பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க புஷ்பவனநாதர் கோவில், திருப்பூந்துருத்தி

என்.எஸ். நாராயணசாமி

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 11-வது தலமாக இருப்பது திருப்பூந்துருத்தி. திருமழபாடியில் நடைபெற்ற நந்திதேவர் திருமணத்துக்கு இத்தலத்து இறைவன் மூலம் மணமாலைகள், பூக்கள் முதலியவை அனுப்பிவைக்கப்பட்ட சிறப்புடைய தலம் இது. திருவையாற்றைத் தலைமைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

இறைவன் பெயர்: புஷ்பவனநாதர்

இறைவி பெயர்: சௌந்தர்யநாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்று உள்ளன.

எப்படிப் போவது

அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்

திருப்பூந்துருத்தி, திருப்பூந்துருத்தி அஞ்சல்

கண்டியூர் வழி

திருவையாறு வட்டம்

தஞ்சை மாவட்டம் - 613 103.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர், மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

கோவில் அமைப்பு

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் உள்ளன. இங்கும் நந்தி, சந்நிதியை விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு, இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தல புராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் இருக்கிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவனநாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார்.

மகிஷாசுரனை அழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அருகில் சம்பந்தர், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமான், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் சுந்தரர் இருக்கும் சிலா உருவங்கள் இருக்கின்றன. பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையது. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

காசிப முனிவர், இத்தலத்தில் உள்ள ஆதிவிநாயகர் சந்நிதி அருகில் உள்ள கிணற்றில் கங்கையை வரவைத்து, அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திருஅங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டிய நாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்துகொண்டிருந்தார்.

சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்துகொண்ட அப்பர், தன்னை இன்னாரென்று காட்டிக்கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறிவந்த சிவிகையை தானும் தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும், அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ, ‘உங்கள் சிவிகையைத் தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்’ என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையில் இருந்து கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகி ஒருவரை ஒருவர் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குமானால், நீண்ட நாள்களாக திருமணம் ஆகாமல் இருத்தல், கல்யாணம் ஆகியும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருத்தல் ஆகியவற்றுக்கு, ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், அமாவாசை நாள்களில் இத்தலம் வந்து புஷ்வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நல்லதே தடக்கும் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில், அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் உள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என்று மனமுருகிக் குறிப்பிடுகிறார்.

தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம் இறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்

வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை

மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து

பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்

கால்களால் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்

கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்

உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ

இறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன் பல்கணத்து      எண்ணப்பட்டுச்

சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து                                                                                  இருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்

தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர்கள் மயிலாடுதுறை சொ.சிவகுமார், திருஞான பாலசந்திரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT