கடந்த வாரத் தலைப்பு ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை கற்றவர் உரையைக் கணக்காய்ச் சொன்னேன்
கடந்த வாரத் தலைப்பு ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

பாப்பா சொல்லும் 
கதைகளால் 
நிரம்பிக்கொண்டிருக்கிறது, 
அவள்
முன்னிரு பற்கள் விழுந்ததால்  
வந்த இடைவெளி!

- சுபர்ணா

**

காட்சியின் தூரமே கண்களின் இடைவெளி ! 
கனவின் தூரமே உறக்கத்தின் இடைவெளி !
வாழ்வின் தூரமே இறப்பின் இடைவெளி !
மௌனத்தின் தூரமே வார்த்தையின் இடைவெளி !
அன்பின் தூரமே நமக்கான இடைவெளி !

- கோபிநாத் பாரதி

**
கல்லுக்கும் மண்ணுக்கும்
கடலுக்கும் காற்றுக்கும்
ஆகாயத்திற்கும் பூமிக்குமான
இடைவெளியில் 
இயங்கும் உயிர்கள் 
காண்பது ஒன்றாயினும்
கண்களுக்கு இடையே 
இடைவெளி ...
காலடி வைக்கும்
கால்களுக்கு இடையே
இடைவெளி ...

பகலும் இரவுமாக
பனியும் மழையுமாக
பருவங்கள்  இடையே  இடைவெளி....
பயிர்கள் வளர்ந்திட
பாத்திகளுக்கு இடையே இடைவெளி......
பயணம் செல்ல
பாதைகளுக்கு இடையே
இடைவெளி.....

சொற்ப் பிழையின்றி வாசிக்க
சொற்களுக்கு இடையே
இடைவெளி .....
கற்றவர் கல்லாதவர்
உற்றவர் அற்றவர் இடையே
இடைவெளி ....
வற்றாத நதிக்கும் 
வறண்ட பூமிக்கும் இடையே
இடைவெளி........

தாத்தாவுக்கும் பேரனுக்கும்
தலைமுறை இடைவெளி ....
தடையின்றி வந்து சேரும்
இடைவெளி பற்றியே
இதயத்திலிருந்து 
இறங்கிக் கொண்டே
இருக்கும் இடைவிடாத வரிகள் !

- கே.ருக்மணி

**
பணத்திற்க்கும்,
நல்ல குணத்திற்க்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
அன்பு-பாசத்திற்க்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
நிறைந்த மனத்திற்க்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
பெறுகின்ற மதிப்பிற்க்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
அடைகின்ற பதவிக்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
கிடைக்கின்ற உதவிக்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
வாங்குகிற மருந்திற்க்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
வேண்டுகிற மகிழ்ச்சிக்கும்
இடையே,

பணத்திற்க்கும்,
அதைப்பெருக்க எடுக்கின்ற முயற்ச்சிக்குமிடையே,

பணத்திற்க்கும்,
நிலைத்த வசதி-வாய்ப்புக்கும்
இடையே,

இருக்கின்ற இடைவெளி;
நடக்கின்ற போராட்டம்,
அதுவே வாழ்க்கை

- ம.சபரிநாத்,சேலம்

**

தாய்மார்பில் பாலூட்டித்  தமிழை  யூட்டித்
    தமிழ்ப்பண்பை  ஒழுக்கத்தை   அதிற்க  லந்தே
சேய்தன்னை  அன்பாலே  வளர்த்த  தெல்லாம்
    செப்புகின்ற  கனவாகிப்  புட்டிப்  பாலை
வாய்புகட்டித்  தாதியவள்  காசுக்  காக
    வளர்க்கின்ற  கடமையாலே  குழந்தை  யிங்கே
தாய்மொழியைப்  பாசத்தை  மண்கு  ணத்தைத்
    தாம்மறந்தே   இடைவெளிதாம்  பெருகிற்  றின்று !

பெற்றோரும்   சுற்றமுடன்  உடன்பி  றந்த
    பெருமுறவும்  இணைந்ததொரு  குடும்ப  மாகப்
பற்றுடனே  இன்பதுன்பில்  பங்கு  கொண்டு
    பகுத்துண்டு  வாழ்ந்ததெல்லாம்  கனவாய்ப்  போகப்
பெற்றவரை  முதியோரின்  இல்லில்  விட்டும்
    பெயர்சொல்லும்  உறவுகளைத்  தள்ளி வைத்தும்
வற்றிட்ட  பால்மடியாய்ப்  பாச  மின்றி
    வாழ்கின்றார்  இடைவெளிதாம்  அமைத்துக்  கொண்டே !

பக்கத்து  வீட்டாரின்  முகத்தைப்  பார்த்துப்
    பழகியவர்  குடும்பமுடன்  தாமு  மொன்றித்
தக்கதொரு  நட்புடனே  இருந்த  தெல்லாம்
    தமிழ்பேசி  மகிழ்ந்ததைப்போல்  கனவாய்ப்  போகக்
குக்கிராமம்  என்றபோதும்  குடிசைக்  குள்ளே
    குத்துக்கால்  இட்டமர்ந்து  தொலைப்பே  சிக்குள்
பக்கத்து  வீட்டாரை  முகநூல்  தம்மில்
    பார்க்கின்ற  இடைவெளிதாம் வந்த  தின்று !
                
மண்சட்டி   விறகடுப்பில்   உலைகொ   திக்க
    மணம்வீசும்   கஞ்சியொடு   சோற்றை  யுண்டு
கண்காது   தெளிவாக   நேய்க  ளின்றிக்
    கல்போன்ற   வலிமையுடன்   வாழ்ந்த  தெல்லாம்
மண்மீது   மாறியின்று   மேலை  நாட்டின் 
    மாசான   உணவுண்டு   நோயைப்   பெற்றும்
பண்பாட்டை   ஒழுக்கத்தைத்  தொலைத்து  விட்டே
    பாழானோம்  இடைவெளியைப்  பெருக்கிக்  கொண்டே !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**
நெருக்கமாய் இருந்த 
நம் இருவருக்கும்
இடையில் விழுந்த 
இந்த வெளியை
உனது அகங்காரம் கொண்டு
நீ கொஞ்சமும்
எனது அகங்காரம் கொண்டு
நான் கொஞ்சமுமாய்
ஊதிப் பெருக்கிக் 
கொண்டே போகிறோம்..

முதலில் யார் 
இறங்கி வருவது
என்பதில் மட்டும்
உடன்பாடு ஒன்றை 
எட்டி விட்டால் போதும்..

ஊதிப் பெருத்து நிற்கும்
அந்த இடைவெளி
ஊசி குத்திய பலூனாய்
நொடியில் மாயமாகி விடும்..

இந்த முறையும் நீயே 
பிடிவாதம் தளர்த்திப்
பேசி விடேன்..ப்ளீஸ்..!

- ஆதியோகி

**
என் னுருவமதை உன் 
கண்ணில் நான் பார்க்கிறேன் 
உன் னுருவமதை என் 
கண்ணில் நீ பார்க்கிறாய் 
நம்பிக்கை நிலவுகிறது 

உன் மனக் கண்ணில் நான் 
என் மனக் கண்ணில் நீ நிஜமாகவே 
இருக்கின்றோமா எனும் சந்தேகம்
இருவர் நெஞ்சிலும் அலைமோதிட 
இடைவெளி மதிலாகி நிற்கிறது 

ஆதலால் நம்முடைய உறவு
தாமரை இலையில் விழும் 
மழை துளிபோல் ஒட்டாது தெரித்தோடிடுமோ இல்லை 
சிப்பியின் மடியில் விழுந்து 
முத்தாக பிறந்து ஜொலிக்குமோ

இருவருக்கும் உள்ள இடைவெளி
சூறாவளி யாகிடுமோ இல்லை ஆறாவலி யாகிடுமோ என்னும் 
மனக்கிலி பிடித்து க்கொண்டு 
பலியாக் கப்போவது யாரோ 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்", மும்பை

**


சலவை செய்த துணியை மீண்டும் நனைத்து
   காயவைத்து அணிந்த  கலாச்சாரம் அந்த காலம்
 சலவை செய்து தேய்த்து மடிப்பு குலையாமல்
   சேலை வேட்டி  சட்டை அணிவது இந்தக்காலம்
 இடைவெளியில் நாகரிகம் வந்ததாலே வந்தகோலம்
   எல்லாமே சாத்திரமென்பதை மாற்றினோம் நாம்
 இடைவெளிதான் காரணமாய் அமைகிறது இதற்கு
    இதனை வரவேற்பதா? தவறென்பதா?

முல்லைக்கு தேர் கொடுத்தான் வேட் பாரி மழை
  முகிலினிலும் பெயர் படைத்த உபகாரி
சொல்லுக்கு தலை கொடுத்தான் அருள் மீறி
  அந்த வள்ளலாம் குமணன் என்ற அரசன்
மயிலுக்கு போர்வை போற்றினான் மன்னன் பேகன்
  மகிழ்ச்சியாய் சொல்கிறது  தமிழர் வரலாறு

பாரிக்கும் நமக்கும் பார்வையில் வித்தியாசம்
  மன்னன் விருமிபினால் நிரந்தர கொழு கொம்பை
அமைத்து மகிழ்ந் திருக்கலாம் அதுதான்  சரியாகும்
  அவருக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அது தானே!
பேகனும் அது போல மாற்று வழிசெய்திருக்கலாம்
   குமணமும் தலையை கொடுத்திருக்க வேண்டாம்
பேகனுக்கு நமக்கும் இடைவெளி அதுதான் அதனை
   குளிராத சரணாலயம் அமைத்து மகிழ்ந் திருக்கலாம்
காலத்துக்கு காலம் கருத்து மாறும் இதுதான் உண்மை!

- கவிஞர் ஜி.சூடாமணி

**

ஒட்டியத் தென்னையாய் 
ஒன்றாக ஆற்றங்கரையில் 
அழகாய்ச் சாய்ந்து. 

அந்த அந்திச் செவ்வானத்தின் 
அழகிய நிலவை 
இடையினில் ஏந்தி. 

நாறைப் பறவைகள் நானூறு 
நடு வானில் பறந்திட. 

மஞ்சள் முகில்கள் 
மதியின் அழகில் மயங்கி 
கொஞ்சிக் கொஞ்சி 
கொள்ளை அழகோடு 
துள்ளித் துள்ளி மிதந்திட. 

அன்பை அள்ளி அள்ளி 
ஆற்று நீரால் என்மேல் 
நீ தெளித்திட. 

ஆசையில் 
"ஏரிக்கரையின் மேல் 
போறவளே பொன்மயிலே" 
என்று நான் பாட. 

பதிலுக்கு 
"மாமன் ஒரு நாள் 
மல்லிகைப்பூக் கொடுத்தான்" 
என்று நீபாட. 

அப்படியே இருவரும் 
இருட்டும்வரையில் அங்கேயே 
அமர்ந்து ரசித்த காலத்தை 
கனவில் சுமந்துபடி 
இன்றோடு பத்தாண்டுகள்
கடந்தாலும். 

அதே ஆற்றங்கரையில் 
காத்திருக்கிறேன் 
நீ மீண்டும் வருவாய்யென!

- கவிஞர் பி.மதியழகன்

**
வாழ்க்கையின் இனிமை உறவில் அறியலாம் 
உறவின் மேன்மையை பிரிவில் அறியலாம் 
அந்த பிரிவு என்பது பிடிவாதத்தால் வரலாம் 

கோபத்திலே சிலநாள் மூழ்கி - பெரும் 
குழப்பத்திலே பலநாள் இருப்பதேனோ? 

ஆசையிலே சிலநாள் திளைத்து 
அழுகையிலே பலநாள் இருப்பதேனோ? 

பிடிவாதத்திலே சிலநாள் இருந்து 
பிரிவிலே பலநாள் தவிப்பதேனோ? 

பிடிவாதத்தை விடுவோம் பிரிவினைத் தவிர்ப்போம் 
மனதினை திறப்போம் மக்கட்பற்று போற்றுவோம் 

- கோ.வேல்பாண்டியன்

**


கருத்துரைக்கும் உரிமை
பிறரை பாதிக்காதிருக்க
இடைவெளி;

பொருள் சேர்க்கும் உரிமை
பிறர்க்குரியதை பாதிக்காமலிருக்க
இடைவெளி;

விருப்பம்போல் வாழும் உரிமை
பிறர் வாழ்வை அழிக்காதிருக்க
இடைவெளி;

இடைவெளிகள் வேண்டும்.
இடைவெளிகள் வேண்டாம்,
நம் மனங்களுக்கிடையே .

- கு.காந்தி ராஜா

**

நெஞ்சங்கள் கோர்த்த காதலர் வேண்டும் !!
உடல்கள் சேர்த்த காமுகர் வேண்டாம் --
அகங்கள் ஒட்டிய அன்பு வேண்டும் !!
முகங்கள் ஒட்டிய  வம்பு வேண்டாம்--
பார்வைக்குள் மட்டும் கலவைகள் வேண்டும் !
கண்ணோடு கண் ஒட்டிப்பின் கவலைகள் வேண்டாம் --
கறுப்புகள் கலக்காத எண்ணங்கள் வேண்டும் !!
வெளிநிறம் மட்டுமே வெள்ளை என்று வேண்டாம்--
இடைவெளிகள் விட்டமரும் இளைஞர்கள் வேண்டும் !!
பேசாத சொற்களுக்குள் இளைப்பாற வேண்டும் !!
திருமணம் முடியட்டும் , இடைவெளிகள் சுருங்கட்டும் !!
விலகாத உறவுகளால் விவாகரத்து உறங்கட்டும் !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**
வார்த்தைக்கும், வாக்கியத்திற்குமானதே 
இடைவெளி! 
எண்களுக்கும்,மெய்யியலுக்கும் 
வெற்றுக் 
கணங்களா,முற்றொறுமைகளா? 
அன்பின்றி பிறருடன் செய்யும் 
சச்சரவுகளே! 
கவனமின்றி செய்த செயல்களால் 
உருவாவதே! 
அலட்சியத்தால் நமக்கு 
விஷயங்கள் 
கடுமையாகும் போது வருவதே! 
வானுக்கும்,பூமிக்குமானதா? 
நட்புக்கும்,காதலுக்கும் வெறுப்பால் ஏற்படுவதா? 
தவறுகளுக்கும்,தெளிவுகளுக்குமானதே! 
அறிலுக்கும்,புரிதலுக்கும்,அறியாமைக்கும் 
இடையானதே! இருளுக்கும்,ஒளிக்கும்,
பிறப்புக்கும்,மரணத்திற்கும் நடக்கும் நாடகமே! 
இடைவெளி!  

- ஆகாசம்பட்டு.A.k.சேகர்

**

இருட்டு அறை சுவரில் இடைவெளி இருந்தால் 
சற்றே ஒளிக்கீற்று உள்ளே எட்டிப்பார்க்கும்
இருட்டை விலக்கும் இடைவெளி சன்னல்கள் 
இல்லா வீட்டுகளில் யாரும் குடியிருக்கயிலா 
காற்றும் ஒளியும் புகவே வழியில்லை 


இடைவெளி விட்டு வெயிலும் மழையும் இருந்தால்
இன்பத்தையே அவை தரும்
தொடர்ந்து மழையே பெய்தால் நிலமும் கடலாகும்
வெயிலே தொடர்ந்தால் வயலும் பாலையாகும்
ஓடும் வாழ்வில் மாற்றம் ஒன்றே  நிலையானது
தேடும் மாற்றம் பெற இடைவெளி தேவை

- மீனாள் தேவராஜன்

**

விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளி
        விண்மீன்களை ரசிக்க வைக்கும்...
கதிரவனுக்கும் திங்களுக்கும் உள்ள இடைவெளி
        காலம்மாறுவதை புரிய வைக்கும்...
கடலுக்கும் கரைக்கும் உள்ள இடைவெளி
        கடல்அலைகளைக் காதலிக்க வைக்கும்...
மேகங்களுக்கும் மரங்களுக்கும் உள்ள இடைவெளி
        மழையைப் பொழிய வைக்கும்...
கவிஞனுக்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளி
        கவிதையை எழுத வைக்கும்...
இமைகள் இரண்டிற்கும் உள்ள இடைவெளி
        இவ்வுலகைப் பார்க்க வைக்கும்...
விரல்கள் ஐந்திற்கும் உள்ள இடைவெளி
        வீணையை மீட்ட வைக்கும்...
இதயத்திற்கும் வலிக்கும் உள்ள இடைவெளி
        இன்பகாதலைத் தெரிய வைக்கும்...
பிரிந்த உறவுகளுக்கு உள்ள இடைவெளி
        பாசத்தை அறிய வைக்கும்...
மலர்களுக்கும் காற்றுக்கும் உள்ள இடைவெளி
        மணத்தைப் பரப்ப வைக்கும்...
நன்மைக்கும் தீமைக்கும் உள்ள இடைவெளி
        நல்மனிதனாய்ச் சிந்திக்க வைக்கும்..

- கவிஞர் நா. நடராசு

**
நள்ளிரவில் நிலவும் நானுமாய்
நம்மிருவரின் தூரமும்
நாள்கணக்காய் நீண்டிருக்கிறது..

நீர் அருவி தொடங்கும் இடத்துக்கும்
நுரைபெருகிச் சேருமிடத்திற்குமான தொலைவில்
நூலில் கட்டப்பட்டிருக்கிறது
மௌனம்..

நெருப்பையும் நேர்த்தியான பயன் பாட்டில்தான்
நேசமுடன் நெருங்க முடிகிறது..

நைந்து போன நெஞ்சத்தில்
நொந்து போகும் வார்த்தைகள்
நோக வைத்துப் பெருக்கிக் கொள்வது
நம் இடைவெளிகளைத்தான்..

மகிழினி காந்தன், சுவிட்சர்லாந்து

**

தலைமுறை இடைவெளி தடங்களில் தடுமாறுகிறது
இலைமறை காயாயிருந்தவை வெளிச்சமாகி நிற்கிறது
அலைகடல்கூட உள்வாங்கிக் கரை இடைவெளியாக
கலையாத மேகம் கலைந்து வானிலும் இடைவெளி

உண்மைக் காதல் சாதி மதத்தால் இடைவெளியாக
அண்மை உறவுகள் மன இடைவெளிகளில் மயங்க
கண்மை கரைய அழுவதால் துன்ப இடைவெளிகள்
பெண்மையை நிம்மதி இழக்கச் செய்வது கொடுமை

பத்துப் பொருத்தம் பார்த்தும் மன இடைவெளியால்
பித்துப் பிடித்து பிரிந்து வாழ நினைக்கின்ற மாந்தர்
முத்தனைய குழந்தைகளைப் பிரிவது பாவமல்லவா
நித்தமும் அன்பு ஆட்சிசெய்ய இடைவெளி குறையுமே

ஏழை பணக்காரர் என்ற இடைவெளி வன்மமாகிறது
கூழைக் குடித்தாலும் நிம்மதியிருந்தால் இனிமை
கோழையாய் தீய செயல்களில் இறங்கலாமா
வாழையடி வாழையாய் பயனுற வாழ வேண்டுமே

இடைவெளியில்லா சமத்துவம் வளர பாடுபடு
கடைநிலை மனிதரென்று யாருமில்லை உலகில்
தடையில்லா அன்பு எங்கும் செழித்து வளரட்டும்
மடைமாற்றி இடைவெளியாக்காதே மனிதத்தை நீ.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

இணையத்தின் துணையால் இந்த உலகே 
இடைவெளி இல்லா ஒரே சமவெளி ஆனதே !
ஆயிரம் ஆயிரம் மைலுக்கு அப்பால் 
இருந்தாலும் இணையத்தின் இணைப்பு 
இணைக்குது   பல உறவுகளை இடைவெளி 
தெரியாமல் !

இருக்கும் இடத்தில் பாச உறவுகளை 
மறக்க வைத்து இடைவேளை  என்று 
ஒன்று இல்லாமல் ஒரு சிலரை தன்
வலையில் சிக்க வைத்து வேடிக்கை 
பார்ப்பதும் அதே இணையம்தான் !

இணையம் தேவை நமக்கு நம் உறவுகளின் 
உறவை மேலும் மேலும் வலுப்படுத்த !
இணையத்தால் நம் உறவுகள் முறிந்து 
இடைவெளி முளைக்கும் என்றால்  வேருடன்
களைவோம் நம் இணைய உறவை இன்றே !

-K.நடராஜன் 

**

இழந்ததை 
ஈட்டிட எடுத்திடும் 
இடைவெளி'யே முயற்சி!

இருப்பை 
இருமடங்காக்கிட எடுத்திடும் இடைவெளி 'யே கடின உழைப்பு! 

இரவு பகல் 
பாராது விழித்து! 

இருபக்க புத்தக
வரிகளை 
இமை வழியே இழுத்து! 

முழு 
மதிப்பெண்'கள் 
ஆக்கிட எடுத்திடும் 
இடைவெளி 'யே பயிற்சி !

- ரீகன் தஞ்சை

**

இந்த குற்றச்சாட்டு யார் மீது இல்லை?
சாமியார்கள் மீதும் சாம்ராஜ்யத்தை ஆண்டவர் மீதுமுண்டு
சகிப்புத்தன்மையால் சாதாரணமாய் பட்டது அந்நாளில்
இது ஒரு இடைவெளி எனக்கொள்ளலாம் இந்நாளில்
உண்மையா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை , இதற்கு
அழகான பதில் அந்தக் கால பாட்டில் உள்ளது, அறிவோம்.
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள்  ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்து சொல்லுங்கள்
ஆடவரானால் எந்த பதவியி லிருந்தவர் மீதும் தப்பாமல்
விழுவது உண்டு! அபுல்கலாம் ஆசாத் எழுதிய புத்தகத்தில்
ஒரு அற்புதனமான மனிதர் மேல் வந்தது ஒரு செய்தி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி, இந்நாள் ஜனாதிபதிபேரிலும்
இன்னும் பேர் பெற்ற நம் முன் வாழ்ந்த பெரியவ்ர்கள் மீதும்

நாத்திகக் கவிஞர் என்பதாலே  அவரின் எதிர்ப்பாளர்கள் இதை
ஆலாவனம் செய்கிறார்கள் ஊதி பெரிசாக ஆக்குகிறார்கள்
வாய்ப்பு கிடைத்த எல்லா ஆடவருக்கும் இது பொருந்தும்
இவர்களின் மனிவியரிடம் போய் கேட்டால் தான்        
இவர்களின் வண்ட வாளங்கள் தண்டவாளங்கள் ஏறும்
சகிப்புத் தன்மை ஆயிர ஆயிரம்ஆண்டாண்டாய் இருந்ததாலே
இவையெல்லாம்மறைத்தனர்,அவர்களுக்கும் அவமானம்!
இது அக்கால பெண்களுக்கும் இக்காலத்துக்கும் இடைவெளி

- கவிஞர் அரங்க.மணி  இராஜபாளையம்

**

வெறுமையும் வெளியும்
இதுவெனப் பிரிதலற்று
வியாபித்திருக்கிறது
அண்டம்

பிரபஞ்சத்தின்
துவக்கமும் நிறைவுமற்று
நிகழ்கிறதில்
இடைவெளியின் ரூபமற்ற
நீட்சி
எல்லையைத் தேடித் தோற்கும் 

நெருப்பில் நீங்கா அனலென
காற்றில் பிணைந்த
வெட்பத்தட்பத்தின் ஆரம்பமும் 
நுனியும் பிடிபடாது
துளிர்க்கும் நீரின் துளி
உயிர்ப்பித்து 
இருந்து கொண்டு  இல்லாமல்
இருக்கும்

தாவரமும் நிலமுமென
ஒன்றையொன்று பற்றியவாறு
பெயர்ந்தாலும்
பற்றற்று இருப்பதில்லை

எதுவும்
தனித்திருக்கும் போக்கில்
துறந்த இடைவெளியில்
பிரமாண்டமாகி
நிறைவில் பூர்த்தியற்று தொடர்ந்தபடி
விரிதலில் ஜனனிக்கும்
யாவும்

இயங்கியலில்
ஒன்று முதல் அய்ந்தறிவு வரை
ஏதுமில்லை பிரச்சினை
இருக்கும்
ஒன்றை ஒன்று சார்ந்து

ஆறாம் அறிவால்
சிரித்தும் சிந்திக்கவும் தெரிந்து
அரசோச்சும் ஆளுமை
பரிதாபமும் பாராட்டுக்கும்
உரியது

அன்பும் கருணையும் கொண்டதால்
பாராட்டும்

முன்நிறுத்தும் தனது
சுயநலத்தை விரித்துக் கொண்டு
பிறரை ஒடுக்குதால்
மனிதருக்குள் பரிதாபத்திற்குரியவன்
மனிதனாகிறான்

இவன்
இயற்கையின் முரண்
உடன்பாட்டின் எதிரி

இவனின் கைப்பிடியில்
இவனுருவில் கடவுளாகவும்
இவன் வடிவில் அவதாராங்களும்
இவனே மதங்களாகவும்

நெற்றியில் தோளில்
புந்தியில் தொடை பாதமென
சக மனிதர்களைப் பிறக்க வைத்து
புறத்திலும் அகத்திலும்
ஆயிரமாயிரம் சாதிகளுடன் 
இடைவெளியை
அகலப்படுத்தி

பாதாதிகோசம்
பெயரிட்டுக் கொண்டாடி
துவம்சம் செய்யும் துஷ்டனால்
சமத்துவப் பரிபாலனம் செய்யும்
இடைவெளியற்ற
இயற்கை
நாணி முகம் புதைத்து
குலுங்கி நொறுங்கின மாதோ...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

இடைவெளி

காதலர்களின் இடைவெளி
காதல் காணாமல் போனது

ஆசிரியர்- மாணவர்களின் இடைவெளி
கல்வி காணாமல் போனது

பெற்றோர் - பிள்ளைகளின் இடைவெளி
பாசம் காணாமல் போனது

நண்பர்களின் இடைவெளி
நட்பு காணாமல் போனது

பணக்காரர் - ஏழைகளின் இடைவெளி
உதவி காணாமல் போனது

வியாபாரி - நுகர்வோர்களின் இடைவெளி
வியாபாரம் காணாமல் போனது

தம்பதிகளின் இடைவெளி
வாழ்க்கை காணாமல் போனது - பிள்ளைகளின் வாழ்க்கையும் கூட.

அரசியல்வாதி - வாக்காளர்களின் இடைவெளி
வாக்கு காணாமல் போனது

நாடுகளின் இடைவெளி
அமைதி காணாமல் போனது

இடைவெளிக்கு, இடைவெளி ஏற்பட்டால்
உருவாவது அன்பு

இவ்வுலகில் இடைவெளி இல்லாமல் எங்கும்
நிறைந்திருப்பது அன்பு

ஆகையால் அன்பு செய்வோம் !

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

இடைவெளி!

பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை!
இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்!
இதில் எத்தனை சண்டைகள் எத்தனை சச்சரவுகள்!

மனிதன் பறந்து திரியவே பெரிய உலகை படைத்தான் இறைவன்!
மனிதனோ தனக்கென சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்!
அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்!

சாதிகளை சாலையிலே விட்டு விடவும், 
மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும்,
மனித நேயத்துடன் சற்று எட்டிப்பாருங்கள்,
பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும்,
வாழையடி வாழையாய் நம்மை யாரும் வாழ்த்த வேண்டும்!
இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்!
அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கை பார்ப்பார்!
வா தோழா வா, நாளை நமதே!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

கவிதைகள் கனவுகள் கற்றுத்தந்த கடைவிழி
தவித்திடும் மனதைத் தழுவிக்கொண்ட சதிர்மொழி
புவியினில் என்னைப் புதுமைசெய்த மதுக்கிளி
எவர்செய்த சதியிது ஏனிந்த இடைவெளி?

காலம் என்றொரு கயவன் வந்ததும்
காதலைச் சொல்லிக் கற்றுத் தந்ததும்
மாயம் என்று மறைந்து போனதும்
காயம் மட்டும் மிச்ச மானது

தேவதை என்பதும் தேன்மலர் என்பதும்
ஓர்வதை என்றே உணர்ந்த பின்பும்
காவியம் ஓவியம் கனவுகள் என்றே
ஆவியில் ஏனடி ஆயிரம் கோலங்கள்? 

நேற்றுகள் எல்லாம் இன்றின் துயர
ஊற்றுகள்; நாளைகள் என்பது இன்றுகள்
காட்டும் கானல் சித்திரக் காட்சிகள்
காட்டில் ஓடும் மாயமானின் ஆட்சிகள்

- கவிஞர் மஹாரதி

**

உணர்வோடு நெருக்கமானவளே - இந்த இடைவெளியில்
உன் நினைவுகளை நான் சுமக்கவில்லை  - 
உன் நினைவுகள்தான் என்னையே சுமக்கின்றன
எல்லோரும் இடைவெளி பாசத்தைக் கூட்டுமென்பர் - ஆனால்
எனக்கோ அரைநொடியும் ஆயுள் தண்டனையாகிவிடுகிறது
உனது சிறிய கோபம்கூட - தினம்
உயரும் விலைவாசிப்போல என்;னை கொல்லுதடி;
வானிலை அறிக்கைப்போல அடிக்கடி மாறிவிடாதே;
இடைவெளி எனும் நஞ்சினையும்  தந்துவிடாதே;
விரைந்து வெட்டியெறி இடைவெளியை - இல்லையேல்
நான் ஏதுமற்ற வெட்ட வெளியாகிவிடுவேன்....

-  இரா. விநாயகமூர்த்தி ஆய்வியல் நிறைஞர்

**

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
இடையே இடைவெளி 
கண்ணுக்குத் தெரியாத 
இயற்கையின் ரகசியம்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே இடைவெளி 
யாருக்கும் தெரியாத 
இல்லறத்து ரகசியம் .
நீருக்கும் நிலத்துக்கும் 
இடைவெளி கரையாகும்.
பழமைக்கும் புதுமைக்கும்
இடைவெளி பரிமான வளர்ச்சி.

- மூர்த்தி SVR 

**
இடைவெளி அங்கே இல்லை
...............இயற்கையும் ஈந்த நன்மை.!
உடைகளும் அதற்கு இல்லை
...............உலகமே அதற்கு எல்லை.!
கொடைகள் அருளும் தன்மை
...............கொண்டதும் அருமைக் காட்சி.!
விடையிலா தெழுமாம் கேள்வி
...............வியன்மிகும் மனத்துள் வானம்.!


செங்கதி ரோனும் தோன்ற
...............சிவக்கவும் மாறும் ஆழி..!
எங்குமோர் ஓயாத் தென்றல்
...............இடைவெளி இலாத ஒன்றே..!
எங்கணும் கண்கள் காணும்
...............இயற்கையெ ழிலாகக் காட்சி..!
பொங்கிடும் இதயத் துள்ளே
...............புலருமாம் விடியல் பூக்கள்..!


அள்ளியே கொடுக்கும் அன்பை
...............அளவிலை அதனின் ஈகை..!
வெள்ளையாய் விரிந்த வானம்
...............விளைந்தது பொழுதா யிங்கே..!
பிள்ளைகள் மனதும் துள்ளூம்
...............பிரியமாய் உணர்வும் பொங்கும்..!
பள்ளிசென் றநாளில் பார்த்துப்
...............பரவசம் அடைந்த வானம்..!

- பெருவை பார்த்தசாரதி

**

இடைவெளி
−−−−−−−−−−
கூடிக் குலவித்
திரிந்தாலும்,
ஒரே குடைக்குள்
மழையை ரசித்தாலும்,
கூண்டுக் கிளிகளாய்
இருந்தாலும்,
கொள்கை ஒன்று
என்றாலும்,
கோபுரத்துப்
புறாக்கள் எனினும்,
அழகுகளின்
கூட்ட மெனினும்,
அரசியலின்
ஆட்ட மெனினும்,
தோப்புக்குள் இருக்கும்
மரம் போல்
தனித் திருக்க
வெற்றி வரும்,
துணையோடு
ஒன்றி ருந்தால்
கூட்டம் சிதறிவிடும்,
தண்டவாளம்
ஆணும் பெண்ணும்
குடும்ப மென்ற
தொடரியைத் தாங்க
இடைவெளி அவசியந் தான்,
தாய் தநதை பாசத்தால்
சீரழியும் மாணவர் கூட்டம்,
ஒன்றுக் கொன்று
இடைவெளி யிட்டால்
இணையிலா
மகிழ்ச்சி தானே!
இடைவெளி யில்லா
மரங்கள் வளருவது
எப்படியோ!
சிந்திப்பீர்
மானுடரே!
செயலாக்கந் தாருங்களே!.......

- ப.வீரக்குமார்

**
இடையின் வெளியில்
யாரோ பேசிக்
கொண்டார்கள்,
இவர்களுக்குள் சண்டை
போலும்,
இதயத்தில் விரிசல்
போலும்,
நெருக்கங்கள் கூடியதால்
குறுக்கங்கள் ஆனது,
காதலின் போர்வையில்
திருமணத்தின் பின்
விலக்கா!
விளங்காத விலங்குகள்
தொடரும் துயரங்கள்
அடங்காத ஆசைகள்
அதிரடியாய் மாறும் ஓசைகள்,
புல் கூட இடைவெளி விடுது
புள் கூட இடையீடு கொள்ளாது,
புல்லறிவு கூட இல்லாமல்
புலம்புகின்ற மனிதர்காள்
சமதர்மம் காணாமல்
புகழுகின்ற புகழுரைகள்;
நெருக்கத்தில் தென்றலாம்
இடைவெளியில் புயலாம்.......

- முகில் வீரஉமேஷ், திருச்சுழி

**

சாலைப் பயணத்தில்
வாகனங்களுக்கு இடையே 
இடைவெளி இருந்தால் 
மகிழ்ச்சி!
வாழ்க்கைப் பயணத்தில் 
உறவுகளுக்கு இடையே 
இடைவெளி குறைந்தால் 
மகிழ்ச்சி!

கணவனுக்கும் மனைவிக்குமோ! 
காதலனுக்கும் காதலிக்குமோ!
தனிமையில் இடைவெளி குறைந்தும்
பொதுவெளியில் இடைவெளி மிகுந்தும் 
இருத்தல் நாகரீகம்!

அருகில் பார்த்தால் இணையாகவும்
தொலைவில் பார்த்தால் இணைந்தும்
தோன்றும் தண்டவாளத்தைப் போல இருக்கட்டும்  
காதலனுக்கும் கதலிக்குமான இடைவெளி! 

பயிர்களுக்கு இடையேயான 
சீரான இடைவெளியால் 
மகசூல் அதிகரிக்கும்!
உயிர்களுக்கு இடையேயான 
சீரான இடைவெளியால் 
மகிழ்ச்சி அதிகரிக்கும்!

முகத்திற்கும் நூலுக்குமான 
இடைவெளி அதிகரித்ததால்
இடையில் புகுந்த முகநூல் போல
கணவனுக்கும் மனைவிக்குமான 
இடைவெளி அதிகரித்தால் 
இடையில் புகலாம் கள்ள உறவுகள்!

-கு.முருகேசன்

**

ஐயா வணக்கம்,
                       அடியேனின் சிறு படைப்பு 
இடைவெளி 
அயல்நாட்டில் வேலை என்று 
அனைவருக்கும் பெருமை 
அனைவரையும் விட்டு சென்றேன் 
அடியேனின் வறுமை 

தங்கை மகள் காதுகுத்து 
தாய்மாமன் நானில்லை 
தம்பியின் கல்யாணம் 
தமையனாக நானில்லை 

தாய்க்கு கொள்ளிபோட 
தலைமகன் நானில்லை 
தாரத்தின் பிரவசத்தில் 
தலைவனாக நானில்லை 

அத்தனையும் இழந்து நான் 
அயல்நாட்டில் வாழ்கிறேன் 
அடுத்தவர் கண்ணுக்கும்  -நான் 
அருமையாக வாழ்கிறேன் 

பணத்தை சம்பாதிக்க 
பாசத்தை இழக்குறேன் 
இன்பத்தை தள்ளிவைச்சு 
இடைவெளி ஆக்குறேன் 

பார். விஜயேந்திரன், கருங்குழி 

**

குடும்பக்கட்டுப்பாட்டு
இடைவெளி
குடும்ப நலனுக்காக!
மரங்கள் நடுவதில்
இடைவெளி வளமான
நிலவளத்திற்காக!
ஐந்து வருட தேர்தல்
இடைவெளி நல்லவரைத்
தேர்ந்தெடுப்பதற்காக!
சுயநல உறவுகளின்
இடைவெளி நம்மைக்
காப்பதற்காக!
இத்தனை இடைவெளி
வரலாறுகளில்
தலைமுறை இடைவெளி
மயக்கத்தில்
முதியோர் காப்பகத்தில்
இளைய வரலாறுகள்
எதைச் சாதிக்க
காத்துக் கொண்டிருக்கின்றனர்!?                 

-சீனி

**

இருவிழி பிம்பம் அதனில் நிறையும் 
திருமுகத் தரிசனம் திரும்பிக் கொள்ள 
இடைவெளி கணத்திடும் இதயக் களமதில் 
இதழ்களில் நடந்திடும் மௌன யுத்தம்!

ஏழிலி மறைக்கும் கணமதில் வானம் 
ஏந்திடும் சூரியத் துளிகள் ஒளிந்திட 
மார்கழிப் பனியும் அதுவாய் மனதினில் 
மஞ்சம் விரித்த மயக்கமும் சதிராடும்!

வீணையின் நரம்புகள் பிரிந்திடின் அங்கே 
விரல்களும் சேர்த்து இசையை மீட்டுதலதுவாய்  
மோனையில் சேர்ந்து மோகனங்கள் பாடிய 
மானிடக் காதலில் மறைந்திடும் இடைவெளியுமே!     

- மு. திருமாவளவன், அறிவியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர், தைவான்

**

கண்  சிமிட்டும்  இடைவெளியிலும்,
என்  கண் , ஓவியமாய்  காண்பது  உன்னையே!
இதய  துடிப்பின்  இடைவெளியிலும்,
என்  மனம்,  உச்சரிப்பது  உன்  பெயரையே!
என்  சுவாசத்தின்  இடைவெளியிலும்,
நான்  உணரும்  வசந்தம்,  உன்  வாசமே!
என்  உதடுகள் , பேச்சின்  இடைவெளியிலும்,
புன்னகைப்பது  உன் நினைவாலேயே!
இடைவெளி  இன்றி 
நான்  உன்னை  நேசிப்பதற்கும்  ஆவாய் ,
நீ  என்  வாழ்க்கை  துணையாக!!

-பிரியா ஸ்ரீதர்

**

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது
தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது !

மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போது
மனம் போன போக்கில் இளையதலைமுறை !

காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லை
கண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் !

பணத்தின் மதிப்பை அறியவில்லை இவர்கள்
பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்!

இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவோம் அன்று
இரவில் விழித்து பகலெல்லாம் தூங்குகின்றனர் இன்று !

தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது அன்று
தனி நபருக்கு பல அலைபேசி ஆனது இன்று !

ஊதியம் குறைவென்றாலும் நிம்மதி இருந்தது அன்று
ஊதியம் மிகைஎன்றாலும் நிம்மதி இல்லை இன்று !

நவீனம் இல்லாவிட்டாலும் இன்பம் இருந்தது அன்று
நவீனம் இருந்தாலும் இன்பம் இல்லை இன்று !

பெற்றோரை நன்கு மதித்து வாழ்ந்தனர் அன்று
பெற்றோரை மதிப்பதே இல்லை இன்று !

அண்ணன் தம்பி உறவு அன்பானது அன்று
அண்ணன் தம்பி இன்றி தனியாளானது இன்று !

ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர் அன்று
ஒரேயறையில் அலைபேசி விளையாட்டு இன்று !

வானொலியில் பாட்டு கேட்டு மகிழ்ந்தனர் அன்று
வானொலி மறந்து தொலைக்காட்சித் தொல்லை இன்று !

நல்ல தமிழில் நாளும் பேசிவந்தனர் அன்று
நாவில் தமிங்கிலமே தவழ்கின்றது இன்று !

- கவிஞர் இரா .இரவி

**

அன்புடையீர் 
வணக்கம்.  இத்துடன்   " இடைவெளி" என்ற தலைப்பில்  கவிதை அனுப்பி உள்ளேன். 

" இடைவெளி"

எதற்கு இடைவெளி 
என்று  யோசித்து பார்த்தால்
வருத்தம் வராதே!
பொருத்தாத  மனங்களை 
விருந்து  வைத்து உபசரித்தாலும் 
மருந்தாக  எண்ணி  இடைவெளி 
விட்டே நடப்பர்!
ஈன்ற  பிள்ளைகளிடம் 
துளியும்  விடாதே  இடைவெளி!
வலியென உணரும்  பிள்ளை 
விட்டு  விலகவே  துடிக்கும்!
கட்டுப்பாடுகளை  உடைத்து 
மட்டு மரியாதை  கொடுத்தால் 
எப்படி  வரும்  இடைவெளி!
விட்டுக் கொடுப்பதால் 
கெட்டு போவதில்லை  யாரும்!
இடைவெளி  என்ற  சொல்லுக்கு 
தடையென  சிந்தித்து 
மடையென  மகிழ்ச்சியினை
கூடை என  தலையில்  சுமந்து 
கடை  விரித்தால்  
மகிழ்ச்சியுடன்  வாழலாமே!

- உஷாமுத்துராமன், மதுரை   

**

அன்பிற்குள் இடைவெளியை அண்டவிடாதீர்
ஆத்திரத்தின் இடைவெளியைக்
குறைத்துவிடாதீர்
நற்பண்புகட்கும் இடைவெளியை
நல்கிவிடாதீர்
நல்ல புகழ் சேர்க்கும் இடைவெளியை
மறுத்துவிடாதீர்.

இன்பத்தின் இடைவெளியைத்
துன்பம் வந்து துரத்திட்டாலும்
பண்புகள் போற்றி வாழ்ந்துவிடு
பழகித்துன்பங்கள் தாங்கிவிடு.

வாழ்க்கையின் இடைவெளியில்
வசந்த காலம் வசமாகும்
கோபதாபம் தடை செய்தால்
கொண்டதெல்லாம் ஜெயமாகும்.

காலம் தந்த இடைவெளியில்
கடந்த பாதை மறக்க வேண்டாம்
கற்கும் பருவ இடைவெளியில்
கற்பனையில் மிதக்க வேண்டாம்.


காதல் தந்த இடைவெளியில்
காமம் மோகம் தவிர்த்திடுவீர்
கடைமை போற்றும் இடைவெளியில்
கன்னியர் பார்வை தவிர்த்திடுவீர்.

சோதனையின் இடைவெளியில்
சொர்க்கம் கூட அறிந்திடலாம்
சொக்கநாதர் அருளிருந்தால்
சொந்தம் போற்ற வாழ்ந்திடலாம்.

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
சிறுமுகை

**
நீண்ட    பொழுதுகள்...
நீண்ட.   நாட்கள்....
நீண்ட.   தூரங்கள்....
நிகழும் பிரிவால்
நிதமும். வாடினாலும்
நினைவுகளால்
நிரம்பி வழியும்
இதயங்கள் எல்லாம்
இணையம் மூலம் இன்று
இணைந்தே இருக்கின்றன
இடைவெளி இன்றியே !

- ஜெயா வெங்கட்

**

கைப்பிடித்து நடந்தபொழுதுகள்
சொல்லாடிய மொழிகள் 
சுமந்துதிரிந்த கனவுகள்
சொல்லாத மொழிகள் 
சொல்லிப்போன‌ மெளனங்கள்
கண்ணீர்துளிர்த்து கடந்தவலிகள்
சிரித்துத்தளும்பி நிரம்பிய‌கணங்கள்
தள்ளிஅமர்ந்து தவித்தபயணங்கள்
ஒருகுடையில்துளிர்த்துக் குளிர்ந்ததுளிகள்
பேசிமகிழ்ந்த நெடுங்கதைகள்
உள்ளம்நெகிழ்ந்து களித்தகவிதைகள்
ஒருகோப்பையின் தேநீர்த்துளிகள்
உண‌ர்வுகள்சுமந்து பேசும்கடிதங்கள்
ப‌கிர்ந்தஉணவில் திளைத்த‌நாட்கள்
என 
உன்னையும் என்னையும் 
நிரப்பியிருந்து இல்லாமல்போன 
இடைவெளிகள்
எந்தக்கணங்களில் வழிந்து நிரம்பி
என்னையும் உன்னையும்
கடத்திப் பிரித்தது?
நான் என்னிலும் நீ உன்னிலும்
நம்மைத் தொலைத்த‌ கணங்களில்
நிறைத்து நிரம்பின 
இடைவெளிகள்.
இந்த இடைவெளிகள் சொல்லும் கதை
நம்மை நம்மில் இன்னும் நிரப்பி
இன்னும் நிறைய அன்பு செய்திருக்கலாம்
இடைவெளிகள்
இல்லாமலே போயிருக்கும்.

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

எழுதும் பேசும் சொற்களின்
இடைவெளியை நிரப்பும்
மவுனமாய் மலரும் கவியொன்று

முதுகில் ஒட்டிப் பிறந்தவைதாம்
வடதுருவமும்
தென்துருவமும் 

இடைவெளி எனும் சொற்கூட்டில்
வெளியேறிப் போனது
இடைவெளி

என்
தோட்டத்துப் பூவின் பனித்துளியில்
சுடர்ந்தது
தூரத்து மலைக்கோவில்

நிலவுக்கும்
நிலத்துக்கும் பிரிவில்லை
குளத்தில் நீராடுது நிலா

என்னைப் பிரிந்து எங்கோ சென்றாள்
கண்தொலைவுக்கு அப்பாலும்
கடல்தொலைவுக்கு அப்பாலும்

எங்களுக்குள் 
இடைவெளியை உருவாக்கவிடாமல்
காவல் புரிகின்றன காதல் நினைவுகள்

இடைவெளியின்
இருபுறங்களையும் இணைத்தபடியே இருக்கும்
கண்ணுக்குத் தெரியாத
காந்தக் கோடுகள்

-கோ. மன்றவாணன்

**
உனக்கும் எனக்குமான இடைவெளி!
காலம் தந்த சமவெளி!

இடைவெளி இல்லா வேலை சுமை!

மனம் வலியில்லா வாழ்க்கை அமை!

பூமிக்கும் வானத்திற்குமான இடைவெளி!

சாமிக்கும் சாமானியனுக்குமான
இடைவெளி!

காதலுக்கும் கல்யாணத்திற்குமான இடைவெளி!

இதயத்திற்கும் மூச்சிற்குமான இடைவெளி!

பாசத்திற்கும் வேசத்திற்குமான இடைவெளி!

இப்படி அனைத்திற்கும் ஆன இடைவெளி!

உலகம் சுழல வைக்கும் அன்பின் ஒளி!

படிப்பிற்கும், வேலைக்கும் உள்ள இடைவெளி!

தேர்தலுக்கும் வாக்குறுதிக்கும் உள்ள இடைவெளி!

ர.ஜெயபாலன், எம்.ஏ.பி.எட்,
இடைநிலைஆசிரியர்,
வெள்ளகோவில்

**

கடைவழி நானும் துணையே என்றாய்

இடைவெளி எங்கோ வளர்த்தே நின்றாய்

நம்மைப் பார்த்து நலமே கற்றோர்

இம்மை உலகின் இணையர் என்றோர்

எம்மைக் கண்டு எள்ளல் கூட்டி

வம்புகள் பேச வழியே அமைத்தாய்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

கற்றவர் உரையைக் கணக்காய்ச் சொன்னேன்

கெஞ்சிச் சொன்னேன் கேட்கவு மில்லை

அஞ்சேல் என்றே தன்னலம் நினைத்தாய்

மதியார் வாசல் மிதித்தல் வீனென்று

அதிகம் பேசி அகந்தை வளர்க்க

இருந்த உறவில் இடைவெளி தோன்றி

மருந்தாய் இருந்தோர் மறந்தே சென்றார்

உப்பு அமைந்த உணவாய் ஊடலும் 

தப்பாய் மிஞ்ச தனித்தே நின்றோம்

- கவிஞர் முருகுபாண்டியன்

**

மனித உறவின் இடைவெளிகள் காலத்தின் பிடியில்
தாயுடனான  மனிதனின் முதல் இடைவெளி தொப்புள் கொடி வெட்டப்பட்டும் போது
இடுப்பில் இருந்து இறங்கி நடைபழக ஆரம்பித்து பள்ளி செல்லும் போது ஒரு சிறு இடைவெளி
பருவ வயதை அடையும் போது பெற்றோருடன் காரணமறியா இடைவெளி ஒன்று
பள்ளி, கல்லூரி படிப்பு முடியும் போது நண்பர்களுடன் கட்டாய இடைவெளி
மணமாகி வாழ்க்கை துணையால் மற்றவர்களுடன் ஒரு இடைவெளி
வயதாகி துணை இழந்து நரக இடைவெளி
உயிர் விட்டு உலகம் துறந்த்து நிரந்தர இடைவெளி.. 

- கவிஞர் முல்லை அமீரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com