும்
பலநாள் மனதில் நிழலாய்த் தங்கும்!
மண்ணின் ரோமமாய் மரங்களைப் பார்க்கையில்
மனதெலாம் பரவும் மகிழ்ச்சி அலைகள்!
ஓடும் ரயிலில் ஓடும் மரங்களை 
ஒன்றாய்ப் பார்த்தால் உளமே கிறங்கும்!
இவற்றை மறந்து எதையோ நினைந்து
இருப்போர் தாமே உலகில் அதிகம்!
வாழ்க்கையே இங்கு வன வாசந்தான்
வாழத்தெரியாத பல பேருக்கு!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com