கடந்த வாரத் தலைப்பு உன் விழிகளில்! வாசகர் கவிதைகள்!

உன்னை என் நயனச் சிறைகளில்  அடைத்த பின்னுமா என் மீது உனக்குக் கோவம் வரவில்லை?
கடந்த வாரத் தலைப்பு உன் விழிகளில்! வாசகர் கவிதைகள்!

உன் விழிகளில்

உன்னை என் நயனச் சிறைகளில்  அடைத்த பின்னுமா
என் மீது உனக்குக் கோவம் வரவில்லை?
ஏன் தாமதிக்கிறாய்? 
பதிலுக்கு என்னை உன் விழிச்சிறைகளில் அடைத்துவிடு. 
விடுதலை என்பதை என்றைக்கும் விரும்பாமல் 
காலமெல்லாம் கட்டுண்டு கிடப்பேன். 
என்னில் நீயும், உன்னில் நானும். 
நினைக்கும் பொழுதே நெஞ்சம் நிறைகிறது 
நினைவலைகளில் நித்திரை நீசமாகிறது. 
எத்தனை காலம் காத்திருப்பது? 
கருணை கூர்ந்து களமிறங்கி விடு, இப்பொழுதே 
காதலை பொய்க்க விடாதே, கண்ணே. 

பான்ஸ்லே. 

**

தூண்டில் போடுவது மீன்களைப் பிடிக்கத்தானே? 
ஆனால் இங்கு மீன்களே 
அல்லவா தூண்டில் போடுகின்றன! 

வானவில்லில் கருப்பு நிறம் 
இல்லாததன் காரணம் 
உன் புருவம் பார்த்தவுடன் 
புரிந்து போனது எனக்கு! 

உன் பார்வைகளைப் 
பத்திரப்படுத்திக்கொள் கண்ணே! 
மாற்று வழி மின்சாரத்திற்காய் 
மனிதக் கூட்டம் அலையும் காலமிது! 

நீ கண்ணுறங்காத நாட்களில் 
இரவுகள் இரட்சிக்கப்படுகின்றன! 

நீ தன் மீதுதான் கண் விழிப்பாய் என 
உன் படுக்கையறைப் பொருட்கள் 
பந்தயம் கட்டிக்கொள்கின்றன தங்களுக்குள்! 

நீ முகம் கழுவும் பொழுதிற்காய் 
தண்ணீருமல்லவா தவமிருக்கிறது! 

நீ கண்தானத்திற்காக விண்ணப்பித்ததிலிருந்து 
குருடனாய்ப் போகவேண்டி 
குலதெய்வத்திடம் முறையிடுகிறேன்! 

உன் புருவங்களுக்கு மத்தியில் 
புகலிடம் பெறவேண்டி 
குதூகலமாய்க் காத்திருக்கிறது குங்குமம்! 

சூரியனும் குளிர்கண்ணாடி அணிகிறது! 
சுடர்விடும் உன் கண்ணொளி கண்டு! 

உன் கைக்குட்டைக்குத்தான் எத்தனை கர்வம்? 
உன் கண்ணீர் தாங்கும் தருணங்களில்? 

உன் ஒவ்வொரு கண் சிமிட்டலிலும் 
ஓராயிரம் கவிதைகள் பிறக்கின்றன! 

இக்கவிதை அந்த ஆயிரத்தில் ஒன்று!  

 - நிலவை பார்த்திபன் 

**

என் இறுதி மூச்சு நின்றும்
குருதி வழிந்தோடிய
உன் விழிகளில்  தஞ்சமடைந்து 
என் வாக்கை நிறைவேற்றி விட்டேன்/

சமத்துவத்தை புதைக்க 
நம்மை கவுரவமாக கொலை செய்தவர்களுக்கு 
சவக்கிடங்கில் நிலவும் சமத்துவம் புரியாது!

-தேவி பிரபா

**

 
என் மனதை கொள்ளையடித்த 
முகம்மூடிய விழிபறி 
கொள்ளைக்காரியே!
நீளுமா உன் நீல விழிகள் 
என் பக்கம்!

சோம பானமும் சுரா பானமும் 
பருகின்னல்தான் போதை!
சொக்க வைக்கும் உன் விழியைப்
பார்த்தாலே போதை!

வழிமேல் விழி வைத்தால் 
பாதை தெரியும்!
உன் விழிமேல் விழி வைத்தால்
போதை தெரியும்!

உன் நீல விழிப்
பார்வை பட்டே
வானும் கடலும் 
நீலமனதோ!

உன் விழிகளில் கண்டேன்  
வயது வந்தோருக்கான 
புதிய திரைப்படம்!
அதில் கருப்பு வெள்ளையே இல்லை!
உன் விழிகளில் தெரிந்தது 
முழு நீலப் படம்!

இரும்பாலான இதயத்தையும் ஈர்க்கும் 
உன் காந்த விழிகளால் 
நான் விழுந்துவிட்டேன்!

உன் விழியைப் பார்த்தால் 
உள்ளம் தடுமாறுதே!
இதயம் இடம் மாறுதே!
என் விழியும் நிறம் மாறுதே!

உன்னைப் பார்த்ததிலிருந்து
கரும்பாய் இனிக்கிது உன் நினைவு!
கவிதை படிக்கிது என் மனது!

- கு.முருகேசன்

**

பெண்ணே உன் விழிகளிலிருந்து
விழும் கண்ணீர்த்துளி
விலைமதிப்பற்றது
விரயம் செய்யாதே!

தோல்விகள் தொடர் கதையல்ல
வெற்றியை  பாதைக்கு அழைத்துச்செல்லும் முதல்
அத்தியாயம்..


சீதையாய் தீக்குளித்தது 
போதும்
கண்ணகியாய் கொதித்தெழுந்துவா...

காமுகர்களை கபலிஷ்கரம் செய்ய
நம் காலம் தாழ்த்தும்
ஒவ்வொரு கணமும்
நம் சூறையாடப்படுகிறோம்
நயவஞ்சகம் பிடித்த சில சகுனிகளால்...

- காசிநாதன் சுதா, சிங்கப்பூர்

**

வானத்தின் விழிகளில்விண் மீன்கள் துள்ளும்; 
            மேகத்தின் விழிகளில்தாம்  மழையும் சிந்தும்; 
ஊனத்தின் விழிகளில்தாம்  திறன்கள் வாழும்; 
            உடலின்தம் விழிகளில்தாம் வியர்வை கொட்டும்; 
மானத்தின் விழிகளில்தாம்  தமிழர் வீரம்; 
            மண்ணகத்தின் விழிகளில்தாம் வையம்; ஆனால், 
மா(ன்)உன்றன் விழிகளில்தாம் நானு மின்று 
           மறைந்தேதான்  தொலைந்தேன்டி; நியாயந்  தானா? 

நிலவில்லா இரவின்தன் விழிக  ளில்தாம் 
          நிலம்ஆய்ந்து உறங்கிடுமே; அதனால்  இந்த 
நிலமென்றும்  இருளடைந்து கிடப்ப தில்லை;
          நீரின்கண் விழிகளில்தான் உயிர்க ளெல்லாம் 
நலமாக  உயிர்வாழும்; சிலவே  ளைகள் 
         நிலவின்கண் வெளிச்சத்தை மேக மூடி 
கலக்கத்தை ஈந்தேதான் மறைத்த  போதும் 
         நிலவின்தன் விழிகளாலே வெளிச்சம்  பாயும்; 
நிலவைப்போல் நங்கையுன்றன்  விழிக ளில்தாம் 
          நிலமாக நானுந்தான் வெளிச்சம் பெற்றேன்!


பணமுனையின் விழிகளில்தாம் வாழ்வும் சிக்கி 
          பாரினிலே மாந்தயினம் தவித்த  போதும் 
குணமிகுந்த  சிலராலே  புவியும்  சுற்றும்; 
           குவலயமும் நல்வினையால்  நிமிர்ந்து  நிற்கும்; 
மணமிகுந்த மலர்வனமாய்  மணக்கும் வாழ்வு,
            மங்கையுன்றன் விழிகளில்தாம் நித்த  நித்தம் 
உணவாகிப்  போனதடி;   விழியால்  வாரி 
           ஓயாமல் உண்டிடுவாய் என்னை அள்ளி!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூர்

**

உடைந்துச் சிதறிய
கண்ணாடித் துகள்களை
உன் விழிகளுக்குள்ளிருந்து
எடுத்தபோது
என் விரல்களில் 
ரத்தம் வழிந்தது 

கனவுப் பனிப்போர்வை
போர்த்திய
இரவுக்குளிர் காற்றில் உறைந்த
நீலக்கிரகமாய் 
உன் கண்ணின் மணி
நிலைகுத்தியது

வழிந்த ஒற்றை
கண்ணீர்த்துளி
விழிச்சிலம்பு
உதிர்த்த
முத்துப்பரல் 
என் மார்பில் 
தீக்கங்காய் 

இமைச்சிறகை விரித்த
வெள்ளை வண்ணத்துப்பூச்சி
கண்களுக்குள் 
பிரபஞ்சத்தின் 
கறுப்புரகசியம்
தன்னை ஏதொவொரு
மொழியில் எழுதிக்கொண்டது

நீலக்கடல் விழிகளுக்குள்
மெல்லநான் இறங்க 
உன் உதடுகள்
நான்என நினைத்து
வெறுமையைக் கடித்து
சிறகு கிழித்த காற்றைப்போல் 
கிழிந்த மனப்பிறழ்வு மொழியில்
முனக 
காலத்தை முறுக்கிப்
பிழிந்துச் சொட்டிய 
ஈரத்துளிகள்
இமைரோமங்களில்
புல்சூடிக்கொண்ட
பனித்துளிகளாய் 
ஒட்டிக்கிடக்க 

இறுதியில்
அந்தக் கணம்
கடைசி செங்கலையும்
வைத்துவிட்டுக்
கடந்துபோனது
 
**

 உன் விழிகள் பேசும் 
மொழிக்குத்தான் ஏதடிப் பாஷை... 

உலகமொழிகள் ஒவ்வொன்றாய் 
தொகுத்துச் சொன்னாலும் 
புரியாமல் போகலாம்... 

உன் ஒற்றைப் பார்வையில் 
ஆயிரம் அர்த்தங்கள் 
அகராதி இன்றித் 
தெரிந்துக்கொண்டேன்... 

நான் சோகத்தில் இருக்கும் 
போதெல்லாம் 
என்னைத் தேற்றும் மருந்தாகும் 
உன் பார்வை... 

நான் துவண்ட போதெல்லாம் 
என்னைத் தூக்கி நிறுத்தும் 
உன் விழிகளும் 
எனக்கு ஏணியடி.. 

நிலவும் நாணம் கொள்ளும் 
உன் விழிகளின் 
ஓரப் பார்வையில்... 

ஓடை மீன்களும் 
ஓடிவரும் 
உன் விளிகளில் 
ஒளிரும் ஒளிதனில் 
மயங்கி... 

அணுக்களின் இயக்கங்கள் கூட 
ஒரு நொடிப்போழுதினில் 
நின்றுப் போகலாம் 
உன் விழிகளின் 
காந்தப் பார்வையில்.

- கவிஞர் பி.மதியழகன்

**

உன் விழிகளில் தெரியுது ஓராயிரம் மொழிகள்!
உன் விழிகளில் வழியுது பலவாயிரம் ரசங்கள்!

ஒவ்வொன்றாய் எடுத்து கவிதை படைக்க சொற்கள் போதுமா?
ஒவ்வொன்றாய் எடுத்து ஓவியம் வரைய நேரம் போதுமா?

உன் விழிகளால் என்னை பார்த்து பார்த்து கொல்லாதே!
உன் விழிகளால் என் இதயத்தில் ஊடுருவி செல்லாதே! 

இயல்பாய் பார்க்க உந்தன் விழி குழந்தையடி!
மகிழ்வாய் பார்க்க உந்தன் விழி தேவசிலையடி!
கவனமாய் பார்க்க உந்தன் விழி ஆராய்ச்சி கூடமடி! 

பொங்கு அலையாய் உந்தன் விழியில் நான் நனைய,
தங்கும் மணலாய் எந்தன் மனதில் நீ தங்கிடுவாயாக பெண்ணே!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

கெண்டை (இ)ரண்டு மேகம்
கொண்டு  துள்ளியிங்கு வந்ததோ
கண்டுகொண்ட எந்தன் நெஞ்சு
சந்தம் கொண்டு பாடுதோ

வண்டமர்ந்த சோலை மேயும்
மான்கள் போல பார்க்குதே
நோக்கும்போது எந்தன் ஆவி
உன்னைச் நாடிச் சேருதே

தண்மை கொண்ட நிலவின்
கண்கள் நோக்குகின்ற போதிலே 
எந்தன் சிந்தை உன்னைவாழ்த்தி
கவிதை கோடி பாடுதே

சண்டை செய்யும் வாள்களாக
கூர்மை கொண்டபோதிலும்
கருணையோடு அன்பை நாளும்
உந்தன் விழிகள் வீசிடும்.

- கு. இராமகிருஷ்ணன்

**

உன் விழிகளில் - நான் எனைப் பார்த்தேன்!

உன் விழிகள் என்ன காந்தமா!
கவர்ந்தெழுக்கும் துகளாய் நான்!

தூரம் சென்று பார்த்த பின்னும் நொடியில் என்னை பொடியாக்கினாய்!

மனம் எரிகின்றதே தீ பற்றாமலே!
காதல் உருவானதே உன் விழிகளினாலே!

இருவிழி கொண்டு எனை நோக்கினாய்!
உன் இசைவிலே எனை தாலாட்டினாய்!

இது பல ஜென்ம பந்தமா இல்லை பூர்வ ஜென்ம புண்ணியமா!

உன் விழி பார்த்து மெய் சிலிர்க்க!

உயிரோடு உயிர் சேர்ந்து உறவாட கண்டேன்!

உன் விழியோடு விழி சேர்த்து எனை கண்டு கொண்டேன்!

காதல் இடம்மாறி, தடு மாறி, உனை உருவாக்கி கொண்டேன் - மனதில் உளமார நிலைபெறச் செய்தேன்!

பெண்ணே படைத்தவன் உனை பார்த்திருக்க!
பார்த்த இடத்திலே பரிதவிப்பான்!
பாவை உந்தன் இருவிழி கண்டு 

-செந்தில்குமார், திருநெல்வேலி

**

உன் விழிகளில் உறைந்து போக வேண்டும்  
உயிரோடு உயிராக கலந்து போக வேண்டும் 

பார்க்கும் இடமெல்லாம் நீயாக வேண்டும் 
சாய்ந்து உறங்கிடும் சேயாக வேண்டும் 

சுவாசம் சிந்தும் சுவாசத்தை சுவாசித்திட வேண்டும் 
பூவாசம் தந்திடும் நினைவில் 
வாழ்ந்திட வேண்டும் 

ஆருயிராய்த் தழுவி தினமும் 
அணைத்திட வேண்டும் 
ஓரியிராய் ஈருயிர்கள் இணைந்திடல் வேண்டும் 

- பாலா கார்த்திகேயன் 

**

தொல்லுலகில் 
பெண்கள் போர் செல்லா காரணம் 
இன்றறிந்தேன் _ உன் விழிகளில்
நொடிக்கு நூறு யுத்தம் 
புரியும் உன்விழி வல்லமை விழிகளில்

- பவித்ரா ரவிச்சந்திரன், மதுரை

**

உன் விழிகளின்  ஓரம் 
ஒரு துளி  நீர் வந்தாலும் 
என் இதயத்தில்  பல துளி ரத்தம்  கசியும்  
இது காதலால்  ஆதலால்  சொல்லும் 
வெறும் வார்த்தைகள் என்றால் - ,அங்கு 
காதல்  வேசமாகிறது  .
உன் விழிகளின்  ஓரம்  மட்டும்  
நான் விழவில்லை  
உன் நினைவால்  
நான் நானாக இல்லை 
உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து 
கண்கள்  தூங்கவில்லை  
நீ வலம் வரும் 
தெருவோரம்  
தினந்தோறும்  என் நகர்வலம்  
தெரு நாயும்  நண்பனாச்சு 
உருமாறி  உடலும் ஆச்சு  
அன்று - நீ 
உன் தங்கையை காணவில்லை 
என்றதும் கடற்கரை  
வரை தேடினேன்  .அதுபோல
உன்னை காணவில்லை  
என்றதும் கடலுக்குள்ளே நுழைந்தேன் .
உனது  பேனா  உன் 
கைதவறி   கிணற்றில் 
விழுந்துவிட்டது   என்று - அன்று
நீ நின்று  சொன்னதும்;  
கிணற்றுக்குள் குதித்தேன்  
அந்த. கடலின் ஆழமும்
கிணற்றின்  ஆழமும்  
எனக்கு தெரிந்தது. 
உனது மனத்தின் ஆழம்தான் 
எனக்கு தெரியவில்லை.
அன்று; உன் விழிகளில் 
நான் விழுந்துவிட்டேன் என்று 
நான் சொன்னதும்  .
நானும் தான்  என்று 
சொல்லி உன் விழியோரம் நீர் 
வடித்தாயே .
இன்று 
நம்ம காதலை  முடித்தாயே  .
இப்போது  புரிந்தது  
எல்லாமே தெரிந்தது.
விழிகள் தூங்கும்  என்பதை 
அறியாமல்  - அன்று,
உன் விழியோரத்தில்  
நான் விழுந்தது தவறே  .
இதயத்தில் விழுந்திருக்க வேண்டும்  
அதுதானே  எப்போதும்  
துடித்துக்கொண்டுஇருக்கும் 
இன்று, என் விழி ஓரத்தில்  
நீர் வடியவில்லை  
காரணம்  நீ  அங்கு 
இல்லை எங்குமே 
என்னில் இல்லை .
என்னை கரம்பற்றிய  
என் அன்பு மனைவியே என்றும்  
என் விழியோரத்தில்; 
ஆனந்தக் கண்ணீரோடு
என் நெஞ்சத்தோடு என்றென்றும் …

- களக்காடுவ .மாரி சுப்பிரமணியன்

**
தமிழகமே.. என் தாய் மண்ணே.. உன் விழிகளில்…
துயர் துடைக்கும் கருணைக்கடல் பொங்க வேண்டும்…
அன்பு எனும் இன்ப ஊற்று சுரக்க வேண்டும்..
அடிமைத்தளை அச்சம் விட்டு அகல வேண்டும்…
உதவி செய்து மகிழ்விக்கும் கனிவு வேண்டும்…
உண்மைதனை உரைப்பதற்கு துணிவு வேண்டும்…
நல்லனவே தெரிகின்ற நிலைமை வேண்டும்…
நலம்பயக்கும் ஒளிக்கீற்று பாய வேண்டும்…

தமிழகமே.. என் தாய் மண்ணே.. உன் விழிகளில்…
தொலைக்காட்சித் தொடர்களெல்லாம் தெரிய வேண்டா..
அலைப்பேசித் தொடுதிரையே பதிய வேண்டா..
கலைந்து போகும் கனவாக நட்பு வேண்டா..
உலைவைத்த எதிரியெனினும் வஞ்சம் வேண்டா..
விலையில்லா இலவசங்கள் இனிக்க வேண்டா..
நிலைகுலையச் செய்தாலும் அச்சம் வேண்டா…
மலைமலையாய் வாங்குகின்ற நினைப்பு வேண்டா..

-ஆ. செந்தில் குமார்

**

ஓ பெண்ணே,
உன்னை கண்டேன்,
அழகை  உணர்ந்தேன்,
மெய் சிலிர்த்தேன்!

நீ நடந்து சென்ற பாதையில் கால் வைத்து நடை பயின்றேன்,
உன் தலையில் இருந்து களைந்த பூவிலும் வாசம் முகர்ந்தேன்,
உன் சிரிப்பொலியும் தேசிய கீதம் போல் எனக்கு புத்துணர்வு அளித்தது,
மொத்தத்தில் உன் நினைவுகளில் என்னை தொலைத்தேன்!

முதல் முறை உன்னை நேருக்கு நேர்,
விழியோடு விழி பார்த்தபோது,
தொலைத்த என்னை கண்டேன்,
உன் விழிகளில்!!
உணர்ந்தேன் நம் காதலை!
அன்று முதல், என் வாழ்வும் வண்ண மயமானது!
நீ உறங்கும் பொழுதும்,
உன்   விழிகளில்,
நானும் உறங்கினேன் தாயின் கருவில் இருக்கும் பிள்ளைபோல்!

உன்னை நான் இதயத்தில் சுமந்தேன்
ஆனால் நானோ, சிப்பிக்குள்  முத்தாய்
உன் விழிகளில்!!

**
உன் விழிகளில் நிறைந்திருக்கும் உருவம் என்ன வென்று அறியகருவி தேவை
குங்குமம்  கொடுத்து இதயத்தைக் கேட்கும் காலம் ஒன்று இருந்தது
இதழ்களின் வழி காதல் பரவியது ஒரு காலம், அது பொற்காலம் என்பேன் நான்
இதயத்தை ஸ்கேன் பண்ணுவதா? மூளையை பண்ணு வதா? ஒரே குழப்பம்
இன்பத்தை மட்டும் ஸ்கேன் பண்ணவே ஒருகாலத்திலும் முடியாது
விழிகளுக்கு வருவோம் ! அது ஒரு காமிரா தான் ‘ சேவ்’ செய்யமுடியாது

விழிகளால் பார்க்கின்றேன் விழிகளால் அ ழைகின்றேன்,விழிகாளால் பேசுகின்றேன்
வேண்டிய கண்களில் தான்பேசுகின்றோமா? ஒரு சந்தேகம்தான்!
விழிகள் நுழைவாயில் கண்காணிப்புச் செய்வது, நம் மூளைதான் !
விழிகள்தான் ஆரம்பக்கட்டம்! அதன்பின் இதயம்—மூளைதான்
கோவில்கள்களில் நுழைந்ததும் கும்பிடும் விநாயகர் போல்
“உன்விழிகள்! என்விழிகளில் சேருமா? உரை தோழனே!” ஆனால்
என் விழிகளில் எந்த ஸ்கேன் பண்ணினாலும் நகல் எடுக்கமுடியாது!
ஆனால் நம்பிக்கை! உன் விழிகளில் நுழைந்தவள் இதயத்தில் நிறைந்தவள்! நான்!

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்  

**

உன் விழிகளில் அன்பிருந்தால் 
   அகிலமும் உன்னை விரும்புமே
உன் விழிகளில்  ஆனந்தம் தெரிந்தால்
 அனைவரும் உன்னை விரும்புவரே
இன்பமிழைந்தால் நம்பிக்கை ஒளிவிடுமே 
ஈரமிருந்தால் உறவுகள் வேர்விடுமே 
பகையையும் ஊதித் தள்ளிடலாமே 
பலரும் உன் விழியழகில் விழுவரே!

உன் விழியில் கோபம் வீசினால் 
    உன்னைப்  பார்த்தவர் விலகுவர் 
உன்விழிகளில் வெறுப்பை உமிழ்ந்தால்
     வானைநோக்கி உமிழ்ந்த எச்சிலாகுமே
எரிச்சலைக்கண்டு எதிரிகள் எழுவரே
 ஏக்கம் மிஞ்சி எள்ளி நகையாடுமே
பகையும் கொளுந்துவிட்டு பளிச்சிடுமே
பலரும் உன்னை ஒதுக்கித் தள்ளிடுவரே!

விழித்து வெறிக்கும் பார்வை விரட்டும் மனிதவுறவை
விழிநிறை மகிழ்வு காட்டும் பார்வை மனிதவுறவை
பாசவலையாய்ப் பின்னிப் பிணைந்து விரிந்திடுமே
நேசமிகுந்து நித்திலம் நிலைத்திடுமே

**

கூர் விழியாளே !
ஏர் பிடிக்கும்
எந்தன் கரங்கள் 
எழுதிய கவிதையை
வாசிக்கிறேன் கேளாய் !

என் விழிகள்
இமைக்கும் நேரத்தில் 
வரப்பைக் கடக்கிறாய் !
உன் விழிகள்
சந்திக்கும் நேரத்தில்
இமைக்க மறுக்கிறாய் !
கள்ளமில்லா உன்
உள்ளத்தின் உணர்வுகளாம்
காதலும்
காருண்யமும்.  
பரிவும்
பாசமும்
உந்தன்  விழிகள் வழியே
பள்ளமதை நோக்கிப் பாயும்
வெள்ளமெனப் பாய்ந்து
எனது மனதோடு சேர்ந்து
வயலையும் நிரப்பியது
கயல் விழியாளே !
நம் விழிகள்
நான்கும் 
இறந்தபிறகும் வாழ வேண்டும்
பிறருக்கு ஒளி தந்து !
   
- கே.ருக்மணி 

**

மொழி பேசும் விழிகள் எனை அசைத்தன
சுழித்தோடி என் ஆழ்மனதைத் தொட்டன
பொழியும் சாரல் மழையாய்  அணைத்தன
வழிகாட்டியாய் காதல் அன்பைத் தொடுத்தன

உள்ளம் உன் விழிகள் வழி தெரிகின்றதே
கள்ளம் ஏதும் இல்லையெனப் புரிகின்றதே
அள்ள அள்ளக் குறையாத அன்பிருக்கின்றதே
துள்ளத் துள்ளக் குதிக்கும் காதல் புரிகின்றதே

விழுங்கியதே உன் விழிகள் என் உள்ளத்தை
உழுது காதல் விதை அதில் ஊன்றியதே
பழுதின்றி அன்பு நீரூற்றி வளர்த்ததே அதை
விழுதாக வேரூன்றியதே காதல் உன் விழிகளிலே

தோற்றன என் விழிகள் உன் விழிகளின் போரில்
ஆற்றலை அள்ளி வழங்கி ஆதரவும் தந்தனவே
காற்றிலாடிய கனவை நினைவாக்கிய அதிசயம்
போற்றினேன் காணும்போது உன் விழிகளையே

உன் விழிகளில் வழியும் அன்பில் நனைகிறேன்
உன் விழிகளில் பொழியும் காதலில் குளிக்கிறேன்
உன் விழிகளில் தோன்றும் மொழிகளைப் படிக்கிறேன்
உன் விழிகளின் அசைவில் என்னையே பார்க்கிறேன்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**
வாழ்நாள் முழுவதும் - எனக்கு
திரும்ப பெற முடியாத
ரெட் அலாா்ட் -
உனது வெண்விழிக் கடலில் 
உண்டான கருவிழிப் புயலால்....!

சொா்க்கவாசல் திறப்பும்
அற்பமானது - உனது
விழிகளின் திறப்புக்கு முன்னால்...!

நீ உறங்கிய நிலையிலும் -
உன் விழிகள் இமைக்குள்
பாதுகாப்பாய் இருந்தன - ஆனால்
என் இதயமும் விழிகளும்மட்டும்
உன்னால் களவாடப்பட்டன....!

உன் விழிகளில் நிகழும்
அதிசயங்களைப் பத்திரப்படுத்தி வை -
உலக அதிசயக்குழுக்  கண்டுவிட்டு
உன் விழிகளையே சிலையாக்கி
காட்சிப்படுத்தி விடப்போகிறது...!

சமகாலத்தில் சந்திரனும் சூரியனும்
மாறி மாறி தோன்றுகின்றன
காரணம் யாதென்றால் - உன்
வெண்விழிப் பகலாகவும் - உன்
கருவிழி இரவாகவும் காட்சிதந்து
அவைகளுக்கு குழப்பத்தை தருகின்றன...!

காட்டாற்று வெள்ளத்தில்கூட
எதிர்நீச்சலிட்டு கரையேறிவிடுவேன்
ஆனால் - காதலியே
பெருங்கடலாய் விளங்கும்
உன் விழிகளில்
விழுந்தவன் நான் - நீச்சலையே
மறந்துவிட்டு தத்தளிக்கிறேன்....!

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம்
அனுமதிப் பெற்றபிறகு - காற்றினை 
உன்விழிகளிடம் நெருங்க சொல் -
இல்லையேல் - மாசடைந்த காற்று
உன்விழிகளையே சேதமாக்கிவிடும்...!

உன் விழிகளால் - எனக்கு
தினமும் வசிய மருந்திடு...
ஒருவேளை  - நீ
மறந்துவிட்டால்  - எழுதிவைத்துக்கொள்
அன்று நான் இறந்திருப்பேன்....!

நான் இறந்தபிறகு - எனது
இமைகளை மூடி வைக்காதீர்கள்
அவள் விழிகளின் தரிசனம் -
இறப்பிற்கு பிறகும்
எனக்கு கிட்ட வேண்டும்.......!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

**


சலிப்பின்றி இமைக்கும் ஒலியின்றி   இசைக்கும்
வார்த்தைகள் அற்று
பார்வையால் சுற்றும்
உந்தன் விழிகள்
உரைக்கும்  மொழிகள்
எத்தனை ?
கருணையில்  கசியும்
கற்பனையில் கரையும்
காதலில் பூக்கும்
கதைகள்  பேசும்
கணைகள் தொடுக்கும்
கண்ணீரில மிதக்கும்
காந்தமாய் கவரும்
காற்றோடு  தவழும்
இணையாமல் இருக்கும் 
இணைந்தே   இயங்கும்
உந்தன் இருவிழிகள் தான்
எந்தன்  இதயத்தில் 
எழுதுகின்றன எண்ணற்ற
இனிய  கவிதைகளை!

- ஜெயா வெங்கட்

**

உன் விழிகளில் என்னை பார்த்தாய்
உன் விழிகளில் என் சகோதரனை பார்த்தாய்
உன் விழிகளில் என் சகோதரியை பார்த்தாய்
உன் விழிகளில் என் தந்தையை பார்த்தாய்
உன் விழிகளில் என் தாத்தா, பாட்டியை பார்த்தாய்

உன் விழிகளில் உன்னை ஏன் பார்க்கவில்லை
உன் விழிகளில் உன் நலத்தை ஏன் பார்க்கவில்ல
உன் விழிகளில் உனக்கான தேவையை ஏன் பார்க்கவில்லை
உன் விழிகளில் உனக்கான உணவை ஏன் பார்க்கவில்லை

பொது நலம் பார்த்த உன் விழிகளை - ஏன் பார்க்கவில்லை நாங்கள்
உன் விழிகளை பார்க்கமுடியவில்லை சுய நலம் பார்த்த எங்களால்
எங்கள் சுயநலத்தையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு
எங்கள் நலத்தை மட்டுமே பார்த்த நீ - எப்போது
உன் நலத்தை பார்க்கப் போகிறாய் உன் விழிகளில் - தாயே !

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**

உன் விழிகளில் சிந்தும் மொழிகளோ
வானத்து நட்சத்திரங்கள் போலவே 
ஒளிகதிர்கள் பறக்கின்றது ||

என்னையும் அறியாமல் திரும்பி 
பார்க்க கண்கள் கூசுகின்றது இரு கரங்களில் ஒன்று என் புருவத்தில் 
ஓடி குடை பிடித்து ஒளி மறைக்கிறது ||

நீ வசிக்கும் இடம் தேவலோகமோ இல்லை பாவலோகமோ அறியேன்
மூச்சு நாசிக்கும் மூடாப்பிட்டு விட்டாய் 
விழியுள் விருப்பும் உள்ளது ஆயினும் 
வெறுப்பும் கலந்துள்ளதோ என்கிற சந்தேகமும் நுழைந்து துழாவுகிறது ||

நீ வசந்தமோ மல்லிகையோ மணிப் புறாவோ முக்கனியுள் ஒரு கனியோ இல்லை ஐங்கனிகளுள் ஒரு கனியோ
மேலும் மன்மதனின் ஐங்கணையுள் 
எக்கணையோ வாய் மூடப்பட்டு 
விழிகள் வாயிலாய் கவிபாடுகிறாய் ||

கற்கண்டோ இல்லை வேம்புப்பூ தேன்துளியோ எதுவானாலுமே அவைகளின் வரலாறு அறியாது 
இம்மியும் நகர்ந்திட மாட்டேனுன் 
உத்தரவின்றி நுகர்ந்திட மாட்டேன் ||

ஐந்தழகாம் மெல்லியது நுண்ணியது வியப்புடையது இளகிய தன்மை
செறிவில்லாதது யாவும் தங்கத்தில் பதித்த நவரத்தினங்களாய்த் திகழ ||

ஐங்குழல்களில் எக்குழலைக்
கொண்டவளோ மறைத்திட்டாய் நின் 
நீல நயணங்கள் செல்லவிருக்கும் பயணங்கள் எங்கேயோ நியமனங்கள் அங்கே வரலாமா வரலாறு வரைய||
 
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்க

**

கண் அதுதான்  உன் விழி 
மண்ணில்  மறையும்  உடலில் 
கண்ணுக்கு மட்டும் இறப்பில்லை!
உடலை மண்ணில் புதைத்தாலும் 
உன் விழிகளை கண் பார்வையில்லா 
மனிதனின்  கண்ணில்  புதைத்தால் 
பெறுவானே  உலகை பார்க்கும் வாய்ப்பை!
உன் உடல் மறைந்தாலும் 
விழி இருக்கும்  உயிருடன்! 
உணர்ந்து செயல்படும்  சமூகமே...
மலர்ந்த முகத்துடன்  இப்பணியினை செய்து 
தளர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்வை கொடு!
உன் விழிகளில் நீர் நிறைந்தால் 
அது ஆனந்த கண்ணீராக  இருக்க 
நீ செய்யும் செயலே  காரணம்!
தானத்தில் சிறந்தது  கண்தானம்  என 
வானம் முட்டுமளவிற்கு  எடுத்து சொல்!
உன் விழிகளில் இருக்கும்  பார்வை 
உனக்கு பிறகு உலகை நோக்க 
கணக்கின்றி விழிகளை  தானம் செய்!

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

நினைவுகளை எழுதிமுடிக்கும் கணங்களில்
பூசணிப்பூபோல மெல்லச்சத்தமிட்டு அவிழும்மனம்
எழுதியதைக் கோர்த்து வைக்கையில்
மெல்ல இறுகிக் கன‌த்தும் போகிறது
இத்தலைப்பில்..
உன் விழிகள் பார்த்தே எழுதியாக வேண்டும்
வழியில்லை..

ஏதோ ஒரு பொழுதினில்..
நீயே சொன்னாய்..
விழிகள் பார்த்தே பேசும்பொழுது
உள்ளங்கள் விழித்து உணர்வுகள் தெரியும்
இன்னும் ஆழ‌
விழிகளின் உள்ளே தேடிப்பேசினால்
சொற்கள் சுமக்கும் உணர்வுகள்
உணர்வுகளில் கரைந்த‌ சொற்களாகும்
சொற்களைத்தேடும் சுமையும் குறையும்
மெல்லப்பழகினால் உணர்வுகள்பேசும் 
தவமும் நிகழும்..

ஒரு பொழுதினில்..
நானே சொன்னேன்..
எவ்வளவு பழகியும்
எந்தத் தவமும் நிகழவில்லை..
நீயே சொன்னாய்..
உணர்வுகளும் கடந்த உள்ள‌ங்களில்
தவங்கள் தனியாய்த் தெரிவதில்லை..
கடந்ததை மறந்து கடப்பதும்
கடந்ததும் கடப்பதும் மறப்பதும்
தவமே..

உன் விழிகள் சுமந்த வெளிச்சம்
எவ்வளவு ஆழங்களை
இன்றும்
அவ்வளவு அழகாகச் சொல்கிறது..

உன் விழிகள் பார்த்தே எழுதிய‌தும் தவமா.. ?

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா.

**

உன் விழிகளில்
அகல் விளக்குக் குளமொன்றில்
அனுதினமும் விட்டிலென ,
பகல் முழுதும் பறந்தாலும் முடிவுறாத வானம் ,
பாசாங்கு பேசாத பரவசக்காதல் - பனிப் பார்வை பார்த்து குளிர் நினைவைப் போர்த்தும்

துகில் உரிப் பார் யாருமின்றி
மின்னல் வெட்டும் பார்வை, அகில் மணக்கும் ஆழ்மனதின் அகலாத ஆசைகளை
பொதிந்திருக்கும் கண்கள்
பதிவு செய்யும் காதலை,

கயல் என்றும் வண்டென்றும்
கண்டவர்கள் சொல்ல,
உன் விழிகளிலோ -
இத்தனை நாள் எனை விட்டு
எங்கு சென்றாய் எனும் வினா -
அம்பாகத் தைக்குதடி - அடியேனின் நெஞ்சில்
முடிவற்ற வானில் நானும் பறந்து திரிகிறேன் -
நீ இன்றி .

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

வாய் மொழி சொல்லாத வார்த்தைகள் மலரும் 
உன் விழிகளில் 
நான் சிரித்தால் ஒரு புன்சிரிப்பு தெரியும் 
உன் விழிகளில் 
நான் அழுதால் நீர் வழியும் உன் விழிகளில் 
பசிக்கிறது எனக்கு ...புசிக்க வேண்டும் நான் 
என்று உனக்கு புரிந்தவுடன் பாசமுடன் நேசமுடன் 
அமுது கொடுக்கும் பரிவு தெரியும் உன் விழிகளில் 
எனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் நான் எப்போதும் 
உனக்கு சேய் என்னும் பாசம் தெரியும் உன் விழியில் 
அம்மா ...உன் விழிகள் என்றும் என் முகம் பார்க்கும் 
கண்ணாடி ...! என் எண்ண ஓட்டம் என்ன என்று 
அழகாக கணிக்கும் கணினியும் உன் விழிகளே !
அம்மா நீ மறைந்தாலும் உன் விழிகள் இருக்குது 
உயிருடன் ! உன் விழி வழி, பார்க்கிறார் இன்றும் 
ஒருவர் இந்த உலகை ! வழி மேல் விழி வைத்து 
தேடுகிறேன் நானும் உயிருடன் இருக்கும் உன் 
விழிகளை தினமும் !
ஒரு நாள் பார்ப்பேன் உன் விழிகளை மீண்டும் 
நான் அம்மா !  உன் விழிகள் இருக்கும் இடம் 
வேறாக இருந்தாலும் நான் இருப்பேன் நிச்சயம் 
உன் விழிகளில் ! 
விழிமொழி மட்டுமே தேவை எனக்கு உன் விழிகளில் 
மீண்டும் என் முகம் பார்த்து உன்னுடன் பேச !

- K .நடராஜன் 

**

அன்பே ! ஆருயிர் அமுதே
அழகை அள்ளும் ஆரணங்கே

கண்ணே ! கற்கண்டுத் தேனே
காதலித்தேன் உன்னை நானே

சிலையே ! சிற்றிடைத் தளிரே
சிலிர்க்க வைக்கும் சுடரொளியே

மலரே ! மாலைப் பொழுதிலே
மயங்கிய நானும் கருவண்டே

இன்பமே ! இனிக்கும் இசையே
இன்பரசம் சொட்டும் இதழ்களிலே

உறவே ! உயிரின் உன்னதமே
உயிர்ப்பித்தேன் உன் விழிகளிலே

- ஜெயசுதா, காஞ்சிபுரம்.

**

உணர்ச்சிகளின் உச்சரிப்பு,
மெளனமான பார்வை பேச்சு,
முகத்தில் வாய் வெறும்
உப்புக்குச் சப்பாணி.
விழி மொழி புரியாதவர்க்காய்
மட்டும் வாய் மொழி.

நீலக் கண்களால்
கடற்கரையாகும் கன்னங்கள்.
முகத்தில் ஆயுதமேந்தி
உன் நகர்வலம்.
எதிர் வந்து , நேர் கண்டு
காயப்படுதல் ஒரு வரம்.

நா. பாலாஜி

**

மன்னனெலாம் வாழ்நாளில் மகிழ்தி ருக்க
……….மனதுக்குள் இறைவனையே நினைத்தி ருந்தார்
என்றுமிந்த உலகத்தை வாழ வைக்கும்
……….இறைவனுக்கே எண்ணற்ற கோவில் கட்டி
மின்னலையே தொடுகின்ற நெடுந்து யர்ந்த
……….முன்மதிள்சூழ் கோபுரத்துள் ஆல யத்துள்
உன்விழிகள் விழித்திருந்தால் உலக ஜீவன்
……….உயிர்த்திருக்கும் ஒருவனேநீ! தெய்வ மன்றோ.!

தரணியிலே வாழ்வோர்கள் வரமாய் வேண்ட
……….தன்னையே மறந்திருப்பார் கோவில் தன்னில்
வரம்வேண்டி வருவோர்கள் உன்னைக் காண
……….வரிசையிலே நின்றுகொண்டு விழிகள் மூடி
சிரம்தாழ்த்தி கைகூப்ப மகிழ்ந்த சிந்தை
……….சிக்கலெலாம் தீர்ந்ததாக உணர்ந்த விந்தை
விரல்களையும் வளைத்தேசின் முத்தி ரையால்
……….வருவோர்க்கு வரமளிக்கும் வள்ள லாவாய்.!

உன்விழிகள் உறங்காது உலகம் காக்கும்
……….உண்மையதை அறியத்தான் முயலு கின்றார்.!
உன்விழிகள் மூடிவிட்டால் உலகம் பொய்க்கும்
……….உண்மையதை அறிந்தோரே ஞானி ஆவார்.!
உன்னதமாம் என்றுசொல்லி உம்ப டைப்பே
……….உலகத்தில் அனைத்துக்கும் முதலாய் வித்து.!
அன்னையும் நீ அப்பனும்நீ அனைவ ருக்கும்
……….ஆதிமுதல் வனும்நீயே அறிவோம் யாமே.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

நிலவு வராத ஒருநாளில்
மின்சாரம் இழந்த இருளில்
பார்க்கையில்

உன் விழியிரண்டும்
ஒட்டிக் கொண்டன 
என்
நனவிலும்
கனவிலும்

அன்றுமுதல்
அள்ளி அருந்துகிறேன்
தீராத கவிசுரபி

இரண்டு திரைகளில்
ஒருங்கே அரங்கேறுகின்றன
எழுதாத நாடகங்கள்

சாம்பல் பூக்க வைக்கும் அந்த நெற்றிக்கண்
ஆம்பல் பூக்க வைக்கும் இந்தச் சித்திரக்கண்

உவமைக் கவிஞர்கள் ஊமைகள் ஆவார்கள்
உன் விழிகளைப் பார்த்து

ரசித்து முடியாதபடி
எத்தனை பிரபஞ்சங்கள் 
உன் விழிகளில்

-கோ. மன்றவாணன்

**
என் உத்திரத்தில் பிறந்த மழலையே 
உன் விழிகளில் என்னை  பார்க்கிறேன்!
உன் சிரிப்பினில் என்னை  மறக்கிறேன்!
உன் மழலை உச்சரிப்பில் 
என் தாய்மை பூரித்து மலர்வதை 
என் போன்ற தாய்மார்கள் மட்டுமே 
தன்னை மறந்து உணர முடியும்!
விழிகள் அது  நம் 
உள்ளத்தின் கண்ணாடி.....
கள்ளமில்லாமல் பழகுபவர் 
எள்ளளவும் பயமின்றி......
விழிப்  பார்த்தே  பேசுவார்!
இப்பழக்கம் என்றென்றும் வர 
மழலைகளிடம் கற்பிப்போம் 
விழியுடன்  விழிப்பார்த்து 
எண்ணுவதையெல்லாம்  சொல்ல!
உன் விழிகளினால் 
நல்லதை பார் அல்லாததை  தவிர்!
இதுதான் உன் விழிகளினால் 
நீ மற்றவருக்கு உணர்த்தும்  நல் வழி!   

- உஷாமுத்துராமன். மதுரை 

**
விழிகளிலே   கனலேற்று !  பெண்ணே   நீதான்
    விழிப்போடே    இல்லையென்றால்   கற்பி   ழப்பாய்
வழியினிலே    கொள்ளிக்கண்   பருவம்   தன்னை
    வழிபறிதான்   செய்வதற்கே   காத்தி  ருக்கு !
வழிவழியாய்   வந்திட்டப்   பண்பா  டெல்லாம்    
    வழிமாறிப்   போனதாலே   இந்தக்   கோலம்
குழிதோண்டி   ஒழுக்கத்தைப்   புதைத்து   விட்டுக்
    குறிதாக்கும்   புலியானார்   மான்வேட்  டைக்கே !

அச்சத்தைத்   தூக்கியெறி !  பெண்ணே  உன்றன்
    அழகான   விழியிரண்டில்   அனலை   ஏற்று
துச்சமென   மிதித்திடுவாய்   மேனி   தன்னைத்
    துகிலுரித்துப்   பார்க்கின்ற   விழிபி  டுங்கி !
எச்சரிக்கை   யாயிருப்பாய்   தோழ   னென்றே
    எதிர்வந்து   நிற்போனின்   உள்ளத்   துள்ளும்
கச்சைக்குள்   இருப்பதினைச்   சுவைப்ப  தற்கே
    கள்ளமான   எண்ணமோடும்   எட்டி   நிற்பாய் !

இரக்கத்தைக்   காட்டாதே   பெண் ணே   உன்றன்
    இருவிழியுள்   தணலேற்றி   எரிய   வைப்பாய்
வரமாக   வந்தவளாய்   வணங்கி   நிற்பர்
    வளநாடாய்   நதியாகப்   போற்றி  நிற்பர் !
சிரம்மீது   தாங்கவதாய்   நீநி   னைப்பாய்
    சீரழிக்க   வாய்ப்பிற்காய்   காத்தி   ருப்பர்
அரவம்போல்   கண்கொத்த   விழித்தி   ருப்பாய்
    அடங்கிடுவர்   வலைக்குள்ளே   எலிகள்  போன்றே !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**

பார்த்தேன் பல பாஷை
இவன் விழிகளில்
நீர் ததும்பும் இரு பாவை 
விழியோரம்  நீ கூறும் செய்தி
தேம்பி அழாமல்  உணர்த்தும் 
ஈரமான உள்ளாடை நீக்கவா 
வாய் அமிழ்து சற்றே துடைக்கவா 
சிற்றெறும்பு  தீண்டியதை அறியவா 
தாய்  தேடும் வித்தை 
இரு விழிகளில் உணர்த்திய மழலை
மொழிகள் படிப்பேன் பல நேரம் 
இந்நேரம் பதறியே பார்த்தேன் 
சுற்றும் முற்றும் 
பக்கத்து வீட்டு குழந்தை 
அழுத சத்தம் கேட்டு
தூளியில் துஞ்சும் பிஞ்சு 
காணாததைக்  கண்டு 
படர விட்டேன் கண்களை 
நிலைவாசல்படி அருகில் 
பிஞ்சு பாதம் தொட்டு 
நனைத்த அரிசி மாவு நீரில் 
இரு கால் பட்டெழுந்து பளீர் தரையில்
அடி மேல் அடி வைத்து
தத்தி தத்தி  நடை பயின்று
தவழ்ந்து தடம் பதித்த  யசோதாவின் கிருஷ்ணா
அன்னை அரவணைப்புடன் அருகே  வந்தான்  
சிறுநகை  ஈர உதட்டில் 
ஆனந்தம் உன் விழிகளில்
பார்த்தேன் என் விழிகளில்.

இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை

**

 
இந்த வாரத் தலைப்பு
உன் விழிகளில்..
கட்டுக்குள் அடங்காத
  காந்தப்புலம் கண்டேன்
அன்பே உன்விழிகளில்....
  இதுவரை ஈர்க்கப்படாத
வலிமையான என்இதயத்தை
   பார்த்த நொடிகளிலே
ஈர்த்துவிட்ட மாயமென்ன!!??..
காந்தவிழியழகி!!கற்பனைக்கெட்டா பேரழகி!!
சற்றேனும் தளர்த்திக்கொள்
  கன்னியுந்தன் விழியாட்சியை
காளையர் இதயங்கள்
  காணாமல் போய்விடக்கூடும்...

கவிஞர். க. இராமலெட்சுமி@கவி தேவிகா, தென்காசி.

**
உன் விழிகளில்

உன் விழிகள் ரகசியமே
சொல்கிறது பதுமையே
கயல்விழி போல மீன்களே துள்ளி விளையாடக் கண்டு
கொண்டேன் பதுமையே
நட்சத்திரங்கள் போல
கண்களே பளிச்சிட
கண்டேன் பதுமையே
இருவிழியிலும் இருநிலாக்கள் மிதந்து வரக் கண்டேன் பதுமையே
பார்வையில் எதிரிகளை
தாக்கும் கணைகளை
பெற்ற பதுமையே
வெண்மலரில் தவழும்
கருங்குயில்களோ
இல்லை கருமுட்டைகள்
மிதக்க கண்டேன் பதுமையே
உன் கண்களின் ஒளியில் மனதை வில் கொண்டு எய்தது போல
அழகு விழிகளை பெற்ற பதுமையே
காந்தத்தை கொண்டு கவரும் விழிகளை பெற்ற பதுமையே

இரா. இரமணி

**

உன் விழிகளில் படர்ந்திருக்கும்
ஈரத்தின் காரணம் - காரியத்திற்காய் !
இப்படியே பழகிப்போன  - மனத்தில்
ஊறிப்போன எண்ணங்களின் பிம்பங்கள்
சாட்டையடியாய் உள்ளத்தில்
சுரீரென்று விழும் வேளையில்
நம் உறுதியை குலைக்கலாம் !
உள்ளத்தை சுக்கல் சுக்கலாய் உடைக்கலாம் !
வாதம் போல் செயலிழக்க செய்யும்
வார்த்தை அம்புகளை
திடமான மனமெனும் கேடயம் கொண்டு
எதிர்கொள்வோம் !
வாழும் வாழ்வு நலமாகட்டும் !
வசந்தம் நம் வசமாகட்டும் !

- பி. தமிழ் முகில்

**

முழுநிலவில் இருகயல்கள் உன்விழிகள்
முழுமைப் பெற்ற பேரழகு உன்விழிகள்
கருணைபொழியும் கார்மேகம் உன்விழிகள்
கயவர்களை சுட்டெரிக்கும் சூரியன் உன்விழிகள்
கோழையினை வீரனாக்கும் உன்விழிகள்
கோபமுற்றால் குளிரச்செய்யும் உன்விழிகள்
கோடியின்பம் கொடுக்கும் உன்விழிகள்
கொன்றெனைத் தின்றனவே உன்விழிகள்
பெருங்கருணைப் பேரருள் உன்விழிகள்
பெரும்புயலாய்ச் சாய்த்த உன்விழிகள்
பேயாய் நாயாயெனை அலைக்கழித்த உன்விழிகள்
பேசும் அமுதமொழி உன்விழிகள்
காயம் செய்யும் உன்விழிகள்
காயத்தின் மருந்தாகும் உன்விழிகள்
பேசாதெனைச் செய்தன உன்விழிகள்
பேரின்பத்தில் மூழ்கடித்த உன்விழிகள்
தடுத்து நிறுத்தியது உன்விழிகள்
தழுவிக் கொண்டது உன்விழிகள்
எடுத்து இறுக்கியது உன்விழிகள்
எனையெங்கோச் செலுத்தியது உன்விழிகள்
காதல் பொங்கிய உன்விழிகள்
காமம் சொட்டிய உன்விழிகள்
மோகத்தில் மூழ்கச்செய்த உன்விழிகள்
மோட்சமும் அளித்தது உன்விழிகள்
உன்விழிகளால் தடுக்கி விழுந்தேன்
உன்விழிகளால் எழுந்து நின்றேன்
உன்விழிகளால் உயிர் பெற்றேன்
உன்விழிகளால் உணர்வு உற்றேன்
உன்விழிகளால் உண்மை உணர்ந்தேன்
உன்விழிகளால் உலகம் அறிந்தேன்
உன்விழிகளால் உன்னதம் அடைந்தேன்
உன்விழிகளால் மறித்தும் போகின்றேன்

-கோ. ஹாலாஸ்யம், சிங்கப்பூர் 

**

அன்பே!
உன் விழிகளில்...
இவ்வளவு காந்தத்தை வைத்த இறைவன்....
என்னையாவது இரும்பாகப் படைக்காமல்
இருந்திருக்கலாம்!

கண்ணே!
உன் விழிகளென்ன...
நம்பிக்கை நட்சத்திரங்களா?!
அவற்றைத் தரிசித்ததும்...
உடல் முழுவதும் ஓடுகிறதே
உற்சாக நம்பிக்கை!

தேனே!
உன் கண்களுக்குள்...
தேனீக்கள் அடை கட்டினவோ?!
அதனால்தான் உன் பார்வையில்
இனிமை இழையோடுகிறதோ!

மானே!
மையல் கொண்ட உன் பார்வைதான்...
இன் இதயத் திரையரங்கில்...
எப்பொழுதும் ஓடும்...
வெற்றிப் படம்!
100,200,500 நாட்கள் ஓடிடும்
சாதாரணப் படமல்ல!
ஆயுளுக்கும் ஹவுஸ் புல்லாகும்
அற்புதப் படம்!

அன்பு மலரே!
இந்த ஆத்மாவின்
ஆயுள் காரகன்...
உன் விழிகளுக்குள்தான் 
வீழ்ந்து கிடக்கிறானோ!

-ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி

**

உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான் 
உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன்  !

என்னையே நான் விரும்புகின்றேன் பின் 
உன்னையும் நான் விரும்புகின்றேன் !

உடலால் நான் எங்கு இருந்தபோதும் 
உள்ளத்தால் உன்னிடமே இருக்கின்றேன் !

விழி மூடினால் கனவில் வருகிறாய் 
விழி திறந்தால் நினைவில் வருகிறாய் !

என்னுள் புகுந்து என்னை இயக்குகின்றாய் 
என்னை எனக்கு எடுத்து இயம்பினாய் !

மறக்கலாம் என்று நினைத்ததாலும் முடிவதில்லை 
மனம் முழுவதும் உன்னைய ஆக்கிரமிப்பு !

எல்லை கடந்த பயங்கரவாதம் உன் பார்வை 
என்னை ஏதோ ஏதோ செய்து விடுகிறாய்  ! 

காந்தம் தோற்கின்றது உந்தன் கண்களிடம் 
கவர்ந்து இழுத்து யுத்தம் செய்கின்றாய் ! 
.
உன் விழிகளில் என் முகம் பார்த்தேன் 
என் உள்ளத்தில்  உன் முகம் பதித்தேன் !

**

நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
கனவெழுதி கரைந்து போகும்
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட..
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை-என்
உயிர் பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு..?

-வல்லம் தமிழ்

**

வார்த்தைகளின்
வனத்தில் நுழைந்து பார்த்தேன்
படவில்லை என் பார்வையில்
என்னை வெளிப்படுத்த விரும்பும்
நான் தேடும் வார்த்
தைகள்

அங்கங்கே உதிர்ந்து
நிலத்தில் விழுந்து கொண்டிருந்தன
வெளிச்ச வார்த்தைகளோடு
நிழல் வார்த்தைகளும்

என்னை
அன்னப்பறவையாக்கிப் பார்க்க
வெளிச்சமும் நிழலும்
எவரெவரின் பெயர்களோ
உச்சரித்து இருந்ததில்
வார்த்தைகள் பூக்கும் நந்தவனத்தில்
மரத்தடியில் அமர்ந்து அண்ணாந்து
பார்க்க

கிளையில்
ஒரு பறவை தன் குஞ்சுக்கு
ஒரு வார்த்தையை உணவாக ஊட்ட
விரித்த அலகில்
இருந்து கொண்டிருந்தது போல

நான்
கண்மூடி பார்த்ததில்
உன் விழிகளிலேயே இருக்கிறது
காதலும்
காதல் தீர்க்கும் அமிர்தமென
உன்னைப் போற்றும்
நான் தேடிய வார்த்தைகளும்...!
 
- அமிர்தம் நிலா/ திருநின்றவூர்

**

கண்களுக்கு மேல் கண்ணாடி
போட்டுப்பார்த்திருக்கிறேன் ---
நீ கண்களுக்குள் அல்லவா
அதை வைத்துள்ளாய் !
உன் விழிகளில் நான் தெரிகிறேன்   !!

கண்களுக்குள் உணர்வுகள் ஒளிந்துள்ளனவா !?
நான் நடைப்பயிற்சியின் போது,
உன் அன்பைச்சொல்லும் ஆன்மாவே அதில் தெரிந்தது.

கோடையின் கானல் மறைத்த
இரண்டு கொடைக்கானல் அவை –
அந்தப்பார்வை என்னை மெதுவாய்
குருடனாக்கிக்கொண்டிருக்கிறது –
விஜயன் கூட வியந்து நிற்பான் –
வில்லே இல்லாமல்
அம்புகள் பாய்கிறதே !!
உன் இமைக்கதவுகள் திறக்கும், 
அதில் இலட்சம் இதயங்கள் அலை பாயுமே !
இந்த வெளிச்ச விந்தையை
அலை அலையாய் பிரித்தானோ ஐன்ஸ்டீன் !!

எல்லாம் உண்டு ! இருந்தும்
ஒரு களங்கமில்லா அப்பாவித்தனம்--
குற்றமில்லா குறுகுறுப்பு தெரியும்
குழந்தைகளின் விழிகளுக்கு நிகராகுமோ ?

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி  -- MD DNB PhD

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com