கடந்த வாரத் தலைப்பு ‘அன்பின் வழியது’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

அன்பின் வழியது இல்லறம் நடத்திட இருபாலர் வேண்டுமென இதுவரை நினைத்தேன்
கடந்த வாரத் தலைப்பு ‘அன்பின் வழியது’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2


அன்பின்மைதானது வாழ்வோ
அன்பில்லாத உடலது நடைபிணமோ
உள்ளகமென்பது உயிரல்லவோ
உயிரின் மூச்சது அன்பல்லவோ
இயற்கையின் அன்பது பொதுவல்லவோ
இயல்பான உறவது நிஜமல்லவோ
உடலும் உயிரும் ஒன்றல்லவோ
உயர்ந்த அன்பே சிவமல்லவோ
உறவில் பாசம் அன்பின் உணர்வல்லவோ
அன்பதில் வசமாவது காதலல்லவோ
அதில் உருவாவது உயிர்களல்லவோ
அன்பின் வழியில் நட்பும் உறவதுமே
அன்பே யாவர்க்கும் வழியதுவே
அன்பற்றது வாழ்வில் அழகற்றதே
எவ்வுயிர்களிலும் கண்டேன் அன்பை கருணையை
எங்கும், எதிலும் காண்பது உயிர்நிலையே
அன்பின் வழியது உயர்வைக் கொடுக்கும்
தனக்கென வாழ்தலும் அன்பின் வழியதுவே
அந்த அன்பே வெற்றியின் மனநிலையே
உலகில் அன்பின் வழியது தாய்மைதானே!

- ஆகாசம்பட்டு A.K.சேகர்

**

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்;
ஆதவன் ஆத்திரம் ஆறாதே

அமராவதியில் ஆழிப்பேரலை;
அவள் ஆடிப்பாடி அலைகிறாள்

ஆதவன் அவளை அடைய;
ஆட்களை அனுப்பினான்

அன்பை அகத்தால் அடையாமல்;
அறிவைக்கொண்டு ஆளுகிறான்

ஆஸ்திரேலிய அலையில் ஆடிப்பாட;
அலைக்கா

ஆசிய அனலில் அலைபாய;
அனன்யா

அயிரோப்பிய அமுதில்
அங்கம்சேர;
அட்லாண்டா

ஆப்ரிக்க அழகில் அள்ளிக்கொள்ள;
ஆடோமோரா

அமெரிக்க ஆய்வில் அமேசானாய்;
அமோரா

அன்டார்டிகாவில் அணைத்துக்கொள்ள;
அமேதா

அகிலம் ஆளும் ஆதவனுக்கு,
அகவை அதிகமானாலும்;
ஆத்திரம் 
ஆறாதே

அமராவதியை அடைய அழைக்கிறான்;
அதனால் அம்பிகாபதியை,
அழித்தான் 

அதிலும் ஆத்திரம் அடங்காதவன்!

ஆங்கிலேயனாய் அவதரித்தான்;
அகிலத்தையே அடக்கி ஆண்டான்

அமெரிக்கனாய் அவனாகி;
அணுக்கதிர் அறிவியலை அறிந்தான் 

அதனால் அகிலம் அடைந்தது அழிவு;
அதுதான் ஆதவன் அறிவு

அன்பினால் ஆகாதது;
அறிவினால் ஆகுமோ?

ஆண்டவன் அளித்த அருவி;
அன்பு
அதை அனுதினம் அருந்து;
அது அருமருந்து

அருமருந்தால்,
ஆணவம்,அதிகாரம் அகலும்;
அன்பும்,அமைதியும்,
அகிலம் ஆளும்.

ம.சபரிநாத்,சேலம்

**

அன்பின் வழியது 
அருமையான வழியது 
இரும்பு மனம் கொண்டாரை 
இமையிலே மாற்றிடுமே 
கரும்பு மனம் கொண்டாரை 
காந்தம் போல் கவர்ந்திடுமே 

அகிம்சை வழியாலே 
அன்று சுதந்திரம் அடைந்தோமே 
அன்பின் வழியாலே 
இன்று அகிலத்தை வெல்வோமே 

அனைத்து மதங்களுமே 
அன்பை மதிக்கிறது 
அதனை உணர்ந்தினியே 
அழகாக வாழ்ந்திடுவோம் 

- பார்.விஜயேந்திரன், கருங்குழி 

***

இரண்டே வரிகளில்
உயிர்நிலைக்கு உவமையாய்ச் சொன்னான்
உண்மைக்கவிஞன் –
கன்னடக்கண்களில் ஒரு
தமிழ்ப்பார்வை ,
தெலுங்கு சுவாசத்தில் ஒரு
மலையாள வாசம் – எப்படி வரும்
அன்பு மொழியில் பேசிப்பார் !!
பொறாமைப்பாறையை உடையுங்கள் ,
கருணை மரங்களை நடுங்கள், அவற்றில்
சுவையுடன் பழச்சொல் கனியட்டும் !
பழிச்சொல் வேண்டாமே !!
தியாகத்தை தாராக்கி
சாலையிடுங்கள் –
நீர் வேண்டாம் !! அந்தப்பாதையில்
நேர்மையான நேச வியர்வை சிந்தட்டும் –
            ஆம் , அந்தப்பாதை
அழைத்துச்செல்லும் நம்மை
அமைதிச்சிகரத்தை நோக்கி  
எப்படிச்சாத்தியம் ?
அன்பின் வழியது

- கவிஞர் டாக்டர்.எஸ். பார்த்தசாரதி

**
அன்பின் வழியது யாது எனில்?
அமைதியாய் ஆரவாரமற்றது,
இனியதாய் இதமானது,
இயலாதவருக்கு ஈவது,
வாழும் வாழ்க்கையில் மனிதன் முயலும்,
ஓர் குணமாக இதுஒவ்வொரு நாளும் அமைய வேண்டும்!

காந்தி தன் வாழ்வில் காண்பித்தது,
அன்னை தெரசா வாழ்வாக வாழ்ந்தது,
இன்னும் பலரின் வழியது அன்பு!

அன்னையின் கருணை,
தந்தையின் உழைப்பு,
சகோதரியின் பாசம்,
உற்றாரின் அக்கறை,
நண்பனின் நேசம்,
முகம்தெரியாதவரின் நேயம்,
இதன்வழி அன்பு பாய்கிறது!

அகந்தையைவிட்டால் கண்ணில் தெரியும்!
தற்பெருமை குறைந்தால் காதில் ஒலிக்கும்!
அடுத்தவர் இடத்தில் அமர்ந்தால் மனம் உணரும்! 
இப்புவியின் உயர்ந்த அறம்தனை பயில்வோம்!
நிறைவாய் வாழ்ந்து மகிழ்வாய் இருப்போம்! 

- இனிய தமிழ் செல்வா, ஓமன் 

**
பிரிதலில் அல்ல, புரிதலில்  செழிக்கும்!
மறப்பதில் அல்ல, மன்னிப்பதில் மலரும்.!                      
கெடுப்பதில் அல்ல, கொடுப்பதில் நிறையும்.!
வெறுப்பதில் அல்ல,பொறுப்பதில் பெருகும்!                    
             
அழிவதில் அல்ல, ஆக்கத்தில் அரும்பும்.!                         
எதிர்ப்பில் அல்ல, ஏற்பதில் வளரும் !                                 
விலகுவதில் அல்ல, விரும்புதலில் வாழும்.!                       
              
விற்பனையில் அல்ல, விதைப்பதில் விளையும்.!
அன்பையே விதைப்போம்!
அன்பையே வளர்ப்போம் !
அன்பையே அறுவடைசெய்வோம் !

ஜெயா வெங்கட், கோவை 45

**

விறகுப் பொறுக்க 
வேர்வை சிந்தும் 
பட்ட மரத்தின் 
பரிதாபக் கிளைகளில் 
இருந்து அசையும் இலைகள் 
சிந்தியச் சில நீர்த்துளிகளுக்குக் காரணம் 
அகோரப் பசி! 

பசித் தீர்க்கப் பதறுகிறது 
தன் மார்பில் சுரக்காத பாலுக்காக 
அன்பின் வழியதில் 
அடிமையாக வாழும்
அந்த அபலைப் பசு!

- கவிஞர் பி.மதியழகன்

**

கொஞ்சி விளையாடும் அழகுக் குழந்தைகள்
கொலுவிருக்கிறார்கள் ஆங்கிலப்பள்ளியில்
அஞ்சுகம் சிறுமி, அனைத்திலும் அவள் திறமையாளர்
வஞ்சகம் நிறைந்த மற்றொருத்தி மாலதியுள்ளாள்
அஞ்சுகம் போன்றே அவளுடன் பயிலும் ஆனந்தி
அவள் ஏழை அடக்கமும், அன்பும், பணிவும் உள்ளவள்
அவள் எப்பவும் இரண்டாம் நிலை,ஒன்றாம்நிலைதான்
அஞ்சுகத்திற்கு பிறந்தநாள் அவளுக்கு அளித்தனர் பரிசுகள்
வஞ்சகம் நிறைந்த மாலதியும் வழங்கினாள் பேனா ஒன்று
ஆனந்தி சித்திரம் வரைவதில் வல்லவள் ஓவியத்தாள்
அஞ்சுகம் படத்தை அசலாக அப்படியே வரைந்து தந்தாள்
அக்கம் பக்கத்தில் இருந்தோர் பேசினர் பேனாவின்பெருமை
அதை அளித்த மாலதியின் சிறுமை பற்றி பேசினர்
வசதியுடையவர் வாரிவழங்கினர் அவர்களின் தரத்திற்கொவ்வ
எது சிறந்தது தோழியர் அனைவரும் வினவினர் அஞ்சுகத்தை
அஞ்சுகம் சொன்னாள் “ ஆனந்தி என்னுயிர் தோழி அவள்
அன்பின் வழியது உயிர்நிலை  என்று வாழ்பவள்
தன்னலமிலா  செல்வி தமிழ்ச்செல்வி  போற்றுவோம் நாம் 
மற்றவரெலாம் எலுபுதோல்போர்த்திய நிலையினர்
ஆனந்தி தானே அன்பால் நிறைந்து நெஞ்சினில் நிற்கிறாள்  
அனைவரும் ஆனந்தியை புகழ்ந்து பாராட்டி மகிழ்ந்தனர்

- கவிஞர் அரங்க.மணி, பராசக்தி நகர்

**

கள்ள ஆண்தொடர்பில் வெறிகொண்டு
நல்லக் குழந்தைகளைக்
கொல்லத் துணிகிறாள் 
ஒருதாய்
சரியாகச் சொன்னால் 
ஒருபேய்

அன்பே கடவுள் என்று
அழுத்தமாக மெய்யுரைத்த 
மதங்களுக்குள்
யுத்தமும்
ரத்தமும்

பண வெறியில்
பதவி வெறியில்
அடங்காத சொத்து வெறியில்
கொடூர மிருகங்கள் 
கூடாரம் போட்டுக்
கொண்டாட்டங்கள் நடத்துகின்றன.

அன்பின் வழியது உயிர்நிலையென
ஆசிரியர் பாடம் நடத்திய போதே
செங்குருதி பீரிட்டது
சிறுவனின் தலையில்!
தடி உடைந்ததே என்று
தவித்துத்தான்  போனார் அந்த ஆசிரியர்

அகன்ற மனித வெளியில்
அன்பைத் தேடித் தேடித்
தோற்றோடி  இருள்கிறான்
சூரியன் 
ஒவ்வொரு மாலையிலும்.

-கோ. மன்றவாணன்

**

தாயின் அன்பிலே 
சேயது  செழிக்கும் !
தந்தையின் அன்பிலே 
தன்னம்பிக்கை வளரும் !
ஆசானின் அன்பிலே 
அறிவு மலரும் !   
அருமை நண்பனின் அன்பில்
அனுசரணை விளங்கும்  
காதலர் அன்பிலே 
கற்பனை விரியும் !
கடவுளின அன்பிலே 
கருணை பிறக்கும் !
மகான்களின்   அன்பிலே
மனித நேயம் மலரும் !
மழலையின் அன்பிலே  
மரணமும் விலகும் !  

- கே.ருக்மணி, கோவை

**

என்பினையும் தோலினையும் போர்த்திக் கொண்டு
இழிவான சிந்தனையை உள்ளே வைத்து
அன்பு வழி மறந்து பல மாந்தர் இந்த
அவனியிலே வாழ்கின்றார் அன்னார்க் கெல்லாம்
இன்பமிலா நிறைவற்ற வாழ்வே மிஞ்சும்
இறையன்பு எந்நாளும் கிட்டிடாது
துன்பமதில் உழல்வதுவே முடிவாயாகும்
துர் அதிஸ்டமே அவரைத் துரத்தி வீழ்த்தும்.
 
சாதி மதப் பொய்மைகளால் மானுடத்தைத்
தகைமையிலா விலங்காக்கி எங்கும் வாழும்
ஆதியந்த மில்லாத இறைவர்க்கான
ஆலயத்துட்செல்வதற்கும் தடை விதித்து
நீதி மறுத்தேழைகளின் அவல வாழ்வை
நிரந்தரமாய் வைத்திருக்கச் சதிகள் செய்து
காதலுக்கும் இரங்காத கபடர்க்காகக்
கடவுளொரு போதுமருள் செய்ய மாட்டார்.
 
அன்பொன்றே உலகமகா சக்தியாகும்
அதன் விளைவே பிரபஞ்ச இயக்கமாகும்
பண்பொன்றே மானுடர்க்குப் பலத்தைக் கூட்டும்
பயன் கருதாச் செயற்பாடே மனத்தையூக்கும்
இன்பங்கள் ஆயிரந்தான் இருந்திட்டாலும்
இறையெம்முள் இருக்கின்றான் எனும் எண்ணம்தான்
துன்பங்கள் தொலைந்தோடத் துணையாய் நிற்கும்
தூய மனச் சாந்திதனைத் துய்க்க வைக்கும்.
 
ஆதலினால் நாநிலத்தீர் அன்பு செய்து
ஆண்டவனை உட்தேடி உணர்ந்தின்புற்று
வேதனைகள் துன்பங்கள் விரக்தியின்றி
மேலான நல்வாழ்வு வாழ்வீரென்றே
போதனைகள் செய்திட்ட ஞானம் மிக்க
புனிதர்களின் வழியேகி அவர் சொற் கேட்டே
மேதினியில் வாழ்ந்திடுக அன்பே மேலாம்
மிகுதியெலாம் அதன்கீழாம் சாந்தி சாந்தி.
 
- எஸ். கருணானந்தராஜா

**

யாரும் இல்லா இருட்டுக்குள்ளே,
வெளிச்சமிட்ட வெள்ளி மலரே...!!!
காயம் படும் நேரத்திலே
கண்துடைக்கும் கருங்குயிலே...!!!
காலமெல்லாம் கதை பேச
காலெடுத்து வைச்சவளே..!!!
ஊரார் எல்லாம் ஒன்று கூடி 
ஒய்யாரமாய் பாட்டு பாடி 
பரிசம் தான் போடையிலே 
பொடிப்பார்வை பார்த்த 
பச்சைக்கிளியே ....!!!
பரவசமாய் பரந்த பாதையிலே,
மலையிலே அருவி 
அதிலே வாழும் பசுமை 
பக்கத்திலே வாழும் பறவை 
அவற்றிலே கீதை 
அதனினை  ஒலிபரப்ப தென்றல் 
இதனிடையே 
நான்திசை சென்று 
முப்பொழுது கடந்து 
இரு இதயங்கள் 
ஒன்றாய் துடிக்க.....
விழிகளுக்கு தெரிந்ததோ
அன்பின் வழியதுவோ
என்ற எண்ணம் 
என்னை நீங்கா 
நின்னை கண்டதடி 
கவியே....!!!

- இராஜேந்திரன் சத்யா

**
புடைசூழ்ந்து
ஊர் மெச்சி வாழ்ந்தவனுமில்லை
உறவுக்குள் மகிழ்ந்து கொண்டு
ஒற்றுமையாய் 
வாழ்ந்தவளுமில்லை...

வறண்டு
காய்ந்து கிடந்தாலும் 
நீர்ப்பாய்ந்து புரண்டாலும் கூட
இணைந்திருப்பதில்லை
அக்கரையும் இக்கரையும்...

துளிர்க்கும் கண்ணீரை
துடைக்கும் கைகளில் இருந்து கொள்ளும்
மனிதாபிமானம்;
அதற்கு
அன்பென்று பெயருண்டோ...

ஈன்று
புறம் தந்த குழைந்தைக்கு
ஊட்டி வளர்க்கும் தொப்புள் கொடி
கடமைக்குள் 
புகுந்து கொள்வது அன்பாகுமா?
பிற குழந்தைகளுக்கும் பராமரிப்பது
அன்பாகுமா?
பொதுவில் பரவும் உணர்வுதானே
அன்பு...

சலனங்களின் நெகிழ்ச்சி
ஊடுறுவிப் பரவும் புலன்களின் உணர்வை
நேருரைக்க முடிவதில்லை...

அன்பில் காதலும்
காதலில் காமமும் பிணைய
மகுடியற்று
படமெடுத்தாடும் பொறிகள்...

அன்பினால் ஆவது  உயிர்களுடன்
அமைதியும் மகிழ்வும் கூட
என்றானப்பின்
அன்பினால் சுழல்வதும்
பூமியும் தானே...

எனவாங்கு

யாவும்
அன்பின் வழியது ஆகியும் கூட
ஆகவில்லை இன்னும்
சுயநலமில்லா
பேத விகற்பமற்ற அரவணைப்பு...!?

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

அன்பின் வழியது அன்னை போலவது
.........அன்று முதலது ஆட்சி செய்கிறது..!
தன்னிகர் இலாத தனித்துவம் கொண்டு
   தாரணி போற்றும் தரத்தில் சிறக்கும்..!
மன்னும் மொழிகளில் மன்னனாம் தமிழ்
   மொழிக்குள் அரசியாம் முதல் முன்னோடி..!
என்றும் இறவா இனியும் எப்போதும்
   ஏற்கும் உலகம் எங்கள் தாய்மொழியே..!
அன்னைக்கு ஈடில்லை அதுபோல் நம்தமிழ்
   அன்னைக்கு மாற்றிலை ஆரும் அறிந்ததே..!
அன்பின் வழியே அனைத்தும் நடக்கும்
   அதுதான் உலகில் அறவே நிலைக்கும்..!
தன்வயிறு காய்ந்தும் தாயன்பு குறையாது
   என்தாய் நாடுதரும் ஏற்றமிகு வாழ்வே..!
என்நாடும் மொழியும் எங்கேயும் நிலைக்கும்
   என்னும் உணர்வு எல்லோர்க்கும் உண்டு..!
தன்னிகர் இல்லா தனித்துவம் பெற்றே
   தங்கள் எண்ணம் தழைக்க வேண்டும்..!
அன்பு இருந்தால் அனைத்தும் ஆகும்
   அன்றே சொன்னார் ஆன்றோர் ஏட்டிலே..!
அன்பும் பாசமும் ஆறாய்ப் பெருகி
   அன்பின் வழியே உலகாள..
ஆண்டவன் அருளூம் அமைய வேண்டுமே..!

- பெருவை பார்த்தசாரதி

**
அன்பு 
எல்லாப் பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக் கூட.
அன்பு
எல்லாக் கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால் கூட.
அன்பு
எல்லா துன்பங்களையும்
தாங்கிக் கொள்கிறது
மரணத்தின் பிடியில் கூட
அன்பு 
எல்லாக் கவிதைளையும்
படித்து மகிழ்கிறது 
சோகக் கவிதையைக் கூட
அன்பு
பனித் துளிகளை
கண்டு மகிழ்கிறது
கண்ணீர் துளிகளைக் கூட
அன்பு
எல்லாக் கண்களையும்
கருணையுடன் பார்க்கிறது
குருடனாக இருந்தால் கூட 

- பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி

**

அன்பின் வழியது இல்லறம் நடத்திட 
இருபாலர் வேண்டுமென இதுவரை நினைத்தேன்...

அன்பின் கருவறை ஆன்மா ஆதலால் 
அதன்புறம் உள்ள உடலொரு பொருட்டல்ல .....
பாலும் பொருட்டல்ல; இனமும் பொருட்டல்ல 
அன்புடன் புணர்ந்திட எதுவுமே பொருட்டல்ல !!!!

இயற்றினர் சட்டம் ... அளித்தனர் தீர்ப்பு 
இயற்கைக்கு புறம்பாய்  ... புதியதோர் வார்ப்பு !!!

கல்வி, கேள்வி, பொருளா தாரம் 
கணினி, அறிவியல், அரசியல் அமைப்பு 
அந்நியனுக்கு நிகராய் இந்தியன் ஒளிர 
ஆயிரம் தீர்ப்புகள் ஆண்டாண்டு காலம் 
திருத்தப் பெறாமல் நிலுவையி லிருக்க
இன்றே உலகம் அழியு மென்பார்போல் 
இத்தனை அவசரம்  இதில்மட்டும் எதற்கு ????

அவரவர் எண்ணம்போல் அனைவரும் வாழ்தல் 
இன்றுள்ள நமக்கு நன்றுபோல் தோன்றினும் ...
அடுத்த தலைமுறைக்கு இப்பெரும் தீர்ப்பு 
அழகிய வரமா ??? அழித்திடும் சாபமா !!!

- கவிஞர் முனைவர் இராஜலட்சுமி இராகுல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com